ரஷ்சிய உக்ரைன் போர் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தை வலுவிழக்க செய்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

இருபத்தொராம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் தந்திரோபாயமாக இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் சமுத்திரங்களை இணைத்த 'இந்தோ-பசுபிக் தந்திரோபாயம்' முதன்மை பெறுகிறது. இத்தந்திரோபாய நெறியில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்கா முகவராக இந்தியா செயற்பட்டு வந்தது. எனினும் ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு அமெரிக்காவின் நிலைப்பாடுகளிலிருந்து வேறுபடுவதாக காணப்படுகிறது. இதனை அவதானித்துள்ள சர்வதேச அரசறிவியலாளர்கள் அமெரிக்காவிண் இந்தோ-பசுபிக் தந்திரோபாயம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்தி இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பகுதி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள், மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் மிகப்பெரிய இராணுவங்களை கொண்டுள்ளதுடன், உலகின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மையமாக வெளிப்பட்டுள்ளது. இந்தப் பரந்த பிராந்தியமானது, 21ஆம் நூற்றாண்டின் உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்தியாகவும் அரசியல் ஆய்வு தளத்தில் உரையாடப்படுகிறது. இதனை மையப்படுத்தியே 2010களுக்கு பின்னர் அமெரிக்காவின் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நிலைப்பாடு மற்றும் வெளியுறவுக்கொள்கை திட்டமிடல்களில் இந்தோ-பசுபிக் தந்திரோபாயம் முதன்மை பெற்றது. எனினும், உக்ரைன் மீதான ரஷ்சியாவின் படையெடுப்பு மற்றும் மாஸ்கோவிற்கு எதிரான முன்னோடியில்லாத கலப்பினப் போரின் வடிவத்தில் மேற்கத்திய பதிலடியால் தூண்டப்பட்ட ஆழ்ந்த சர்வதேச நெருக்கடியின் விளைவாக, இந்தோ-பசிபிக் பகுதியில் அதிக ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது.

மார்ச்-04 அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ரஷ்சியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காது வெளியிருந்தது. அவ்வாறே பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட ரஷ்சியாவிற்கு எதிரான தீர்மானத்திலும் வாக்களிக்காது நடுநிலைமை வகித்திருந்தது. மேலும்;, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் ரஷ்சியா மீது கடுiயான பொருளாதார தடைகளை அதிகரித்து வருகையில் இந்தியா தொடர்ந்தும் ரஷ்சியாவுடன் நெருங்கிய உறவையே பேணி வருகிறது. உக்ரைனில் வன்முறையை நிறுத்துமாறு இந்தியா வலியுறுத்தியுள்ள போதிலும், அதன் பழைய பனிப்போர் நட்பு நாடான ரஷ்சியாவிற்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து விலகி உள்ளது. இந்தியாவின் இவ்நிலைப்பாடு அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்துக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தில் முதன்மை பெறும் தேசங்களில் ஒன்றாக இந்தியாவும் காணப்படுகின்றது. சமீப ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக வளர்ந்திருந்தாலும், சீனாவுடனான இமாலய எல்லை முட்டுக்கட்டை மற்றும் பாகிஸ்தானுடனான வற்றாத பதற்றம் ஆகியவற்றிற்கு இடையே, தொடர்ச்சியான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதற்கு அது ரஷ்சியாவையே சார்ந்தே உள்ளது.

ரஷ்சியாவிற்கு எதிராக தடைகளை பிரயோகிக்குமாறு கடுமையான மற்றும் இடைவிடாத மேற்கத்திய அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா எதற்கும் பணியவில்லை. மற்றும் ரஷ்சியாவிற்கு எதிரான மேற்கத்திய நடவடிக்கைக்கு முரணான தனது நிலைப்பாட்டையே தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. ரஷ்சியாவின் தாக்குதலின் மீதான இந்திய நிலைப்பாடு, இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து மிகப்பெரிய தரைவழி நடவடிக்கையாகும். இது அமெரிக்காக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாயம் சார்ந்த கேள்விகளை அரசறிவியலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

ஒன்று, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தின் இருப்பு இந்தியா இல்லாது சாத்தியமற்றதாகும். இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இந்து சமுத்திரத்தின் வல்லரசு தன்மையுடன் இந்திய அரசே காணப்படுகின்றது. இதற்கு இந்தியாவின் புவிசார் அரசியல் அமைவிடம் ஆழமான செல்வாக்கினை செலுத்துவதுடன், 21ஆம் நூற்றாண்டு சர்வதேச அரசியல் ஒழுங்கில் முதன்மை பெறும்; சர்வதேச வர்த்தகம், சந்தை சார்ந்து இந்தியா ஆதிக்கம் செலுத்தும் தன்மையை பெற்றுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய சனத்தொகையை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் உலக நுகர்வின் பெரும்பகுதி ஆதிக்கம் இந்தியா சார்ந்ததாகவே காணப்படுகின்றது. அதனால் உலக பொருளாதாரத்தை மையபபடுத்திய உலக அதிகார போட்டியை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தில் இந்தியாவை தவிர்த்து செல்வது அமெரிக்காவுக்கே சவாலானதாகும். அதன் வெளிப்பாடே ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் அமெரிக்கா கடுமையான எதிர்வினையாற்றியிருக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்சியாவின் ஒரு மாத கால போர் அமெரிக்க மற்றும் ரஷ்சியாவுடனான உறவுகளை பாதித்ததா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி, 'அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு அவர்களின் சொந்த தகுதியின் அடிப்படையில் உள்ளது' எனப்பதிலளித்துள்ளார். இதனூடாக அமெரிக்காவின் அமைதி உறுதிப்படுத்தப்படுகிறது. 

இரண்டு, இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தினை மையப்படுத்திய அமெரிக்காவின் நாற்கர பாதுகாப்பு உரையாடல்கள் (குவாட்) குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகிறது. குவாட்-01இல் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய ஆசியா-பசிபிக் பகுதியில் நான்கு நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்வாறே குவாட்-02இல் அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சை உள்ளடக்கிய மேற்காசிய நாடுகள் இணைக்க்பட்டிருந்து. குவாட் உரையாடல் வளர்ந்து வரும் சீன அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார சக்தியை எதிர்கொள்ளும் வகையிலேயே உருவாக்கப்பட்டது. குவாட் உரையாடலில் இந்தியாவிற்கு அமெரிக்கா முதன்மையான இடத்தை வழங்கி இருந்தது. இரு குவாட்களிலும் இந்தியா தன்னிலையை உறுதி செய்தது. இதற்கான அடிப்படை காரணமாக இந்தியா அமெரிக்காவின் இந்து சமுத்திர முகவராக அமெரிக்காவால் அவதானிக்கப்பட்டது. எனினும் அவ்எண்ணங்களை இந்தியா ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் எடுத்த நிலைப்பாட்டினூடாக சீர்குலைத்துள்ளது. குவாட் உறுப்பினர்களின் தரப்பில் உக்ரேனில் ரஷ்ய நடவடிக்கைக்கு எதிராக ஒருமித்த கருத்தை விரைவாக எட்டத் தவறியது குழுவை மனச்சோர்வடையச் செய்யும். அதுதான் மறுக்க முடியாத உண்மையுமாகும். இவ்ஆதங்கத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளிப்படுத்தியுள்ளார்.  ரஷ்சியா மற்றும் மேற்கு நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சிப்பதால், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக செயல்படுவதில் குவாட் குழு நாடுகளில் இந்தியா மட்டுமே 'சற்றே நடுக்கம்' என்று ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும், 'அவரது ஆக்கிரமிப்புக்கு விடையிறுக்கும் வகையில், நாங்கள் நேட்டோ மற்றும் பசிபிக் முழுவதும் ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைத்துள்ளோம்' என்று பைடன் ஒரு வணிக மன்றத்தில் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினைக் குறிப்பிட்டு கூறினார். பசுபிக்கை விழித்துள்ள பைடன் இந்து சமுத்திரத்தை தவிர்த்துள்ளமையானது இந்தியா சார்ந்த ஏமாற்றமாகவே அவதானிக்கப்படுகிறது.

மூன்று, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திராபாயம் அமெரிக்காவின் உலக ஒழுங்கின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவால் திட்டமிடப்பட்டள்ள நிலையில் இந்தியா அதற்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. பைடன், ரஷ்சியாவுடனான தனது புதிய பனிப்போரில் இந்தியாவை ஒத்துழைக்க முயன்றார். அதற்காக ரஷ்சிய ஆக்கிரமிப்பு பற்றி விவாதிக்க மார்ச்-03 அன்று வீடியோ இணைப்பு மூலம் சிறப்பு குவாட் உச்சிமாநாட்டை நடத்தினார். ஆனால் உச்சிமாநாடு, வழக்கத்திற்கு மாறாக குறுகிய வெள்ளை மாளிகை அறிக்கையையே சுட்டிக்காட்டியது. அமெரிக்கா அதில் சிறிதளவு சாதித்தது. எனினும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குவாட் கோளத்தை உக்ரைனுக்கு நீடிப்பதில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 'குவாட் குழு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் முக்கிய நோக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்' என்று கூறினார். இது இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தின் விரிசல்களையே வெளிப்படுத்துகின்றது.

மேற்கத்திய ஊடகங்கள் இந்தியப் பதிலைப் பற்றிய செய்திகள் அவர்களின் அவநம்பிக்கையையும், ரஷ்சியா தாக்குதலைத் தொடர்ந்தபோது ஒருவித கோபத்தையும் எடுத்துக்காட்டியது. ரஷ்சியாவிற்கு எதிரான சர்வதேச தடைகளை இந்தியா கண்மூடித்தனமாக ஆதரிக்கும் என்று அமெரிக்கா உண்மையில் நம்பியிருக்கலாம். அது நடந்திருந்தால், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் குவாட் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க-இங்கிலாந்து மூலோபாயம் பெரிதும் பலப்படுத்தப்பட்டிருக்கும். எனினும் இந்தியாவின் முடிவு இந்திய பலத்தை உறுதி செய்துள்ளது. இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தின் இருப்பிற்காக அமெரிக்காவை இந்தியாவுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் அசாத்தியமான இராஜதந்திர செயற்பாடாகவே அமைகிறது. எனினும் அமெரிக்காவின் அமைதியையும் எளிதில் எடை போட முடியாது. அமைதியாய் இந்தியாவிற்கான அச்சுறுத்தலை அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் நகர்த்தக்கூடிய வாய்ப்புக்களும் அதிகமாகவே காணப்படுகிறது. அவற்றையும் கடந்து செல்லினே இந்தியாவின் இந்து சமுத்திரத்தில் முதன்மை பெறும் எண்ணங்கள் வெற்றி பெறக்கூடியதாக காணப்படும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-