அமெரிக்காவின் அதிகாரத்தையும் ரஷ்சியாவின் அரசியலையும் வெளிப்படுத்தும் போர்! -ஐ.வி.மகாசேனன்-

ரஷ்சியா-உக்ரைன் எனும் இரு தேசங்களுக்கிடையிலான புவிசார் அரசியல் மோதலே பெப்ரவரி இறுதி வாரங்களிலிருந்து முழு உலகையும் ஆக்கிரமித்துள்ளது. மேற்கு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ரஷ்சியா-உக்ரைன் போரினூடாக சர்வதேச வெளியில் ரஷ்சியாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை வீரியமாக முன்னெடுத்து வருகின்றார்கள். இதனோர் வடிவமாகவே ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினை நாஷிச தலைவர் கிட்லருடன் ஒப்பீடு செய்து அராஜகத்தின் முழுவடிவமாக மேற்கு ஊடகங்கள் பிரச்சாரப்படுத்துவதுடன், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை மக்கள் நாயகனாக காட்சிப்படுத்துகிறார்கள். எனினும் மேற்கின் பிரச்சாரங்களுடன் நிகழ்நிலை விடயங்கள் முரண்படுவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. புடினை அராஜகவாதியாக அடையாளப்படுத்தும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் உக்ரைன் களத்தில் அமையப்பெறவில்லை என்ற வாதமும் காணப்படுகின்றது. எனினும் ஊடகப்பரப்பில் அதுபற்றிய உரையாடல்கள் தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்சியா பற்றிய எதிரான கருத்துக்களை அதிகம் முதன்மைப்படுத்தும் அமெரிக்க களத்திலேலேயே ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்காவின் தூண்டுதல்களே காரணம் என்ற கருத்தும் ஒருசில யதார்த்தவாத பள்ளியை சேர்ந்தவர்களால் உரையாடப்படுகிறது.  இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் போர் தொடர்பிலான ஜோசப் மியர்ஷெய்மர் எனும் அமெரிக்க யதார்த்தவாத சிந்தனையாளரது கருத்தை மையப்படுத்தியதாக ரஷ்சியா-உக்ரைன் போர் தொடர்பிலான யதார்த்தவாதிகளின் பார்வையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

யதார்த்தவாதக் கோட்பாடு போரற்ற உலகத்தை நோக்கிய நகர்வுக்கு வித்திடுவதாக யதார்த்தவாதிகள் குறிப்பிடுகின்றனர். அராஜகத்தை முதன்மைப்படுத்தும் யதார்த்தவாதம் போரற்ற உலகை பிரகடனப்படுத்துவது புதிராக அமையலாம். இரண்டாம் உலகப் போருக்கு பின்பான பனிப்போர் அரசியல் ஒழுங்கானது வல்லரசுகளின் இராணுவ வலுவை அதிகரித்ததன் மூலம் மீளவோர் உலகப் போர் ஒன்று ஏற்படாது தவிர்த்ததாகவும் அதற்கு அரசுகளின் இராணுவ மற்றும் ஆயுத தளபாடங்களின் பலமே காரணமெனவும் யதார்த்தவாதிகள் விவாதிக்கின்றனர். அத்தகைய யதார்த்தவாதத்திற்குள்ளேயே ரஷ்சிய-உக்ரைன் போர்க்களமும் நகர்கிறது. அரசுகளின் இராணுவ அதிகாரத்தை பலப்படுத்துவதனூடாக போரை தவிர்க்கும் யதார்த்தவாத சிந்தனை களத்தில், 1990களிலிருந்து 2010கள் வரை, ஜார்ஜ் கென்னனின் நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு முதல் உக்ரைனில் அமெரிக்க ஈடுபாடு பற்றிய ஜான் மியர்ஷைமரின் விமர்சனம் வரை இன்றைய ரஷ்சியா-உக்ரைன் போர் பற்றிய தீர்க்கதரிசன கருத்துக்களாக காணப்படுகிறது.

இந்த தலைமுறையின் மிகவும் செல்வாக்குமிக்க யதார்த்தவாதியான சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆர். வென்டெல் ஹாரிசன் சிறப்புமிக்க சேவைப் பேராசிரியராக உள்ள அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜான் ஜோசப் மியர்ஷெய்மர் உக்ரைனில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அமெரிக்காவையே குற்றம் சாட்டுகிறார். மியர்ஷைமர் 2015இல், 'மேற்கு நாடுகள் உக்ரைனை ப்ரிம்ரோஸ் பாதையில் (Primrose path- பேரழிவு தரும் விளைவுகளைக் கொண்டு வருவதைக் காணும் போது இன்பத்தைத் தேடும் பாதை) இட்டுச் செல்கின்றன. இறுதி முடிவு உக்ரைன் சிதைந்து போகிறது.' எனத்தெரிவித்திருந்தார். மேலும், நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவுபடுத்துவதற்கும் உக்ரைனுடன் நட்புறவை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து அணுஆயுத சக்திகளுக்கு இடையே போரின் வாய்ப்பை அதிகரித்து உக்ரைனை நோக்கி விளாடிமிர் புட்டினின் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டிற்கு அடித்தளமிட்டுள்ளது என்று பல ஆண்டுகளாக மியர்ஷைமர் வாதிட்டார். மேலும், 'உண்மையில் 2014இல் ரஷ்சியா கிரிமியாவை இணைத்த பிறகு, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இந்த நெருக்கடிக்கான பெரும்பாலான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன' என்று 2014இல் கிரிமியாவை ரஷ்சியா கைப்பற்றிய போது குறிப்பிட்டிருந்தார்.

உக்ரைனின் தற்போதைய படையெடுப்பு அமெரிக்காவிற்கும் ரஷ்சியாவிற்கும் இடையிலான உறவு பற்றிய பல நீண்டகால விவாதங்களை புதுப்பித்துள்ளது. புடினின் பல விமர்சகர்கள் மேற்கத்திய தலையீட்டைப் பொருட்படுத்தாமல் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒரு ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவார் என்று வாதிட்டாலும், அவரைத் தூண்டுவதில் அமெரிக்கா தவறு என்று மியர்ஷெய்மர் தனது நிலைப்பாட்டை தற்போதும் உறுதியாக முன்வைக்கின்றார். மார்ச்-01அன்று நியு யார்க்கர் (The New Yorker) செய்தி தளத்தில் வெளியாகிய நேர்காணலில் மியர்ஷெய்மர், '2008-ஏப்ரலில் புக்கரெஸ்டில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைனும் ஜார்ஜியாவும் நேட்டோவின் ஒரு பகுதியாக மாறுமென நேட்டோ ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும், ரஷ்சியர்கள் இதை ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாகக் கருதினார்களெனவும், அனைத்து பிரச்சனைகளும் அங்கேயே தொடங்கியதாக தான் நினைப்பதாக' தற்போதைய ரஷ்சியா மற்றும் உக்ரைனின் போர்க்கள சூழலை குறிப்பிட்டார்.

மியர்ஷெய்மரது நேர்காணலின் பிரதான கருத்துக்களை நுணுக்கமாக அவதானிக்குமிடத்து, மேற்கு ஊடங்களின் பிரச்சாரங்களினதும், மேற்கு நாடுகளின் அரசியல் தலைவர்களது உரையாடல்களினதும் தப்பெண்ணங்களை அல்லது போலிப்பிரச்சாரங்களை அறியக்கூடியதாக காணப்படும்.
முதலாவது, ரஷ்சியா-உக்ரைன் போரானது ரஷ்சியாவின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தலின் விளைவிலானதாகும் என்பதே யதார்த்தவாதிகளின் உறுதியான வாதமாக காணப்படுகிறது. போர் அராஜகமான முடிவாயினும் அரசியல் அதிகார போட்டியில் போர் தவிர்க்க இயலாத செயன்முறையாகவே காணப்படுகிறது. புவிசார் அரசியலில் ரஷ்சியாவின் நலனுக்குரிய களத்தில் ரஷ்சியாவின் அரசியல் கொள்கைகளுக்கு புறத்தேயான ஓர் அதிகாரத்தின் அதிகாரம் மேலோங்க முனைவது ரஷ்சியாவின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தலுக்கு வழிகோலுமென்பதே எளிமையான பார்வையாகும். நேட்டோவால் சுற்றி வளைக்கப்படும் என்ற பயத்தின் விளைவில் ரஷ்சியா மூலோபாய நடத்தைக்கு ஒரு தற்காப்பு தர்க்கமாக போரை தேர்ந்தெடுத்துள்ளது. இது செல்வாக்கு மண்டலத்தின் பாதுகாப்பை மையமாகக் கொண்டது. இதற்கான விளக்கத்தை அளிக்கும் மியர்ஷெய்மர், 'அது ஏகாதிபத்தியம் அல்ல. இது பெரும் அதிகார அரசியல். நீங்கள் உக்ரைன் போன்ற ஒரு நாடாக இருக்கும்போது, ரஷ்சியா போன்ற ஒரு பெரிய சக்தியின் பக்கத்து வீட்டில் வசிக்கும்போது, ரஷ்சியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனமாகக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஒரு குச்சியை எடுத்து அவர்களின் கண்ணில் குத்தினால், அவர்கள் பதிலடி கொடுக்க போகிறார்கள்.' எனும் அதிகார அரசியலின் யதார்த்தத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இரண்டாவது, உக்ரைன் மீதான ரஷ்சியா போருக்கான உந்துதல் அமெரிக்காவையே சாருகிறது. ரஷ்சியாவின் எல்லையில் உக்ரைனை மேற்கத்திய அரணாக மாற்றுவதற்கு உக்ரைனை மேற்கில் சேர்க்க அமெரிக்க முன்னேறியது. இது நேட்டோ விரிவாக்கத்தை விட அதிகமானது. நேட்டோ விரிவாக்கம் மூலோபாயத்தின் இதயமாகும். ஆனால் அது ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம் மற்றும் உக்ரைனை அமெரிக்க சார்பு தாராளவாத ஜனநாயகமாக மாற்றுவதையும் உள்ளடக்கியது. இது தொடர்பில் கருத்துரைத்த மியர்ஷெய்மர், உக்ரைன் அமெரிக்க சார்பு தாராளவாத ஜனநாயகமாகவும், நேட்டோவின் உறுப்பினராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும் மாறினால், ரஷ்சியர்கள் அதை திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருதுவார்கள். நேட்டோ விரிவாக்கம் மற்றும் ஐரோப்பிய ஒனன்றிய விரிவாக்கம் இல்லை என்றால், உக்ரைன் ஒரு தாராளவாத ஜனநாயகமாக மாறினாலும், மற்றும் பொதுவாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் நட்பாக இருந்தாலும், அது ஒருவேளை அதிலிருந்து விடுபடக்கூடும்.' எனத்தெரிவித்துள்ளார். எனவே உக்ரைன் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு உத்தியான ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம், நேட்டோ விரிவாக்கம் மற்றும் உக்ரைனை அமெரிக்க சார்பு தாராளவாத ஜனநாயகமாக மாற்றுதல் என்பனவே ரஷ்சியாவை உக்ரைன் மீதான போர் ஆக்கிரமிப்புக்கு தூண்டியுள்ளது.

எனவே, யதார்த்தவாதிகளின் நோக்குநிலை ஒருவகையில் சில உலகியல் யதார்த்தங்களை வெளிக்கொணருகின்றது. சில போலிகளை தடம்போட்டு காட்டுகிறது. அமெரிக்காவின் அதிகார போட்டியும் ரஷ்சியாவின் இருத்தலுக்குமான போட்டிக்களமாகவே உக்ரைன் போர் முனை காணப்படுகிறது. அமெரிக்க மற்றும் ரஷ்சியா ஆகியய இரு அரசுகளின் நலன்களுக்கிடையிலான மோதலால் உலகம் பொருளாதார நெருக்கடியில் திணறுகிறது. இதில் உக்ரைன் ஜனாதிபதியின் இராஜதந்திரமற்ற நகர்வுகளும் ஒரு காரணமாகும். ஆதிகார அரசியல் சார்ந்த சில யதார்த்தங்களை மனித நேயம் மனித நலன் சார்ந்து ஏற்க முடியாதாயினும், அரசியல் அதிகார வரலாறு சில அசாதரணஙங்களை சாதரணங்களாக உருவாக்கியுள்ளது. எனவே யதார்த்தத்தில் அசாதரணங்கள் சாதரணங்களாய் போலியற்று வெளிப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-