இலங்கையுடனான உறவை பலப்படுத்த முனையும் இந்தியா! -ஐ.வி.மகாசேனன்-
கொரோனா பேரனர்த்தம் உலகில் பொருளாதாரரீதியான அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில், ரஷ்சியா-உக்ரைன் போர் அதன் சுமைகளை அதிகரித்துள்ளது. பொருளாதார சுமை உலகிற்கு பொதுவானதாயினும், இலங்கையை பொறுத்தவரை 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அவர்களது பொருளாதார கொள்கைகளும் இணைந்து இலங்கையை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பொருட்களின் விலையேற்றம் என்பதற்கு அப்பால் பல அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. நாட்டின் திறைசேரியில் டொலர் இல்லாமையால் பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை அரசாங்கமும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இலங்கை பல நாடுகளில் கடன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. எனினும் வரலாற்றுரீதியாகவே நெருக்கடி காலங்களில் இலங்கைக்கான பொருளாதாரரீதியிலான ஒத்துழைப்பை வழங்குவதில் பிராந்திய பேரரசான இந்தியாவின் வகிபாகம் தனித்துவமானதாக காணப்படுகிறது. இக்கட்டுரை இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலப்பகுதிகளில் இந்தியாவினால் இலங்கை அரசாங்கங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒத்துழைப்புக்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து, நாட்டைத் தாக்கும் மிக மோசமான நிதி நெருக்கடியினை தற்போது எதிர்கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநரின் தொடர்ச்சியான உறுதிமொழிகள் இருந்தபோதிலும், 2022இல் இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து சர்வதேச தரப்படுத்தல் முகவர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளுக்கு நாள், சாத்தியமான இயல்புநிலை பற்றிய எச்சரிக்கை அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய மாதத்தில், உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. அத்துடன் பற்றாக்குறை நிலவுகிறது. வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்திக்குத் தேவையான எண்ணெயை கொள்வனவு செய்யத் தவறியதால், இலங்கையின் மின்சக்தி அமைச்சு மார்ச் மாத தொடக்கத்தில், தினசரி ஏழரை மணிநேர மின்வெட்டுகளை அறிவித்தது. அதே வாரத்தில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. எரிபொருள் விநியோக நெருக்கடி காரணமாக போக்குவரத்து சேவைகள் தொடர்வது குறித்து பஸ் உரிமையாளர் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையின்மை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உருவாகி வருவதாக பலர் கூறுகின்ற போதிலும், 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்ட தொற்றுநோய் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளால் இது மோசமடைந்தது. இலங்கையில் தற்போது நிகழும் பொருளாதார நெருக்கடி சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இலங்கை போராடி வரும் கடுமையான சர்வதேச கொடுப்பனவுகளின் இருப்பு (Balance of Payment-BOP) சார்ந்த நெருக்கடியின் விளைவுகளாகும். போதுமான வெளிநாட்டு நாணய வரவு இல்லாததால், அரசாங்கம் ஏற்கனவே உள்ள கடன்களை செலுத்த அந்நிய செலாவணி இருப்புக்களை தொடர்ந்து உலர்த்தியது. இதன் விளைவாக வெளிநாட்டு நாணய கையிருப்பு பிப்ரவரி 2020இல் $7.5 பில்லியனில் இருந்து நவம்பர் 2021 இறுதியில் $1 பில்லியனாக குறைந்தது.
இத்தகைய கடுமையான BOP நெருக்கடிக்கு வழக்கமான பதில் IMF-இன் ஆதரவைப் பெறுவதாகும். உண்மையில், IMF ஸ்தாபனத்திற்கான காரணம், BOP நெருக்கடிகளைச் சமாளிக்க நாடுகளுக்கு உதவுவதாகும். ஆயினும்கூட, இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறவோ அல்லது கடனை மறுசீரமைப்பதற்கோ பிடிவாதமாக மறுத்து வருகின்றது. பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியேறியதும் நடைமுறைப்படுத்திய சில வரிநீக்கங்களும் பொருளாதார கட்டுப்பாடுகளும் IMF-இன் நியமங்களும் எதிர்மாறாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது என்பது பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பெரும்பாலான பொருளாதாரக் கொள்கைகளைத் திருத்தி பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதைக் குறிக்கும். இந்தக் கொள்கை மாற்றங்கள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் காலத்தின் தேவையாக இருந்தாலும், இந்த சீர்திருத்தங்களில் சில பெரும்பாலும் அதிக அரசியல் செலவைக் கொண்டுள்ளன. அத்தகைய கொள்கைத் திருத்தம் 'நாங்கள் ஒரு பெரிய தவறு செய்தோம். நாங்கள் வரியைக் குறைத்திருக்கக் கூடாது.' என அரசாங்கத்திடம் இருந்து ஒப்புக்கொள்ளப்படுவதைக் குறிக்கும். இத்தகைய அரசியல் செலவை பொதுஜன பெரமுன அரசாங்கம் விரும்பாத நிலையிலேயே, அத்தகைய நிபந்தனைகள் இல்லாமல் உலக நாடுகளிடமிருந்து இலங்கை நிதி உதவியைப் பெற முயல்கிறது. உலக நாடுகளிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதற்கும் அடிப்படை நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் உள்ளன. ஆனால் உலக நாடுகளின் நலன்கள் IMF-இன் பொருளாதார நலன்களுக்கு மாறாக புவிசார் அரசியல் சார்ந்ததாக இருப்பதால், IMF பரிந்துரைத்தவற்றிலிருந்து இத்தகைய நிலைமைகள் வேறுபட்டவை.
இந்தப் பின்னணியில், இலங்கை அரசாங்கம் இரண்டு ஆசிய பிராந்திய போட்டியாளர்களான இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து ஆதரவைப் பெறத்தொடங்கியது. பல தசாப்தங்களாக இந்த இரு நாடுகளுடனும் இலங்கை வலுவான பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக சீனாவுடனான பொருளாதார உறவுகள் கடந்த 20 வருடங்களில் வலுப்பெற்றுள்ளன. சீனா இலங்கைக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவராகவும் மற்றும் நேரடி நேரடி முதலீட்டு வழங்குனராகவும் உருவெடுத்துள்ளது. பொதுஜன பெரமுன அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிடமும் பொருளாதார ஆதரவைக் கோரினர். ராஜபக்ஷாக்களின் அரசாங்கமானது சீன ஆதரவுத்தளம் என்பது வெளிப்படையாயினும் இலங்கையின் பொருளாதாரத்தை சீர் செய்வதில் இந்தியா கனதியான வகிபாகத்தை பெறுகிறது. இது வரலாற்றுரீதியிலான தொடர்புடையதாகும். இதனை ஆழமாக அவதானித்தல் வேண்டும்.
ஓன்று, இலங்கை இந்தியாவுடன் 1998இல் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (ILFTA) கையெழுத்திட்டது. அது 2000ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு, இந்தியாவுடனான இலங்கையின் வர்த்தகம் பலமடங்கு உயர்ந்தது. எவ்வாறாயினும், ஏப்ரல் 2014 இல் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வு ILFTA இன் ஆழத்திற்குச் சென்று வேறு கதையை தெரிவித்துள்ளது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில், இரு நாடுகளின் அளவு வித்தியாசம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, வலிமைமிக்க இந்தியா நாட்டை விழுங்கும் பட்சத்தில் இலங்கையின் நலன்களைப் பாதுகாக்க போதுமான பாதுகாப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது, எதிர்மறை பட்டியல் என்றும் அழைக்கப்படும் வரிக் குறைப்பு இல்லாமல் 1,180 பொருட்களை சுங்க வரியின் கீழ் வைத்திருக்க இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, இந்தியா தனது எதிர்மறை பட்டியலில் HS குறியீட்டில் ஆறு இலக்க அளவில் 429 பொருட்களை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. HS குறியீட்டில் இலங்கையின் எதிர்மறை பட்டியல் ஆறு இலக்க நிலைக்கு மாற்றப்படும் போது, அதன் எதிர்மறை பட்டியல் இலங்கையின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் கணிசமாக பெரியதாக உள்ளது. எவ்வாறாயினும், இலங்கையர்கள் இறக்குமதியில் அதிக ரசனை கொண்டவர்களாக இருப்பதால், இந்தியாவில் இருந்து அதன் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதியை விட மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இந்தியாவுடன் இலங்கைக்கு கணிசமான வர்த்தகப் பற்றாக்குறை இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறையின் இருப்பை, தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளுடன் தொடர்புடைய பலவீனமாகவும் பாவமாகவும் கருதி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிரானவர்கள், குறிப்பாக இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகக் கண்டித்தனர். எனினும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்தால் வினைத்திறனாக மேற்கொள்ளப்படுமாயின் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடியதாகும்.
இரண்டு, இலங்கை விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் உச்சத்தில் இருந்த 2007 முதல் 2009 வரை நாடு எதிர்கொண்ட கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியினை மீட்டெடுப்பதில் இந்தியாவின் பங்களிப்பு உயர்வாக இருந்துள்ளது. விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஆயுதங்கள் இல்லை. இலங்கையின் முக்கிய ஆயுத விநியோகஸ்தரான சீனா, இலங்கைக்கு 3 மாத கடனை மட்டுமே நீட்டித்தது. அன்றைய காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக இருந்த தற்போதைய ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரல் இலங்கையின் அந்நிய செலவணி நெருக்கடியை சீர்செய்ய பல முயற்சிகள் எடுத்தும் வெற்றியளிக்காத நிலையில், இறுதியில் IMF-ஐ நாடினார். IMF முடிவெடுக்காத சூழலில் இலங்கைக்கான நேரம் முடிவடையாமலும் இருந்தபோது, அஜித் நிவார்ட் கப்ரால், இந்தியாவின் நிதியமைச்சர் மறைந்த பிரணாப் முகர்ஜியை அணுகினார். பிரணாப் முகர்ஜி முன் வந்து, 'இலங்கை கோரிய கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அந்த நாட்டுக்குத் தேவையான நிதியை இந்தியா வழங்கும்' என்று துணிச்சலான அறிக்கையை வெளியிட்ட பின்னரே ஐஆகு-இன் கடனுதவி இலங்கைக்கு திரும்பியது. இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன, 'அந்த சூழ்நிலையை திறம்பட நிர்வகித்ததற்காக கப்ராலுக்கு பெருமை சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் போர் முடிவுக்கு கொண்டு வர களத்தில் உள்ள வீரர்களுக்கு நாட்டிற்கு தொடர்ச்சியான ஆயுதங்கள் பாய்வதை எளிதாக்கியது.' எனத்தெரிவித்துள்ளார்.
மூன்று, 2009ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய இந்தியா தனது ரிசேர்வ் வங்கியின் (Reserve Bank) மூலம் இலங்கையின் மத்திய வங்கிக்கு 1 பில்லியன் டாலர் SWAP வசதியை வழங்கியிருந்தது. அது சில வருடங்களில் 1.5 பில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டது. 2014ஆம் ஆண்டு பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் SWAP மாற்றியமைக்கப்படும் வரை, இந்தியா இந்த வசதியை ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நான்கு, 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் தேசிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையின் பிரகாரம், மத்திய வங்கியானது ரூபாயை LKR=LKI பெரிதும் பாதுகாத்ததால், 2016 மார்ச் வரையிலான 15 மாதங்களுக்குள் அதன் அந்நிய செலாவணி கையிருப்பில் மூன்றில் ஒரு பங்கு குறைவடைந்தது. இதனால் இலங்கை சர்வதேச கொடுப்பனவுகளின் இருப்பு சமநிலை நெருக்கடியை எதிர்கொண்டது. இதனை சீர்செய்ய இந்திய அமைச்சரவை, 'மூன்று மாதங்களுக்கு அல்லது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் வசதியைப் பெறும் வரை, எது முந்தையதோ அதுவரை' இந்த SWAPஇற்கு ஒப்புதல் அளித்திருந்தது. 'இந்தப் பிரேரணைக்கு ஒப்புதல் வழங்குவது, மாற்று ஏற்பாடு ஏற்படும் வரை, இலங்கைக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும்' என்று இந்திய அரசு ஆதரவுக்குரலை வெளிப்படுத்தியிருந்தது. அதேநேரம் இந்த நடவடிக்கை இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உத்தியோகபூர்வ இருப்புக்களை வலுப்படுத்த உதவும் உத்தியாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியிலேயே தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலிலும் அதனை சீர்செய்வதில் இந்தியாவின் வகிபாகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா இலங்கையின் சர்வதேச கொடுப்பனவு நிலுவை நெருக்கடியைத் தணிக்க இலங்கைக்கு பல கடன் வசதிகளை வழங்கியுள்ளது. அண்மையிலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன், இலங்கைக்கு இந்தியா வழங்கும் பொருளாதார ஆதரவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெய்சங்கர் ராஜபக்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனுள்ள மற்றும் சுமுகமான உரையாடலை மேற்கொண்டார் என்று இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கான பரஸ்பர வசதியான திகதியை இம்மாதத்தின் இரண்டாம் பாதியில் இறுதி செய்வதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவ்விஜயத்தின் போது 2.4 பில்லியன் நிதியுதவியில் முதல் ஒரு பில்லியன் டொலைரைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்திலேயே பசில் ராஜபக்ச கைச்சாத்திட உள்ளதாகவுதம் உரையாடப்படுகிறது.
எனவே, இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் இலங்கை அரசுக்கு இறுக்கமான ஆதரவை வழங்கும் நாடாக இந்திய முதன்மையான இடத்தையே வரலாற்றில் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் சீனாவின் பொருளாதார பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியூடாக மீள தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தெற்காசிய அரசியலில் இந்தியாவின் பெரிய அண்ணா கொள்கையால் இலங்கையின் பெரும்பான்மையின மக்களிடையே இந்தியா சார்ந்த வெறுப்புணர்வு காணப்படினும், இலங்கை பொருளாதார ரீதியாக திவாலாகி, எந்த நேரத்திலும் ஒரு தேசமாக தோல்வியடையும் தருணங்களில் இந்தியாவின் உதவி சார்ந்து ஒரு நேசிப்பும் காணப்படவே செய்கின்றது. இந்தியாவைப் பற்றி இலங்கையின் பெரும்பான்மையினர் கொண்டிருக்கும் மனப்பான்மை, ஒரு விசித்திரமான 'அன்பு மற்றும் வெறுப்பு உணர்வு' ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான பெரும்பான்மையின மக்களின் வெறுப்பை பயன்படுத்தியே சீனா இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை கட்டமைத்துள்ளது. தற்போது இந்தியா பெரும்பான்மையின மக்களிடம் உள்ள வெறுப்பை தவிர்த்து அன்பை ஸ்திரப்படுத்தும் வகையிலேயே தற்போதைய காலகட்டத்தில், குறுகிய கால நிதியுதவி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் மற்றும் நீண்ட கால முதலீடுகள் போன்ற பொருளாதார உதவிகளூடாக இலங்கை தேசத்தின் உயிர்ப்பை பாதுகாக்க முயலுகிறார்கள்.
Comments
Post a Comment