ஜனாதிபதியின் சுதந்திரதின உரையும் அது வெளிப்படுத்தும் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் சில நிகழ்வுகளின் காட்சிகள் இலங்கை இரு தேசமாக காணப்படுகிறது என்பதையே மீள மீள உறுதி செய்கின்றது. கடந்த பெப்ரவரி-4(2021)அன்று தென்னிலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களை ஆடம்பரமாய் விமர்சையாக கொண்டாடி இருந்தது. மறுமுனையில் வடக்கு-கிழக்கு கரிநாளாக இலங்கையின் சுதந்திர தினத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இது, வடக்கும், தெற்கும் வேறுபட்ட தேசங்கள் என்பதையே வெளிப்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் தமிழர் தரப்பில் தமிழ் மக்களின் எண்ணங்ளை புறந்தள்ளி  தென்னிலங்கையின் சுதந்திர விழாக்களில் பங்குபற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளும் இவ்வருடம் கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளமை அதிக கவனத்தை பெற்றுள்ளது. இக்கட்டுரை தென்னிலங்கையின் சுதந்திரநாள் பிரகடன உரை எதிர்ப்புக்களை கவனத்தில் எடுத்துள்ளதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 74வது சுதந்திர தினம் முழுமையாக எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புடன் வெளிநாட்டு தூதுவர்களின் பிரசன்னத்துடனும் கோலாகலமாக இடம்பெற்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடி சுமைகளை காரணங்காட்டி தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் சுதந்திரதினத்தை புறக்கணித்திருந்தன. மறுமுனையில் தமிழ்த்தேசிய கட்சிகள் தமது உரிமைகள் தொடர்ச்சியாக நசுக்கப்படுவதை கண்டித்து வரலாற்றுபூர்வமான கரிநாள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற 1948, பெப்ரவரி-04அன்று வீரகேசரிப் பத்திரிகை 'இலங்கையின் முதலாவது சுதந்திர தின மலர்'  எனும் தலைப்பிட்டு ஒரு சிறப்பு மலரினை வெளியிட்டிருந்தது. மேற்படி சிறப்பு மலரில் காங்கேசன்துறை தொகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்த சமஷ்டி கட்சியின் ஸ்தாபகர் செல்வநாயகம் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தார். குறித்த கட்டுரையில், 'சிங்கள மக்கள் இன்று அவர்களுடைய சுதந்திர நாளைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே! அவர்களுக்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் தமிழ் மக்கள் தாமும் சுதந்திரம் அடைவதற்குப் பாடுபடுவதற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுதல் வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.' இது 1948களிலேயே வடக்கு-கிழக்கு தனித்தேசமாக இலங்கையின் சுதந்திரத்திற்கு அப்பால் சுதந்திர கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது என்பதனையே வெளிப்படுத்துகிறது. 74வது சுதந்திர தினஉரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh பிரதான தென்னிலங்கை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டான பொருளாதார நெருக்கடிக்கு சீரான காரணங்கள் மற்றும் தீர்வினையோ அல்லது தமிழ்த்தேசிய தரப்பு சார்பாக முன்வைக்கப்படும் உரிமைசார் கோரிக்கைகள் தொடர்பிலேயோ சரியாள பதிலை உள்ளடக்க இருக்கவில்லை என்ற விமர்சனம் காணப்படுகிறது.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக ஜனாதிபதியின் சுதந்திர தின உரை பற்றி குறிப்பிடுகையில், 'வின்ஸ்டன் சர்ச்சிலின் மிகச்சிறந்த உரைகளில் ஒன்று டன்கிர்க்கிற்கு பின்வாங்கும் போதும், அங்கிருந்து வெளியேறும்போதும் இருந்தது. அந்தப் பெரும் பின்னடைவைக் குறிப்பிடாமல் அவர் உரை நிகழ்த்தியிருந்தால்? அதைத்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷhவும் செய்தார். அவரது பேச்சு ஒரு ஆபத்தான துண்டிப்பைக் காட்டியது. பொருளாதார நெருக்கடி பற்றி ஒரு குறிப்பும் இல்லை. மாற மறுப்பவர்களிடமும், தன்னை முறியடிக்க நினைத்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளிடமும் அவர் கடுமையாக நடந்து கொண்டார். மக்களின் முன்னோடியில்லாத மற்றும் வளர்ந்து வரும் பொருள் துன்பத்தை ஒப்புக்கொள்ளவும் அவர்களுடன் அனுதாபப்படவும் அவர் மறுத்துவிட்டார். அவரது கொள்கைகள் மீதான வலுவான பகிரங்க விமர்சனங்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கந்து வட்டி நலன்களால் அல்ல, மாறாக தீவின் தேசத்தின் கிராமப்புற மையப்பகுதியில் உள்ள சிங்கள பௌத்த விவசாயிகளிடமிருந்து வந்தவை என்பதை அவர் அங்கீகரிக்கத் தவறிவிட்டார். ஒரு தலைவர் பொதுக்கருத்தை வடிவமைக்க வேண்டும் என்றால், அவர் முதலில் அதை பிரதிபலிக்க வேண்டும். இதை, கோத்தபாய ராஜபக்ஷh முற்றிலும் செய்யத் தவறிவிட்டார்.' எனத்தெரிவித்துள்ளார்.

எனவே, கோத்தபபாய ராஜபக்ஷhவின் உரையை மிக நுணுக்கமாக அவதானிக்கையிலேயே அவரது பொதுக்கருத்துசார் எண்ணத்தின் பிரதிபலிப்பை அறிந்து கொள்ளலாம்.

முதலாவது, சொல்லிற்கும் செயலுக்கும் வேறுபட்ட தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றார். இனப்பிரச்சினைக்கான தீர்வு வெறும் வாய்ச்சொல்லாடல் என்பதை 74வது சுதந்திர தின உரையின்இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க பெப்ரவரி-4, 1948இல் கூறிய ஆரம்ப பகுதி சிலதை மீள்நினைவுபடுத்துவதனூடாக உணர்த்துகிறாரா என்றே எண்ணத்தோன்றுகிறது. 'சுதந்திரம் அதனுடன் பாரதூரமான பொறுப்புகளைச் சுமக்கிறது. இனிமேல் நமது செயல்களும், விடுபடுதலும் நமக்கே சொந்தம். இனி நமது நிர்வாகத்தில் உள்ள குறைகள் மற்றும் தவறுகளை மற்றவர்கள் மீது சுமத்த முடியாது. நமது நாடு பல இனங்களை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் ஒரு கலாச்சாரம் மற்றும் அதன் சொந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. நம்மில் உள்ள அனைத்தையும் ஒன்றிணைத்து, அந்த உயர்தரத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதியான விருப்பத்துடன் நம்மை அமைத்துக் கொள்வதும், அனைத்து மக்களுக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் உலகின் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது' என்பதைச்சுட்டிக்காட்டி 'காலனித்துவ ஆட்சியில் இருந்து தேசம் சுதந்திரமடைந்து 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய சூழலில் மறைந்த டி.எஸ்.சேனாநாயக்கவின் மேற்கூறிய சரியான வார்த்தைகளின் பொருத்தத்தை யாரும் தவறவிட முடியாது' என்பதை ஜனாதிபதி உரையில் குறிப்பிட்டிருந்தார். எனினும் அன்றுமுதல் பல்லின சமூக கட்டமைப்பை பெரும்பான்மை சமூகம் ஏற்காததன் விளைவுகளைகயே இன்றுவரை அனுபவிக்கிறோம். அத்துடன் இனப்பிளவுகளை  உருவாக்குபவர்களாகவும் கடத்துபவர்களாகவும் அரசியல் தலைவர்களே இருந்து வந்துள்ளனர்.  சொல் ஒன்று, செயல் வேறு. அதுதான் இந்நாட்டின் போலி அரசியல். சுதந்திரதின மேடையும், இந்த அரசியல் நாடகத்திற்கான இன்னொரு அரங்கமாக அமைகிறதேயன்றி, சுதந்திரத்தின் மெய்யுணர்வு அங்கே இல்லை. பெரும்பான்மைத் தேசிய அரசியல் முழங்கலுக்கான மேடையாக அது மாற்றப்பட்டு வந்துள்ளது.

இரண்டாவது, கோத்தபாய ராஜபக்ஷh ஜனாதிபதியாக பதவியேற்றதிலிலிருந்து அவரது உரைகள் அதிகம் நடைமுறைக்கு ஒவ்வாததாகவே விமர்சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுதந்திர தின உரைகளுக்கு அப்பால் கோவிட்-19 நெருக்கடி காலத்தில் வெளியிட்ட 69நிமிட உரை மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில் வெளியிட்ட சிறப்பு உரைகளும் அதிக விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன் வரிசையில் 74வது சுதந்திரதின விழா உரையும் காணப்படுகிறது. அதாவது தனது எண்ணங்களை மாத்திரம் திணிக்க முயல்வது, அமெரிக்க அரசறிவியலாளர்கள் ஜனாதிபதி ட்ரம்பின் இதேபோன்ற நடத்தைக்கு ஒரு சொல்லைக் கொண்டிருந்தனர். சோலிப்சிசம்(ளழடipளளைஅ)ஃ சோலிப்சிஸ்டிக்(ளழடipளளைவiஉ) ஆகும். எளிமையாகச் சொன்னால், சோலிப்சிசம் என்பது அகநிலைவாதத்தின் ஒரு நிலை, இதில் நீங்கள் உங்களுக்கு வெளியே உள்ள உலகின் பொருள் யதார்த்தத்தை அங்கீகரிப்பதை விட உங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் கருத்துகளின் யதார்த்தத்தில் வாழ்கிறீர்கள். சோலிப்சிசம் என்பது அறிவியல் பகுத்தறிவுக்கு முற்றிலும் எதிரானது. ஆவ்வாறான எண்ணப்பாங்கிலேயே கோத்தபாய ராஜபக்ஷ தனது செயற்பாடுகளையும் உரைகளையும் கட்டமைக்கின்றார். யாரும், எங்கும் ஒரே இரவில் இயற்கை விவசாயத்திற்கு வெற்றிகரமாக மாற்றியமைக்கவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை. ஜனாதிபதி தனது இராணுவ செயற்பாடுகளைப் போலவே அவரது 'டபுள்-ஓ', அதாவது ஆர்கானிக் ஓவர்நைட் கொள்கையின் தனித்துவத்தை அவதானிக்கலாம். எனினும் அரசின் தவறான மதிப்பீடற்ற கொள்கையால் ஏற்பட்டுள்ள உணவுப்பொருளாதார நெருக்கடியை பொறுப்பேற்க தவறியமை ஜனநாயக வெளியிலிருந்து பெரமுரன அரசாங்கம் விலகிச்செல்வதனையே வெளிப்படுத்துகிறது.

மூன்றாவது, எதிர்ப்பவர்களையும் அணைத்துச் செல்வதுவே ஆளுமையான தலைமை ஆகும். எனினும் ஜனாதிபதி தனது உரையில் எதிராளிகள் எதிராளிகளாவே இருக்கட்டுமென அவர்களை சீண்டும் அரசியலையே மேற்கொள்கிறார். தனது உரையில், 'நாட்டை சரியான திசையில் வழிநடத்தும் போது, நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். மாறாதவர்களை பார்த்து நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்கான திட்டங்களை கைவிட நாங்கள் தயாராக இல்லை. எங்களின் நோக்கம் நாட்டிற்கு சரியானதைச் செய்வதே தவிர, அனைவரையும் மகிழ்விப்பது அல்ல. ஒரு பார்வையை நோக்கி ஒரு குழுவை வழிநடத்துவது எளிதானது அல்ல. எவ்வளவு நல்ல எண்ணமாக இருந்தாலும், இருக்கும் வழிகளை மாற்றுவதும் எளிதானது அல்ல. சில விடயங்களில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் எங்களுக்கு எதிராக ஏற்பாடு செய்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார். இது எதிராளிகளை அணைக்கும் முயற்சி இல்லை என்பதையே உறுதி செய்கின்றது.

பொது எதிரணி சுதந்திர தினக்கொண்டாட்டங்களையே புறக்கணித்திருந்தனர். எனினும் தமிழ்த்தேசிய தரப்பு ஒட்டுமொத்த சுதந்திரத்தை நிராகரித்திருந்தது. எனினும் அதெற்கெதிராக சரியான எழுச்சியுடள் போராடத்தவறியுள்ளார்கள் என்பதே நிகழ்வுகள் வெளிப்படுத்துகிறது. பிற நாட்களில் தமிழ்த்தேசிய தரப்பு தமது உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னாயர்த்தப்படுத்துகையில் பொலிஸார் கோவிட் காரணங்களை காட்டி நீதிமன்ற தீர்ப்புக்களூடாக போராட்டங்களை கட்டுப்படுத்தவே செய்துள்ளனர். விதிவிலக்கா பி2பி-இன் மக்கள் எழுச்சி தடைகளை தகர்த்தது. மற்றும் 13ஆம் திருத்தத்துக்கு எதிரான போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரானது இல்லை என்ற அடிப்படையில் தடை முயற்சிகள் மேற்கொண்டிருக்கவில்லை. தென்னிலங்கையில் சுதந்திர தின விழா பெருந்திரளாக எழுச்சியாககொண்டாடப்படுகையில் தமிழ் மக்களையும் தங்கள் உரிமைசார் கோரிக்கைக்காக தமிழ்த்தேசிய கட்சிகள் மக்களை ஒன்று திரட்ட தவறியுள்ளார்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பொதுக்கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூகங்களும் சிறு சிறு திரள்களாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையானது கடந்த 12 ஆண்டுகளிலும் அறவழிசார்ந்து தமிழ்த்தேசிய தரப்பு பூரண தெளிவை பெறவில்லை என்பதையே உறுதிசெய்கிறது. அதேநேரம் தமிழ்த்தேசியத்தின் உறுமாறிகளையும் இழத்தமிழ் தரப்பு கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. 

எனவே, இலங்கை ஜனாதிபதியின் சுதந்திர தின உரையும் அவருக்கே தனித்துவமான சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாகவே கடந்து சென்றுள்ளது. ஈழத்தமிழர்களை பற்றிய எவ்வித ஆக்கபூர்வமான கரிசனைனையையும் கோத்தபாய ராஜபய்ஷh மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கம் வெளிப்படுத்தாது என்பதில் ஈழத்தமிழர்களிடம் ஓரளவு தெளிவு காணப்படுகின்றது. எனினும் மக்கள் கடந்த கால பொருளாதார கொள்கையால் உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்கையில் அதனை கருத்திற்கொள்ளாது தனது கொள்கை சரியானது என்ற பிடிவாதத்துடன் தியாகத்துக்கான மக்களை அழைப்பது பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு வாக்கு திரட்சி காணப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர கிராம மக்களிடம் அதிக வெறுப்பை ஏற்படுத்தியுள்ளமையே புலப்படுகிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-