ரஷ்சியா-உக்ரைன் போரின் விளைவாக ஆசியா நூற்றாண்டு எழுச்சி பெறுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

உக்ரைன் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு போர் உலக அரசியலில் பல புதிய திருப்பங்களை உருவாக்கி வருகின்றது. அமெரிக்க தலைமையிலான மேற்கு கூட்டின் பிளவு தொடர்பான உரையாடல்கள் கடந்த ஆண்டுகளில் முதன்மை பெற்ற போதிலும் ரஷ்சியா-உக்ரைன் போரில் ஐரோப்பா சார்ந்த அச்சுறுத்தல் அமெரிக்க தலைமையிலான மேற்கு கூட்டை மீளவும் பலப்படுத்தி உள்ளதை சர்வதேச அரங்கில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அவ்வாறே ஆசிய நாடுகள் மேற்கிலிருந்து வேறுபட்டு சில முடிவுகளை சுயாதீனமாக மேற்கொள்கின்றமைiயும் வெளிப்படுத்தப்படுகின்றது. இவ்வகையிலான ஆசியாவின் தனித்துவமான நகர்வுகள் சர்வதேச அரசியலில் மாறிவரும் ஆசியா மீதான அரசியலை உறுதி செய்யும் களமாக ரஷ்சியா-உக்ரைன் போர் அமைகின்றதா என்ற தேடவையும் சர்வதேசப்பரப்பில் உருவாக்கி உள்ளது. இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் போரில் ஆசிய நாடுகளின் நகர்வுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது படையெடுப்பதற்கான விளாடிமிர் புடினின் பெப்ரவரி-24 அறிவிப்பானது, எல்லைகளின் புனிதத்தன்மை பற்றிய அனுமானங்களை உயர்த்தி உலகை ஒரு புதிய சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனின் இறையாண்மையை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த புவிசார் அரசியல் ஒழுங்கையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்று ஜேர்மன் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜேர்மனிய ஹாலே பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி ஜோஹன்னஸ் வார்விக், 'இன்று கிட்டத்தட்ட அனைத்தும் நேற்றிலிருந்து வேறுபட்டது. நாம் இப்போது ஒரு வகையான முகாம்களின் மோதலுக்கு திரும்பியுள்ளோம், பனிப்போர் காலத்துடன் ஒப்பிடும்போது மேற்கு முகாமின் எல்லைகள் மட்டுமே கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளன. ஐரோப்பாவில் அமைதி கடந்த காலத்தின் ஒரு விஷயம், ரஷ்யாவின் மீதான நம்பிக்கை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.  மேற்கு மற்றும் ரஷ்யா இடையே நம்பிக்கையை மீட்டெடுக்க பல தசாப்தங்கள் ஆகும்.' என்று DW (Deutsche Welle) செய்தித்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

ரஷ்சிய-உக்ரைன் போரிற்கு முன்னரான சர்வதேச அரசியல் நிகழ்வுகள் மற்றும் போரில் அமெரிக்கா-ரஷ்சியாவின் மோதுகைகளை நுணுக்கமாக அவதானிக்குமிடத்தேயே மாறிவரும் புதிய உலக ஒழுங்கை புரிந்துகொள்ள இலகுவாக அமையும்.

முதலாவது, கோவிட்-19க்கு பின்னர் சர்வதேச அரசியல் பரப்பில் தாராள ஜனநாயகத்தின் வீழ்ச்சியும் இராணுவ, எதேச்சதிகார  ஆட்சியதிகாரங்களின் ஆதிக்கம் பரவலாக அதிகரித்து வருகின்றது. எனினும் தாராள ஜனநாயக கட்டமைப்பின் தலைமையாக பிரகடனப்படுத்தியுள்ள அமெரிக்காவால் அதன் வீழ்ச்சியை தடுக்க முடியாமை அமெரிக்காவின் பலவீனத்தையே உறுதி செய்கின்றது. 2021ஆண்டில் ஆபிரிக்காவில் நான்கு நாடுகள் (சாட், மாலி, கினியா, சூடான்) மற்றும் மியான்மார் உட்பட ஏறத்தாழ 5 நாடுகளில் நேரடி இராணுவ ஆட்சியும், ஆப்கானிஸ்தானில் நேரடி எதேச்சதிகார ஆட்சியும், இதனனைத்தவிர இலங்கை போன்ற பல நாடுகளில் ஜனநாயக போர்வையில் இராணுவ செல்வாக்கு ஆட்சியில் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்காவால் உயர்ந்தபட்சமாக இணையவழியில் ஜனநாயகத்தின் நெருக்கடி தொடர்பில் மாநாட்டினை மாத்திரமே ஒழுங்கு செய்ய முடிந்தது. குறிப்பாக அமெரிக்காவின் நெருங்கிய பங்காளியான ஆங் சான் சூகியினுடைய ஆட்சி மியான்மாரில் இராணுவ சதிப்புரட்சி மூலமாக கவிழ்க்கப்பட்டு சூகி சிறையிலடைக்கப்பட்ட போதும் அமெரிக்கா மற்றும் சர்வதேச நிறுவனங்களால் எவ்வித வினைத்திறனான செயற்பாடுகளையும் செய்திருக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில், உலக அரங்கில் நலிவடைந்துவரும் அமெரிக்காவின் அதிகாரத்தை மதிப்பீடு செய்தே யுரேசியாவிலும் அமெரிக்காவின் அதிகாரத்தை பலவீனப்படுத்தி ரஷ்சியா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை நகர்த்தியுள்ளது.

இரண்டாவது, ரஷ்சியா-உக்ரைன் போரில் சீனாவின் நடுநிலைத்தன்மை என்பது மறைமுகமாக  ரஷ்சியா ஆதரவு தளத்திலேயே காணப்படுகிறது. மேற்கு நாடுகள் அரசியல்ரீதியாக புறக்கணித்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுக்கு ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெப்ரவரி-04அன்று சென்றிருந்ததோடு, சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் சந்திப்பையும் மேற்கொண்டிருந்தார். குறித்த காலப்பகுதியில் ரஷ்சியா இராணுவம் உக்ரைன் எல்லையின் ரஷ்சியா நிலப்பரப்பில்  ஜின்பிங்-புடின் சந்திப்பின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'தங்கள் கூட்டாண்மைக்கு வரம்புகள் இல்லை' என்று அறிவித்தன. மேலும், 'நேட்டோ விரிவாக்கத்தை கண்டித்து உண்மையான ஜனநாயகத்துடன் ஒரு புதிய உலகளாவிய ஒழுங்கை நிறுவுவோம்' என்று வலியுறுத்தியது. இது ரஷ்சியாவுக்கான சீனாவின் ஆதரவு தளத்தை உறுதி செய்கிறது. மேலும், சீனா ரஷ்சியாவிடம் காணப்படும் புதிய உலக ஒழுங்கிற்கான எதிர்பார்க்கையையும் வெளிப்படுத்தியுள்ளது.

மூன்றாவது, ரஷ்சியா-உக்ரைன் போரை மையப்படுத்தி எழுந்துள்ள இந்திய தொடர்பான அரசியல் ஆழமாக உரையாடப்படுகிறது. அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயம் மற்றும் குவாட் அமைப்பின் முக்கிய பங்காளியான இந்தியா நடுநிலைமை செலுத்துவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக ரஷ்சியாவுடனான உறவிலும் எவ்வித ஏற்ற இறக்கமின்றி பாதுகாத்து வருகிறது. இந்தியாவின் பெருமளவிலான இராணுவ ஆயுத தளபாட இறக்குமதியானது ரஷ்சியாவை சார்ந்தே காணப்படுகின்றது. ரஷ்சியாவுடனானன இவ்பாதுகாப்பு உறவை இந்தியா துண்டிக்க வேண்டுமெனவும் அல்லது இந்தியா மீதும் பொருளாதார தடை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் பரிசீலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. எனினும் இந்தியா வெளியுறவ அமைச்சகம் ரஷ்சியாவுடனான இராணுவ ஆயுத தளபாட இறக்குமதிசார் முடிவில் எவ்வித மாற்றங்களும் இல்லையென தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் அரசாங்கம், ரஷ்சியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை நிறுத்த வேண்டும் என  இந்திய பிரதமர் மோடி புடினிடம் வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வகையில் ரஷ்சியாவுடனான இந்தியாவின் உறவு சார்ந்து அமெரிக்கா அதிருப்தி கொள்வதும், போரை நிறுத்தக்கூடிய வல்லமை இந்தியாவிடம் காணப்படுவதாக உக்ரைன் அரசு நம்பிக்கை கொள்வதும் வலுப்பெறும் ஆசிய அரசியல் ஒழுங்கையே உறுதி செய்கிறது. 

நான்காவது, ரஷ்சியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்ற போதிலும், ரஷ்சியா அவற்றை அசண்டை செய்து நகர்வதற்கு பிரதான காரணம் ஆசிய நாடுகளின் ஆதரவுத்தளமாகும். உக்ரைன் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதுடன், ரஷ்சியாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சர்வதேச நிறுவனங்களூடாக நெறிப்படுத்தி வருகின்றனர். எனினும் ஆசியா நாடுகள் பெருமளவில் ரஷ்சியா உறவை பேணியே வருகின்றனர். குறிப்பாக பொருளாதாரரீதியில் பெரிய சந்தைப்பலத்தை உடைய சீனா மற்றும் இந்தியா ரஷ்சியா-உக்ரைன் போரில் நடுநிலைமையை அறிவித்துள்ளதுடன், ரஷ்சியாவுடனான பொருளாதார உறவை தொடர்ச்சியாக பேணி வருவது ரஷ்சியாவிற்கான பலமாகவே காணப்படுகிறது. இதனை வலுச்சேர்ப்பாதாகவே இலங்கையின் முன்னாள் பிரதமர் ரரணில் விக்கிரமசிங்காவின் கருத்து அமைகிறது. 'உக்ரைன் யுத்தம் அனைவரையும் பாதிக்கும் என தெரிவித்துள்ள அவர், இந்த யுத்தத்தினாலும் மேற்குலகின் தடைகளாலும் உருவாகும் சவால்களை எதிர்கொள்வதற்கான திறமை ஆசியாவில் உள்ளது' எனக்குறிப்பிட்டுள்ளார். இவ்எண்ணப்பாங்கிலேயே ரஷ்சியாவும் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாக புலப்படுகிறது.

எனவே, ரஷ்சியா மீதான உக்ரைன் போர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினை போரின் பங்குதாரராய் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. மறுமுனையில் ஆசியாவின் வல்லரசுகள் போரில் நடுநிலைமை வகிப்பதால் பார்வையாளராய் தமக்கான வாய்ப்புக்களை பலப்படுத்தி கொள்ளும் சூழலே அவதானிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இளம் செயற்பாட்டாளர்களுடனான உரையாடலில் ரணில் தெரிவித்துள்ள, 'மேற்குலகம் வலுவிழக்கின்றது. ஆசியா புதிய உலகஒழுங்குமுறை குறித்து சிந்திக்கவேண்டும்.' என்பதே இன்று சர்வதேச அரசியல் அவதானிகளது எண்ணங்களாகவும் உள்ளது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-