உக்ரைன் கொதிநிலையை பயன்படுத்தி புடின் ஐரோப்பிய உறவை பலப்படுத்துகிறாரா? -ஐ.வி.மகாசேனன்-
ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் மூன்றாம் உலகப்போராகா மூளுமா என்பதே சர்வதேச அரசியல் பரப்பை நிரப்பி உள்ள செய்தியாகும். ஆரம்பத்திலிருந்து ரஷ்சியா போருக்கான எவ்வித ஆர்வமும் தம்மிடம் காணப்படவில்லையென தெரிவித்துவந்தபோதிலும், தொடர்ச்சியான கூட்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதுடன், உக்ரைன் எல்லையில் ரஷ்சியா நிலப்பரப்பில் இராணுவ துருப்புக்களை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளனர். அது தமது உள்ளக பாதுகாப்புக்கான இராணுவப்பயிற்சியாகவே தெரிவித்து வருகின்றனர். மறுதலையாக அமெரிக்கா போருக்கான அபாய அச்சுறுத்தல்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். அதன் உச்சகட்டமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பெப்ரவரி-16 ரஷ்சியா உக்ரைன் மீது தாக்குதலை நிகழ்த்தும் என்ற திகதியையும் அறிவித்திருந்தார். அவ்வாறே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனும் அமெரிக்காவின் கருத்தை ஆதரித்து ரஷ்சியா உக்ரைன் மீது நிச்சயம் போர் நிகழ்த்துமென அழுத்தமாக தெரிவித்து வருகின்றனர். ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் அச்சத்தின் காரணமாக உக்ரைனிலிருந்து தமது மக்களை மீள அழைத்த போதிலும் போரை தணிப்பதற்கான உரையாடல்களில் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தை அமெரிக்க-பிரித்தானிய கூட்டு மற்றும் ஜேர்மன்,பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளும் நோக்கும் அரசியல் பார்வையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகிய அமைப்புக்களில் அங்கத்துவம் வகிப்பதுடன் தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழும் பிரதான இரண்டு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை விட ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேசுவதனை முதன்மையாய் கொண்டு செயற்பட்டுள்ளனர். குறித்த சந்திப்பில் உக்ரைனுடனான ரஷ்சியாவின் பதட்டங்களைத் தணிக்க ரஷ்சிய தலைவரை வற்புறுத்தியுள்ளனர். பெப்ரவரி-07அன்று புடினுடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். டிசம்பரில் ரஷ்சியா-உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து புதினை சந்தித்த முதல் மேற்கத்திய அரச தலைவராக மக்ரோன் காணப்படுகின்றார். நெருக்கடியான சூழலில் மாஸ்கோவிற்கு வந்ததற்காக பிரான்ஸ் தலைவருக்கு பலமுறை நன்றி தெரிவித்த புடின், ஒரு கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் மக்ரோன் ஆய்வுக்குரிய பல யோசனைகளை முன்வைத்ததாகக் கூறினார். பிரான்ஸ் ஜனாதிபதியினை தொடர்ந்து பெப்ரவரி-15அன்று ஜேர்மன் தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ் மாஸ்கோவிற்கு விஜயம் செய்து வளர்ந்து வரும் உக்ரைன் விரிவாக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க புடினுடனான சந்திப்பில் முயற்சித்தார். குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகவியலளார் சந்திப்பில் புடின், 'நாங்கள் மேலும் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பேச்சுவார்த்தை பாதையில் செல்ல தயாராக இருக்கிறோம்' என்று கூறினார். மேலும், 'ஜேர்மனி ரஷ்சியாவின் மிக முக்கியமான பங்காளிகளில் ஒன்றாகும். பெர்லினுடன் மேலும் ஒத்துழைக்க விரும்புவதாக' புடின் குறிப்பிட்டிருந்தார். சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்சியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக ஜேர்மனி இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளின் பங்கை அவர் வலியுறுத்தினார்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இரண்டும் இரண்டு முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும். அவை கீவ் மற்றும் மாஸ்கோ இடையே பதட்டங்களை அமைதிப்படுத்த அவற்றின் சொந்த காரணங்களைக் கொண்டுள்ளன. ரஷ்சியா-உக்ரைனிடையே போர் ஏற்படுமாயின் நேரடி பாதிப்பிற்குள்ளாகும் பிராந்தியமாக ஐரோப்பாவே காணப்படுகின்றது. அத்துடன் ரஷ்சியா-உக்ரைன் போரானது மூன்றாம் உலகப்போராகவே அமையக்கூடியதாகும். இரண்டாம் உலகப்போரின் விளைவுகளிலிருந்து பாடங்கற்றுள்ள ஐரோப்பா மீளவொரு போர் என்பதை முழுமையாக நிராகரிக்கவே பிரயத்தனங்களை மேற்கொள்கிறது. புடினுடன் சந்திப்பினை மேற்கொண்ட இரு ஐரோப்பிய தலைவர்களுமே ஐரோப்பாவின் போர் பதட்டம் பற்றிய உரையாடல்களையே முதன்மைப்படுத்தினார்கள். மக்ரோனுக்கும் புடினுக்குமிடையிலான சந்திப்பில், 'ரஷ்யாவிற்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஐரோப்பியர்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று மக்ரோன் வலியுறுத்தி இருந்தார். புடின், 'ஐரோப்பாவின் பாதுகாப்பு நிலைமை குறித்து மாஸ்கோவிற்கும் பாரிஸுக்கும் பொதுவான கவலைகள் இருப்பதாக' கூறினார். அவ்வாறே ஜேர்மன் சான்சலர் ஷோல்ஸ் மற்றும் ரஷ்சியா ஜனாதிபதி புடினிடையேயான சந்திப்புக்குப் பிறகு இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஷோல்ஸ், 'அரசாங்கத் தலைவர்களாகிய நமது முழுமையான கடமை, ஐரோப்பா போராக விரிவடைவதைக் காணவில்லை' என்றார். மேலும், ஸ்திரத்தன்மையை முன்னோக்கி நகர்த்துவதற்கு ரஷ்சிய மற்றும் ஜேர்மனியின் ஐரோப்பிய பங்காளிகளுக்கு இடையே உயர்மட்ட உரையாடல் அவசியம் என்று ஷோல்ஸ் கூறினார்.
எனவே, ரஷ்சியா-உக்ரைன் போர் கொதிநிலை ஐரோப்பாவை தகர்த்துவிடும் என்ற பதட்டமே பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் இராஜதந்திர நகர்வுகளுக்கு பிரதான காரணமாகிறது. அரசுகளிடையேயான நெருக்கடியில் ஒரு பயனுள்ள ஐக்கிய ஐரோப்பிய ஒன்றிய முன்னணியை உருவாக்க முடியவில்லை என்றாலும், ரஷ்சியாவை நோக்கி மிகவும் மோசமான அணுகுமுறையைக் கொண்ட அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இரு நாடுகளும் மாஸ்கோவுடன் அதிக இராஜதந்திரத்தை நாடுகின்றன. அவ்இராஜதந்திர நகர்வுகள் பயனுள்ள போக்குகளையே வெளிப்படுத்தி வருகின்றது.
ஜேர்மன் தலைவருடனான சந்திப்புக்களின் பின் உக்ரைன் எல்லையில் துருப்புகளை குறைப்பதாக மொஸ்கோ அறிவித்துள்ளது. எக்கணமும் போர் வெடிக்கும் என்ற மேற்குலக பிரசாரங்களுக்கு பதிலடி உக்ரைன் எல்லையில் குவித்த படையினரில் ஒரு பிரிவினரைத் தளங்களுக்குத்திருப்பி அழைப்பதாக ரஷ்யா பெப்ரவரி-15அன்று தெரிவித்திருக்கிறது. கடந்த பல நாட்களாக நீடிக்கின்ற போர் பதற்றத்துக்கு மத்தியில் முதல் முறையாக இவ்வாறு படைக்குறைப்பு அறிவிப்பை கிரெம்ளின் வெளியிட்டிருக்கிறது. ரஷ்சியா உக்ரைனை பெப்ரவரி-16அன்று ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கத் தலைவர்களும், அடுத்த 48 மணிநேரத்தில் போர் வெடிக்கலாம் என்று இங்கிலாந்துப்பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அடித்துக்கூறியிருந்த நிலையில் அதற்கு மாறாகப்பதற்றத்தைத் தணிக்கின்ற நடவடிக்கையில் ரஷ்சியா இறங்கியிருப்பது அவதானிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கி இருக்கிறது. 'இதில் புதிதாக ஒன்றும் இல்லை. போர்ப்பயிற்சி ஒத்திகை முடிவடைந்தவுடன் படைகளைத் தளங்களுக்குத் திருப்பி அழைப்போம் என்று நாங்கள் ஏற்கனவே கூறிவந்தோம். இது ஒரு வழமையான நடவடிக்கை' என்று கிரெம்ளின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். எனினும் பெப்ரவரி-16அன்று உக்ரைன் எல்லையில் ரஷ்யா 7,000 துருப்புக்களை தனது படைகளில் சேர்த்துள்ளதாகவும், இது உண்மையில் தனது துருப்புக்களை பின்வாங்கிவிட்டது என்ற ரஷ்யாவின் கூற்றுக்கு நேர் மாறாக உள்ளதெனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க செயலர் ஆண்டனி பிளிங்கன் 'ரஷ்சியா சொல்வதற்கும் அது செய்வதிற்கும் வித்தியாசம் உள்ளது' என்று கூறினார்.
ஏவ்வாறாயினும் ஐரோப்பிய தலைவர்களுடனான சந்திப்பின் பின்னராக துருப்புக்களை குறைப்பதாக மொஸ்கோ அறிவித்தல்விடுவது ஐரோப்பிய நாடுகளுக்கான இணக்க சமிக்ஞையாகவே காணப்படுகிறது. ரஷ்சியா ஐரோப்பா பிராந்தியத்துடன் இணக்கமாக செல்வதற்கான எண்ணங்களையே பிரதிபலிக்கிறது. குறிப்பாக, ரஷ்சிய ஊடகங்களால் பெப்ரவரி-14அன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், புடின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம், 'மேற்கத்திய நாடுகளுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வாய்ப்பு உள்ளதா அல்லது மேற்கத்திய அதிகாரிகள் காலப்போக்கில் ஸ்தம்பிக்கிறார்களா' என்று கேட்கிறார். லாவ்ரோவ், 'எப்போதும் ஒரு வாய்ப்பு உள்ளது' என்று பதிலளித்தார். இது ஐரோப்பிய பிராந்தியத்துடன் இணக்கமாக செல்வதற்கான புடினின் ஈடுபாட்டையே வெளிப்படுத்தி நிற்கிறது.
ரஷ்சியா-உக்ரைன் போரின் நேரடி வடுக்களை சுமக்கக்கூடியவர்களான ஐரோப்பா பதட்டத்தை தணிக்கவே கடுமையான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அமெரிக்க மற்றும் பிரித்தானியா போருக்கான சீண்டல்களை ரஷ்சியாவுடன் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அமெரிக்க மக்கள் உக்ரைன்-ரஷ்சியா விவகாரத்தில் அமெரிக்க படைக்குவிப்பை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகத்திற்குரியதாகவே காணப்படுகிறது. ரஷ்சியாவின் போர் எத்தணிப்பு தொடர்பாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை முன்வைப்பதுடன், போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டை தெரிவித்துவரும் பைடன் அமெரிக்க மக்களிடம் ஆதரவை பெற வேண்டிய தேவை காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியமைக்கு அமெரிக்க மக்கள் போர் மீது வெளிப்படுத்திய எதிர்ப்புணர்வுகளே காரணமாகும். இந்நிலையில், உக்ரைனில் ரஷ்சிய படையெடுப்பு அமெரிக்கர்களை காயப்படுத்தும் என்று பைடன் கூறுகிறார். 150,000 ரஷ்சிய துருப்புக்கள் உக்ரைனின் எல்லைகளை சுற்றி வருவதால், எந்த நாளிலும் ஒரு பெரிய படையெடுப்பு நடக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், ஜனாதிபதி பைடன் அமெரிக்க மக்களுக்கு சமிக்ஞை செய்துள்ளார். 'ரஷ்சியா படையெடுக்க முடிவு செய்தால், அது உள்நாட்டிலும் விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் அமெரிக்க மக்கள் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒருபோதும் செலவில்லாமல் இல்லை என்பதை புரிந்துகொள்கிறார்கள். இது வலியற்றதாக இருக்கும் என்று நான் நடிக்க மாட்டேன்' என்று பிடன் பெப்ரவரி-15அன்று ஒரு உரையில் குறிப்பிட்டுள்ளார். இது மக்கள் ஆணையை பெறுவதற்கான எத்தணிப்பாகவே காணப்படுகிறது. எனினும் சமீபத்தில் அமெரிக்க மக்கள் தமது வீரர்கள் வேறு தேசங்களில் சென்று போர் புரிவதையும் உயிர்த்தியாகம் செய்வதையும் விரும்பாத நிலையிலேயே உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரஷ்சியா-உக்ரைன் போரில் பைடன் தமது துருப்புக்களை இறக்கி எதிரான விளைவுகளை எதிர்கொள்வாராயின் அது பைடனுக்கு மாத்திரிமின்றி ஜனநாயக கட்சியின் அரசியலுக்கும் ஆபத்தானதாகவே அமையக்கூடியதாகும்.
எனவே, ரஷ்சியா-உக்ரைன் விவகாரமானது அதிகம் நெருக்கடி சூழலுடனேயே கடந்து செல்லக்கூடியத வாய்ப்புக்களே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உக்ரைன் விவகாரத்தை பயன்படுத்தி ரஷ்சியா-ஐரோப்பாவுடன் வலுவான உறவை கட்டமைக்க முயலுகிறது. புடினுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் ரஷ்சிய பத்திரிகையாளர் அன்ட்ரூ கொலெஸ்னிகோவ் (Andrei Kolesnikov) ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் புடினின் சந்திப்பு நடத்தையை மதிப்பீடு செய்துள்ளார். அதில் அவர், ரஷ்சிய தலைவர் குறித்த செய்தியாளர் மாநாட்டில் போர் அச்சுறுத்தல் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதற்கு பதிலாக உக்ரைன் வழியாக ஐரோப்பிய எரிவாயு விநியோகம் பற்றி அவ்வளவு உள் அமைதியுடன் பேசுகையில், ஒரு எளிதான முடிவை அடைய முடியும் அன்கின்றார். அதாவது, 'அவர் உண்மையில் எந்த படையெடுப்பையும் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை.' எனக்குறிப்பிடுகின்றார். அவ்வாறே ரஷ்சியா நோக்கங்கள் இன்னும் தெளிவாக இல்லை என்று சர்வதேச நெருக்கடி குழுவில் ரஷ்சியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான திட்ட இயக்குனர் ஓல்கா ஒலிகர் வெளியுறவுக் கொள்கை(Foreign Policy) செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். ஒருவித சலுகையை முதலில் வெல்லாமல் ரஷ்சியா படைகளை அகற்றுவது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. 'நீங்கள் ரஷ்சியாவாக இருந்தால் அழுத்தத்தை வைத்து நீங்கள் எதைப் பெற முடியும் என்பதைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தர்க்கம் உள்ளது' என்று ஒலிக்கர் கூறினார். அதுவே நிதர்சனமான பார்வையாகவும் புலப்படுகிறது. புடின் கொதிநிலையை பயன்படுத்தி தன் இலக்குகளை அடைவதற்கான நகர்வுகளை முன்னெடுக்கின்றமையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
Comments
Post a Comment