ரஷ்சிய-உக்ரைன் புவிசார் அரசியல் களம் ஈழத்தமிழரசியலிலும் பிரதிபலிக்குமா? -சேனன்-
சர்வதேச அரசியலின் முதன்மையான உரையாடலாக ரஷ்சியா-உக்ரைன் போர் தாக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய கண்டம் போருக்கான பதட்டங்களுடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. உலகம் முழுவதும் மக்கள் அமைதிக்கான போராட்டங்களையும், அரசாங்கங்கள் உக்ரைனுக்கான ஆயுத பொருளாதார உதவிகளூடாக உக்ரைனை பலப்படுத்தி போரிற்கான உத்வேகத்தையும் அளித்து வருகின்றார்கள். இரண்டாம் உலகப்போரின் பின் சர்வதேச பரப்பில் அமைதியை கட்டியெழுப்புவதை இலக்காக கொண்டு கட்டமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபையில் ரஷ்சியா போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு 11 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கப்பட்ட போதிலும் ஒற்றை வீட்டோ அதிகாரத்தினூடாக ரஷ்சியா தீர்மானத்தை வலுவிழக்க செய்துள்ளது. சர்வதேச அரசியலில் இத்தகைய ஆதிக்கம் செலுத்தும் ரஷ;சியா-உக்ரைன் போர் ரஷ்சியா மற்றும் உக்ரைனின் புவிசார் அரசியல் விளைவிலானதாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனடிப்படையில் புவிசார் அரசியல் நலன்களுக்கூடாக தங்கள் நலன்களை கட்டமைக்க முயலும் தேசங்கள் குறித்த நிகழ்வின் அரசியல் போக்கினை நுணுக்கமாக தேட வேண்டியுள்ளது. இக்கட்டுரையும் ஈழத்தமிழ்தேசியப்பரப்பில் ரஷ்சியா-உக்ரைன் போரை இந்தியாவுக்கு இலங்கையில் புவிசார் நலன் சார்ந்து காணப்படும் முரண்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் அரசியலையும் அதிலுள்ள ஈழத்தமிழர்களின் வாய்ப்பை தேடுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்சியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை புவிசார் கலாசாரம், புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் ஆகியவற்றின் மூலம் பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலான பொதுவான கலாசாரம் மற்றும் வரலாறு இணைப்பையும் கிவ்யேவும் மாஸ்கோவும் பகிர்ந்து கொள்கின்றன. முன்னாள் சோவியத் ஒன்றிய குடியரசுக்குள் உக்ரைனும் இணைந்தே காணப்பட்டது. மேலும், உக்ரைனின் நிலப்பரப்பில் நேரடியான ரஷ்சிய பண்பாட்டுக்குள் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுற்ற பிறகும் ரஷ்சியா மற்றும் உக்ரைனுக்கிடையே உறுதியான உறவு நிலைபெற்றிருந்தது. எனினும், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர அவநம்பிக்கையானது, சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பாக 2004க்குப் பிறகு தற்போதைய சூழ்நிலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ரஷ்சியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளி நேட்டோவின் தொடர்ச்சியான விரிவாக்கம் ஆகும். இது மாஸ்கோவை 2004இல் உக்ரைனில் நிகழ்ந்த வண்ணப் புரட்சிக்குப் பிறகு பயமுறுத்தியது. இது தற்போதைய மூலோபாய முட்டுக்கட்டைக்கு பங்களித்த இரண்டு நாகரீக சகோதரர்களுக்கு இடையிலான மோதலின் தொடக்கப் புள்ளியாகும்.
எனினும் ரஷ்சியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் 2014ஆம் ஆண்டு முதலேயே மோதலாக பரிணமித்தது. யூரோமைடன் ( Euro-maidan ) இயக்கத்தால் தூண்டப்பட்ட உள்நாட்டு அமைதியின்மை 2014இல் ரஷ்சிய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கி எறிய முடிந்தது. இந்த திருப்புமுனை உக்ரைனின் மூலோபாய மறுசீரமைப்புக்கு தூண்டியது. அப்போதிருந்து, உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உறுப்பினராக இருப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த முயன்றது. இது சோவியத்துக்குப் பிந்தைய வெளியின் சவாலற்ற மேலாதிக்கமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ரஷ்சியாவின் திட்டங்களுக்கு புவிசார் அரசியல் நெருக்கடியை பிரதிபலிக்கிறது. எனவே, குறுகிய காலத்திற்குள் கிரெம்ளின் கிரிமியாவை நடைமுறையில் இணைத்துக்கொண்டது மற்றும் உள்ளூர் மக்களிடையே ரஷ்சிய சார்பு மனப்பான்மை நிலவுகின்ற உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸில் கிளர்ச்சிப் போராளிகளின் இரகசியத் தூண்டுதலுடன் பதிலளித்தது. அதன் உச்சகட்டமாக ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த பெப்ரவரி-21(2022) உரையில் ருஸ்ஸோபில் பிரிவினைவாத சக்திகளின் மையமான லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவற்றின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் முடிவை அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக பெப்ரவரி-24(2022) அன்று உரையில் சுதந்திர தேசங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஒரு வெளிப்படையான ரஷ்சிய இராணுவ நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அதன் செயலாக்கமே இன்று உலகை உலுக்குகிறது. இது தொடர்ந்தால், அதன் கசிவு விளைவு மூலம் ஐரோப்பா மற்றும் ஆசியா இரண்டின் பாதுகாப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆதாலாலேயே ரஷ்சியா-உக்ரைன் புவிசார் அரசியல் பிரச்சினை மீது உலகின் பார்வை குவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்சியா-உக்ரைன் போர் நகர்வுகளை சர்வதேச அரசியல் பரப்பில் பலதரப்புக்களும் பலவிதமான நோக்கு நிலையில் அவதானிக்குகையில், புவிசார் அரசியலூடக தமது தேசிய நலன்களை ஈடேற்றிக்கொள்ள நினைக்கும் தேசியங்கள் குறித்த போரின் புவிசார் அரசியல் நகர்வுகளை ஆழமாக அவதானிப்பதுடன் தமது புவிசார் அரசியலினுள் ஒப்பிட்டு விவாதித்து கொள்கின்றனர். இவ்வகையிலேயே ஈழத்தமிழிர்கள் ரஷ்சியாவின் தளத்தில் இந்தியாவையும், உக்ரைனின் தளத்தில் இலங்கையையும், நேட்டோ விஷ்தரிப்பில் சீனாவின் அதிகார விஷ்தரிப்பையும், லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் தன்னாட்சி பிரதேசங்களுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளையும் பொருத்தி ஈழத்தமிழர்களுக்கு உள்ள நலன்கள் தொடர்பில் பரந்த விவாதங்களையும் கனவுகளையும் சுமக்க ஆரம்பித்துள்ளார்கள். அரசியலில் கனவுகளுக்கு அப்பால் வாய்ப்புக்களையும் அதனை ஈடேற்றக்கூடிய உத்திகளை கண்டறிவதே அவசியமானதாகும். எனவே ரஷ்சியா-உக்ரைன் போரை தொடர்புபடுத்தி ஈழத்தமிழர்களுக்கு உள்ள புவிசார் அரசியல் வாய்ப்புக்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
முதலாவது, இலங்கையில் சீனாவின் ஆதிக்க விஷ்தரிப்பின் தன்மையை நோக்குதல் அவசியமாகிறது. இதுவரையான இலங்கை-சீனா உறவு என்பது பொருளாதார ரீதியிலான ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை மையப்படுத்திய உறவாகவே காணப்படுகின்றது. துறைமுகங்கள் மற்றும் தீவுகளில் ஆதிக்கத்தை செலுத்துகின்ற போதிலும் யாவும் பொருளாதார திட்டங்களையே குறித்து நிற்கின்றது. இலங்கையில் சீனா இராணுவத்தை ஈடுபடுத்துதல் தொடர்பாகவோ அல்லது சீனாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அல்லது கூட்டுக்கள் தொடர்பிலேயோ இலங்கை அரசாங்கம் இதுவரை எவ்வித கரிசணைகளையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. மாறாக சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கப்படுவதாக கூறப்படும் சமாந்தர காலப்பகுதியிலேயே இலங்கை இராணுவத்துக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையிலான கூட்டுப்பயிற்சிகளே அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. எனவே சீனாவின் அதிகார விஷ்தரிப்பு பொருளாதாரத்துடன் மட்டுப்படுகையில், ரஷ்சியாவிற்கு உக்ரைனில் நேட்டோ சார்ந்து எழுந்துள்ள பாதுகாப்பு நெருக்கடி இலங்கையில் இந்தியாவிற்கு எழுந்திருக்கவில்லை. பொருளாதார மோதல் ஆரோக்கியமானதாகவே காணக்கூடியதாகும். இது இலங்கை அரசுக்கு அதிக இலாபத்தையே ஏற்படுத்தக்கூடியதாகும். இதில் ஈழத்தமிழர்களுக்கான வாய்ப்பு அரிதாகவே காணப்படுகிறது.
இரண்டாவது, போர் சார்ந்து இந்தியாவின் நிலைப்பாடு பெரும் விவாதப்பொருளாகிறது. சீனாவுடனான மோதலுக்கு இந்தியா தயாராக உள்ளதா என்பது தொடர்பில் சந்தேகங்கள் காணப்படுகிறது. குறிப்பாக 2020ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையை மையப்படுத்தி இந்திய மற்றும் சீனா இராணுவத்தினரிடையே கால்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் அணுவாயுத வல்லமை படைத்த அரசின் இராணுவப்படைகள் கற்களால் எறிந்து மோதலில் ஈடுபட்டிருந்தார்கள். அத்துடன் 1962ஆம் ஆண்டு இடம்பெற்ற சீன-இந்திய யுத்தத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இலங்கை அளவு நிலப்பரப்பு சீனாவால் கைப்பற்றப்பட்டது. ஆந்நிலப்பரப்பை இதுவரை மீட்க இயலாத சூழலிலேயே இந்தியா காணப்படுகின்றது. இத்தகையதொரு பின்னணியில் பிராந்திய அரசில் சீனாவின் விஷ்தரிப்புக்கு எதிராக இந்தியா போர் எத்தணிப்பை மேற்கொள்ளுமா என்பதில் சந்தேகங்களே காணப்படுகின்றது.
மூன்றாவது, ரஷ்சியா-உக்ரைன் போரை மையப்படுத்தி ரஷ்சியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்த தீர்மானங்களில் இந்தியா மற்றும் சீனா நடுநிலைமை வகித்துள்ளமை இந்தியா மற்றும் சீனாவின் பொதுவான நட்பு நாடாக ரஷ்சியா அடையாளப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ரஷ்சியாவின் இந்திய நட்பு நெருக்கமான பிணைப்பு உடையதாகும். இந்தியாவிற்கு ரஷ்சியாதான் அதிக அளவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. ரஷ்சிய ஏற்றுமதியான சுகோய்-30 விமானங்கள் 270 இந்தியா வசம் உள்ளன. அதேபோல் 1300க்கும் அதிகமான ரஷ்சியாவை சேர்ந்த டி-90 பீரங்கிகள் இந்தியாவிடம் உள்ளன. 8 ரஷ்சிய தயாரிப்பை சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவிடம் உள்ளன. இதற்கான பராமரிப்பை ரஷ்சியா அவ்வப்போது செய்கிறது. இவ்வகையில் ரஷ்சியா-இந்திய உறவு நெருக்கமாகிறது. அவ்வாறே சீனா-ரஷ்சிய உறவு கொம்யூனிசம் சார்ந்தும், அமெரிக்கா எதிர்ப்பு சார்ந்தும் இறுக்கமான பிணைப்பை பெறுகிறது. மேற்குலகு நாடுகளின் தலைவர்கள் சீனாவில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்த சூழலில் ரஷ்சிய ஜனாதிபதி புடின் கலந்து கொண்டதுடன் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குடன் சந்திப்பையும் மேற்கொண்டிருந்தார். குறித்த சந்திப்பின் பின்னரே ரஷ்சியா-உக்ரைன் போர்ப்பதட்டம் போராக பரிணமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனவே ரஷ்சியா இந்தியா மற்றும் சீனாவுடன் கொண்டுள்ள இறுக்கமான பிணைப்பு இந்திய-சீன நெருக்கடிகளை இராஜதந்திர ரீதியாக நகர்த்தவே முற்படக்கூடும் என்பதனையே அரசறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
நான்காவது, சமகாலத்தில் நலிந்து போயுள்ள ஈழத்தமிழ் அரசியலை லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் சுயாட்சி பிரதேசங்களின் அரசியலுடன் தொடர்புபடுத்தி நோக்கலாமா என்பதையும் ஆராய வேண்டி உள்ளது. 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஈழத்தமிழர்களின் அரசியல் வலுவானதானதாகவும் தொடர்ச்சியான போராட்டங்களுடன் நிலையான கோரிக்கைகளுடனும் காணப்பட்டது. அத்தகைய வடிவத்திலேயே ருஸ்ஸோபில் பிரிவினைவாத சக்திகளினால் லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பேணப்பட்ட நிலையில் ரஷ்சியா தனது நலனை மையப்படுத்தி பெப்ரவரி-21இல் சுதந்திர தேசங்களாக அறிவித்திருந்தது. எனினும் 2009களுக்கு பின்னர் ஈழத்தமிழரசியல் உறுதியான கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த தலைமைத்துமற்ற நிலையிலேயே அரசியலை நகர்த்தி கொண்டு செல்கின்றது. அத்துடன் 2009களுக்கு தமிழ்த்தேசியப்பரப்பில் தமிழ் மக்கள் போராட்டங்களற்ற நிலையில் விடுதலைக்காக போராடும் ஓர் தேசிய இனம் எனும் எவ்வித காட்சிபுலனுமற்ற நிலையிலேயே உள்ளனர். புவிசார் அரசியலின் நலனை கையாளக்கூடிய தலைமை உருவாக்கமே ஈழத்தமிழ் அரசியல் பரப்பின் இன்றைய பிரதான தேவையாக உள்ளது.
எனவே, ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் புவிசார் அரசியலாய் அந்நலனைத்தேடும் தேசங்களுக்கு முன்மாதிரியாக அமையினும், ஈழத்தமிழ்த் தேசியப்பரப்பில் வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, ஈழத்தமிழ்த்தேசிய பரப்பில் புவிசார் அரசியல் நலன்களை உருவாக்கக்கூடியதான கட்டமைப்பும் இல்லாத சூழலே காணப்படுகிறது. ஆயினும் ரஷ்சியா-உக்ரைன் போர் சர்வதேச அரசியலில் எல்லைகளின் புனிதத்தன்மை பற்றிய அனுமானங்களை உயர்த்தி, உலகை ஒரு புதிய சூழ்நிலையில் தள்ளியுள்ளது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ஹாலே பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி ஜோஹன்னஸ் வார்விக், 'இன்று கிட்டத்தட்ட அனைத்தும் நேற்றிலிருந்து வேறுபட்டது. நாங்கள் இப்போது ஒரு வகையான முகாம்களின் மோதலுக்கு திரும்பியுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார். இம்மாற்றம் சில ஆருடங்களையும் கடந்த கால வரலாற்றையும் மாற்றக்கூடிய வல்லமை பெறலாம். வலுப்பெறும் இந்தோ-பசுபிக் சமுத்திரங்களை மையப்படுத்திய அரசியலில் வலுப்பெறும் இந்தியாவின் அரசியல் தனது பிராந்திய அரசியலில் புவிசார் அரசியலினை உறுதிப்படுத்தும் சக்தியாகவும் மாறலாம். எவ்வாறாயினும் ஈழத்தமிழரசியல் வெளியுறவுக்கொள்கை சார்ந்து சீரான கட்டமைப்பையும் ஒருங்கிணைந்த தலைமையையும் உருவாக்க தவறின் கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவச்செய்யும் களமே காணப்படும்.
Comments
Post a Comment