இந்தியா-சீனாவுடனான உறவில் இலங்கையின் மூலோபாய கொள்கை சாத்தியமானதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் உதவிக்கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது. இச்சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் இந்தியா மற்றும் சீனா மும்மரமாக செயற்பட்டு வருகின்றன. இதில் இந்தியா தனது பாரம்பரிய உறவை நிலைப்படுத்தும் வகையில் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையிலேயே உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கு வழிவகுத்த மிக மோசமான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் மீட்புப் பொதியை இந்தியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது. மாறாக பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் அதிகம் நட்பு பாராட்டும் சீன அரசாங்கமும் இலங்கையில் தனது இருப்பை உறுதிப்படுத்தி கொள்வதற்காக இலங்கைக்கான உதவியை அதிகப்படுத்தி வருகின்றனர். 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 பரவியதில் இருந்து, சீனா இலங்கைக்கு 2.8 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இரண்டு ஆசிய ஆதிக்க போட்டியாளர்களும் இந்து சமுத்திர செல்வாக்கிற்கான போட்டியில், இலங்கையை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். இக்கட்டரை இலங்கைக்கான உதவியில் இந்திய, சீன போட்டித்தன்மையின் அரசியல் இயல்பை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச புதுதில்லியில் இருந்து கடன் வரிகள், நாணய பரிமாற்றங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றைப் பெற்ற ஒரு பிரதிநிதி குழுவை அவர் வழிநடத்திய இரண்டு மாதங்களுக்குப் பிறகு மார்ச் மாத நடுப்பகுதியில் மீள இந்தியாவிற்கு விஜயம் செய்து, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதி நிதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார். இந்தியாவுக்கான விஜயத்தில் இலங்கையின் நிதியமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். குறித்த சந்தர்ப்பத்தில் நரேந்திர மோடி, 'நெருங்கிய நண்பரான இலங்கையுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும்' என உறுதியளித்துள்ளார். இந்தியாவின் நெருங்கிய நண்பன் என்று வர்ணித்த இந்திய பிரதமர், பேச்சு வார்த்தைகளை விட செயல்களின் மூலம் அது தகுதியான நட்பு நாடாக தன்னை நிரூபித்ததை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியா இதுவரை 2.4 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை இலங்கை பெற உதவியுள்ளது. இது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஆபத்தான முறையில் குறைந்துவிட்ட நேரத்தில் மிகவும் தேவையான தலையீடாக காணப்படுகின்றது.
சமீபகாலமாக, அண்டை நாடு பற்றிய நாட்டின் கருத்துக்கள் வியத்தகு முறையில் மாறிவிட்டன. ஆபத்தான நேரத்தில் இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் இந்திய தொடர்பான இலங்கை ஆட்சியாளர்களின் விமர்சனப்பிரச்சாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், புதுடெல்லிக்கு நன்றி தெரிவித்ததுடன், 'இலங்கையர்கள் இந்தியாவை உண்மையான நண்பராக அதிகமாக அங்கீகரிப்பதாக' குறிப்பிட்டார். திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணை ஒப்பந்தம் போன்ற முன்முயற்சிகள் மூலம் மேலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பீரிஸ் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வான் மற்றும் கடல் இணைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.
இந்த முன்னேற்றம், இந்தியாவை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களால், தொற்றுநோய் இலங்கையை பெய்ஜிங்கில் இருந்து புது டெல்லிக்கு மாற்ற நிர்ப்பந்தித்துள்ளது என்று கூறத் தூண்டியுள்ளது. உதாரணமாக, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஆர்வலர் மற்றும் ஜாக்ரன் சஞ்சிகையின் மூத்த துணை ஆசிரியர் ஆலோக் சென்ஷர்மா, 'சீனக் கடனால் இலங்கையில் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடியை தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக' வாதிடுகிறார். இது சீனா மீதான இந்தியாவின் பகைமை பிரச்சாரம் என்பதற்கு அப்பால் ஆழமாக கவனிக்க வேண்டிய விடயமாகவும் உள்ளது. மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள், இலங்கைக்கான தற்போதைய சீனக் கடன்கள் மொத்தமாக சுமார் 3.38 பில்லியன் டொலர்கள் என்று காட்டுகின்றன. அவை தனித்தனியாகக் கணக்கிடப்பட்டு கணிசமானவை என்று கருதப்படும் அரசுக்குச் சொந்தமான வணிகங்களுக்கான கடன்களை உள்ளடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த போதிலும், இதுவரை பெய்ஜிங்கால் எந்த உதவியோ அல்லது கடன் தடைகளோ வழங்கப்படவில்லை என்ற கருத்தாடல்களும் இந்திய ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்படுகின்றது. இதிலும் ஓரு நிதர்சனம் காணப்படவே செய்கின்றது. இலங்கை இந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன்களுக்கான கொடுப்பனவுகளில் கிட்டத்தட்ட 7 பில்லியன் டொலர்களைச் செலுத்த வேண்டும். ஆனால் இலங்கைக்கான சீனாவின் கடன்களை மறுசீரமைப்பதற்கான கோரிக்கைக்கு சீனா இதுவரை எவ்வித உறுதியும் அளிக்கவில்லை.
இந்திய ஊடகங்கள் இலங்கை-சீனா உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரங்களை அதிகம் முதன்மைப்படுத்தி வருகின்றனர். இந்திய ஊடகங்களில் கருத்துக்களில் சரி-பிழை என்ற வாதங்களுக்கு அப்பால் இலங்கையில் வெளியுறவுக்கொள்கையில் சீனாவை விலக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்திய ஊடகங்களில் பிரச்சாரம் காணப்படுகின்றது. எனினும், சீனாவும் தொடர்ச்சியாக இலங்கையில் செல்வாக்னை உறுதிப்படுத்துவதற்காhன இராஜதந்திர நகர்வுகளை வினைத்திறனாக மேற்கொண்டு வருகின்றனர். அதனோர் வெளிப்படே இலங்கை, அதன் மோசமான பொருளாதாரச் சரிவைச் சமாளிக்க போராடி வரும் நிலையில், சீனாவிடம் புதிய கடனாக 2.5 பில்லியன் டொலர்களுக்கு இலங்கை நாடியுள்ளதென இலங்கைக்கான சீனத் தூதுவர் ஞi ணூநnhழபெ கூறியுள்ளார். மார்ச்-16அன்று இந்திய இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவி வழங்கியுள்ள நிலையில், மார்ச்-21அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சீனத்தூதுவர், 'ஒரு பில்லியன் டொலர்களை கடனாகவும், 1.5 பில்லியன் டொலர்களை கடன்பத்திரமாகவும் இலங்கை கோரியுள்ளதாகவும், கடன்தொகை தொடர்பில் ஆராய்வதாகவும்' தெரிவித்துள்ளார். மேலும், 'இது தொற்றுநோய் வெடித்ததில் இருந்து இலங்கைக்கு சீனா வழங்கிய 2.8 பில்லியன் டாலர் உதவிக்கு கூடுதலாகும்' என இலங்கைக்கு சீனா சமீபத்திய நெருக்கடியில் வழங்கியுள்ள கடன்தொகையையும் பட்டியலிட்டு ஊடக சந்திப்பில் குறிப்பிட்டமை இந்தியாவுக்கு எதிரான சீனாவின் பிரச்சாரமாகவே காணப்படுகின்றது.
இலங்கைக்கு கடனுதவி வழங்குவது தொடர்பில் இந்தியா-சீனா விமர்சன பிரச்சாரங்களுக்கான அரசியல் இயல்பை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
முதலாவது, இலங்கை-இந்திய உறவு அடிப்படையில் பிரதானமாக இரு அரசியல் இயல்புகளை வெளிப்படுத்துகிறது.
ஓன்று, இலங்கைக்கான இந்தியாவின் உதவியானது இலங்கைக்கும்-இந்தியாவுக்குமிடையில் பாரம்பரியமாக கட்டமைக்கப்பட்ட உறவின் அடிப்படையிலானதாகும். இவ்உறவு எளிதில் விலகக்கூடியது இல்லை. பொதுஜன பெரமுன அரசாங்கம் சீனாவுடன் அதிகமாக நட்பு பாராட்டிய போதிலும் இலங்கை-இந்திய பாரம்பரிய உறவு பொதுஜன பெரமுன அரசாங்கத்தையும் இந்தியாவுடன் நல்லுறவு பேண வழிவகுத்தது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொதுஜன பெரமுன அரசாங்கம், செயலில் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் வார்த்தையிலாவது இந்தியாவுக்கு ஆதரவாக தன்னைத் தொடர்ந்து சித்தரித்து வருகிறது. கோத்தபாய ராஜபக்சா ஜனாதிபதியாக வெற்றி பெற்ற பிறகு தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 'இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் தனது கீழ் இலங்கை தவிர்க்கும்' என்று கூறினார். அடையாளமாக, ஜனாதிபதியாக அவர் அழைத்த முதல் அதிகாரப்பூர்வ விருந்தினர் ஜி ஜின்பிங் அல்லது வாங் யீ அல்ல, மாறாக நரேந்திர மோடி ஆகும். அத்துடன் ஆகஸ்ட் 2020இல் பொதுஜன பெரமுன அரசாங்கம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, அவரது நிர்வாகம் பிராந்திய உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் குறிப்பிட்டு பிராந்திய ஒத்துழைப்பு அமைச்சகத்தை நிறுவியது. இது இந்திய-இலங்கை உறவின் பாரம்பரிய பிணைப்பையே உறுதி செய்கின்றது.
இரண்டு, இலங்கை-இந்தியா உறவு புவிசார் அரசியல் பிணைப்பியல்புடையதாகும். புவிசார் அரசியல் பிணைப்பின் ஆழம் 1980களில் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டது. மேற்கத்திய சார்பு ஜே.ஆர். ஜெயவர்த்தனே, இலங்கையின் உள்நாட்டுப் போரில் தலையிட்டபோது, ஏன் புதுடெல்லிக்கு சரணடைய வேண்டியிருந்தது என்பதையும் இது விளக்குகிறது. டெல்லியை மேற்கு நாடுகளுடன் சமநிலைப்படுத்த ஜெயவர்த்தனே மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. ரொனால்ட் ரீகனின் தூதுவரான வெர்னான் வால்டர்ஸ், தமிழர் பிரச்சினையை வாஷிங்டனுடன் அல்ல, புது டெல்லியுடன் தீர்த்துக்கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை வழங்கினார். இது பிராந்திய புவிசார் அரசியல் பற்றிய பாடமாகும். இது இலங்கை அன்றிலிருந்து மறக்கவில்லை, அநேகமாக ஒருபோதும் மறக்க முடியாது.
இரண்டாவது, இலங்கை-சீன உறவின் இயல்பும் சமகாலத்தில் இரு அரசியல் இயல்புகளை வெளிப்படுத்துகிறது.
ஓன்று, இலங்கை-சீன உறவு தந்திரோபாயமானதாகும். ராஜபக்ஷாக்களுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குக்கும் இடையே பிளவுறாத நட்பு காணப்படலாம். எனிலும், இலங்கை-சீனா உறவு என்பது தந்திரோபாய வடிவிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் சீனாக்குமிடையிலான பொருளாதார ஒப்பந்தங்கள் அதனையே உறுதி செய்கின்றது. குறிப்பாக ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் மீளச்செலுத்த இயலாத கடன்தொகைக்காக இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டமையானது இலங்கை-சீன உறவு தந்திரோபாயமானது என்பதையே வெளிப்படுத்துகிறது. இலங்கை-சீன தந்திரோபாய உறவும் ஆட்சி மாற்றங்களூடாகவோ அல்லது கொள்கை மாற்றங்களூடாகவோ பிளவுபடுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. அவ்வகையில் சீனா தந்திரோபாய பிணைப்பை இலங்கையில் உருவாக்கியுள்ளது.
இரண்டு, இலங்கையின் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் சீனா அச்சத்தை எதிர்கொள்கிறது. இந்தியாவுடனான இலங்கையின் நெருக்கம் அதிகரிக்கப்படுகின்றமையானது அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்துக்குள் இலங்கை நகர்த்தப்படும் என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தை பொறுத்தவரை அமெரிக்காவிற்கு அதிகபட்சமாக சாதகமாக இருக்கும் செல்வாக்குகளை உருவாக்குவதே அமெரிக்காவின் உத்தியாக உள்ளது. இதனடிப்படையில் சமன்பாட்டில் இந்தியா முதன்மை பங்காளியாக இருப்பதால், இலங்கை பாதிக்கப்படாமல் தப்பிக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை. மேலும், வுhந ர்iனெரளவயn வுiஅநள-இல் அண்மைய பசில் ராஜபக்சாவின் இந்திய விஜயத்தில் 'உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியமை விஜயத்தின் மையமாக இருக்கும் அதேவேளை, இலங்கையின் ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்தும் மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கான கூட்டுத்தாபனத்தை மேம்படுத்தும் மூன்று பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கு இரு தரப்பும் நெருக்கமாக உள்ளன' எனக் அறிக்கையிடப்பட்டுள்ளது. இது இலங்கை-இந்திய பாரம்பரிய உறவு தனது தந்திரோபாய உறவின் தனித்துவ செல்வாக்கை வலுவிழக்க செய்வதாக சீனாவை அச்சப்படுத்துகிறது. இதனடிப்படையிலேயே இலங்கையை மையப்படுத்திய இன்றைய இந்திய-சீனா போட்டி நிலை என்பது இலங்கையில் போட்டியற்ற செல்வாக்கு மண்டல சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளேயாகும். குறிப்பாக அதன் வெளிப்பாடாகவே மார்ச்-21 இலங்கைக்கான சீன தூதுவரின் ஊடக சந்திப்பு உரையின் உள்ளடக்கமும் அமைகிறது.
இத்தகைய இலங்கை மீதான இந்திய-சீன அரசியல் போட்டி இயல்புகளில் இலங்கையின் இருப்பானது 'மூலோபாய சமநிலை கொள்கை' உறுதிப்படுத்தலாலேயே நிலைக்கின்றது. மூலோபாய சமநிலை கொள்கை இலங்கைக்கு மாத்திரம் தனித்துவமானது அல்ல. ஏனெனில் இதனை ஒரு மூலோபாயமாக மற்ற தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் பின்பற்றுகிறது. எவ்வாறாயினும், உள்நாட்டு வலிப்பு ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு இழுத்துச் செல்லும் வரை, இலங்கை தீவின் வெளியுறவுக் கொள்கை தெளிவற்றதாகவும், புரிந்து கொள்ள இயலாததகாவுமே இருக்கும். 'கடன் பொறி' மற்றும் 'பிராந்திய மேலாதிக்க' விவரிப்புகளுடன் அதை வகைப்படுத்தும் எந்த முயற்சியும் முற்றிலும் பயனற்றதாக இருக்கும். இலங்கையின் எதிர்க் கட்சிகள், குறிப்பாக SJB மற்றும் NPP ஆகியவையும் அரசாங்கத்தைப் போலவே, நாட்டின் சீன-இந்திய உறவைப் பற்றி இருதரப்பு நிலைப்பாடுகளையே கொண்டுள்ளன என்பதே யதார்த்தமான பார்iவாயாகும்.
Comments
Post a Comment