அமெரிக்காவின் அதிகாரத்தை பாதுகாக்கும் அரணாக ஜி-07, நேட்டோ செயற்படுமா? -சேனன்-
சர்வதேச அரசியலில் வல்லாதிக்க அரசுகள் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அதிகம் கூட்டுக்களுக்குள்ளேயே பயணிக்கின்றன. குறிப்பாக பனிப்போருக்கு பின்னரான ஒற்றைமைய அரசியலின் எஜமானாக தன்னை காட்சிப்படுத்திய அமெரிக்கா தன் வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த பலதரப்பு கூட்டுக்களை உருவாக்கியுள்ளது. அவ்வகையில் அமெரிக்கா தனது அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதாக ஒழுங்கமைத்துள்ள அமைப்புக்களில் ஜி-07 மற்றும் நேட்டோ முதன்மையான அமைப்புக்களாக கருதப்படுகின்றது. அமெரிக்க மற்றும் ஐரோப்பா கூட்டாக குறித்த அமைப்புக்கள் காணப்படுகின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான பனிப்போர் அரசியல் மற்றும் பனிப்போருக்கு பின்னரான அரசியலில் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அரணாக ஐரோப்பாவே செயற்பட்டு வருகின்றது. எனினும் கோவிட்-19க்கு பின்னர் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்கா-ஐரோப்பா இடையே விரிசல்கள் உருவாகுவதை பல சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஐரோப்பா கூட்டை பாதுகாப்பதிலும், இந்தோ-பசுபிக் பிராந்திய ஆதிக்க போட்டியில் ஐரோப்பாவின் ஆதரவை திரட்டுவதிலும் ஜி-07 மற்றும் நேட்டோ மாநாடுகள் மீதே அதிக கரிசணையை வெளிப்படுத்துவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறனதொரு பின்னணியிலேயே ஜூன் இறுதியில் 2022ஆம் ஆண்டுக்கான ஜி-07 மற்றும் நேட்டோ மாநாடு ஐரோப்பாவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இக்கட்டுரை 2022ஆம் ஆண்டுக்கான ஜி-07 மற்றும் நேட்டோ மாநாடுகளின் அரசியல் முக்கியத்துவங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26-28ஆம் திகதிகளில் ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸில் உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஜி-07 மாநாட்டில் உலகின் பணக்க நாடுகளில் ஏழு நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். ஜூன் 26-28 நிகழ்ச்சி நிரலில் உக்ரைன் மீதான ரஷ;சியாவின் படையெடுப்பு, உலகப் பொருளாதார நெருக்கடிகள், தடுப்பூசி சமத்துவம் மற்றும் காலநிலை அவசரநிலை ஆகியவற்றை மையப்படுத்தி திட்டமிடப்பட்டிருந்தது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என உலகின் முன்னேறிய ஏழு பொருளாதாரங்களின் ஒரு முறைசாரா குழுவாக ஜி-07 கட்டமைக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான ஜி-07 மாநாட்டில், உறுப்பு நாடுகளுக்கு வெளியே ஆப்பிரிக்க ஒன்றியம், அர்ஜென்டினா, இந்தியா, இந்தோனேசியா, மற்றும் தென்னாப்பிரிக்கா தலைவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
ஜி-07 மாநாட்டைத்தொடர்ந்து அதன் பாராம்பரிய உறுப்பு நாடுகள் ஸ்பெயினின் மாட்ரிட்டில் நேட்டோ நடைபெற்ற உச்சிமாநாட்டில் இணைந்துள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கான நேட்டோ மாநாடு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஜூன் 28-30ஆம் திகதிகளில் நடைபெற்றது. அண்மைய தசாப்தங்களில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) மிக முக்கியமான உச்சிமாநாட்டாக இருக்கும் எனப்பலரின் எதிர்பார்ப்புடனேயே மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள் பனிப்போருக்குப் பிறகு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உத்திக்கான மாற்றும் அணுகுமுறையை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதன் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார். கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இராணுவ ஆதரவை வலுப்படுத்துதல், உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துதல் மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றில் உச்சிமாநாடு கவனம் செலுத்தும் என மாநாட்டுக்கு முன்பே ஆய்வாளர்கள் ஆருடங்களை தெரிவித்திருந்தனர். மாட்ரிட் நேட்டோ உச்சி மாநாட்டில் தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தலைவர்கள் பார்வையாளர்களாக இணைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜி-07 மற்றும் நேட்டோ கட்டமைப்பு அமெரிக்காவின் அதிகார போட்டிக்கான பாதுகாப்பு அரண் என்பது மீளவும் 2022ஆம் ஆண்டுக்கான மாநாட்டு முடிவுகள் உறுதி செய்கின்றன. நேட்டோ மாநாட்டுக்கு முன்னர் Foreign Policy செய்தி தளத்தில் மைக்கேல் ஹிர்ஷ் குறிப்பிடும், 'மாட்ரிட்டில் புதிய போர் கோடுகள் வரையப்பட்டு வருகின்றன. அது தலைமுறைகளுக்கு நீடிக்கும்.' ஏன்பதே மாநாடுகளின் முடிவு நிதர்சனமாக்குகிறது. இதனை அறிந்துகொள்ள மாநாடுகளின் உள்ளடக்கம் மற்றும் முடிவுகளை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, கோவிட்-19க்கு பின்னரான புதிய உலக ஒழுங்குக்கான முன்னாயர்த்தங்கள் புதிய பனிப்போருக்கான அச்சுறுத்தல் எனும் கணிப்புகள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே முதன்மையான உரையாடலாக காணப்பட்டது. அதனை வலுப்படுத்தும் வகையில் ஜி-07 மற்றும் நேட்டோ மாநாட்டு நிகழ்வுகளுக்கான முன்னாயர்த்தங்கள் அமையப்பெற்றுள்ளது. நேட்டோவின் தலைவர்கள் இந்த வாரம் இந்தோ-பசிபிக் மீது ஒரு கண் கொண்டு கூடுகிறார்கள். மேலும் அவர்கள் சீனாவையும் ரஷ்சியாவையும் எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். ஜப்பான், தென் கொரியா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து தலைவர்கள் மாட்ரிட்டில் நடக்கும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளர். நேட்டோ மாநாட்டில் குறித்த நாடுகள் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்நாடுகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக கட்டமைக்கப்படும் குவாட் மற்றும் ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் முன்னணி அரசுகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது புதிய போர்க் கோடுகள் வரையப்பட்டு வருவதற்கான அச்சுறுத்தலை அடையாளப்படுத்துவதாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது. அவ்வாறே ஜி-07 மாநாட்டுக்கான முன்னாயர்த்தங்களும் சீனா-ரஷ;சியாவுக்கு எதிரான மூலோபாய வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜி-07 மாநாட்டின் பார்வையாளர் நாடுகளாக இணைக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க ஒன்றியம், அர்ஜென்டினா, இந்தியா, மற்றும் தென்னாப்பிரிக்கா என்பன சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் மேலான்மைக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பின் அங்கத்துவ நாடுகளாகும். ஷபிரிக்ஸ்' பிரேசில், ரஷ்சியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்க ஆகிய நாடுகளின் பொருளாதார கூட்டாக காணப்படுகின்றது. பொருளாதாரரீதியாக உலகின் முன்னணி சக்திகளே பிரிக்ஸ்-இல் ஒன்றிணைந்துள்ளன. இந்நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி ஜி-07நாடுகளையும் விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்துக்கு போட்டியான சீனாவின் அமைப்பு என்பதே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக அமைகின்றது. குறித்த அமைப்பின் மாநாடு ஜூன் 23-24ஆம் திகதிகளில் சீனா தலைமையில் மெய்நிகரில் நடைபெற்றிருந்தது. குறித்த மாநாட்டில் ரஷ்சியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் தொடர்பிலும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையிலேயே ஜி-07 மாநாட்டின் பார்வையாளர் நாடுகளாக பிரிக்ஸ் அங்கத்துவ நாடுகளான இந்தியா மற்றும் தென்னாபிரிக்க இணைக்கப்பட்டுள்ளமை, பிரிக்ஸ்-இன் கூட்டு ஒற்றுமையை சிதைக்கும் முயற்சியாகவே அவதானிக்கப்படுகின்றது.
இரண்டாவது, ஜி-07 மற்றும் நேட்டோ மாநாடுகளின் முடிவுகள் ரஷ்சியா மற்றும் சீனாவுக்கு எதிரானதாகவே அமையப்பெற்றுள்ளது. ஜேர்மனியின் நடைபெற்ற ஜி-07 மாநாடு, ரஷ்சியாவின் ஆயுதத் தொழில் மற்றும் தங்க இருப்புக்களை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான புதிய நடவடிக்கைகளுக்கு வழிவகுத்த மற்றொரு உயர்மட்ட இராஜதந்திரக் கூட்டத்தின் பின்னணியில் காணப்படுகிறது. கனடா, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு ஜி-07 நாடுகள் ஜூன்-26அன்று புதிதாக வெட்டப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட ரஷ்சிய தங்கத்தை இறக்குமதி செய்வதை தடை செய்ய ஒப்புக்கொண்டன. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த நடவடிக்கையை, 'ரஷ்சிய தன்னலக்குழுக்களை நேரடியாக தாக்கி, புட்டினின் போர் இயந்திரத்தின் இதயத்தில் தாக்குவதற்கு' ஒரு வழி என்று பாராட்டினார். அத்துடன் ஜி-07 நாடுகள் ரஷ;சிய-உக்ரைன் போரின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு பலமான ஆதரவு வழங்குவது தொடர்பிலும் குறித்த மாநாட்டில் உரையாடப்பட்டது. ஜி-07 தலைவர்கள் Build Back Better World (B3W) முன்முயற்சியின் மறுமலர்ச்சியை அறிவித்தனர். இது சீனாவின் உள்கட்டமைப்பு முதலீடான பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது. சென்ற ஆண்டு(2022) ஜி-07 மாநாட்டில் குறித்த திட்டம் அறிவிக்கப்பட்டு எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தற்போது 'உலகளாவிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு கூட்டுத் திட்டங்கள்' என மறுபெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் முதலீடு செய்ய 600பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் 200பில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்காவிலிருந்து நேரடியாக வர உள்ளது. அந்தப் பணம் எவ்வாறு சரியாகச் செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அதில் மானியங்கள், கூட்டாட்சி நிதியுதவி மற்றும் தனியார் துறை முதலீடுகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று வெள்ளை மாளிகை கூறியது. நேட்டோவின் மூன்று நாள் மாநாட்டில், கவனம் மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் மீதே குவிக்கப்பட்டு இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்சியாவின் படையெடுப்பு ஐந்தாவது மாதமாகத் தொடரும் நிலையில், கூட்டணியின் தற்காப்புத் திறன்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை நேட்டோ மாநாடு அறிவித்துள்ளது. நேட்டோவின் தடுப்பு மற்றும் பாதுகாப்பில் ஒரு அடிப்படை மாற்றத்தை நேட்டோவின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். பலப்படுத்தப்பட்ட முன்னோக்கி பாதுகாப்புகள், கூட்டணியின் கிழக்குப் பகுதியில் மேம்பட்ட போர்க்குழுக்கள் மற்றும் 300,000 க்கும் அதிகமான ஆயத்த சக்திகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு தலைவர்கள் நேட்டோவில் அதிக முதலீடு செய்யவும் பொதுவான நிதியை அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டனர். மேலும் இப்போது சீனாவைச் சமாளிக்கும் ஒரு புதிய 'மூலோபாய கருத்தை' வெளியிட்டு உள்ளது. நேட்டோ தலைவர்கள் ஒரு புதிய நேட்டோ மூலோபாய கருத்துக்கு ஒப்புதல் அளித்தனர், இது மிகவும் ஆபத்தான மற்றும் போட்டி நிறைந்த உலகில் கூட்டணிக்கான வரைபடமாகும். இது ரஷ்சியா மற்றும் பயங்கரவாதம், இணையம் மற்றும் கலப்பு உள்ளிட்ட பிற அச்சுறுத்தல்களுக்கு நேட்டோவின் அணுகுமுறையை அமைக்கிறது. முதன்முறையாக, மூலோபாய கருத்து சீனா முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்கிறது.
மூன்றாவது, 2022ஆம் ஆண்டுக்கான ஜி-07 மற்றும் நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அச்சுறுத்தலுக்கான அரண்சார் திட்டங்களை முன்வைத்த போதிலும் இதன் செயற்பாட்டு தன்மையில் அதிக விமர்சனப்பார்வையும் காணப்படுகின்றது. இவ்வாண்டு ஜி-07 மாநாட்டு தலைமையேற்றிருந்த ஜேர்மன் ரஷ்சிய தொடர்பான முடிவுகளில் குழப்பகரமான நிலையிலேயே உள்ளது. உக்ரைனில் நடக்கும் போரை மையப்படுத்தி ஜி-07 தலைவர்கள் உலகளாவிய முன்னுரிமைகளை புறக்கணிக்கக்கூடாது என்ற கருத்தை ஜேர்மனிய சான்சிலர் ஓலாப் ஸ்கோல்ஸ் மார்ச் மாதம் பெர்லினில் நடைறெ;ற உக்ரைனில் நடைபெறும் போர் தொடர்பான உலகளாவிய தீர்வுகள் உச்சி மநாட்டில் தெரிவித்திருந்தார். ஜேர்மன், ரஷ்சிய-உக்ரைன் போரை முதன்மைப்படுத்துவதை தவிர்க்க எண்ணுவதையே அவரது கருத்து வெளிப்டுத்தி நிற்கின்றது. மேலும், ஜி-07 மாநாட்டில் சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கு எதிராக கட்டமைக்கப்பட்டு மறுபெயரிடப்பட்டுள்ள ஷஉலகளாவிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு கூட்டுத் திட்டங்கள்| சரியான செயற்பாட்டு வரைபுகளின்றியே இவ்வாண்டும் உரையாடப்பட்டுள்ளது. எனவே மீளவும் குறித்த திட்டம் வரும் ஆண்டுகளில் மீளப்புதுப்பிக்க வேண்டிய தேவை எழும் என்பதே ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அத்துடன் நேட்டோ அமைப்பிலும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் உறுப்பினர் விண்ணப்பங்கள் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு மாநாட்டில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உறுப்புரிமையை பெற்றுள்ள போதிலும், துருக்கி அதனை விரும்பாத நிலையில் உள்ளது. மேலும் துருக்கி-ரஷ்சிய உறவு சார்ந்தும் நேட்டோவின் கூட்டொற்றுமையும் கேள்விக்குட்படுத்தும் நிலையிலேயே காணப்படுகின்றது.
எனவே, ஜி-07 மற்றும் நேட்டோ மாநாடுகளின் முடிவுகள் அமெரிக்காவின் அதிகாரத்தை பாதுகாக்கும் அரணாக தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற போதிலும், அதன் நம்பத்தன்மை ஆய்வுக்குரியதாகவே காணப்படுகின்றது. அமெரிக்கா ரஷ்சியா மற்றும் சீனா உடனான அதிகார மோதலுக்கும் ஐரோப்பா கூட்டுகளான ஜி-07 மற்றும் நேட்டோ காலாவதியாகி செல்கின்றமையையே சமீபத்திய நிகழ்வுகள் பலவும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அந்த வரிசையிலேயே 2022ஆம் ஆண்டுக்கான மாநாடுகளும் இணையப்பெறும் என்பதே சர்வதேச அரசியல் ஆய்வுத்தளத்தின் ஆரூடமாக உள்ளது. இதனை மறுசீரமைக்கும் பொறியாகவே ஐரோப்பிய கூட்டுக்களில் மாநாட்டில் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாய ஆதரவு நாடுகள் இவ்வாண்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகமும் சர்வதேச அரசியல் பரப்பின் முதன்மையான உரையாடலாக காணப்படுகிறது.
Comments
Post a Comment