ரஷ்சியா-உக்ரைன் போர் உலகளாவிய போருக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-
பெப்ரவரி-24அன்று ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான போர் அறிவிப்பும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க தலைமையிலான நேட்டோவின் போருக்கான தயார்ப்படுத்தல்களும் முழு உலகையும் மூன்றாம் உலகப்போருக்கான பதட்டத்துக்குள் தள்ளியுள்ளது. மேலும் பெப்ரவரி-27அன்று புடின் தனது ஜெனரல்களுக்கு நாட்டின் அணுசக்தி தடுப்புப் படைகளை உயர் எச்சரிக்கையான காத்திருப்பு போர் கடமையில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இவ்உத்தரவு உலக அழிவுக்கான எதிர்வுகூறலாக உலகம் அச்சத்துள் உறைந்துள்ளது. எனினும் ரஷ்சியா-உக்ரைன் போர் பற்றிய செய்திகள் அதிகம் மேற்கு சார்புடைய ஊடகங்களால் மேற்கின் எண்ணங்களை பிரச்சாரம் செய்யும் தளமாகவே காணப்படுகின்றது. இதனடிப்படையில் ரஷ்சிய-உக்ரைன் போர் தொடர்பிலே மேற்கு ஊடகங்கள் அதிகம் தவறான எண்ணப்பாங்குகளை பொதுவெளியில் உருவாக்குகிறார்களா என்ற சந்தேகமும் சர்வதேச அரசியல் அவதானிகளிடையே ஆராயப்படுகிறது. இக்கட்டுரை இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் போரின் சர்வதேச அரசியல் விளைவினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலின் பின்புலத்தில் பெப்ரவரி இறுதியில் ரஷ்சியாவின் உக்ரைன் மீதான போர், பனிப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியைத் தூண்டியுள்ளது. உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்சியாவின் தாக்குதல்கள் மேற்கத்திய சக்திகளுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே ஒரு ஆபத்தான மோதலின் அச்சத்தை எழுப்புகிறது. எனினும் போர் அறிவிப்பிலும் புடின் நுணுக்கமான இராஜதந்திர செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
முதலாவது, கிழக்கு உக்ரைனின் ரஷ்சிய ஆதரவு கிளர்ச்சி படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள பிராந்தியங்களை சுதந்திர தேசமாக அறிவிப்பதற்கு முன்னரே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான நாடுகளாகிய ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் தலைவர்களுடனான சந்திப்பில் தனது முடிவை புடின் தெளிவுபடுத்தியுள்ளதாக கிரெம்ளின் கூறியுள்ளது. மேலும், இரு தலைவர்களும் புடினின் முடிவில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர், ஆனால் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை தொடர தங்கள் தயார்நிலையை சுட்டிக்காட்டினர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் மீது போர் நடவடிக்கையை மேற்கொண்டாலும் புடினின் செயற்பாடுகள் ஐரோப்பாவுடள் இராஜதந்திர உறவை பேணும் நோக்கிலானதாகவே அமைகிறது.
இரண்டாவது, உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்களின் சுதந்திர அறிவிப்பு புடின் உக்ரைன் மீதான போருக்கான நியாயப்படுத்தலை வெளிப்படுத்தும் உத்தியாகவே காணப்படுகிறது. ஏற்கனவே 2019இல் ரஷ்சியா கடவுச்சீட்டு மற்றும் குடியுரிமையை அங்குள்ள மக்களுக்கு வழங்குவதன் மூலம் பிராந்தியத்தை 'ரஷ்யாமயமாக்க' முயற்சித்துள்ளது. சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் 2019இல் இந்த நடவடிக்கையை ஒரு ஊடுருவலுக்கான ஒரு இழிந்த முன்னோடியாகக் சுட்டிக்காட்டினார்கள். ஏனெனில் ரஷ்சியா உக்ரைன் மீது படையெடுக்கத் தேர்வு செய்தால், உக்ரேனிலிருந்து தனது குடிமக்களை பாதுகாக்க மட்டுமே அவ்வாறு செய்வதாக அது கூறலாம். தற்போதும் உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே போர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்; உக்ரைனை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற இலக்கு ரஷ்சியாவுக்கு இல்லை என்றும் புடின் தனது போர் பற்றிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது, 2008ஆம் ஆண்டு ஜார்ஜியா போரின் முன்அநுபவம் ரஷ்சியாவின் தற்போதைய உக்ரைன் போருக்கு வலுச்சேர்ப்பதாக அமைகிறது. சோவியத் குடியரசுகளில் ஒன்றான ஜார்ஜியா 2008ஆம் ஆண்டு நேட்டோவுடன் இணைவதற்கு விருப்பம் கொண்ட போது ஜார்ஜியாவின் கிளர்ச்சி படைகளின் ஆக்கிரமிப்புக்குள் காணப்பட்ட தெற்கு ஒசெட்டியா, அப்காசிய பிராந்தியங்களுக்கு சுதந்திரத்தை அறிவித்தது. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஜார்ஜியாவுடனான போரை ஐந்து நாட்களில் வெற்றி கொண்டதுடன், ரஷ்சியா மீது சுமத்தப்பட்ட பொருளாதார தடைகளையும் ரஷ்சியா இலகுவாக கடந்து சென்றுள்ளது. எனினும் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ்; மற்றும் ஜேர்மனி ஜார்ஜியாவை நேட்டோவில் இணைத்து கொள்வதனால் ரஷ்சியாவுடன் பகைமையயை வளர்த்துக்கொள்ள விரும்பாமையால் ஜார்ஜியாவின் நேட்டோ இணைவும் தவிர்க்கப்பட்டே வருகிறது. இவ்வகையில் ஜார்ஜியாவை ஒத்த அரசியல் வெளிப்பாடுகளே உக்ரைன் விவகாரத்திலும் காணப்படுவதனால் உக்ரைனுடனான போர் புடினின் இராஜதந்திர நகர்வாகவே அவதானிக்கப்படுகிறது.
நான்காவது, அமெரிக்கா மற்றும் நேட்டோ உக்ரைனுக்கு ஆதரவினை வெளிப்படுத்துகின்ற போதிலும் நேரடி போரில் ஈடுபடுவதற்கான நியாயமான காரணங்கள் காணப்படவில்லை. நேட்டோ பனிப்போரின் போது சோவியத் தாக்குதலுக்கு எதிராக ஐரோப்பாவைப் பாதுகாக்க 1949இல் நிறுவப்பட்டது. மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் அட்லாண்டிக் கடல் கடந்த கூட்டணியை அடையாளப்படுத்த வந்துள்ளது. நேட்டோ உடன்படிக்கையின் பிரிவு 5இல் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டுப் பாதுகாப்பு உறுதிமொழி, ஒரு நேட்டோ உறுப்பினருக்கு எதிரான தாக்குதல் நேட்டோ உறுப்பு நாடுகள் அனைவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படுகிறது, எந்தவொரு ஆக்கிரமிப்பாளருக்கான அபாயத்தையும் அதிகரிக்கும். இருப்பினும், உறுப்பினர் அல்லாத உக்ரைனுக்கு இது பொருந்தாது. உக்ரைன் நேட்டோவின் பகுதியாக இல்லை. ஆனால் சில உறுப்பு நாடுகள் அதன் பாதுகாப்பிற்கு உதவ ஆயுதங்களை வழங்கியுள்ளன. எனினும், படையெடுப்பு ஏற்பட்டால் படைகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்காவும் நேட்டோவும் கூறியுள்ளன. பெப்ரவரி-24அன்று ரஷ்சியா மீது புதிய தடைகளை அமெரிக்க ஜனாதிபதி பிடன் அறிவித்தபோது, 'எங்கள் படைகள் மோதலில் ஈடுபடவில்லை மற்றும் எதிர்காலத்திலும் ஈடுபடாது.' ஏனக்குறிப்பிட்டிருந்தார். மேலும், 'எங்கள் படைகள் உக்ரைனில் சண்டையிட ஐரோப்பாவிற்குச் செல்லவில்லை. மாறாக எங்கள் நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்கவும், கிழக்கில் உள்ள அந்த நட்பு நாடுகளுக்கு உறுதியளிக்கவும்' என்றார். ரஷ்சியாவும் தனது போர் நடவடிக்கைகளை உக்ரைனுக்குள் கட்டுப்படுத்துவதில் மிக நிதானமாகவே செயற்பட்டு வருகிறது.
ஐந்தாவது, புடினின் அணுவாயுத தயார்ப்படுத்தல் தொடர்பான அறிவிப்பும் பதட்ட சூழலை உருவாக்குவதற்கான உத்தியே அன்றி அணுவாயுத பயன்படுத்தலுக்கு அதிகம் சாத்தியமற்ற சூழலே காணப்படுகின்றது. உக்ரைன் ரஷ்சியாவுடன் எல்லையை பகிரும் நாடு என்பதுடன் 2001ஆம் ஆண்டு உக்ரைனின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி உக்ரைனில் 17.3சதவீதமான ரஷ்சியர்கள் வாழுகிறார்கள். உக்ரைன் மீது அணுவாயுதத்தை பயன்படுத்துவது ரஷ்சியாவிற்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே ரஷ்சியா தற்கொலைக்கு எத்தணிக்க வாய்ப்பில்லை. முன்னணி அணுவாயுத நிபுணரும், நிராயுதபாணி ஆராய்ச்சிக்கான ஐ.நா நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளருமான பாவெல் போட்விக், புட்டினின் உத்தரவு ரஷ்சியா உடனடி அணுவாயுதத் தாக்குதலுக்குத் தயாராகிறது என்று அர்த்தமல்ல எனவும், மாறாக இந்த கட்டளை ரஷ்சியாவின் மூலோபாய அணுசக்தி பாதுகாப்புகளை ஒரு தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டிய ஒரு சிறந்த தயார் நிலையில் வைப்பதற்கான ஒரு வழிமுறையாகும் எனச்சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 'ரஷ்யா தனது அணுவாயுதங்களால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் மற்ற பகுதிகளில் அதிக வலிமையுடன் இருக்க முடியும் என்பதற்கான சமிக்ஞையை அனுப்பும் விதத்தில் இது ஆக்ரோஷமானது' என்றும் பாவெல் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ரஷ்சியா-உக்ரைன் போர் பற்றிய சமகால எச்சரிக்கைகள் இயல்பு நிலைக்கு அப்பாற்பட்டதாகவே காணப்படுகிறது. ரஷ்சியா ஜனாதிபதி புடின் போர்க்காலத்திலும் போர் சார்ந்த முன்னாயர்த்த திட்டமிடலிலும் இராஜதந்திர நடவடிக்கைகளூடாக ரஷ்சியாவின் உக்ரைன் மீதான போர் மூன்றாம் உலகப்போராகவோ அல்லது ஐரோப்பாவுக்குள் பரவக்கூடிய நிலையை சீர்செய்வதிலோ வினைத்திறனான செயற்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேலும், ரஷ்சியாவுடனான அமெரிக்கா மற்றும் நேட்டோவின் கொதிநிலை கருத்துக்களும் மூன்றாம் உலகப்போருக்கான பிரச்சாரங்களும் பனிப்போர் கால அரசியலை ஒத்ததாக கடந்து செல்லக்கூடிய சூழலே சர்வதேச அரசியல் அவதானிகளின் பார்வையாக உள்ளது.
Comments
Post a Comment