அரசியல் கட்சிகள் தமக்காக வரலாற்றை திரிவுபடுத்த முயல்வது ஆரோக்கியமற்றது! -ஐ.வி.மகாசேனன்-
ஊடகப்பரப்பில் தமிழ்த்தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும் தமிழ்க்கட்சிகளிடம் தமிழ்த்தேசியம் தொடர்பிலும் அதன் வரலாற்று பரிமாணங்கள் தொடர்பிலும் சரியான பார்வை காணப்படுகின்றதா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே காணப்படுகிறது. தேசியம் என்பது வாழ்வியல் கட்டமைப்பாகும். எனினும் தமிழ் மக்களிடம் அதனை வாழ்வியலாக நகர்த்தியுள்ளார்களா என்ற கேள்விகளுக்கு முன்னே, தமிழரசியல் தரப்பினர் தாம் தேசியத்தை வாழ்வியலாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை தேட வேண்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் தமிழ்த்தேசியத்தின் பரிணாம வளர்ச்சியை சீராக அறியாதவர்களாகவே உள்ளனர். ஆதலாலேயே ஆயுதப்போராட்ட மொனிப்புக்கு பின்னராக கடந்த 12ஆண்டு கால தமிழரசியலை ஆரோக்கியமாக நகர்த்துவது அறியாது பயணிக்கின்றனர். தமிழரசியல் தரப்பின் தமிழ்த்தேசிய பரிணாமம் தொடர்பான சர்ச்சையை, அண்மையில் தமிழ்த்தேசிய கட்சியொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் தனிநாட்டு கோரிக்கை நிலைப்பாடு சார்ந்தும், தேசிய அந்தஸ்து கோரிக்கை நிலைப்பாடு சார்ந்தும் வெளியிட்ட கருத்து ஏற்படுத்தியுள்ளது. இது வரலாற்றை திரிவுபடுத்தும் செயலாகவும் விமர்சிக்கப்படுகிறது. அவதானிக்கப்படுகிறது. இக்கட்டுரை தமிழ்த்தேசியத்தின் வரலாற்று பரிமாணத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், 'கடந்த முப்பதாண்டு யுத்தம் தனி நாட்டு கோரிக்கைக்கானதல்ல. மாறாக, தமிழ்த்தேச அங்கீகாரத்திற்கானதே ஆகும்' என அழுத்தமாக வலியுறுத்தியிருந்தார். இக்கருத்தாடல் கஜேந்திரனின் அரசியல் எண்ணத்தையும் நிலைப்பாட்டையும் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எதிர்கால தலைமுறையினருக்கு சரியான வரலாற்றை ஊடுகடத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளிடமும் காணப்படுகிறது. பல இளையோர் தம் நாயகர்களாக அரசியல் தலைமைகளை பின்தொடரும் நிலைமைகள் உள்ளன. இச்சூழலில் வரலாற்று முரண்நகையான கருத்துக்களை பொதுவெளியில் உறுதியாக வெளிப்படுத்துவது வரலாற்று திரிபுகளுக்கே வழிகோலும்.
கடந்த முப்பதாண்டு யுத்தத்தின் தமிழ்த்தரப்பின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தரப்பின் ஏகபிரதிநிதிகளாய் செயற்பட்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் மகுட வாசகத்தை புரிந்து கொள்ளல் வேண்டும். 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்பதை தமது ஒவ்வொரு உரைகளிளையுமேயே அவர்கள் வலியுறுத்தி வந்துள்ளார்கள். 2008ஆம் ஆண்டு மாவீரர் தின உரை முடிவிலும் வழமை ஒழுங்கில் மகுடவாசகம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இங்கு தமிழீழத்தாயகம் என்பது தனிநாட்டு கோரிக்கையாகவே அமைகிறது. இது தேச அங்கீகார கோரிக்கைகளை தாண்டிய கட்டமாகும். போர் முழுமையாக தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியே இடம்பெற்றதொன்றாகும்.
யுத்த காலத்தில் வலியுறுத்தப்பட்ட தனிநாட்டு கோரிக்கை என்பது தேச அங்கீகாரத்துக்கான கோரிக்கை வலுவிழக்கப்பட்டதன் பின்னணியிலேயே கட்டமைக்கப்பட்டதாகும். குறிப்பாக தேச அங்கீகாரத்துக்கான கோரிக்கை 1950-1970கள் வரை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலத்தில் முன்வைக்கப்பட்டதாகும். தமிழ் மக்கள் அரசியல் பிரக்ஞையற்று தனியன்களாக இருந்த சூழலில் வடக்கு-கிழக்கை தமிர்களின் தாயகமாக அடையாளப்படுத்தி தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக திரட்சிப்படுத்தியவராக செல்வநாயகம் அவர்களே காணப்படுகின்றார். அவரது சமஷ்டி கோரிக்கையானது தமிழ்த்தேச அங்கீகார கோரிக்கையாகவே காணப்படுகிறது.
தேசம், தேசிய இனம் என்பது மரபுவழி தாயகம்(மண்), மக்கள் திரட்சி(மக்கள்), மற்றும் பண்பாட்டு விழுமியங்கள்(மாண்பு) சார்ந்ததாகும். தேசம் பற்றிய கருத்தாடல்களில் தமிழ்த்தேசியத்தின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள், தேசம் என்பது முதலில் சுயம் பற்றியது என்கின்றார். இத்தகைய சுயம் முதலில் தனிமனித உரிமையில் ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு தனிமனிதருக்கும் சுயகௌரவம் உண்டு. இதனை தனி மனித உரிமை என்பர். ஒரு மக்கள் கூட்டம் சார்ந்த உரிமை சம்பந்தப்படும் போது அதனை கூட்டுரிமை என்பர். தனிமனித உரிமையும் கூட்டுரிமையும் சரிவர இணைந்த ஒன்றுதான் தேசியம் என்பர். இந்தவகையில் தேசியம் எல்லா இடத்திலும் சுயம் பற்றிக்கூறும். இச்சுயத்தை வலியுறுத்தியே உள்ளக சுயநிர்ணய உரிமையை மையப்படுத்திய சமஷ்டி கோரிக்கையை செல்வநாயகம் அவர்கள் வலியுறுத்தி தமிழ் மக்களுக்கான தேச அங்கீகார கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.
செல்வநாயகம் அவர்கள் தேசியத்தை அதற்குரிய நிறைவான உயிரோட்டத்தில் வளர்த்தெடுக்கத்தவறினராயினும் தேசியத்தின் தொகுக்கப்பட்ட ஒரு தோற்றப்பட்டை வடிவமைத்தார். அவரது பிரதான பங்;களிப்பாக வடக்கு-கிழக்கு ஐக்கியம், தமிழ்-முஸ்லீம் ஐக்கியம் எனும் இரு விடயங்களையும் வளர்த்தெடுத்தமை அமைந்தன. எனினும் இவை இங்கு முழுமையான சமூக ஒருங்கிணைக்கை பெறவில்லை என்ற அடிப்படையில் தோற்றப்பாட்டு தேசியம் எனவும் அழைக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கிழக்கை அரவணைத்தமை மற்றும் முஸ்லீம்களை அரவணைத்தமை ஆகிய இருவிடயங்களுக்கூடாக தோற்றப்பாட்டளவில் தமிழ்த்தேசத்தின் தந்தை எனும் அந்தஸ்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் பெறுகின்றார். மொழியுரிமை, மத கலாச்சார பண்பாட்டுசார் உரிமைக்கான சாத்வீகரீதியிலான போராட்டங்களூடாக தமிழ் தேச அங்கிகாரத்துக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. தேச அங்கீகாரம் என்பது அரசுடனான சாத்வீகவழி கோரிக்கையாகவே காணப்படுகிறது. அது புறக்கணிக்கப்பட்டு தேச எல்லைகள் சிதைக்கப்படுகையிலேயே அரசு மீதான நம்பிக்கை முழுமையாக இழக்கப்பட்டு அரசை விட்டு வெளியேறி தனிஅரசு உருவாக்கும் எண்ணங்கள் உதயமாகின்றன.
தமிழ்த்தேச பரப்பிலும் கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள், அரசியலமைப்புரீதியாக ஆக்கிரமிப்பு, மொழி-மத திணிப்புகளூடாக தமிழ்த்தேசம் சிதைக்கப்படுகையில், தமிழ்த்தேசக்கோரிக்கைக்கான போராட்டங்கள் வலுவிழக்க தொடங்குகின்றன. தமிழ்த்தேச அங்கீகாரத்துக்கான கோரிக்கைகளை முன்னின்று நடாத்திய செல்வநாயகம் அவர்களே தனது இறுதிக்காலப்பகுதியில் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனம் ஊடாக தமிழ்த்தேச அங்கீகார கோரிக்கையிலிருந்து தமிழ்த்தேச போராட்டத்தை தனி நாட்டுக்கான போராட்டமாக பரிணமிக்க அடிகோலியுள்ளார். தொடர்ச்சியாக தமிழ் இளையோர்களும் வீரியமாக தனிநாட்டு கோரிக்கையை முதன்மைப்படுத்தி ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தார்கள். கடந்த முப்பதாண்டு யுத்தத்தில் தமிழ்த்தரப்பின் தனித்துவமான கோரிக்கையாக தனிநாட்டு கோரிக்கையே காணப்பட்டது. பேச்சுவார்த்தை மேசைகளில் உரையாடப்பட்ட சுயாட்சி என்பது தனிநாட்டு கோரிக்கை;கான முன்னகர்வுகளாகவே நோக்கப்பட்டது. முடிந்த முடிவாக எங்கும் அமைந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்வீக வழியில் கோரும் தேச அங்கீகாரத்தை தான், ஆயுத முனைப்பிலும் கோரியிருந்தார்கள் எனக்கூறுவது தமிழ் மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களின் உன்னத போராட்டங்களை கொச்சைப்படுத்தும் செயலாகவே அமைகிறது. தேச அங்கீகாரத்துக்கான கோரிக்கைக்கு பல இலட்சம் உயிரிழப்புக்களை சந்தித்த ஆயுதப் போராட்டம் மிகையானது. செல்வநாயகம் அவர்களே அரசின் மீது நம்பிக்கையிழந்து தனது இறுதிக்காலப்பகுதியில் தேச அங்கீகாரத்துக்கான கோரிக்கைகளை கைவிட்டு தனிநாட்டு கோரிக்கையை முதன்மைப்படுத்த ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மெனிக்கப்பட்ட பின்னர் தமிழரசியல் தரப்பினர் அரசியல் கையறு நிலையில் செல்வநாயகம் அவர்கள் 1976களில் கைவிட்ட தேச அங்கீகார கோரிக்கையை மீள வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதன்மைப்படுத்தும் சமஷ்டி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முதன்மைப்படுத்தும் கூட்டு சமஷ்டி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முதன்மைப்படுத்தும் இருதேசம் ஒரு நாடு யாவுமே தேச அங்கீகாரத்தை மையப்படுத்திய அரசியல் கோரிக்கைகளாவே காணப்படுகிறது. சாத்வீக வழியில் சாத்தியமான கோரிக்கையாகவும் அதுவே அமைகின்றது. அரசியல் கட்சிகள் தமது கோரிக்கைகளை வலுச்சேர்ப்பதற்காக வரலாற்றை திரிவுபடுத்த முயல்வது ஆரோக்கியமற்ற அரசியல் இயல்பாகும்.
அதேநேரம் தமிழ் மக்களின் சீற்றத்தை புரிந்து கொண்டு மறுநாள் தன் கருத்துக்கு மன்னிப்பு கோரி கஜேந்திரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கையில், 'விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காக போராடி வந்த நிலையில் அரசுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்களிலும் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின்போதும் தமிழ்த் தேசத்தின் இருப்பினை பாதுகாக்கக்கூடிய தீர்வை அரசுத்தரப்பு முன்வைத்தால் பரிசீலிக்கத் தாயராக இருந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த முற்பட்ட வேளையில் நான் கூறிய கருத்துக்களானது விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காக போராடவில்லை என தவறாக அர்த்தப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்து. தெளிவற்ற வகையில் அக்கருத்து வெளிவந்தமைகக்காக நான் மனம் வருந்துகின்றேன். அதன் காரணமாக மனவேதனைக்கும் மனவுழைச்சலுக்கும் உள்ளான தமிழ்த் தேசிய பற்றாளர்களிடம் நான் மன்னிப்புக்கோருகின்றேன்.' எனத்தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய அரசியலில் பொறுப்புக்கூறலற்ற நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது கஜேந்திரன் பொதுமக்களின் சீற்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டமை ஆரோக்கியமானதாகும். எனினும் குறித்த அறிக்கையிலும் தன் தவறு பிறிதொருவரின் தவறால் தூண்டப்பட்டதென பிறர் மீது பொறுப்பை சுமத்த முயற்சிக்கின்றார். இதுவும் பொறுப்புக்கூறலாக கருத இயலாத நிலையை உருவாக்குகிறது.
எனவே, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தமிழ்த்தேசிய அரசியல் கோரிக்கையின் பரிணாம வளர்ச்சி தொடர்பில் வெளியிட்ட கருத்து தவறானது. முதிர்ச்சியற்றது. அரசியல் தெளிவற்றது. ஈழத்தமிழரின் அரசியல் பரப்பை தலைமை தாங்குவது என்பது அந்த மக்களின் உணர்வையும் உயிரோட்டத்தையும் கடந்த கால வரலாற்றின் பதிவுகளையும் திரிவுபடுத்துவதன் மூலமோ கொச்சைப்படுத்துவன் மூலமோ ஏற்படுத்திவிட முடியாது. கடந்த காலத்தில் அக்கட்சியும் அக்கட்சியின் அணுகுமுறைகளும் போலிமுங்கொண்டதெனவும் பொய்யானதெனவும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 6வது பிரிவின்கீழ் கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் தனிநாட்டு கோரிக்கையை குறிப்பிட முடியாது என்பதை அவ்வாறு குறிப்பிடுவதனால் அவர்களது எஜமானர்கள் பாதிக்கப்படுவார்கள் எற்பதை வெளிப்படையாக மக்களுக்கு கூறுவதே பொறுப்புக்கூறலாகும். அரசாங்கத்தையும் இந்தியா உட்பட்ட உலக நாடுகளையும் இதர தமிழ் கட்சிகளையும் பொறுப்புக்கூறல் பற்றி வலியுறுத்தும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய பொறுப்பை சரியாக வெளிப்படுத்த தவறியமையானது தமிழ் அரசியலில் அதன் பங்கு பலவீனமானதென்பதை வெளிப்படுத்துகிறது.
Comments
Post a Comment