'அரகல' 'புரட்சியாய்' பரிணமிக்கையிலேயே ஜனநாயத்தின் எல்லைகள் விரிவாக்கப்படுகிறது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஒன்பதாம் திகதி சாதமான திகதியாக அமைகின்றது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷாவின் பதவி விலகல், மே மாத குழப்பமென, இறுதியாக ஜீலை-09 ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஆக்கிரமிப்பு வரையான மக்கள் போராட்டத்தின் வெற்றிகள் யாவும் 09ஆம் திகதிகளில் ஆழமான பதிவுகளை கொண்டுள்ளது. ஜீலை-09முதல் அரசாங்கத்துக்கெதிரான மக்கள் போராட்டம் வேறொரு பரிமாணத்தை பெற்றுள்ளது. குறிப்பாக போராட்டக்காரர்களால் தமது கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான ஆறம்ச கோரிக்கைகள் போராட்டம் புரட்சியின் எல்லையில் பயணிக்க வேண்டிய தேவையையும் உணர்த்தி உள்ளது. அதேநேரம் சமகால நிகழ்வுகள் எளிமையான அரகல(கிளர்ச்சி) அரசியலமைப்பை தாண்டி பயணிப்பது கடினமானதாகும் என்பதே வெளிப்படுத்தப்படுகின்றது. இது அரகல புரட்சியெனும் வடிவில் பரிணமத்தாலே அதன் இலக்கை அடையவோ அல்லது அதன் சாத்தியத்தை பரீட்சிக்கவோ முடியும் என்பதையே உணர்த்துகின்றது. இக்கட்டுரை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் ஜனநாயக தூய்மைப்படுத்தல் அம்சங்களையும், அதன் இயலுமையையும் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வருங்கால ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திடமிருந்து கோத்தா கோ கம செயற்பாட்டாளர்கள் ஜூலை-09அன்று ஆறு உடனடி கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையிலிருந்து மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் அவர்கள் தமது கோரிக்கைகளை பிரகடனப்படுத்தினர். அவர்களின் அறிக்கையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவும் அவரது முழு மிருகத்தனமான அரசாங்கமும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை மக்களின் எழுச்சியின் உச்ச நோக்கத்தை செயல்திட்டம் வெளிப்படுத்துகிறது. மக்கள் எதிர்ப்பில் இணைந்திருக்கும் திரளான மக்களின் பல்வேறு கருத்துக்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன ஒருமித்த கருத்து மூலம் ஒன்றாக வரைபு உருவாக்கப்பட்டுள்ளது. பல விவாதங்கள், வாதங்கள் மற்றும் உரையாடல்களுக்கு மத்தியில், ஒற்றுமையின் வலிமையின் மூலம் உருவாக்கப்பட்டது. குறித்த வரைபு ஆரம்பத்தில், ஜூலை-05அன்று இலங்கை மக்கள் அனைவருக்கும் நிவாரணம் மற்றும் மன அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்திற்காக, காலி முகத்திடலில் இருந்து பொது மக்களுக்கு வெளியிடப்பட்டது.

கோத்தா கோ கம போராட்டக்காரர்களின் கோரிக்கையில் முதலிரு கோரிக்கைளும் முறையே நடைமுறை அரசாங்க நிர்வாகத்தை முழுமையாக நிராகரிக்கின்றது. ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலக கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளது. இதில் அனைத்து அமைச்சரவை, அமைச்சரவை அல்லாத, பிரதி மற்றும் இராஜங்க அமைச்சர்கள், செயலாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுகளின் ஆலோசகர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், தூதுவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளார்கள். மூன்றாவது கோரிக்கையில், உருவாக்கப்படும் புதிய இடைக்கால அரசாங்கமானது, மக்கள் போராட்டத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு துணைபுரிவதாக அமைய வேண்டுமெனவும், குறித்த இடைக்கால ஆட்சியில் திறம்பட ஈடுபடவும், மத்தியஸ்தம் செய்யவும், மக்கள் போராட்டத்தின் பிரதிநிதிகள் சட்டப்பூர்வ நிலைப்பாட்டைக் கொண்ட மக்கள் பேரவை நிறுவப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. நான்காவது கோரிக்கையில், கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மக்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் வரையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல், அனைவருக்கும் ஒரே சட்டம், ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் சாத்தியமான இடங்களில், தற்போதுள்ள அரசியலமைப்பின் மேலும் ஜனநாயகமயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்ப்பட்டுள்ளது. ஐந்தாவது கோரிக்கையில், மக்கள் இறையாண்மையை அங்கீகரிக்கும் புதிய அரசியலமைப்பு கூடிய விரைவில் வாக்கெடுப்பு மூலம் நிறுவப்பட வேண்டுமெனவும், அதில் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாய் உயர் ஜனநாயக விழுமியங்களான மீளஅழைத்தல், மக்கள் நேரடியாக பொதுவிருப்பூடாக சட்டம் இயற்றலில் பங்குகொள்ளல் போன்ற  விடயங்கள் கோரப்பட்டுள்ளன. இறுதியாக ஆறாவது கோரிக்கையில், மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதே இடைக்கால அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகுமெனவும், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டிய காலக்கட்டத்தில் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு இது செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

இக்கோரிக்கைகள் அதிகம் ஜனநாயகத்தை சீர்படுத்துவதாகவும் அரசாங்க கட்டமைப்பை புரனமைப்பதாகவும் காணப்படுகின்றது. உலக அளவிலேயே ஜனநாயகத்துக்கான மறுசீரமைப்பு வாதங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றது. மக்களின் நேரடி ஜனநாயக பங்குபற்றல் வழிமுறைகளையும் தாண்டி மக்கள் நல்லனவற்றை பகுப்பாய்வு செய்து தெரிவு செய்வதற்காக விவாத ஜனநாயகம் என பல சீர்திருத்த வழிமுறைகளும், சர்வதேச ஜனநாயக அரசியலில் முதன்மையான உரையாடலை பெற்று வருகின்றது. இவ்வாறான சூழலில் இலங்கையின் புதிய தலைமுறையிடமிருந்து நடைமுறை அரசாங்க கட்டமைப்பை முற்றாக நிராகரித்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் வகையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக விழுமியங்களை புனரமைக்க முற்படுவது கோத்தா கோ கம போராட்டத்தின் முதிர்ச்சியான அரசியல் ஆரோக்கிய இயல்பையே உணர்த்தி நிற்கின்றது. எனினும் இதனை நோக்கி போராட்டக்காரர்கள் நகர்வதில் உள்ள சிரமங்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஒன்று, இலங்கையின் ஜனநாயகம் பாழடைந்துள்ளது என்பதன் சாட்சியமே கடந்த முப்பதாண்டு கால போரும் அரச இயந்திரத்தின் இனப்பாரபட்ச ஒடுக்குமுறையுமாகும். ஜனநாயகத்தை மக்களாட்சி என்பதற்கு அப்பால் பெரும்பான்மையோரின் ஆட்சியாக பிரகடனப்படுத்தி செயற்பட்டதன் விளைவே இலங்கையின் இன்றைய நெருக்கடியுமாகும். ஜனநாயக போர்வையில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கையின் நிறைவேற்றுத்துறை கட்டமைப்பானது அதிகம் எதேச்சதிகாரத்தை அரசியலமைப்புரீதியாக ஊக்குவிக்கின்றது. ஜூலை-13அன்று பதில் ஜனாதிபதியாக அரசியலமைப்பின் 37(1)இனூடாக ஜனாதிபதியின் அதிகாரங்களை பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள வடிவம் நிறைவேற்றுத்துறையின் எதேச்சதிகாரத்தின் சமகாலத்தின் சாட்சியமாகும். ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் தாராண்மைவாதியாக மறக்க முடியாத தடம் பதித்தவராக காணப்படுகின்றார். குறிப்பாக, விடுதலைப்புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தை, கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளை போட்டித்தன்மையடையச் செய்து பெரும் பொருளாதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்திய அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் அவர் செய்த பங்களிப்பு அனைத்தும் ரணில் விக்கிரமசிங்க மரபின் ஒரு பகுதியாகும். 2022இல் புதிய பிரதமராக பதவியேற்கும் போதும் கோத்த கோ கம போராட்டம் ஜனநாயக விழுமியத்தின் கூறாக கூறி பாதுகாப்பளிப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார். எனினும் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் நடவடிக்கையாக அவசரகால சட்டத்தை பிரயோகித்து கோதா கோ கம போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள இராணுவம் மற்றும் காவல்துறைக்கு பணித்தார். இது அரசியலமைப்பினூடாக ஜனாதிபதி பெறும் எதேச்சதிகார இயல்பையே தெளிவாக அடையாளப்படுத்துகின்றது. இந்நீரோட்டத்துக்குள் ஜனநாயகத்தை கட்டமைப்பது புதிய நீரோட்டத்தின் புதிய அரசியல் பண்பாட்டு பரிமானத்தையே உறுதி செய்கின்றது.

இரண்டு, போராட்டக்ககார்களிடையையே அரசியலமைப்பை மையப்படுத்திய பிளவு உருவாக்கம் பெற்றுள்ளது. போராட்டக்காரர்களிற்கு ஆதரவளித்து வந்த தலைநகர் மேட்டுக்குடி வர்க்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியான பின்னர் மக்கள் போராட்டத்தை அரசியலமைப்புக்குள் பயணிக்க நிர்ப்பந்திக்கின்றார்கள். ஜூலை-13அன்று போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியமையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்தமையும் அவ்வகையிலானதாகவே காணப்படுகின்றது. எனவே இத்தகைய செயல், போராட்டம் ஜனாதிபதி கோத்தயபாய ராஜபக்ஷாவை மாற்றி ரணில் விக்கிரமசிங்காவிடம் எதேச்சதிகாரத்தை ஒப்படைப்பதற்கானதா என்ற சந்தேகங்களையை அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்புகிறது. அரசியலமைப்பு ரீதியாகவே ஜனநாயக மீறல்கள் அனுமதிக்கப்படுகையில், அரசியலமைப்பினூடாக நெறிப்படுத்தப்படும் நிறுவனங்களூடாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் கோரிக்கைகள் வலுப்படுத்தலாம் என்பது மடமைத்தனமாகும். அரசறிவியலாளர் மாக்ஸ் கிலின் மாற்றம் மற்றும் ஜனநாயக தேர்தல் தொடர்பாக முன்வைத்துள்ள ஓர் பிரபல்யமான கருத்தாடல் இவ்விடத்திற்கு மிகவும் பொருத்தமானதாக காணப்படும். அதாவது, 'தேர்தல் மூலம் மாற்றம் ஏற்படுமாயின் எந்தவொரு அதிகார வர்க்கமும் தேர்தலை நாடாது' என்பதாகும். தேர்தல் மூலம் கட்டமைக்கப்பட்ட நிறுவனத்திடம் மாற்றத்தை பாரப்படுத்தி எவ்வித முன்னேற்றங்களையும் எதிர்பார்க்க முடியாது என்பதே நிதர்சனமாகும். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கம் தேர்தல் திருவிழாவில் அதிகாரத்திற்கு வந்தவர்களாலேயே உருவாக்கப்பட்டதாகும். அதற்குள் நின்று மாற்றங்கள் சாத்தியமற்றதாகும்.

மூன்று, சர்வதேச புரட்சி அனுபவங்களை நோக்கின், ஜூலை 14, 2022, 1789ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியைத் தூண்டி, நவீன மதச்சார்பற்ற குடியரசை நோக்கிய பயணத்தைத் தூண்டிய பாஸ்டில் புயலின் 233வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இலங்கையில் ஜூலை-09, 2022அன்று ஜனாதிபதி அலுவலகத்தின் மீது தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகை ஆக்கிரமிப்பு இலங்கை மக்கள் போராட்டத்தின் புதிய பரிமாணத்திற்கு வித்திடுகிறது. இது புரட்சிகர வடிவை பெற இன்னும் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது. எனினும், பிரான்சின் பாஸ்டில் புயலுக்கும் இலங்கை போராட்டத்தின் ஜூலை-09 வடிவமும் 'மக்கள் இறையாண்மை' என்ற பரவசமான கருத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களின் கிளர்ச்சிகளைப் பற்றிய நுண்ணறிவுகளையும் அத்துடன் சில எச்சரிக்கைகளையும் வழங்குகிறது. பாஸ்டில் புயல், இலங்கையின் சொந்த அடையாள மற்றும் செயலில் உள்ள எழுச்சியைப் போலவே மக்கள் ஜனநாயகத்தின் உணர்வை உயர்த்திய ஒரு தலையாய நிகழ்வாகும். ஆனால் நமது அரசியலுக்கும் மறைக்கப்பட்ட ஆபத்துக்களைக் கொண்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் பத்திரிகையாளர் பிரான்சுவா மிக்னெட் தனது சக குடிமக்களை அசல் பாஸ்டில் தினத்தில் கவனித்தது போல, 'இது மக்களை சுதந்திரம் மற்றும் உற்சாகத்தால் போதையில் ஆக்கியுள்ளது'. ஆனால் அனைத்து புரட்சிகளும் விமர்சனம், சவால் மற்றும் மாற்றும் நோக்கத்தில் உள்ள தீமைகளை திரும்பவும், மீட்டெடுக்கவும் மற்றும் புத்துயிர் பெறவும் முனைகின்றன. கலவரத்தை அடக்குவதில் இராணுவத்தின் பங்கு இருக்கிறது. இது, 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சில், ஒரு இளம் கோர்சிகன் பிரிகேடியர்-ஜெனரலின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இத்தகைய வரலாற்றை முன்னுணர்ந்து ஜனநாயக எழுச்சிக்கான பாதையில் அரகல நகர வேண்டியுள்ளது.

எனவே, தென்னிலங்கையின் அரகல எளிமையான மக்கள் போராட்டமாக நிகழுமாயின் குறித்த மாற்றங்கள் அதிகம் இலட்சியபூர்வமாகவே கடந்து செல்லக்கூடியதாகும். அது தனது வடிவத்தை பெற முடியாத இராஜதந்திர சகதிக்குள் அல்லது இராணுவ அராஜக மேலாதிக்கத்துக்குள் சிதைக்கப்பட்டு விடும். அது யதார்த்த நிலையை பெற வேண்டுமாயின் புரட்சி பரிணாமம் அத்தியவசியமானதாகும். சர்வதேச அரசியலிலும் மக்கள் புரட்சிகளே அரசியல் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. மாறாக மக்கள் போராட்டங்கள் வரலாறாக கடந்து சென்றுள்ளது என்பதுவே முன்அனுபவமாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-