தென்னிலங்கை எதிர்த்தரப்புக்களின் ஜெனிவா பயணம்; போர்க்குற்ற நியாயாதிக்கத்தை வலுவிழக்க செய்யுமா? -ஐ.வி.மகாசேனன்-

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலானது முழுமையாக சர்வதேச அரசியலை மையப்படுத்தியது என்பது தமிழரசியல் தரப்பு வரித்து கொண்ட மூலோபாயமாக காணப்படுகின்றது. எனினும் குறித்த மூலோபாயத்திற்கான வழிவரைபடைத்தை வினைத்திறனாக வடிவமைத்துள்ளார்களா என்பதில் அதிகளவு சந்தேகங்களே காணப்படுகின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 22-மார்ச்,2012 கொண்டுவரப்பட்ட 19/2 தீர்மானத்தினூடாக ஈழத்தமிழர்களுக்காக அரசியல் களம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து வருடா வருடம் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் ஜெனிவாக்களத்தை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். எனினும் வினைத்திறனான பொறிமுறையை கட்டமைக்க தவறியுள்ளார்கள். எனினும் தமிழ்தேசிய அரசியல் தரப்பினர் தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்கள் ஈழத்தமிழர்களுக்கு சாதகமான முன்னேற்றங்களை பெற்று வருவதாக புலகாங்கித பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இக்கட்டுரை 49வது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஈழத்தமிழரசியல் நிலையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி-28(2022)அன்று ஜெனிவாவில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அரசு சார்பாக இலங்கை தூதுக்குழுவை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வழிநடத்தி அழைத்து சென்றுள்ளார். ஏப்ரல்-01ஆம் திகதி வரை நடைபெறும் அமர்வில் சித்திரவதைகள், பலவந்தமாக காணாமல் போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல் போன்ற பிரச்சினைகள் தொடர்பான 100இற்கும் மேற்பட்ட அறிக்கைகளை மனித உரிமைகள் பேரவை பரிசீலிக்க உள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை பற்றிய எழுத்துமூலமான புதுப்பிப்பை மார்ச்-03ஆம் திகதி சபையில் சமர்ப்பித்து விவாதிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில், ரஷ்சியாவின் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையினால் உருவாகியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்க வேண்டிய நிலை காணப்படுவதனால் இலங்கை விவகாரம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ;சியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பினர்களில் 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன. இலங்கை தொடர்பான விவாதம் மார்ச்-04இற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச்-07ஆம் திகதியும் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கையுடன் தொடர்புற ஆரம்பித்துவிட்டது. இலங்கை அரசாங்கப் படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து 2009 மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சபை சிறப்பு அமர்வை நடத்தியது. குறித்த சிறப்பு அமர்வு இலங்கை அரசாங்கத்தை பாராட்டுவதனையே முதன்மைப்படுத்தியது. மனித உரிமைகள் பேரவையின் இச்செயற்பாடு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்வினைகளை எதிர்கொண்டது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா வழக்கறிஞர் ஜூலியட் டி ரிவேரோ, 'அரசாங்க முகாம்களில் காலவரையற்ற தடுப்புக்காவலில் உள்ள நூறாயிரக்கணக்கான மக்கள் குறித்து மனித உரிமைகள் பேரவை தனது கவலையை கூட வெளிப்படுத்தவில்லை. சபை அவசரத் தேவைகளைப் புறக்கணித்தது மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பை வீணடித்தது.' எனத் தெரிவித்தார். மேலும், 'மனித உரிமைகள் பேரவையின் பெரும்பான்மை பொதுமக்கள் மீது மீண்டும் மீண்டும் கண்மூடித்தனமான nஷல் தாக்குதலுக்கு காரணமான ஒரு அரசாங்கத்தைப் பாராட்டுவதில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஈழத்தமிழர்கள் மீதான மனித உரிமைகள் பேரவையின் கரிசனை 2012ஆம் ஆண்டிலேயே ஏற்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்களின் பின் இலங்கையின் பொறுப்புக்கூறல் முயற்சிகள் மீதான பரந்த சர்வதேச அதிருப்தியை மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பு வெளிப்படுத்தியது. அதன் படிமுறை வளர்ச்சியாகவே 2021ஆம் ஆண்டு 46ஃ1 தீர்மானம் வரை அமைகின்றது. குறித்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தியிரந்தது. அதன் விளைவாகவே, இலங்கையில் மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதிடுதல் மற்றும் தொடர்புடைய ஆதரவை வழங்குதல் என்பவற்றை மையப்படுத்திய பொறிமுறையை மனித உரிமைகள் பேரவை கட்டமைத்ததுள்ளது. அதனடிப்படையிலான தொடர்ச்சியான இலங்கையின் மனித உரிமைகள் போக்குகள் குறித்த எழுத்து மூல அறிக்கையினை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் 49வது அமர்வில் சமர்ப்பிக்கின்றார். அது தொடர்பான விவாதங்களும் நடைபெறும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை மையப்படுத்தியதாக இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்றமில்லாத செயற்படுகள் பற்றிய சுட்டிக்காட்டல்களுடன் ஆரோக்கியமானதாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களிலும் ஆரம்பத்தில் வெளியிடப்படும் ஆணையாளரின் அறிக்கைகள் இறுக்கமானதாக காணப்படினும் அரசாங்க தூதுக்குழுவின் கலந்துரையாடல் மற்றும் இராஜதந்திர செயற்பாடுகளின் பின்னர் அறிக்கையின் இறுக்கத்தன்மையில் தொய்வு காணப்படுவதே இயல்பாக உள்ளது. இது ஈழத்தமிழரசியல் தரப்பின் இராஜதந்திரமற்ற நகர்வுகளையும் தொடர்ச்சி தன்மைகளை பேணாத தன்மைகளையுமே வெளிப்படுத்தி நிற்கின்றது. அவ்வாறானதொரு சூழலே 49வது அமர்விலும் வெளிப்படுத்தப்படுகிறது. இது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நகர்த்தப்படும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களை போர்க்குற்றங்களிலிருந்து வேறு தளத்திற்கு நகர்த்தக்கூடிய வாய்ப்புக்களையும் வெளிப்படுத்துகிறது. அதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, இலங்கையின் எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னிறுத்தி உரையாடுவதற்காக ஜெனிவா சென்றுள்ளார்கள். ஜெனிவாவில் நடைபெறும் 49வது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் உபமாநாடுகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பயணம் செய்துள்ளனர். சிறைத்தண்டனை அனுபவித்துவரும், ரஞ்சன் ராமநாயக்கவை விடுவித்துக்கொள்வதே இவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது என எதிரணி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து விளக்கமளித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடரிலேயே மார்ச்-02அன்று இந்த சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஏற்பட்டுள்ள திசைமாறிய பொறிமுறை உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது பேராயர், ஆணையாளருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையின் நீதி விசாரணை தொடர்பில் நம்பிக்னை தகர்ந்துவிட்டதாகவும், சர்வதேசத்தை நாட உள்ளதாகவும் பேராயர் அரசாங்கத்தை தொடர்ச்சியாக எச்சரித்து வந்தார். இந்நிலையிலேயே பெப்ரவரி-28அன்று வத்திக்கான் சென்ற பேராயர் பாப்பரசரின் அனுமதியை பெற்று, மனித உரிமைகள் பேரவைக்கு சென்றுள்ளார்.

மூன்றாவது, இலங்கை அரசாங்கம் மீதான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தும் தரப்பினர் ஜெனீவா களத்திற்கு நேரடியாக சென்று ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகர்களை சந்தித்து உரையாடல்களை நிகழ்த்துகையில் போர்க்குற்றத்துக்கான நியாயாதிக்கத்தை கோரும் ஈழத்தமிழரசியல் தரப்பு கடிதங்களுடன் தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்தியுள்ளனர். அதில் முன்னேற்றகரமாக கடிதத்தை கடந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர் அதிகாரிகளுடன் இணையவழி சந்திப்பு ஒன்றை மார்ச்-01அன்று மேற்கொண்டுள்ளார்கள். இது ஆரோக்கியமான செயற்பாடாயினும், அரச தரப்பு நேரடியாக சென்று சந்திப்புக்களூடாக இராஜதந்திர பொறிமுறைமுறைகளை வினைத்திறனாக மேற்கொள்கையில் தமிழரசியல் தரப்பு கடிதங்கள் மற்றும் இணையவழியூடாக மாத்திரம் தமது கோரிக்கைகளை வெளிப்படுத்துகையில், தமிழ்த்தரப்பின் கோரிக்கைகள் நீர்த்து போகும் நிலையும் காணப்படுகிறது. பாராளுமன்ற அரசியல் பிரவேசத்திற்கு முன்னர் வருடாவருடம் ஜெனிவா சென்று தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை தெரிவித்து வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இவ்வருடம் ஜெனிவாவிற்கு நேரடியாக செல்வதை தவிர்த்துள்ளதுடன், இணையவழி சந்திப்புக்களையும் மேற்கொள்ள எத்தணிக்கவில்லை. இது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அதிக சந்தேகங்களை உருவாக்குகிறது. அடிப்படையில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் என்போர், கடிதங்களுக்கு அப்பால் ஜெனிவா களத்தை வினைத்திறனாக பயன்படுத்துவது தொடர்பில் மூலோபாய பொறிமுறையை உருவாக்க வேண்டும். கடந்த ஒரு தசாப்த காலமாக கடிதங்கள் மட்டும்தான் அனுப்பப்பட்டு வருகின்றன. 

எனவே, இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையின் மீதான நம்பிக்கையை இழந்து, கடந்த ஒரு தசாப்தமாக இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றத்துக்கான நியாயாதிக்கத்தை ஜெனிவாவில் ஈழத்தமிழர்கள் மாத்திரமே கோரி வந்தனர். தற்போது இலங்கையின் நீதிப்பொறிமுறை தொடர்பில் தென்னிலங்கையிலிருந்தும் நம்;பிக்கையீனம் வெளிப்படுத்தப்படுவது ஈழத்தமிழர்களுக்கு ஒரு தளத்தில் சாதகமாகவே காணப்படுகிறது. எனினும் மறுதளத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை நகர்த்தும் தரப்பினரின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் போர்க்குற்றத்துக்கான நியாயாதிக்க கோரிக்கை தளர்த்தப்பட்டு, தென்னிலங்கையின் மனித உரிமை கோரிக்கைகள் வலுப்பெறக் கூடிய சூழலும் அவதானிக்கப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது, குறுகிய தேசியவாத நலன்களாலும் புவிசார் அரசியலாலும் கட்டுப்படுத்தப்படுகிறதாக காணப்படுகிறது. இதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே குறிப்பிட்டுள்ளார். இக்குறைபாடுடைய அமைப்பூடாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தமது அரசியல் நலன்களை ஈடேற்றிக்கொள்வதற்கான அழுத்தத்தையே இலங்கை மீது பிரதானப்படுத்துகின்றது. அதில் ஆட்சி மாற்றத்தினால் வலுக்குறைக்கக்கூடிய அழுத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அதனடிப்படையில் ஈழத்தமிழரசியல் தரப்பு தொடர்ச்சியாக அசண்டையான அரசியல் செயற்பாடுகளை நகர்த்தின் போர்க்குற்றச்சாட்டுக்கான நீதிக்கோரிக்கை வலுவிழக்கக்கூடிய வாய்ப்புக்களையே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டப்படுகின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-