தமிழரசு கட்சி மறைமுகமாக எதிர்தரப்புக்கு மீளவும் சேவை செய்ய ஆரம்பித்துவிட்டதா? -ஐ.வி.மகாசேனன்-
வடக்கு-கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கையெழுத்து போராட்ட அரசியலை மேற்கொள்வது மறைமுகமாக தென்னிலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாய் அமைகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக தென்னிலங்கையின் எதிரணிகளை ஒன்றினைக்கும் அரசியலை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்து வருகின்றார். இவ்விருமுனை அரசியலும் வேறுபட்ட பார்வைகளை பொதுவெளியில் வழங்குகின்ற போதிலும், இரண்டினதும் அடித்தளம் பொதுவானதாயும் மேற்குலகின் எண்ணங்களை பிரதிபலிப்பனவாயும் அரசியல் வெளியில் உரையாடப்படுகிறது. இக்கட்டுரை பாராளுமன்ற உறுப்பினரினால் ஒருங்கிணைக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட கையெழுத்து போராட்டம் மற்றும் தென்னிலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுப்பதற்கான முயற்சி என்பவற்றின் அரசியல் பரிமாணத்தைத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்று, எதிரணிகளை ஒன்றிணைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் கூட்டு முயற்சிக்கான இரண்டு சுற்று கூட்டங்களை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நெறிப்படுத்தியுள்ளார். இரண்டு சுற்றுக் கூட்டங்களில் முதல் கூட்டம் ஜனவரி-27ஆம் திகதியும், இரண்டாவது கூட்டம் பெப்ரவரி-10ஆம் திகதியும் நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழுவின் ( PFC ) முன்னாள் தலைவர் என்ற வகையில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக டெய்லி மிரர் ( Daily Mirror ) ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, தற்போதைய PFC தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா, COPE தலைவர் சரித ஹேரத் மற்றும் COPA தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சித் தலைவர்கள் மற்றும் மூன்று முக்கிய பாராளுமன்றக் குழுக்களின் தலைவர்களுடன் இரண்டு சுற்று மூடிய கதவு சந்திப்புகளை நடாத்தியுள்ளனர்.
இரண்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான கையெழுத்து போராட்ட அரசியலையும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைத்துள்ளார். பெப்ரவரி-03ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்து போராட்டம் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவியரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை நிகழ்த்துவதை வெளிப்படுத்தும் வகையில், கடந்த பெப்ரவரி-15அன்று பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பில் சர்வஜன நீதி அமைப்பின் ஊடாக இடம்பெற்றிருந்தது. சர்வஜன நீதி அமைப்பின் இணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கு-கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்து போராட்ட நடவடிக்கைகளை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. மேலும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரும் மகஜரில் கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் பழிவாங்கும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கடும் தொனியிலும் கருத்துரைத்துள்ளார்.
தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் இரு அரசியல் செயற்பாடுகளும் வெளிப்பார்வையில் முரணானதாக தோற்றமளிக்கின்ற போதிலும், ஏக்கிய இராச்சியத்துக்குள் தமிழர்களின் அரசியல் செயற்பாட்டை ஒடுக்கக்கூடியதாகவும்; மேற்குலகின் எண்ணங்களை பிரதிபலிக்கும் சமூகத்தை அடையாளப்படுக்கூடியதாகவும் நுணுக்கமான அரசியல் அடித்தளங்களை கொண்டுள்ளது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகும்.
முதலாவது, தென்னிலங்கை அரசியல் வங்குரோத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்வதற்காக தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடையே கூட்டிணைவை ஏற்படுத்தும் செயற்பாட்டை தமிழரசியல் தரப்பு முன்னெடுப்பது, இலங்கையின் ஏக்கிய இராச்சியத்துக்கான இணக்க செய்தியாகவே அமைகின்றது. இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறையின் கீழ் இணைந்து வாழ இயலாத சூழலில் அதிகாரப்பகிர்வை வலியுறுத்தி சமஷ்டிக்கோரிக்கையும் அதன் பரிணாமமாய் தனிநாட்டு கோரிக்கையும் முன்வைதது போராடிய மக்களே தமிழர்கள் ஆகும். கடந்த காலங்களில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக மற்றும் மூத்த தலைவர்கள் இலங்கையின் தேசிய சின்னங்களை புறக்கணித்து, தென்னிலங்கையும், வடக்கு-கிழக்கும் வௌ;வேறான அலகுகள் என்பதை அடையாளப்படுத்தி இருந்தனர். எனினும் இன்றைய தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் சுயாட்சி கோரிக்கைகளை ஏக்கிய இராச்சியத்துக்குள் வலுவிழக்க செய்யும் அரசியலையே முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இரண்டாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் முதன்மையான அரசியல் பிரதிநிதிகள் என்பதை துறந்து தென்னிலங்கை சிவில் சமூகத்தின் செயற்பாடுகளையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் முன்னெடுத்து வருகின்றார். அண்மையில் தென்னிலங்கை எதிர்க்கட்சிகளிடையே ஐக்கியத்தை உருவாக்கும் முயற்சிகளில் தென்னிலங்கை சிவில் சமூகங்கள் களமிறங்கியுள்ளன. தேர்தலில் பொது எதிரணி வேட்பாளரை களமிறக்கும் எண்ணங்களோடு தென்னிலங்கை சிவில் சமூகங்கள் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. அதிலோர் நகர்வாகவே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனவரி 24-26 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாண அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இவ்வாறான தென்னிலங்கை சிவில் சமூக எண்ணங்களை பிரதிபலிக்கும் செயற்பாட்டையே தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னெடுத்து வருகின்றார். பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் ஒரு சீர்திருத்தம் (பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்-CTA) தென்னிலங்கை சிவில் சமூகங்களின் ஆதரவுடன் ரணில்-மைத்திரி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனை அன்றைய பொது எதிரணியான மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நிராகரித்திருந்தனர். இந்நிலையில் தற்போது பொதுஜன பெரமுன அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் செய்யப்போவதாக நகலொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அந்நகலுக்கு தென்னிலங்கை சிவில் சமூகத்திடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனை பிரதிபலித்தே கையெழுத்து போராட்டமும் இடம்பெறுகின்றது. வடக்கு-கிழக்கில் தமிழரசு கட்சியின் இளையோரணி கையெழுத்து போராட்டங்களை நெறிப்படுத்தினாலும் நாடு தழுவியரீதியில் சர்வஜன நீதி அமைப்பே முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது, தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னகர்த்தியுள்ள பொருளாதாரத்தை பலப்படுத்த எதிரணியிடையே கூட்டு முயற்சியும் அதுசார்ந்த தீர்மானங்களும்; பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரும் நாடு தழுவிய கையெழுத்து போராட்டமும் மேற்கின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய சமூகத்தை அடையாளப்படுத்தும் செய்தியாக உள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் பொது எதிரணி உருவாக்கத்தில் மேற்கின் ஈடுபாடு உயரளவில் காணப்பட்டிருந்தது. ஆதலாலேயே நிலைமாறுகாலநீதி செயற்பாட்டுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணக்கம் தெரிவித்துவிட்டு களத்தில் எவ்வித ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்காத போதிலும், ஐ.நா மனித உரிமைகள்பேரவையில் கால அவகாசம் வழங்கப்பட்டதுடன் ஆணையாளரால் குறித்த அரசாங்கம் புகழாரம் சூடப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்ட சீர்திருத்தம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முதலான மேற்கு நாடுகள் தொடர்ச்சியாக கோரி வருகின்றன. ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட சீர்திருத்தம் ஐரோப்பிய நாடுகளின் மாதிரியாகவே பிரச்சாரம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதைய நாடுதழுவிய பயங்கரவாத தடைச்சட்ட கையெழுத்து போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் பலத்த ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது. இது மேற்கு சார்பான எண்ணங்களை பிரதிபலிக்குமோர் பரந்த சமூகம் முழு நாட்டிலும் காணப்படுகின்றதென்ற செய்தியை மேற்கிற்கு சொல்வதுடன் ஆட்சி மாற்றத்துக்கான ஆதரவு கோரிக்கையாகவுமே அமைகின்றது.
நான்காவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரும் மகஜரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் கையெழுத்தும், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக முன்வைத்துள்ள கருத்துக்களும் விமர்சனமின்றி ஏற்று கொள்வது கடந்தகால வரலாற்றை இருட்டடிப்பு செய்ய வழிகோலக்கூடியதாகும். தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அதிக வடுக்களை எதிர்கொண்ட காலப்பகுதிக்குள் சந்திரிக்கா குமாரதுங்காவின் பத்தாண்டு கால(1994-2004) ஆட்சிப்பகுதியும் உள்ளடங்குகின்றது. குறிப்பாக 1995ஆம் ஆண்டு யுத்தமும் அதன் காரணமாக யாழ்ப்பாணம் முழுமையாக இடம்பெயர்ந்து இடுகாடாகியமையும் சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சிக்கால ஆரம்ப சாதனையாகவே உள்ளது. மேலும், 1995ஆம் ஆண்டு ஜூலை-09இல் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேருக்கு மேல் காயமடைந்தனர். இவ்வாறாக நீண்ட படுகொலை பட்டியலும் பத்தாண்டு கால ஆட்சி சாதனைகளில் உள்ளடங்குகின்றது. அத்துடன் 1979ஆம் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் சந்திரிக்கா குமாரதுங்காவின் பத்தாண்டு கால ஆட்சியிலும் நீடித்ததது. அக்காலப்பகுதியிலும் பல அப்பாவி தமிழ் மக்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் வாடும் அவலங்களும் தொடர்கிறது. இன்று ராஜபக்ஷாக்களின் ஆட்சி காலத்தில் அரசியல் பழிவாங்கும் சட்டமாக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்துவதாக கருத்துரைக்கும் சந்திரிக்கா குமாரதுங்கா, 1994-2004 காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்ட பயன்பாடு தொடர்பிலும் பதிலுரைக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்திடுவது ஆரோக்கியமானதாயினும், அவருடைய ஆட்சிக்காலப்பகுதிக்கு பொறுப்பு கூறாமை வரலாற்றை திரிவுபடுத்தவே வழிகோலக்கூடியதாகும். அது மட்டுமல்ல தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சிங்களவர் கையெழுத்திடுவதென்பது ஐரோப்பியர்களுக்கு தமது நியாயத்தை காட்டுவதற்கானதாகவே தெரிகிறது. ஏறக்குறைய முன்னாள் ஜனாதிபதியின் கையெழுத்துடன் அதன் ஆக்கபூர்வமான செயல்கள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. இது ஜெனீவாவை சாந்தப்படுத்தும் செயலாக்கியுள்ளார் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.
எனவே, தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சர்வஜன நீதி அமைப்பின் இணைப்பாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் அண்மைய அரசியல் செயற்பாடுகள் தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் பிரதிநிதி என்பதை துறந்து தென்னிலங்கையின் சிவில் சமூக செயற்பாட்டாளராகவே அதிகம் பொருந்தக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் தமிழரசு கட்சி வரித்து கொண்ட கொள்கைகளை புறந்தள்ளி இலங்கை ஏக்கிய இராச்சியத்துக்குள் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகளை ஒடுக்கும் செயல்களையே தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளில் அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. இதனை தமிழரசு கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மூத்த தலைவர்களும் கரிசணை கொள்ளாது கடந்து செல்வது தமிழரசுக்கட்சியை மாத்திரமின்றி தமிழினத்தையும் ஒடுக்கும் செயலாகவே உள்ளது.
Comments
Post a Comment