ரஷ்சிய-உக்ரைன் போரில் இஸ்ரேல் தனது புவிசார் அரசியல் நலனை தேடுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

ரஷ்சியா-உக்ரைன் போர்ச்செய்திகளில் அண்மையில் இஸ்ரேலின் பெயர் அதிகமாக உரையாடப்படுகிறது. மார்ச்-06(2022)அன்று இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ரஷ்சியாவிற்கு விஜயம் செய்து ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து உரையாடினார். தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி  வொலோடிமிர் ஜெலன்ஸ்கி புடினுடனான சமாதானத்திற்கான உரையாடலை இஸ்ரேலில் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். எனவே இஸ்ரேல் ரஷ்சியா-உக்ரைன் போர்க்களத்தில் மத்தியஸ்த நிலையில் நுழைந்துள்ளது. வரலாற்றில் இஸ்ரேலின் நடத்தைகளை இலகுவில் கடந்து விடமுடியாது. இவ்வரலாற்று அனுபவத்தில் ரஷ்சிய-உக்ரைன் போரில் இஸ்ரேலின் நாட்டம் சர்வதேச அரசியலில் அதிக தேடலுக்கு உட்படுத்தப்படுகிறது. இக்கட்டுரை ரஷ்சிய-உக்ரைன் போரில் இஸ்ரேலின் மத்தியஸ்த நிலைப்பாட்டுக்கான காரணங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மத்தியகிழக்கில் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் முகமாக செயற்பட்டு வருகின்ற இஸ்ரேல், ரஷ்சியா-ஊக்ரைன் போர்க்ககளத்தில் மேற்கின் நிலைப்பாடுகளிலிருந்து விலகி வேறுபட்ட பாதையில் பயணித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்சியா ஆக்கிரமிப்பிற்கு பின்னர் மேற்கு நாடுகள் முழுமையாக உக்ரைனுக்கு ஆதரவான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது. எனினும் இஸ்ரேல் ஆதரவு தளங்களை தவிர்த்து ரஷ்சியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் முரண்படுவதை தவிர்த்து வருகிறது. மாறாக போர்க்களத்தில் மத்தியஸ்தர் நிலையுடன் களம் புகுந்துள்ளது. மார்ச்-06ஆம் திகதி இஸ்ரேலிய பிரதமர் பென்னட்டின் புடினுடனான நேரடி சந்திப்பு அதற்கான ஆரம்ப புள்ளியாகவே அமைகிறது. 

பென்னட் மார்ச்-06 அதிகாலையில் மாஸ்கோவிற்கும் பின்னர் பெர்லினுக்கும் ஒரு திடீர் சூறாவளி பயணத்திற்குப் பிறகு இஸ்ரேலுக்குத் திரும்பினார். கிரெம்ளினில் புட்டினுடன் மூன்று மணிநேர உரையாடல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த உரையாடல், கியேவ் மற்றும் மாஸ்கோ ஆகிய இரு நாடுகளுடனும் இஸ்ரேல் நல்லுறவைக் கொண்டிருப்பதால், இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தராக ஒரு சாத்தியமான பங்கை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சியாகக் காணப்பட்டது. மேலும், உக்ரைனின் யூத சமூகங்களின் பாதுகாப்பு குறித்தும் பென்னட் புட்டினுடன் பேசியதாகவும், ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்தும் இந்த சந்திப்பு தொட்டதாக ஹீப்ரு மொழி ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. புடினுடனான சந்திப்புக்குப் பிறகு, பென்னட் ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸுடன், 'உக்ரைனுக்கும் ரஷ்சியாவிற்கும் இடையிலான நிலைமை உட்பட பல விஷயங்களை விவாதித்தனர்.' புடினுடனான சந்திப்பைத் தொடர்ந்து உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பென்னட் மாலை முழுவதும் இரண்டு முறை தொலைபேசியில் பேசினார். மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடனும் பென்னட் தொலைபேசியில் உரையாடினார். ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உக்ரைன் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் அமெரிக்காவை தாண்டி மத்தியஸ்த பணி மேற்கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்சியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கியதன் பின்னர் புடினுடான முதல் உலத்தலைவரின் சந்திப்பாக பென்னட்டின் விஜயம் காணப்படுகிறது. எனினும் இஸ்ரேலிய பிரதமரின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் இஸ்ரேலிய முழு அரசாங்க செயற்பாடுகள் தொடர்பிலும் சில இடைவெளிகளும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, பென்னட் மேற்கத்திய தலைவர்களுடன் பிரதானமாக இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவுடன் இணைந்து உக்ரைன் மீதான ரஷ்சியாவின் படையெடுப்பை வலுக்கட்டாயமாக கண்டிக்கவில்லை. அதற்கு பதிலாக ரஷ்சியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இஸ்ரேலின் வலுவான உறவுகளை வலியுறுத்தினார். இருப்பினும், இஸ்ரேலிய இராஜதந்திரிகள் படையெடுப்பைக் கண்டித்துள்ளனர். மேலும் இஸ்ரேல் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. உக்ரைன் மக்களுக்கு இஸ்ரேல் தனது ஆதரவை தெரிவித்து 100 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது. வெளியுறவு மந்திரி லாபிட், 'படையெடுப்பு சர்வதேச ஒழுங்கை மீறுவதாக' கண்டனம் செய்தார். ஆனால் பென்னட் புடினை பெயர் சொல்லி அழைப்பதைத் தவிர்த்தார். இராணுவ உபகரணங்களுக்கான உக்ரேனிய கோரிக்கைகளை நிராகரித்தார், மேலும் எச்சரிக்கையான கொள்கையை கடைப்பிடிப்பதாக உறுதியளித்தார்.

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவு விரிவுரையாளரான இம்மானுவேல் நவோன், இஸ்ரேலின் நிலைப்பாட்டினால், 'இஸ்ரேலை புடினின் பயனுள்ள முட்டாள்களின் கிளப்பில் வைக்கும் அபாயம் உள்ளது.'   என எச்சரித்துள்ளார். மேலும், 'மோதல் தொடரும் போது இஸ்ரேல் தனது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளுடன் பகிரங்கமாக இணைய வேண்டும். ரஷ்யாவை இன்னும் உறுதியாகக் கண்டிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு நேரம் வேலியில் உட்காரலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது' எனத்தெரிவித்துள்ளார்.

முரண்பட்ட கருத்துக்கள் இஸ்ரேலின் உள்ளேயே குவிந்துள்ள நிலையில், பென்னட் மத்தியஸ்த முயற்சியை மேற்கொண்டுள்ளாராயின் அதற்கு பின்புலத்தில் ஆழமான காரணங்கள் காணப்படுகின்றது என்பது உறுதியாகிறது. பிரதானமாக இஸ்ரேலின் புவிசார் அரசியல் நெருக்கடிக்குள் ரஷ்சியாவின் ஈடுபாடு அதிகரித்து வருகின்றமையும் அதிலிருந்து தற்பாதுகாத்து கொள்ள இஸ்ரேல் ரஷ்சியாவுடனான உறவை பேண முயல்வதனையும் சர்வதேச அரசியலில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. முரண்பாட்டு மத்தியில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்கான இஸ்ரேலின் புவிசார் அரசியல் நோக்கங்களை அளவிடுதல் அவசியமாகிறது.

ஒன்று, இஸ்ரேலின் வடக்கு அண்டை நாடான சிரியாவில் பெரிய இராணுவ பிரசன்னத்தைக் கொண்ட நாடாக ரஷ்சியா காணப்படுகிறது. மேலும் சிரியா-ரஷ்சியா கூட்டு அண்மைக்காலத்தில் நெருக்கமான பிணைப்பை உருவாக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே அமைந்துள்ள கோலன் குன்றுகளில் ரஷ்சியா மற்றும் சிரியா போர் விமானங்கள் கூட்டு ரோந்தில் ஈடுபடுகின்றன. மேலும் சிரியாவின் லதாயில் உள்ள ஹெமிமீம் விமான தளத்தில் நிறுவப்பட்ட ரஷ்சியா எலக்ட்ரானிக் ஜாமிங் அமைப்பு மத்திய கிழக்கில் நீண்ட காலமாக காணப்பட்ட இஸ்ரேலின் விமான மேலான்மையை சிதைத்துள்ளது. எனவே, ரஷ்சியாவுடன் நெருக்கமான உறவைக்கொண்டுள்ள சிரியாவுடன் பகைமை பாராட்டும் சூழலில் ரஷ்சியாவினை முழுமையாக பகைத்து கொள்வது இஸ்ரேலின் புவிசார் அரசியலில் அதிக நெருக்கடிகளை உருவாக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையை அறிந்தே மத்தியஸ்த நிலைப்பாட்டு ஊடாக ரஷ்சியாவுடன் நுட்பமான பாதுகாப்பு ஒத்துழைப்பை இஸ்ரேல் காப்பாற்ற முயல்வதாக அவதானிக்கப்படுகிறது. ஈரானிய பினாமிகள் மற்றும் படைகளுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மோதலைத் தவிர்ப்பதற்காக, சிரியாவின் வான்வெளியைக் கட்டுப்படுத்தும் ரஷ்யப் படைகளுடனான தொடர்பை இஸ்ரேல் நம்பியுள்ளது.

இரண்டு, இஸ்ரேலின் புவிசார் அரசியல் எதிரியான ஈரானுடனும் ரஷ்சியா அதிகம் நட்பு பாராட்டும் நாடாக காணப்படுகிறது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புத்துயிர் பெறுவதற்கான வியன்னா பேச்சுவார்ததைகளில் ரஷ்சியாவும் ஒரு பெரிய வகிபாகத்தை பெறுகிறது. இது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான தாக்கங்களை கொண்டதாக இஸ்ரேலால் பரவலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடனும் இவ்ஒப்பந்த் தொடர்பாக இஸ்ரேலுக்கு சில மனக்கசப்புகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்ச்-6 அன்று புடினுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வியன்னாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து பென்னட் புடினுடன் பேசியதாக இஸ்ரேலிய உத்தியோகபூர்வ இராஜதந்திர ஆதாரம் தெரிவித்துள்ளது. மேலும், 'அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவதை எதிர்க்கும் இஸ்ரேலின் நிலைப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தினார்' என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

மூன்று, லெபனானில் உள்ள தனது எதிரியான ஹெஸ்பொல்லாவுக்கு ஆயுதங்களை மாற்றுவதில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் கூறும் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தும் போது இஸ்ரேலியப் படைகள் ரஷ்சியாவுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒருங்கிணைக்கின்றன.

எனவே, இஸ்ரேலின் மத்தியஸ்த முயற்சிகள் ரஷ்சியா மற்றும் உக்ரைன் போரின் மோசமான நிலையை இஸ்ரேலிய தலைவர் தமது புவிசார் அரசியல் நலன் சார்ந்து இராஜதந்திர வாய்ப்பாக மாற்ற முயல்வதனையே வெளிப்படுத்தி நிற்கிறது. அமெரிக்காவின் பங்காளி நாடுகள் யாவும் ஓர் தளத்தில் ரஷ்சியாவிற்கு எதிராக செயற்படுகையில் புவிசார் அரசியல் பாதுகாப்பு சார்ந்து இஸ்ரேல் ரஷ்சியாவிற்கு தனது எதிர்ப்பின்மையை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பென்னட்டின் மத்தியஸ்த இராஜதந்திரத்தின் (shuttle diplomacy) அவசரம் மற்றும் முக்கியத்துவம் அவரது முயற்சிகள் யூத ஓய்வு நாளில்(Jewish Sabbath) வந்தது என்பதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. பென்னட்டின் அலுவலகம் அவர் சனிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலில் இருந்து மாஸ்கோவிற்கு புறப்பட்டுச் சென்றதாகக் கூறியுள்ளது. யூத மதத்தை பின்பற்றுவர்களுக்கு இது மிகவும் அசாதாரணமான நடவடிக்கையாகும். யூத பாரம்பரியத்தின்படி சனிக்கிழமையன்று ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லாவிட்டால், வேலை அல்லது பயணத்தைத் தவிர்க்கும் நாளாகும். இது பென்னட்டின் ரஷ்சியாவிற்கான பயணம் காலந்தாழ்த்தப்பட முடியாது என்பதையுமே உணர்த்தி நிற்கிறது. இஸ்ரேலின் அமெரிக்க கூட்டும் அதிகம் பகையை கொண்ட மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பாதுகாப்புக்காக இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  அவ்வாறான பாதுகாப்பை பேணிக்கொள்ளவே இன்றும் ரஷ்சியாவிற்கு மத்தியஸ்த முகத்தை காட்ட முயலுகின்றது என்பதே அரசறிவியலாளர்களில் அவதானிப்பாக உள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-