ரஷ்சியா-உக்ரைன் போரும் மேற்குலக்தின் நெருக்கடிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

கடந்த இரண்டு மாதங்களாக கொதி நிலையிலிருந்த ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில்  கிளர்ச்சிப் படைகளின் ஆதிக்கத்தில் காணப்பட்ட இரு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக ரஷ்சியா பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன்  சுதந்திர குடியரசுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உக்ரைன் மீது போருக்கான அறிவிப்பை நிகழ்த்தி கடுமையான போரை புடின் உக்ரைன் நிலப்பரப்பில் நிகழ்த்தி வருகிறார். ரஷ்சியாவின் சுதந்திர பிரகடனத்தை தொடர்ந்து ரஷ்சிய சார்பு அரசுகளும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றன. எனினும் உக்ரைன் எல்லையில் ரஷ்சிய நிலப்பரப்பில் இராணுவ குவிப்பு மேற்கொள்ளப்பட்டு கொதிநிலையில் காணப்படுகையில் போருக்கான எச்சரிக்கைகளை முன்வைத்த அமெரிக்கா,  ரஷ்சியாவின் சுதந்திர தேச மற்றும் போர் அறிவிப்புக்கு பின்னர் ரஷ்சியாவிற்கு எதிராக காட்டமான எதிர்வினைகளை முன்னெடுக்கவில்லை. பொருளாதார தடைகளுடன் மட்டுப்படுத்தியுள்ளது. இது சர்வதேச அரசியலில் நுணுக்கமான தேடலை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை உக்ரைனின் கிழக்கு பிராந்தியங்கள் மீதான ரஷ்சியாவின் சுதந்திர பிரகடனமும் அதன் பின்னரான சர்வதேச அரசியல் செயற்பாடுகளை தேடுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

பெப்ரவரி முதலிரு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான இரு சக்திகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தலைவர்களுடன் சந்திப்பினை மேற்கொண்ட ரஷ்சிய ஜனாதிபதி புடின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தளர்த்தும் சமிக்ஞைகளை முன்னெடுத்தார். உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதாகவும் அறிவித்திருந்தார். எனினும் ரஷ்சியாவின் விலகல் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கில் ரஷ்சிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தன்னாட்சிப் பிராந்தியங்களில் ஷெல் தாக்குதல்கள் தொடங்கின. உக்ரைன் படைகளே தாக்குதலைத் தொடக்கியிருப்பதாகக் கிளர்ச்சியாளர்களும் கிளர்ச்சிப் படைகளே ரஷ்சியாவின் தூண்டுதலில் ஷெல் வீச்சுக்களை நடத்துகின்றனர் என உக்ரைனும் மாறிமாறிக் குற்றம் சுமத்தின.

குற்றச்சாட்டுகள், வாதங்களுக்கு அப்பால் ஆக்கிரமிப்பு தொடர்பில் ரஷ்சியா மாற்று வியூகத்தை உருவாக்கியுள்ளது என்பதே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதாகக் கூறிவிட்டு, ஆக்கிரமிப்பை வேறு வழிகளில் ஆரம்பிக்க புடின் புதிய வியூகத்தை கட்டமைத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஷ்சியா ஆதரவு சார்பான கிளர்ச்சிப்படைகளூடாக புடின் காய் நகர்த்தியுள்ளார். அதாவது ரஷ்சிய ஆதரவு கிளர்ச்சிப்படைகளின் ஆக்கிரமிப்பிலுள்ள டொன்பாஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க் ( Donetsk ) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய இரண்டு பகுதிகளையும் தனிநாடுகளாக சுதந்திரக் குடியரசுகளாக அங்கீகரிக்கின்ற ஒரு தீர்மானத்தை ரஷ்யாவின் நாடாளுமன்றமாகிய டூமா (Duma) நிறைவேற்றியுள்ளதுடன், பெப்ரவரி-21இல் புடின் ஒப்புதலளித்திருந்தார். இதனூடாக உக்ரைனுக்குள்ளே தனிநாடுகளை  அங்கீகரிக்கத்து, அங்கு ரஷ்சியா சார்பு அரசாங்கத்தை உருவாக்குவதனூடாக உக்ரைன் மீது ரஷ்சியாவின் ஆதிக்கத்தை நிலைப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

சுதந்திர தேச அங்கீகாரத்தை தொடர்ந்து, டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் தன்னாட்சி பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்சியா அமைதிப்படையை அனுப்பியிருந்தது. உள்நாட்டுக்குள்ளேயே தனது சொந்த டொன்பாஸ் பிராந்திய மக்களை உக்ரைன் படைகள் கொடுமைப்படுத்தி இனப்படுகொலை புரிந்து வருகின்றன என்று மொஸ்கோ குற்றம் சுமத்தி உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்;துக்கு சென்றுள்ள அமைதிப்படை உக்ரைன் இராணுவத்திற்கு எதிரான போரை முன்னெடுக்க முனைந்துள்ளது. பெப்ரவரி-24அன்று மாஸ்கோவில் உள்ளூர் நேரப்படி காலை 6.00மணிக்கு முன்னதாக தொலைக்காட்சியில் புடின் கிழக்கு உக்ரைனில் ரஷ்சியா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பில் புடின், 'நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்' என்று கூறியுள்ளார். உக்ரைனின் இராணுவத்தை அதன் ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்; உக்ரைனை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற இலக்கு ரஷ்சியாவுக்கு இல்லை என்றும்; இரத்தக்களரிக்கான பொறுப்பு உக்ரேனிய ஆட்சிக்கு உள்ளது எனவும் புடின் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

புடினின் கிழக்கு உக்ரைனிய போர் அறிவிப்புக்கு பதிலடியாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைன் மக்களுக்கு ஒரு சுருக்கமான தேசிய உரையை நிகழ்த்தி நாடு முழுவதும் இராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளதுடன் உக்ரைன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் மக்களுக்கு வழங்கி உள்ளார். குறித்த உரையில், 'அன்புள்ள உக்ரேனிய குடிமக்களே, இன்று காலை ஜனாதிபதி புடின் டான்பாஸில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையை அறிவித்தார். நமது இராணுவ உள்கட்டமைப்பு மற்றும் எல்லைக் காவலர்கள் மீது ரஷ்சியா தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் பல நகரங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. எங்கள் நாட்டின் முழுப் பகுதியிலும் நாங்கள் இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். ஒரு நிமிடத்திற்கு முன்பு நான் ஜனாதிபதி பிடனுடன் உரையாடினேன். அமெரிக்கா ஏற்கனவே சர்வதேச ஆதரவை ஒன்றிணைக்கத் தொடங்கியுள்ளது. இன்று நீங்கள் ஒவ்வொருவரும் அமைதியாக இருக்க வேண்டும். முடிந்தால் வீட்டிலேயே இருங்கள். நாங்கள் வேலை செய்கின்றோம். இராணுவம் செயல்படுகிறது. பாதுகாப்புத் துறை முழுவதுமாக செயல்பட்டு வருகிறது' எனக்குறிப்பிட்டுள்ளார்.

புடினின் போர் அறிவிப்பும் அதற்கான உக்ரேனின் பதில் அறிவிப்புக்களும் ஐரோப்பா கண்டத்தையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. 'இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா அதன் இருண்ட நேரத்தை எதிர்கொள்கிறது' என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார். 1945க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரைத் தூண்டலாம் என்ற உலகத் தலைவர்களின் கடந்த ஒரு மாத கால எச்சரிக்கைகளுக்கு மத்தியில், ரஷ்சிய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உரையாடல்கள் அதனை உறுதிசெய்வதாக சர்வதேச அரசியல் அவதானிகளிடையே கருத்துக்கள் காணப்படுகிறது. மேலும், கிழக்கு உக்ரேனிய போர் நடவடிக்கை பற்றிய புடினின் அறிவிப்பில், 'ரஷ்சிய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் அவர்கள் இதுவரை கண்டிராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்' என பிற நாடுகளுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை ரஷ்சிய-உக்ரைன் போர் ஐரோப்பா கண்டத்தை தாண்டி முழு உலகையும் ஆபத்தில் தள்ளக்கூடிய விதத்தில் மூன்றாம் உலகப்போருக்கான நெருக்கடியை உருவாக்குகின்றதா என்ற அச்சத்தையும் சர்வதேச அரசியல் அவதானிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால அனுபவங்களில் ரஷ்சிய-உக்ரைன் போரை சாதாரண பார்வைகளை கடந்து ஆழமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, மூன்றாம் உலகப்போர் ஒன்று மூளுமாயின் ரஷ்சியாவிற்கு எதிரான அணிக்கு தலைமை தாங்க வேண்டிய நாடாக அமெரிக்காவே காணப்படுகின்றது. அச்சந்தர்ப்பத்திலேயே அது மூன்றாம் உலகப்போராகவும் அமையக்கூடியதாகும். இல்லாவிடில் உக்ரைன் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு போராக கடந்து செல்லக்கூடியதாகும். எனினும் அமெரிக்கா ரஷ்சியாவிற்கு எதிரான போரை நெறிப்படுத்தும்; ஆற்றலுடன் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் அமெரிக்காவின் அண்மைய செயற்பாடுகளால் பொதுவெளியில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு (2021) ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் மற்றும் மியான்மாரில் அமெரிக்க ஆதரவு ஆங் சாங் சுகியை இராணுவ சதிப்புரட்சியூடாக சிறைபிடித்து இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற போதிலும் அமெரிக்க எவ்வித வினைத்திறனான செயற்பாடுகளையும் ஆங் சாங் சுகிக்கு ஆதரவாக செயற்படுத்தவில்லை என்பது கவனத்திற்குரியதாகும். தற்போது உக்ரைன் விடயத்திலும் உக்ரைன் அதிகாரிகள் மட்டத்தில் அமெரிக்காவின் கரிசணை தொடர்பில் சந்;தேகமே காணப்படுகின்றது. மேலும், அமெரிக்காவின் பலவீனத்தை புடின் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ட்ரம்ப்பின் கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடையதாயினும் அமெரிக்காவின் பலவீனத்தை புடின் சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார் என்பதில் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடமும் பலமான நம்பிக்கை காணப்படுகிறது.

இரண்டாவது, ரஷ்சியா கிழக்கு உக்ரைனில் ரஷ்சியா ஆதரவு கிளர்ச்சிப்படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள பிரதேசங்களினை சுதந்திர குடியரசுகளாக அறிவித்த போது ஐரோப்பாவின் பிரதான சக்திகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து உக்ரைனுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெப்ரவரி-23 அன்று பாரிஸ் மற்றும் பேர்ளின் நகரின் முக்கிய கட்டடங்களில் உக்ரைனின் தேசிய நிறங்களை ஒளிரச்செய்து உக்ரைனுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் ஜேர்மனி ரஷ்சியாவில் இருந்து எரிவாயுவை மேற்கு ஐரோப்பாவுக்கு எடுத்துவருகின்ற இரண்டாவது குழாய் விநியோகத் திட்டத்தை (நோட் ஸ்ரிம் - 2) இயங்க அனுமதிப்பதை ஜேர்மனி இடைநிறுத்தியிருக்கிறது. எனினும், 'நோட் ஸ்ரிம் - 2' என்ற அந்தத் திட்டம் ரஷ்சியப் பொருளாதாரத்துக்கும் ஜேர்மனியின் எரிசக்தித்தேவைகளுக்கும் மிக அவசியமானதாகும். எனவே இடைநிறுத்;தமானது நிரந்தரமாகக்கூடிய சாத்தியமின்மைகளே அதிகளமாக உள்ளது. ஆக்கிரமிப்பு முழுமையடைந்த பின்னரோ அல்லது போர நிறைவுற்ற பின்னர் ரஷ்சியா மீதான ஐரோப்பிய நாடுகளின் தடைகள் தளர்ந்து செல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது. ஐரோப்பாவின் ரஷ்சியா மீதான கோபம் நிரந்தரமாவது ஐரோப்பாவிற்கும் பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்குவாரத்தை உருவாக்கக்கூடியதாகும். ஐரோப்பாவுக்கும் ரஷ்சியாவிற்குமிடையிலே காணப்படும் தொடர்பு பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் புடினுக்குமிடையிலான சந்திப்பில், 'ரஷ்யாவிற்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஐரோப்பியர்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று மக்ரோன் வலியுறுத்தி இருந்தமையிலிருந்து தெளிவாக அடையாளங் காணக்கூடியதாக உள்ளது.

மூன்றாவது, கடந்த கால ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு அனுபவங்களையும் நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது. ரஷ்சியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு 2014ஆம் ஆண்டும் இடம்பெற்றுள்ளது. உக்ரைனின் கிரிமியா நிலப்பகுதியை ரஷ்சியாவுடன் இணைத்ததன் மூலம் குறித்த ஆக்கிரமிப்பிலும் ரஷ்சியாவே வெற்றி பெற்றிருந்தது. ரஷ்சியாவின் 2014ஆம் ஆண்டு கிரிமியா ஆக்கிரமிப்பு போர் உத்தியை ஒத்ததாகவே தற்போதைய உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பும் காணப்படுவதாக பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1991இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, உக்ரைன் நம்பகத்தன்மையுடன் ரஷ்சியாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 2014இல் உக்ரைனில் ஏற்பட்ட மேற்கத்திய சார்பு, ஜனநாயக சார்பு புரட்சி ரஷ்சியா நட்பு ஆட்சியை மாற்றியது. நேட்டோவில் உறுப்பினர் உட்பட ஐரோப்பாவுடன் இறுக்கமான ஒருங்கிணைப்பை நாடியது. ரஷ்சியா புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்த்தது மற்றும் கிரிமியாவை இணைத்து, கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு இராணுவரீதியாக ஆதரவளிப்பதன் மூலம் பதிலளித்தது. மீளவும் தற்போது 2014ஐ ஒத்த அரசியல் நிகழ்வுகளே அவதானிக்கப்படுகிறது.

எனவே, ரஷ்சியா-உக்ரைனின் அரசியல் நிகழ்வுகளை சமகாலத்துடனும் வரலாற்று அனுபவத்துடனும் நோக்குகையில் மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்புகள் அரிதாகவே புலப்படுகின்றது. ரஷ்சிய-உக்ரைன் விவகாரத்தில் ரஷ்சிய-அமெரிக்க மோதலானது பனிப்போர் நிகழ்வுகளை ஒத்ததாகவே கடந்து செல்லக்கூடிய சூழலே அரசியல் வெளியில் அவதானிக்கப்படுகிறது. அமெரிக்க ரஷ்சியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள போதிலும் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாய கூட்டாளியான இந்தியா நடுநிலைமை வகிக்க போவதாகவே தெரிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் முன்னிலையிலுள்ள சீனாவின் ஆதரவு ரஷ்சியாவிற்கு காணப்படும் சூழலிலும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் ரஷ்சியாவிற்கு கடுமையான சுமையை உருவாக்கக்கூடியதாக காணப்படவில்லை. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு கிரிமியா போரை ஒத்த விளைவுகளே மீள ஏற்படக்கூடிய எதிர்வுகூறல்களையே சர்வதேச அரசியல் ஆய்வு பரப்பில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-