ஜப்பான் தூதுக் குழுவினரின் வடக்கு நோக்கிய விஜயத்தின் அரசியல் பின்னணியும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையிருந்த போதிலும், தற்போது வரிசையில் நின்றும் பொருட்களை பெறஇயலாத நிலையை நோக்கி நகர்கின்றது. அரசாங்கமும் தொடர்ச்சியாக பாராளுமன்ற விவாதங்களிலும் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான சரியான தீர்வை அடையாளங்காண முடியாது உள்ளது. சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் கடனுதவியையே தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் கோரி வருகின்றது. மலையாய் காணப்படும் இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச நாடுகளும் மடுவாகவே உதவிகள் மேற்கொள்கின்றன. உலக நாடுகள் அறிவுறுத்தும் அரசியல் ஸ்திரத்தன்மையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த தவறுகின்றமையே சர்வதேச நாடுகளின் அசமந்த போக்குக்கும் காரணமாகின்றது. அத்துடன், சர்வதேச நாடுகளும் இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாகவே முதன்மையான கரிசனையை செலுத்துகின்றார்கள். இலங்கையின் இன்றைய நெருக்கடி தேசிய இனப்பிரச்சினை சார்ந்ததாகவோ அதுசார் தீர்வை நோக்கிய விடயங்களையோ அதிகளவில் அழுத்தம் கொடுப்பதை தவிர்த்தே வருகின்றன. இந்நிலையில் இலங்கை உதவி கோரியுள்ள ஜப்பான், தனது களஆய்வில் இலங்கையின் தற்போதைய நெருக்கடியில் தேசிய இனப்பிரச்சினைக்காரணியை முதன்மைப்படுத்தி செயற்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை ஜப்பான் தூதரகம் வடக்குக்கு பயணம் மேற்கொண்டு முன்னெடுக்கும் நகர்வுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி தலைமையிலான அரசியல் ஆலோசனைக்குழு மூன்று நாள் விஜயமாக ஜூன்-28அன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ளனர். குறித்த விஜயத்தில் ஜப்பானிய தூதுவர் குழு வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஜப்பான் அரசாங்கத்திள் நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் புணர்நிர்மான பணிகளை மேற்கொண்டுள்ளதுடன், சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழக துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். ஜப்பான் தூதுவர் குழுவின் குறித்த விஜயமானது, இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான ஜப்பானின் எதிர்கால உதவிகளுடன் இணைந்ததாகவே காணப்படுகின்றது. ஜப்பான்-இலங்கை நட்புறவில் சில பிரச்சினைகள் காணப்பட்டாலும் தற்போது இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கான கோரிக்கைகளுடன் இலங்;கை அரசாங்கம் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கை சார்ந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே, ஜப்பான் இலங்கைக்கான தனது எதிர்கால உதவித்திட்டங்களில் வடக்கு மக்களின் எண்ணங்களையும் இணைக்கும் வகையிலேயே குறித்த தூதுவர் குழுவின் விஜயத்தை ஒழுங்கமைத்துள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். குறித்த கருத்தின் ஆழத்தை விளங்கிக்கொள்ள ஜப்பான் தூதுக்குழுவின் வடக்கு விஜயத்தின் நிகழ்வுகளை மற்றும் உரையாடல்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் குழு இலங்கையின் சமகால நெருக்கடிக்கு பின்னுள்ள தேசிய இனப்பிரச்சினை சார்ந்த அரசியல் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியே உரையாடல்களை மேற்கொண்டுள்ளனார். இலங்கை பொதுவெளியில் இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடிக்கு பொருளாhதார முகம் மாத்திரம் கொடுக்கப்பட்டே உரையாடப்படுகின்றது. இது தழுவி சர்வதேச நாடுகளின் உரையாடலிலும் பெரும்பாலும் பொருளாதாரம் முகம் மாத்திரமே இலங்கையின் சமகால அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு காரணமென அனைத்துத் தரப்புக்கும் வழங்கப்படுகின்றது. அது மட்டுமன்றி முதன்மைப்படுத்தப்படும் அரசியல் உரையாடல்களிலும் ஆட்சி மாற்றத்தையே அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக நோக்கப்படுகின்றது. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி 50நாட்களுக்கு மேல் போராட்டத்தை நகர்த்தி செல்லும் கோதா கோகம போராட்டம் ஆட்சி மற்றத்தையே முதன்மையான அரசியல் தீர்வாக முன்வைக்கின்றனர். அவ்வாறே, சர்வதேசரீதியாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா போன்றன ஆட்சி மாற்றத்தையே உதவிக்கான முன்நிபந்தனையாக முன்வைக்கின்றனர். இங்கு தமிழ் மக்கள் கோரி நிற்கும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த விடயங்களை எத்தரப்பும் முன்வைக்க தவறியுள்ளனர். எனினும் ஜப்பான் தூதுவர் குழுவின் வடக்குக்கான களப்பயணமும் உரையாடல்களும் இலங்கையின் சமகால அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்திரத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றனர். குறித்த அரசியல் ஸ்திரத்தன்மை என்பது தேசிய இனப்பிரச்சினை தீர்வு சார்ந்தது என்பதிலும் ஜப்பான் தூதுவர் குழு சரியான தெளிவில் உள்ளமையையே அவதானிக்க முடிகின்றது.

இரண்டாவது, இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான உதவிக்கோரிக்கையின் போது நிலையான தீர்வுக்கு ஜப்பான் அரசாங்கம் என்றும் ஆதரவாக இருக்கும் என்பதையே ஜப்பான அழுத்தமாக தெரிவித்து வருகின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கொட்டாரோவிடம் பொருளாதார வீழ்ச்சியால் தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து மே-27அன்று விளக்கமளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு ஈடுபாடுகள், உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறித்த சந்திப்பில் கட்சுகி கொட்டாரோ, இலங்கையுடனான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடுதான் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான திறவுகோல் என்று குறிப்பிட்டதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு நிலையான தீர்வுகளை காண்பதில் ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவை வலியுறுத்தினார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு நிலையான தீர்வு என்பது கடனுதவியால் அடையப்போவதில்லை. இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பதாயின் இலங்கையினுள் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். முதலீட்டுக்கான நம்பிக்கையை அளிக்க இலங்கையின் தேசிய இனப்பிரச்சிளை தீர்வு பெற வேண்டுமென்பதே எளிமையான விளக்கமாகும்.

மூன்றாவது, வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் குழு இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சர்வதேச பொது வெளியில் உரையாடப்படும் நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளினை முதன்மைப்படுத்துவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. நல்லிணக்கப்பொறிமுறை ஜப்பானிய அரசியல் கலாசார வரலாற்றிலும் முதன்மையான நிலையை பெறுகின்றது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்காவின் அணுகுண்டால் சேதமடைந்த ஜப்பான் அமெரிக்காவின் உதவியிலேயே மீண்டெழுந்து இன்று பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு நிகரான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாயின் அது ஜப்பானின் நல்லிணக்க அரசியல் கலாசாரத்தின் வெற்றியாகும். அத்துடன் இலங்கையின் கடந்தகால நல்லிணக்க பொறிமுறைகளில் ஜப்பானின் ஈடுபாடும் உயர்வாக இருந்து வந்துள்ளது. இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது. குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டத்தின் களமாக ஜெனிவாவே முதன்மையாக காணப்பட்டது. உரிய தீர்வாக இல்லாவிடினும் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் தொடர்ச்சியாக நிலைபெற நல்லிணக்க உரையாடலை முன்னிறுத்திய ஜெனிவா களம் பயனுடையதாக இருந்தது. எனினும், இலங்கையின் சமகால அரசியல் பொருளார நெருக்கடி அதனையும் நீர்த்துப்போகச்செய்யும் சூழலையே உருவாக்கியது. இவ்வாறான பின்னணியல் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை பேணுவதற்கான களத்தை ஜப்பான் உருவாக்குவதாக ஜப்பானின் நல்லிணக்கம் பற்றிய உரையாடலை அவதானிக்கலாம்.

நான்காவது, இலங்கை-ஜப்பான் உறவின் நெருக்கடி ஈழத்தமிழர்களுக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்கக்கூடியதாகும். இலங்கை-ஜப்பான் உறவானது நீண்ட வரலாற்று பாரம்பரியத்தை கொண்டதாயினும், பொதுஜன பெரமுன ஆட்சியில் ஜப்பானுடனான இலங்கை உறவு பாரிய விரிசலான நிலையிலேயே உள்ளது. பொதுஜன பெரமுன அரசாங்கமானது ஜப்பான் இலங்கையுடன் மேற்கொண்ட முன்னைய ஒப்பந்தங்களை முறித்தக்கொண்டதன் பின்னர் உறவு நிலையில் விரிசல்களுடளேயே பயணிக்கின்றன. அதனாலேயே இலங்கையின் இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் ஜப்பான் ஆரோக்கியமான மற்றும் முழுமையான ஒத்துழைப்பு எதனையும் வழங்குவதில் தீவிரம் காட்டாதுள்ளது. கோவிட்-19 நெருக்கடி காலப்பகுதியிலும் ஜப்பான் இலங்கையிலிருந்து அதிகளவு விலகியே நின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ஜப்பான் ஈழத்தமிழர்கள் மீது வெளிப்படுத்தும் கரிசனை ஜப்பானின் அரசியல் நலனுக்கு உட்பட்ட ஈழத்தமிழருக்கு வாய்ப்பான களமாகும். உரிமைக்காக போராடும் தேசிய இனங்கள் சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்;துவதனூடாகவே தங்கள் உரிமையை வென்றெடுக்க முடியும். இதுவே வரலாற்றுரீதியான அனுபவமாகவும் காணப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடி என்பது ஈழத்தமிழருக்கு வாய்ப்பான காலமாக அரசியல் கருத்தரங்குகளில் உரையாடப்படுகின்ற போதிலும், தமிழரசியல் கட்சிகள் இக்காலத்தை பயன்படுத்துவதற்கான எவ்வித ஆரோக்கியமான நகர்வுகளையும் முன்னெடுக்க தவறியுள்ளனர். அதன்விளைவாகவேஇலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியின் மூலகாரணமான தேசிய இனப்பிரச்சினைசார் உரையாடல் சர்வதேச பரப்பில் தவிர்க்கப்பட்டு வருகின்றது. எனினும் தற்போது ஜப்பான் தன்னார்வமாக இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினையில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை இணைத்து செல்கையில் ஈழத்தமிழர்களும் தங்கள் செயற்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதேநேரம் ஈழத்தமிழர் மீதான ஜப்பானின் கரிசனை பலப்படும் இந்தியா-இலங்கை உறவின் பதில் இராஜதந்திரமாக அமையுமா என்ற விமர்சனப்பார்வையும் அரசியல் அவதானிகளிடம் எழுப்பப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பில் கொண்டுள்ள முக்கியத்துவத்தை தவறவிடுகையிலேயே ஜப்பான் போன்ற அரசுகள் ஈழத்தமிழரினை தமது இராஜதந்திரத்துக்குள் உள்ளீர்க்கும் நிலைகள் உருவாக்கம் பெறுகின்றது. ஈழத்தமிழர்கள் தொடர்பான ஜப்பானின் நகர்வுகள் வெற்றி பெறுவதில் ஈழத்தமிழ் தரப்பிடமிருந்தும் ஆரோக்கியமான எதிர்வினைவுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். மாறாக வழமைபோன்றே ஈழத்தமிழ்த்தரப்பு மௌனமாகவே பயணிக்குமாயின் இதுவும் நீர்த்து போகும் வாய்ப்பாக மாறும் சூழலையே உருவாகக்கூடியதாகும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-