சிவில் அமைப்புக்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை முன்கொண்டு செல்லவேண்டிய அவசியப்பாட்டை உணர்வார்களா? -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாத நிலையே ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. ஏனெனில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் அநாதரவானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பயணித்து கொண்டு செல்கின்றது 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் முழுமையாக ஜனநாய அரசியல் கட்டமைப்புக்குள் பயணிக்க தொடங்கி விட்டது. இங்கு ஜனநாயக அரசியல் கட்டமைப்பின் ஒரு பகுதியினரான அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளை வினைத்திறனாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நியாயமானவை. இருந்த போதிலும், ஜனநாயக அரசியல் கட்டமைப்பின் பிற பகுதிகளில் தனித்துவமானதும் யதார்த்தத்துக்கு அவசியமானதுமான சிவில் சமூகங்கள் ஈழத்தமிழரசியல் உரிமை போராட்டத்தில் ஆரோக்கியமான நகர்வை மேற்கொள்கின்றதா என்ற தளத்திலான பார்வை தவிர்க்கப்பட்டே வருகின்றது. ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் குறிப்பாக ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் தமிழ் சிவில் சமூகங்களுக்கு அதிக முக்கியத்துவம் எழுந்துள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் சிவில் சமூகத்தின் ஈடுபாட்டை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் சிவில் சமூகத்தின் பங்கும் பெரும்பாலும் தமிழ் அரசியல் கட்சிகளைப்போன்றே பத்திரிகைகளுக்கு அறிக்கையிடுவதனுடனேயே மட்டுப்படுத்தப்படுகின்றது. அது தனது வீரியத்தை சரியாக அடையாளங்காண தவறியுள்ளது. அண்மையில் தமிழகத்திலிருந்து வந்த தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வடக்கு-கிழக்கில் அடையாளப்படுத்தப்பட்ட சில சிவில் அமைப்பினருடன் கலந்துரையாடினார்கள். குறித்த கலந்துரையாடல் ஒன்றில் மாணவர் கூட்டமைப்பின் பிரதிநிதி, ஈழத்தமிழரசியல் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 13ஆம் சீர்திருத்தத்தை அமுல்படுத்த கோரி அனுப்பிய கடிதத்தை குறிப்பிட்டு ஈழத்தமிழர்களின் உயர்ந்தபட்ச கோரிக்கை இவ்வாறாகவா உள்ளதென்ற கேள்வியெழுப்பினார். குறுக்கிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், அக்காலத்தில் தாங்கள் 20இற்கும் மேற்பட்ட சிவில் சமூகங்கள் இணைந்து 13ஆம் சீர்திருத்தத்தை எதிர்த்து வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டினார். எனினும் தமிழரசியல் கட்சிகளின் தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளுக்கு எதிரான செயற்பாட்டை முறியடிக்கும் விதத்தில் சிவில் சமூகங்களில் செயற்பாடு அமைந்திருக்கவில்லை என்பதையே அந்நிகழ்வு அடையாளப்படுத்துகிறது. தமிழரசியல் தரப்பு தவறானதொரு அரசியலை முன்னெடுக்கையில் அதனை முறியடித்து தமிழர்களின் நிலைப்பாட்டை வீரியமாக வெளியே தெரியப்படுத்த வேண்டிய சிவில் சமூகம் அறிக்கை அரசியலுடன் மட்டுப்படுத்தியமையாலேயே தமிழக மாணவர் பிரதிநிதிகளிடமிருந்து அவ்வாறானதொரு கேள்வி எழுப்பப்பட்டது.
ஈழத்தமிழ் சமூகத்தில் காணப்படும் சிவில் சமூக கட்டமைப்புகள் அதிகளவில் 'சிவில் சமூகம்' என்ற பெயர்ப்பலகையை அணிந்துள்ளார்களேயன்றி செயற்பாட்டுபரப்பில் அதற்கான வெளிப்பாடுகளை வெளிப்படுத்த தவறியே வருகின்றார்கள். சிவில் சமூகம் அரசியல் ஒழுங்கில் பெறும் முக்கியத்துவத்தை தெளிவாக புரிந்து கொள்ளல் அவசியமாகிறது.
ஒன்று, இன்றைய சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியலில் சிவில் சமூகத்தின் சிந்தனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மேற்கத்திய சமூக ஒழுங்கின் இயல்பான மாதிரி என்ற அடிப்படையில், அதன் மேன்மை உலகம் முழுவதும் பரவத் தூண்டுகிறது என அரசறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். புதிய உலகளாவிய சூழ்நிலைக்கும் சிவில் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை முதலில் அங்கீகரித்தவர்களில் ஒருவரான அலைன் டூரைனின் கருத்துப்படி, தொழில்துறைக்கு பிந்தைய சமூகத்தில் ஒரு புதிய சமூக முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும். அங்கு சமூக வாழ்வின் இடைநிலை முதன்மை செயற்பாட்டாளர்கள் அங்கம் வகிக்கின்றனர். சிவில் சமூகத்தைப் பற்றிய இத்தகைய கருத்து மிகவும் வளர்ந்த நாடுகளால் ஆளப்படும் உலக ஒழுங்கை பராமரிக்க ஒரு கருத்தியல் அடிப்படையை வழங்குகிறது. இதற்கு மாறாக, மனித வாழ்வின் அடிப்படை நிலைமைகளான உணவு, பாதுகாப்பு, வாழக்கூடிய சூழல், கலாச்சாரம் என்பவற்றை வழங்கும் கீழ்மட்ட சிவில் இயக்கத்தை, தற்காப்பு முக்கிய இலட்சியமாக நோக்கப்படுகின்றது. இவ்வாறு, சமூகத்தின் உறுப்பினர்களால் தூண்டப்பட்ட தன்னார்வ இயக்கம், வெளியுறவுக் கொள்கை அல்லது பொருளாதார நலன்களுடன் பின்னிப்பிணைந்ததாக காணப்படுகிறது. அரசு, செயல்திறன் குறையும் போதெல்லாம் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் கடமையைச் செய்கிறது.
இரண்டு, சிவில் சமூகம் என்பது தனியார் குடிமக்கள் அரசுக்கு கோரிக்கைகளை முன்வைக்க அல்லது பொதுத் துறையில் தங்கள் நலன்கள், விருப்பங்கள் மற்றும் யோசனைகளை வெளிப்படுத்த அல்லது அரசின் அதிகாரத்தை சரிபார்த்து அதை பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்துவதில் கூட்டாக செயல்படுவதை உள்ளடக்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சிவில் சமூகம் பொது விடயங்களில் அக்கறை கொண்ட பரந்த அளவிலான அமைப்புகளை உள்ளடக்கி கட்டமைக்கப்படுகின்றது. உலகளாவிய பொருளாதாரம் மற்றும் மேம்பாடு, நிலையான வளர்ச்சிக்கான மையத்தின் மூத்த உறுப்பினர் ஜார்ஜ் இங்க்ராம், சிவில் சமூக அமைப்புகள் பல பாத்திரங்களை வகிக்கின்றமையை சுட்டிக்காட்டுகின்றார். அவை குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் முக்கியமான தகவல் ஆதாரமாக உள்ளன. அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளையும் செயல்களையும் கண்காணிப்பதால் அரசாங்கத்தினை பொறுப்புக்கூற தூண்டுகிறது. அவர்கள் வாதிடுவதில் ஈடுபடுகின்றனர் மற்றும் அரசு, தனியார் துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு மாற்றுக் கொள்கைகளை வழங்குகின்றனர். அவர்கள் குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு சேவைகளை வழங்குகிறார்கள். அவர்கள் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறார்கள் மற்றும் சமூக விதிமுறைகள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் வேலை செய்கிறார்களென சிவில் சமூகத்தின் பாத்திரத்தை குறிப்;பிட்டுள்ளார்.
மூன்று, இன்று சர்வதேச அரசியலை ஆக்கிரமித்துள்ள சர்வதேச நிறுவனங்களில் சிவில் சமூகங்களில் ஈடுபாடே அதிகளவில் முதன்மைப்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, சிவில் சமூகத்துடன் கூட்டுறவின் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. ஏனெனில் அவ்வாறு செய்வது அதன் இலட்சியங்களை மேம்படுத்துகிறது மற்றும் அதன் பணிக்கு ஆதரவளிக்க உதவுகிறது என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கின்றது. ஐ.நா சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகளின் உலகளாவிய தொடர்புத் துறையின் அவுட்ரீச்(ழுரவசநயஉh) பிரிவிற்குள் சிவில் சமூக அலகு என்பதனை கட்டமைத்துள்ளது. பணி சார்ந்த மற்றும் பொதுவான ஆர்வமுள்ள மக்களால் இயக்கப்படும், சிவில் சமூக அமைப்புகள் பல்வேறு சேவைகள் மற்றும் மனிதாபிமான செயல்பாடுகளை செய்கின்றன, குடிமக்களின் கவலைகளை அரசாங்கங்களுக்கு கொண்டு செல்கின்றன, கொள்கைகளை கண்காணிக்கின்றன மற்றும் சமூக மட்டத்தில் அரசியல் பங்கேற்பை ஊக்குவிக்கின்றன என்ற அடிப்படையிலேயே ஐ.நா சிவில் சமுகங்களுக்கான அலகை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடுகிறது.
இவ்வகையில் அரசியல் பொதுவெளியில் முக்கியத்துவம் பெறும் சிவில் சமூக கட்டமைப்பு ஈழத்தமிழரசியலில் ஆரோக்கியமான நிலையில் காணப்படுகின்றதா என்பதில் அதிக கேள்விகளே மேலெழுகின்றது.
முதலாவது, 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர் சமூகத்தின் முன்னெடுப்பில், 2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் சர்வதேச பொதுஅரங்கின் மைய நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டமா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பேசுபொருளாகியது. சர்வதேச நிறுவனங்களுடன் வடக்கு-கிழக்கில் இயங்கும் சிவில் சமூகங்கள் கொண்டுள்ள பிணைப்பு அதிக சந்தேகத்திற்குரியதாகவே காணப்படுகின்றது. அண்மையில் இணையவழியில் இலங்கையின் சமகால அரசியல் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட புலம்பெயர் சிவில் சமூக செயற்பாட்டாளர் வடக்கு-கிழக்கில் இயங்கும் சிவில் சமூகங்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டு ஆழமாக கவணிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. சமகால அரசியல் பொருளாதார நெருக்கடி ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்திற்கு தீர்வை பெறுவதற்கான நகர்வில் முக்கியமான வாய்ப்பு காலமாக நோக்கப்படுகின்றது. எனினும் அதற்கான எவ்வித ஆரோக்கியமான நகர்வுகளையும் அரசியல்வாதிகள் முன்னகர்த்தவில்லையென குற்றம்சாட்டும் சிவில் சமூகத்தினர் தமது பணியையும் செய்ய தவறியுள்ளார்கள் என்பதை புலம்பெயர் சிவில் சமூக செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியிருந்தார். அதாவது இலங்கைக்கு பொருளாதார உதவியை கோரி இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக தென்னிலங்கை சிவில் சமூகங்கள் நூற்றுக்கு மேற்பட்டது சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்த போதிலும், தமிழ்த்தரப்பிடமிருந்து அரசியல் சீர்திருத்தம் சார்ந்து எவ்வித விண்ணப்ப கடிதங்களும் அனுப்பப்படவில்லை என்பதை குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பின்னரும் கூட தமிழ் சிவில் சமூகங்கள் அத்தகைய ஆரோக்கியமாக செயற்பாட்டை முன்னெடுத்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதொரு செயற்பாட்டையே ஜெனிவா களத்திலும் கடந்த ஒரு தசாப்தங்களாக முன்னெடுத்து வருகின்றனர். கடந்த கால நெருக்கடிகளையோ அல்லது 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நிகழும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு சார்ந்த ஆவணப்படுத்தலும் அறிக்கையிடலும் தமிழ் சிவில் சமூகத்திடம் போதிய அளவில் காணப்படவில்லை.
இரண்டாவது, தம்சமூக மக்களை அரசியல்மயப்படுத்தும் மற்றும் அரசியல் அறிவூட்டும் கடமையை ஈழத்தமிழர் சிவில் சமூகங்கள் செய்ய தவறியுள்ளது. சிவில் சமூகத்தின் இயல்பில் பொதுமக்களுக்கு அரசியலறிவூட்டல் மற்றும் அரசியல் கலாசாரத்தை மாற்றும் பண்பு காணப்படுகின்றது. சர்வதேச அரசுகளில் சிவில் சமூகங்கள் அத்தகைய அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிய நாடுகளின் ஜனநாயகமயமாக்கலில், குறிப்பாக தென் கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் சிவில் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பு வலுவான காரணியாக அமைகிறது. சிவில் சமூகங்கள், சீர்திருத்தத்திற்கான அரசியல் அழுத்தத்தை உருவாக்கி, அரசியல் அமைப்புகளின் தாராளமயமாக்கலுக்கு வழிவகுத்தது. மற்றும் இறுதியில் சர்வாதிகார ஆட்சிகளை வீழ்த்தியது. எனினும் ஈழத்தமிழ் சிவில் சமூகங்கள் அரசியல்வாதிகளின் குற்றங்களை மாறிமாறி அடையாளப்படுத்துவதில் மாத்திரமே வினைத்திறனாக செயற்பட்டு வருகின்றனர். மறுதலையாக அவ்அரசியல் தரப்பை மாற்றி தமிழ்த்தேசத்தின் மீது விசுவாசத்துடன் செயலாற்றக்கூடிய புதிய தலைமுறை அரசியலை உருவாக்கும் பணியையும் சிவில் சமூகத்தினர் செயற்பாட்டில் முன்னெடுக்க தவறி வருகின்றார்கள். ஏனெனில் சிவில் சமூகங்கள் பலவும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணிப்பதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தாம் ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் ஏனைய கட்சிகளின் மீது விமர்சனங்களை முன்வைப்பதே உயர்ந்தபட்ச அரசியல் அறிவூட்டல் செயற்பாடாக அமைகின்றது.
மூன்றாவது, ஈழத்தமிழ்த் தேசிய பரப்பில் அரசியலுக்கு அப்பால் சமூக இருப்பு சார்ந்தும் தமிழ் சமூகம் நெறிப்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. அவற்றிலும் சிவில் சமூகத்தின் போதிய கவனம் அவசியமாகிறது. குறிப்பாக வடக்கு-கிழக்கில் சிங்கள முஸ்லீம் மக்களின் ஆக்கிரமிப்பால் தமிழர் தாயகம் சிதைக்கப்படுகின்றது என்பதற்கு அப்பால் எல்லைகளில் போதிய வசதிகள் இன்மையால் எல்லை நிலங்களை விட்டு சுயமாக தமிழர்கள் வெளியேறுவதும் ஆக்கிரமிப்புக்கு வலுச்சேர்க்கிறது. அத்துடன் கல்வியில் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்கள் இறுதி நிலைக்கே போட்டியிடும் நிலை சமகாலத்தில் காணப்படுகின்றது. மேலும் கலாசாரம் சிதைக்கப்படுகிறது. இத்தகு சமூக சீர்கேடுகடுகளுக்கு தீர்வை நெறிப்படுத்துவதில் அரசியல் தலைவர்கள் தவறவிடுகையில் சிவில் சமூகங்கள் பொறுப்புடமையுடவையாக காணப்படுகின்றன. எனினும் ஈழத்தமிழ்பரப்பில் சிவில் சமூகங்கள் கருத்தரங்கு உரையாடல்களோடு சமூக சீரழிவு சார் விடயங்களை கடந்து செல்ல முயல்வதே நடைமுறையில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே, ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தலில் சிவில் சமூகங்கள் தன்னார்வமாக வந்து செயலாற்ற வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. சர்வதேச பொதுவெளியில் சிவில் சமூகங்கள் பெறும் முக்கியத்துவத்தை ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்கும் சாதகமாக ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பும் தமிழ் சிவில் சமூகத்திடமே பாரப்படுத்தப்படுகின்றது. தமிழரசியல்வாதிகள் போல் வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களும் உறக்கம் கொள்வார்களாயின் ஈழத்தமிழரசியல் உரிமைப்போராட்டம் வாய்ப்புக்களை கருத்தாடல்களின் கருப்பொருளாக மாத்திரமே கடந்து செல்லும் நிலையே காணப்படும்.
Comments
Post a Comment