அரசியலமைப்புக்குட்பட்ட தாராண்மைவாதியின் எதேச்சதிகாரமும் இலங்கை அரசியலும் -ஐ.வி.மகாசேனன்-
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில், வரலாறு காணாத அரசியல் திருப்பங்கள் பலவும் 2022 ஜூலை நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 69இலட்சம் வாக்குகளை, பெற்று இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே அதிகூடிய வாக்குகளை பெற்றவராக சிறப்பு பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா மக்கள் கிளர்ச்சிக்கு அஞ்சி, நாட்டைவிட்டு ஓடியதுடன் ஜனாதிபதி பதவியையும் இராஜினாம செய்தார். மறுவலத்தில் பொதுத்தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு, கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியப்பட்டியலூடாக ஓராண்டுக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற பிரதிநிதிகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இத்தெரிவு இலங்கையின் ஜனநாயகத்தை கோட்பாட்டுரீதியாக கேள்விக்குட்படுத்துகின்றது. அத்துடன் ஜனாதிபதி தெரிவு தேர்தல், நடைமுறையில் இலங்கை அரசியல் கட்சிகளிடையேயும் கட்சிகளுக்குள்ளேயும் அதிக நெருக்கடிகளை உருவாக்கியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் உருவாகக்கூடிய அரசியல் பிரச்சினைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாக்கு எதிராக பல மாதங்களாக நீடித்த மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு, நாட்டை விட்டு வெளியேறி ஜூலை-14அன்று சிங்கப்பூரிலிருந்து இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து 29ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை ஜனாதிபதி பதவி காலம் முழுமையாக நிறைவடைவதற்கு முன்னர் வெற்றிடம் உருவாகியது. 1993ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து உருவாகிய வெற்றிடத்திற்கு அன்றைய பிரதமர் டி.பி.விஜயதுங்க பாராளுமன்றத்தால் போட்டியின்றி ஏகமனதாக நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். எனினும் 2022ஆம் ஆண்டு ஜீலையில் கோத்தபாய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து உருவாகிய வெற்றிடத்திற்கான தெரிவிற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க ஆகிய மூன்று பேர் போட்டியிட்டிருந்தார்கள். ஜூலை-20அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில், 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இத்தெரிவு நாட்டை ஆழமான அரசியல் நெருக்கடியில் ஆழ்த்தியது.
இலங்கை அரசியலமைப்புரீதியாக, ஜனாதிபதி பதவி வறிதாகையில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையோரின் ஆதரவில் ஜனாதிபதி தெரிவு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டாலும், நடைமுறை இலங்கையின் அரசியல் நிலவரங்கள் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தெரிவு தொடர்பில் அதிக விமர்சனத்தை உள்ளாக்குகின்றது. குறிப்பாக, ஜனநாயகம் தொடர்பில் அதிக முரண்பாடு எழுப்பப்படுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, ஜனாதிபதியை தெரிவு செய்யும் தகுதி தற்போதைய பாராளுமன்றம் இழந்துள்ளதுஇ பொதுஜன பெரமுனாவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மக்கள் கிளர்ச்சியூடாக பதவியை இழந்துள்ள நிலையில், பொதுஜன பெரமுன அரசாங்கமும் ஜனநாயகரீதியில் வறிதாகி உள்ளது. ஆயினும் பொதுஜன பெரமுன அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் காணப்படுவதனால் ஜனாதிபதி தெரிவில் பொதுஜன பெரமுனவே பலமான சக்தியாக காணப்பட்டடது. அதனடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்காவை தோற்கடிப்பதை பிரதான இலக்காக கொண்டு செயற்பட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமாவை ஜனாதிபதி தெரிவில் ஆதரித்து நின்றது. எனினும் பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் அகில காரியவம்ச, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவிற்கே பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதாக அறிக்கை விட்டார். அதேவேளை பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் டலஸ் அழகப்பெருமாவிற்கு ஆதரவளித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி தெரிவு போட்டியும் பொதுஜன பெரமுன கட்சி சார்ந்ததாகவே அமையப்பெற்றது. எனவே, மக்கள் புறக்கணிக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தகுதியை இழந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். மக்கள் புறக்கணிக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் மக்களால் நிராகரிக்கப்படுபவராகவே காணப்படுகின்றார். எனினும் ஜனாதிபதி தெரிவு முறைமை அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இடம்பெற்றுள்ளது. எனவே இலங்கை அரசியலமைப்பின் ஜனநாயக போர்வை போலித்தன்மையானது என்பதையே ஜனாதிபதி தெரிவும் உறுதிப்படுத்தியுள்ளது. இப்போலி ஜனநாயக போக்குகளே இலங்கையின் இனப்பிரச்சினையையும் நகர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் புறக்கணித்துள்ள அரசாங்கத்தையும் அதன் பிரதிநிதிகளையும் பாதுகாக்கும் கடமையையே இனிவரும் இரண்டரை ஆண்டுகளும் முதன்மைப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. பாராளுமன்றத்தில் தனித்து ஓர் பிரதிநிதியை (தேசியப்பட்டியல் உறுப்பினர்) மாத்திரமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கொண்டுள்ளது. எனவே, ரணில் விக்கிரமசிங்க மிகுதி இரண்டரை ஆண்டு காலமும் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள பொதுஜன பெரமுனாவின் ஆதரவை உறுதிப்படுத்த வேண்டும். மாறாக பொதுஜன பெரமுனவின் ஆதரவை இழக்கும் பட்சத்தில் 2/3 பெரும்பான்மையூடாக ரணில் விக்கிரமசிங்க பதவி பறிபோகும் நிலைமைகளே அதிகமாக காணப்படுகின்றது. ஜனாதிபதி தெரிவின் போதும் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியாளர்களிடமிருந்து பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தியிருந்ததாகவும் செய்திகள் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பொதுஜன பெரமுனாவின் நிழலாகவே செயற்படுவார் என்பதே வெளிப்படுகின்றது. இது அவரது ஆட்சியின் ஸ்திரத்தன்மையில் கேள்வி எழுப்பியுள்ளது.
மூன்றாவது, இலங்கை அரசியலமைப்பு நிறைவேற்றுத்துறைக்கு அளித்துள்ள உயர்ந்த அதிகாரங்களை அண்மைய நாட்களில் தெளிவாக அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. அரசியலமைப்பு அதிகாரத்தை நுணுக்கமாக பயன்படுத்தக்கூடிய ஆளுமையாகவே ரணில் விக்கிரமசிங்க தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். 2020ஆம் ஆண்டு தேர்தலில் பாரம்பரியமான ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தேசியபட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க ஒரு பிரதிநித்துவத்தை கொண்டு பிரதமராகி இன்று நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியுமாகி உள்ளார் என்பது அவரது அரசியல் தந்திர ஆளுமையையே உறுதி செய்கின்றது. இத்தகைய இயல்புடைய ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி இழந்துள்ள செல்வாக்கை மீளக்கட்டமைப்பதில் உத்வேகத்துடன் செயற்படக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறி சஜித் பிரேமதாசாவால் கட்டமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் இருப்பு அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய அனுமானம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ஜனாதிபதி போட்டியில் களமிறங்கிய சஜித் பிரேமதாசா இறுதியில் பின்வாங்கி பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமாவுக்கு ஆதரவளித்தமையும் அவ்வாறான அச்சத்தில் ரணிலை தோற்கடிக்கும் எண்ணத்திலானதாகவே அமைகின்றது. அத்துடன் ஜனாதிபதியாக பொதுஜன பெரமுன போர்வையில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டாலும், கட்சி நலன் என்ற அடிப்படையில் பொதுஜன பெரமுன கூறாக்கக்கூடிய வாய்ப்புக்களும் உரையாடப்படுகின்றது. ஆயினும் இது நுணுக்கமான அரசியலாகவே காணப்படும். பிளவுகளை ஏற்படுத்துவதனூடாக அமைப்புக்களை, குழுக்களை தோற்கடிப்பதில் ரணிலில் தந்திரம் கடந்தகாலங்களிலும் பல முன்அனுபவங்கள் இலங்கை அரசியல் வெளியில் காணப்படவே செய்கின்றது.
நான்காவது, கோத்தபாய ராஜபக்ச கூட செய்ய விரும்பாத அல்லது முயற்சி செய்து தோல்வியுற்ற எதேச்சதிகார வளைவை, புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்க முனைகின்றார். அவர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். அதேவேளை ஜூலை-13 மக்கள் கிளர்ச்சியை முடக்க துப்பாக்கியை பிரயோகிக்கவில்லையென குற்றம் சுமத்தி இரு இராணுவ தளபதிகளுக்கு தண்டனை அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ள அலுவலகங்களை இராணுவத்தைப் பயன்படுத்தி கையகப்படுத்துவதாக அவர் பதில் ஜனாதிபதி காலத்தில் அச்சுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தானாக முன்வந்து இந்த இடங்களில் பெரும்பாலானவற்றை காலி செய்த பின்னர், தற்போது ஜனாதிபதியாகியதும் அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அச்சுறுத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்காவின் மாமனாரும் முதலாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜெயவர்தனவின், எதேச்சதிகாரப் போக்குகள் இலங்கைக்கு உயிர் இழப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், முழு ராஜபக்ஷா குடும்பமும் செய்ததை விட அதிக சேதத்தை ஏற்படுத்தியது. ஜே.ஆர்.ஜெயவர்தனவைப் போலவே விக்கிரமசிங்கவும் தன்னை முன்மாதிரியாகக் கொண்டுள்ளாரா என்பதே அரசியல் ஆய்வாளர்களது தேடலாக உள்ளது. விக்கிரமசிங்கவும் அதே பாதையில் பயணிப்பது ஆபத்தானது.
எனவே, மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த முன்னோடியில்லாத பேரழிவின் மூலம் இலங்கையைப் பார்க்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்கவுக்கு சரியான சர்வதேச தொடர்புகளும் அந்தஸ்தும் உள்ளது என்ற பார்வையே பலரதும் திருப்தியாக உள்ளது. அவர் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி ஆவார். எனினும் மறுதலத்தில் உலக மரபிலேயே தாரண்மைவாதம் அதிகம் போலிகளுக்குள் எதேச்சதிகாரத்தை முன்னிறுத்துவது என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகின்றது. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் மேற்குடன் கொண்டுள்ள உறவு மற்றும் காட்சிப்படுத்தும் தாரண்மைவாதி அடையாளமும் எதேச்சதிகாரத்தை வழிப்படுத்தும் போக்கே காணப்படுகின்றது. இது இலங்கை அரசியலை பொருளாதார நிலையில் தற்காலிக ஸ்திரப்படுத்தலை உருவாக்கினும் அரசியல்ரீதியில் நெருக்கடிக்குள் தள்ளும் அபாயத்தையே வெளிப்படுத்துகின்றது. ரணில் விக்கிரமசிங்க, ஒரு நேர்காணலில் அரசியலை 'குத்துச்சண்டை போன்ற இரத்த விளையாட்டு' என்றும், மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபடுவதைப் போல அதிக சகிப்புத்தன்மை தேவை என்றும் கூறியுள்ளார்;. இன்று அச்சகிப்பு தன்மையால் தனது நீண்டகால இலக்கை அடைந்துள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனி அதிகாரத்தினூடாக இரத்த விளையாட்டை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இலங்கை அரசியலை சூழ்ந்துள்ளது.
Comments
Post a Comment