தென்னிலங்கை அமைச்சர்களின் வடக்கு விஜயம் ஜெனிவா அமர்வின் நெருக்கடிகளை தளர்த்த முற்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
ஜனவரி இறுதி வாரங்களில் இலங்கையின் முக்கியமான இரு அமைச்சர்களான வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிம், நீதி அமைச்சர் அலி சப்ரியும் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்கள். குறித்த விஜயம் பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பிக்க உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருடன் தொடர்புடையதாக அமையுமா என்பது தொடர்பில் கடந்த கால அனுபங்களினை மையப்படுத்தி ஊடகப்பரப்பில் சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் ஜி.எல்.பீரிஸ் வடக்கு விஜயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்(UNHCR) எதிர்வரும் அமர்வுகள் பற்றிக் குறிப்பிடுகையில், 'தமது வடக்கிற்கான விஜயத்தை ஊடகங்களில் ஒரு பிரிவினர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் மேற்கொண்ட விஜயத்திற்கும் எதிர்வரும் ஜெனிவா அமர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என வலியுறுத்தி குறிப்பிட்டிருந்தார். இக்கட்டுரை 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பிறகு வருடாவருடம் மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடரை அண்டித்து இலங்கை அரசாங்கங்கள் தமது தந்திரோபாயங்களை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றமையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடர் பெப்ரவரி-28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, ஏப்ரல்-01ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கை குறித்த எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக வடக்கிற்கு வருகை தந்திருந்த ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தமிழ்த்தேசிய கட்சி தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன், 'பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எந்தவித நகர்வுகளையும் தாம் அவதானிக்கவில்லை எனவும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வெளிப்படுகின்றது எனவும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் இம்முறை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை வெளிவரும் எனவும் தமது பக்கம் இருந்து ஆவணங்கள் முன்வைக்கப்படுமெனவும்' தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இறுக்கமான அறிக்கைகள் முன்னகர்த்தப்படுவதாக ஐ.நா அதிகாரிகள் கருத்துரைக்கும் சூழலிலே, மறுமுனையில் இலங்கை அரசாங்கம் ஜனவரி-27(2022) அன்று பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தகமானியை வெளியிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தினூடாக அன்றைய இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களில் ஒன்றாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாகும். அதன் முன்னெடுப்பாக அன்றைய அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு(Pவுயு) மாற்றாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்(ஊவுயு) என்பதனை முன்மொழிந்திருந்தார்கள். எனினும் ஆட்சி மாற்றத்துடன் அவ்ஏற்பாடு சட்ட நகலாகவே மாறியது. இந்நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் 49வது ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் உள்ளடக்கிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
மேலும், நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட 'நீதிக்கான அணுகல்' என்ற அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சியில் யாழ்.மாவட்ட ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தொடர்புடையவர்கள்.. அமைச்சர்களான பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, மற்றும் சப்ரி ஆகியோர் 'நீதிக்கான அணுகல்' திட்டத்தை ஜனவரி-29அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பித்து வைத்தனர். அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து வடக்கு மக்களுக்கு தெளிவுபடுத்தல், நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் மோதலின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நஷ;டஈடு வழங்குதல் என்பனவே இந்த நிகழ்ச்சித்திட்டமாகும். நீதிக்கான அணுகல் நிகழ்ச்சிதிட்டம் தெளிவாகவே ஐ.நா மனித உரிமைகளின் தீர்மானங்களை மையப்படுத்தியதாகவே காணப்படுகிறது. எனவே, நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவையை ஆரம்பிக்கும் முகமாக கடந்த வாரம் நீதியமைச்சரும், வெளிவிவகார அமைச்சரும் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை முழுமையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுடன் தொடர்புற்றதாகவே காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் குறித்த செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், 'பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளமையும், வடக்கில் முன்னெடுக்கும் நீதிக்கான அணுகல் வேலைத்திட்டமும் ஜெனிவா கூட்டத்தொடரை சமாளிக்கவும் சர்வதேச சாடுகளை ஏமாற்றவும் அரசாங்கம் நடாத்தும் நாடகத்தின் ஓர் அங்கமாகும்' என தெரிவித்துள்ளார். இவ்வாறே மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம், 'பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே தோன்றுகின்றது' என தெரிவித்துள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரை அண்டித்து அரசாங்கம் விரைவுபடுத்திவரும் நல்லிணக்க செயற்பாட்டு விம்பங்கள் தொடர்பில் பல தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்மறையான விமர்சனங்கள் எழுகின்ற போதிலும், விமர்சனகாரர்களின் கடந்த கால செயற்பாடுகளும் நிகழ்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முன்மாதியாக உள்ளன என்பது மறுதலிக்க இயலாத வாதமாக உள்ளது. இதனை ஜெனிவா கூட்டத்தொடரை அண்டி அரசாங்கங்கங்கள் அரங்கேற்றிய நாடகங்களூடாகவே அவதானிக்க முடியும்.
2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. அன்றைய மகிந்த ராஜபக்ஷh தலைமையிலான அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இணை அனுசரனை வழங்காது, தீர்மானங்களை மறுதலித்தே வந்தனர். மேலும், 2010இல் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பரணகம ஜனாதிபதி ஆணைக்குழு எனும் உள்ளக விசாரணைப்பொறிமுறைகளை கட்டமைத்து அதனூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதாக சர்வதேசத்திற்கு கூறி வந்தனர். ஜெனிவா கூட்டத்தொடர்களில் குறித்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளையே காட்சிப்படுத்தி வந்தனர்.
எனினும் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் உருவாகிய ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தனர். எனினும் குறித்த அரசாங்கம் வினைத்திறனாக செயற்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத ஜெனீவா கூட்டத்தொடர் அண்மிக்கும் காலப்பகுதியிலேயே தீர்மானங்களில் ஒவ்வொன்றிற்குமான முன்முனைப்புக்கறை மேற்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றி வருவாதாக விம்பத்தை ஏற்படுத்தி கொண்டார்கள். எடுத்துக்காட்டாக ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் காணமலாக்கப்பட்டோருக்கான அலுவலக சட்ட மசோதா 2016,ஜூன்-22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2016, ஆகஸ்ட்-11அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காணமலாக்கப்பட்டோருக்கான அலுவலக செயற்பாடு 2018,பெப்ரவரி-28 அன்றே ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறே இழப்பீடு தொடர்பான சட்டமும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான நாடகங்களாகவே அரங்கேற்றி இருந்தனர். அவ்நாடகத்தை இன்று விமர்சிக்கும் தரப்பினர் ஏற்றுக்கொண்டதுடன் அந்நாடகத்தின் பங்குதாரர்களாகவும் செயற்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் தொடர்ச்சியையே இன்றைய பொதுஜன பெரமுன அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் கையாண்டு வருகின்றனர். எனினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஜெனிவா கூட்டத்தொடரின் தீர்மானங்களுடன் இணங்கி செல்வதில் ஈடுபாட்டை காட்டவில்லை. மாறாக ஜெனிவா கூட்டத்தொடர் சார்ந்து எழும் நெருக்கடிகளை ஒத்திப்போடும் வகையிலேலேயே நல்லிணக்க விம்ப செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இனப்பிரச்சினை தீர்வு என்பதில் முழுமையான விலகல் நிலையிலேயே உள்ளார்கள். குறிப்பாக இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதாகவே அரசாங்கத்தின் கருத்துக்கள் காணப்படுகிறது. வடக்கு விஜயத்தில் ஜீ.எல். பீரிஸ் ஜெனிவா விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோது, 'ஏற்கனவே நடந்து முடிந்த பிரச்னைக்காக காலத்தை வீணடிக்க முடியாதென்பதே அரசின் நிலைப்பாடு' என குறிப்பிட்டுள்ளார். மேலும், 'இலங்கையில் நிலவுகின்ற வடக்கு-கிழக்கு பிரச்னை ஓர் உள்நாட்டு பிரச்சினை. நீண்ட காலமாகவே இடம்பெற்ற பிரச்சினை. ஏனைய உலக நாடுகளின் பிரச்சினைகளோடு ஒப்பிடுகையில் இலங்கை அதிக பிரச்சினைகளை கொண்டிராத நாடாகவே இருக்கின்றது' எனவும் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சரும், நீதி அமைச்சரும் யாழ்ப்பாணத்தில் தாம் பங்குபற்றிய ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கருத்து வெளியிட்டபோது யாழ்ப்பாண மக்கள் தமது பலதரப்பட்ட மனிதாபிமானப் பிரச்சனைகள் சம்பந்தமாகவும், அரசியல் அபிலாசைகள் சம்பந்தமாகவும் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்புகளை மழுங்கடிக்கும் வகையிலான கருத்துக்கண்ணோட்டங்களையே வெளியிட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
எனவே, ஜெனிவா நெருக்கடிகளை ஒத்திப்போடும் வகையிலான தந்திரோபாய நகர்வுகளை முன்னைய ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் பாணியில் பொதுஜன பெரமுன அரசாங்கமும் முன்னனகர்த்தியுள்ளது என்பதனையே ஜெனிவா கூட்டத்தொடரை அண்மித்து சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிலிருந்து அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் நாடகங்களை ஆதரித்து கால அவகாசங்களுக்காக உழைத்த தமிழ்த்தேசிய அரசியல் தரப்பினர் இம்முறை அரசாங்கம் நாடகமாடுவதாக கூக்குரலெடுப்பதும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.
Comments
Post a Comment