இந்தியா-சீனாவுடனான உறவில் இலங்கையின் மூலோபாய கொள்கை சாத்தியமானதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் உதவிக்கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது. இச்சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் இந்தியா மற்றும் சீனா மும்மரமாக செயற்பட்டு வருகின்றன. இதில் இந்தியா தனது பாரம்பரிய உறவை நிலைப்படுத்தும் வகையில் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையிலேயே உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கு வழிவகுத்த மிக மோசமான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் மீட்புப் பொதியை இந்தியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது. மாறாக பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் அதிகம் நட்பு பாராட்டும் சீன அரசாங்கமும் இலங்கையில் தனது இருப்பை உறுதிப்படுத்தி கொள்வதற்காக இலங்கைக்கான உதவியை அதிகப்படுத்தி வருகின்றனர். 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 பரவியதில் இருந்து, சீனா இலங்கைக்கு 2.8 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இரண்டு ஆசிய ஆதிக்க போட்டியாளர்களும் இந்து சமுத்திர செல்வாக்கிற்கான போட்டியில், இலங்கையை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். இக்கட்டரை இலங...