பசுபிக் தீவுக்கூட்டத்தில் மலரும் புதிய அரசு புவிசார் அரசியல் மோதலுக்குள் அகப்படுமா? -சேனன்-
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் 2027ஆம் ஆண்டு புதியதொரு அரசு உருவாகுவதற்கான முன்னாயர்த்தங்கள் விரைவுபடுத்தப்படுகிறது. பசுபிக் சமுத்திரத்தில் பப்புவா நியூ கினியாவின் ஒரு தன்னாட்சி பகுதியாக காணப்படும் போகன்விலே(Bougainville) தீவானது, நீண்ட கால அடக்குமுறை, ஒரு தசாப்த ஆயுதப்போராட்டம், போர் நிறுத்தமும் சமாதான உரையாடல்களும், தன்னாட்சி கட்டமைப்பு உருவாக்கம், சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு என்று நீண்ட போராட்ட வரலாற்றை தனதாக்கியுள்ளது. இவ்வரலாற்றின் தொடர்ச்சியாய் 2027இல் போகன்விலே தீவு தேசம், பப்புவா நியூ கினியாவிலிருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதற்கான இணக்கத்தை இவ்வாண்டு எட்டியுள்ளது. நவீன காலப் பிரிவினைகளைப் பற்றி நினைக்கும் போது, கற்றலோனியா, ஸ்கொட்லாந்து, காஷ்மீர் மற்றும் குர்திஸ்தான் ஆகிய தேசங்களில் நிகழும் ஒருபட்ச கோரிக்கைகளும் முரண்பாடுகளுமே சர்வதேச அரசியலை நிரப்பியுள்ளது. ஆனால் பப்புவா நியூ கினியாவின் தன்னாட்சிப் பகுதியான போகன்விலே சுதந்திரத்தை அடைவதற்கும் உலகின் 194வது நாடாகவும் முழுமையான நிலையை அடைந்துள்ளது. இதனடிப்படையில் 2027இல் போகன்விலே தனி அரசாக உதயமாக உள்ளது. 2011இல் தெற்கு சூடானுக்குப் பிறகு, 2027இல் தேசிய அரசின் இணக்கதுடன் உலகம் புதிய சுதந்திர நாட்டை காண உள்ளது. இக்கட்டுரை போகன்விலே தேசத்தின் விடுதலைப்பயணத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியா பிரதம மந்திரி ஜேம்ஸ் மராபே மற்றும் போகன்விலே ஜனாதிபதி இஸ்மாயில் டோரோமா ஆகியோர் சகாப்த கோன் உடன்படிக்கையில் ஏப்ரல்-08(2022)அன்று கையெழுத்திட்டுள்ளனர். இது போகன்விலேவின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் 2019ஆம் ஆண்டு வாக்கெடுப்பு முடிவுகளை அங்கீகரிக்க வழி வகுக்கிறது. 97.7 சதவீத வாக்கெடுப்பு முடிவுகள் மற்றும் வாக்கெடுப்புக்குப் பிந்தைய ஆலோசனைகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குவதால், இரு அரசாங்கங்களுக்கும் இந்தப் பயணத்தில் சகாப்த கோன் உடன்படிக்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இந்த உடன்படிக்கை இப்போது தேசிய அரசியலமைப்பின் 342வது பிரிவை நடைமுறைப்படுத்துவதாகவும், இது தொடர்பாக தேசிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு மராபேக்கு நன்றி தெரிவிப்பதாக டோரோமா சகாப்த கோன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது கூறினார். அத்துடன் மராபே, '2025க்கும் 2027க்கும் இடைப்பட்ட காலத்தில் போகன்விலேக்கு அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதற்கான எங்கள் உடன்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். மேலும் சகாப்த கோன் உடன்படிக்கை பாதையை அமைக்கிறது.' என்று கூறினார். இரண்டு அரசாங்கங்களின் அரசியல் பதவிக் காலங்களைக் கருத்தில் கொண்டு 2023ஆம் ஆண்டு 11வது பாராளுமன்றத்திற்கு முன் சகாப்த கோன் உடன்படிக்கை மற்றும் பொது வாக்கெடுப்பு முடிவுகளை கொண்டு வர இரு தரப்பாலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. உடன்படிக்கையில் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் அந்தந்த நிர்வாக சபைகள் மூலம் உடன்படிக்கையை அங்கீகரிப்பார்கள். பின்னர் இரு அரசாங்கங்களின் தொழில்நுட்பக் குழுக்கள் சுதந்திரத்தை நோக்கி சாலை வரைபடத்தை கொண்டு செல்லும் அரசியலமைப்பு ஒழுங்குமுறை வரைவை உருவாக்கும்.
1960களில் போகன்விலே தீவின் மையத்தில் அடையாளங்காணப்பட்ட அதிக லாபம் தரும் செப்பு மற்றும் தங்கத்தால் அதன் இறையான்மை ஏகாதிபத்திய அரசுகளின் நலன்களுக்குள் முடக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியா அவுஸ்ரேலியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே போகன்விலே தீவு மக்களிடம் ஒரு இறையாண்மை கொண்ட தேசம் பற்றிய கருத்துக்கள் இருந்த போதிலும், பிரதான நிலவாசிகளுக்கும் போகன்விலே பூர்வீக குடிமக்களுக்கும் இடையிலான இன-தேசியவாத பிரிவை உறுதிப்படுத்துவதில் சுரங்கங்கள் முக்கியமாக இருந்தன. வேலைகள் பெரும்பாலும் போகன்விலே அல்லாதவர்களுக்கு சென்றன. இலாபங்களும் அவ்வாறே ஒதுக்கப்பட்டன. மேலும், பூர்வீக மக்களால் ஆழமாக பாதுகாக்கப்பட்ட மற்றும் மதிக்கப்படும் சுற்றுச்சூழல் அதன் இயற்கை வளங்களுக்காக மீண்டும் மீண்டும் சுரண்டப்பட்டது. 1988இல் பிரிவினைவாதிகள் மத்திய பங்குனா சுரங்கத்தை குறிவைத்தபோது பதட்டங்கள் ஒரு கொதிநிலையை எட்டியது. இது 20,000 உயிர்களைக் கொல்லும் ஒரு உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, 1988 முதல் 1998 வரை, பப்புவா நியூ கினியா தற்காப்புப் படை மற்றும் போகன்விலே புரட்சிகர இராணுவம் மற்றும் போகன்விலே எதிர்ப்புப் படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது.
2001 இல், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது. இது போகன்விலேக்கு முன்னெப்போதும் இல்லாத சுயாட்சியை வழங்கியது. 2005ஆம் ஆண்டு போகன்விலே தீவு தன்னாட்சி தீவாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், அமைதியான சுதந்திரத்தை நோக்கி வேலை செய்யத் தீர்மானித்தது. ஏறக்குறைய 20 வருடங்கள் முயற்சியில், 2019 இல் சுதந்திர வாக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்தான உரையாடலின் நீட்சியாய் 2027இல் சுதந்திரத்திற்கான அறிவிப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவை போகன்விலேயின் இரத்தக்களரி மோதலின் தயாரிப்புகளாகும்.
போகன்விலே புதிய அரசு பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே புதிய பயணத்தை ஆரம்பிக்க உள்ளது. சமகால உலகில் அரசு உருவாக்கம் மற்றும் உயிர்வாழ்வதில் போகன்விலே புதிய வழக்காக காணப்படுகிறது. அதன் தற்போதைய நிலையில், ஒரு சுதந்திர நாடாக அதன் பொருளாதார நம்பகத்தன்மை குறித்து கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. பப்புவா நியூ கினியா தேசிய ஆய்வு நிறுவனம், போகன்விலே தீவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி தோராயமாக 1,100 அமெரிக்க டொலர்களாக மதிப்பிடுகிறது. இது காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜர் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் வரிசையிலேயே போகன்விலேயையும் இணைக்கிறது. இது வறுமை, சுகாதாரம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. வெளிப்படையாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட நாடுகளுக்கு உரிய ஒரு பொதுவான பிரச்சினையை எதிர்கொள்கிறது. 'ஆப்பிரிக்காவில் போர் மற்றும் அரசு' என்ற தனது கட்டுரையில் அறிஞர் ஜெப்ரி ஹேர்ப்ஸ்ற் (Jeffery Herbst) புதிய அரசு உருவாக்கத்தில் உள்ள சவால்களை வாதிடுகிறார். அதாவது, ஐரோப்பாவில் மோதல் தேசியவாதத்தையும் ஒருங்கிணைக்கும் மரபுகளையும் தூண்டியது. ஆபிரிக்காவில் போர் அரசுகளையும் அவற்றின் வளங்களையும் உடைத்தது. உலகளாவிய தெற்கில் உள்ள அரசுகள் பெரிய சக்திகளிடமிருந்து சுரண்டப்பட்ட வரலாற்றை எதிர்கொள்கின்றன. மேலும் சுதந்திரத்திற்கான குழப்பமான பாதைகள் பெரும்பாலும் பிந்தைய காலனித்துவ ஆளும் குழுக்களில் உள்ள சிக்கல்களை முன்னிலைப்படுத்துகின்றன எனச்சுட்டிக்காட்டியுள்ளார். முந்தைய புதிய அரசுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும், போகன்விலே அதன் இயற்கை வள சுரண்டலின் வரலாற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
இயற்கை வளம் சார்ந்து வல்லாதிக்க அரசுகளின் போட்டிக்குள்ளும் போகன்விலேயின் உருவாக்கம் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலையே சமகால புவிசார் அரசியல் நிலவரம் வெளிப்படுத்துகின்றது. சிறிய தீவு நாடு பிரதான ஊடகங்களின் ரேடாரின் கீழ் நழுவியிருக்கலாம், ஆனால் அது விரைவில் தேசிய அரசின் முக்கிய புரிதலுக்கு சவால் விடலாம். சீனா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அதன் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகின்றன. ஏனெனில் தீவுப் பகுதி செம்பு மற்றும் தங்கத்தின் செல்வத்தில் அமர்ந்திருக்கிறது. புவியியல் அளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில், பப்புவா நியூ கினியா பசிபிக் தீவுகளில் மிகப் பெரிய நாடாகும். இது அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு மையமாக உள்ளது. அண்டை நாடான சாலமன் தீவுகளுடன் சேர்ந்து, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மற்றும் சீனாவை உள்ளடக்கிய வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் மையத்தில் பப்புவா நியூ கினியா உள்ளது. எனினும் போகன்விலே தன்னாட்சிப் பகுதியானது, எதிர்காலத்தில் பப்புவா நியூ கினியாவில் இருந்து சுதந்திரமாக மாற உள்ள சமகாலத்தில், சீனா இப்போது கேள்விக்குறியாக வளர்ந்து வரும் பெரும் சக்தியாக உள்ளது. அதன் அளவு, பிராந்திய இருப்பிடம், தீவுகளுக்கான அணுகுமுறை மற்றும் பிராந்தியத்துடனான வரலாற்று உறவுகள் ஆகியவை பசிபிக் தீவுகளில் விளையாடும் தற்போதைய மூலோபாய விளையாட்டில் சீனாவை மிகவும் வித்தியாசமான நிலையில் வைக்கின்றன. இப்போட்டிக்குள் சீரான வெளியுறவுக்கொள்கையை கட்டமைக்க தவறின், முதிர்ச்சியற்ற புதிய அரசு அதிகம் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய வாய்ப்புக்களே காணப்படுகின்றது.
போகன்விலேக்கு சுதந்திரம் கடினமாக இருக்கும். உள் மற்றும் வெளிப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடு, உடனடி இலாபத்தைக் காட்டிலும் நிலையான வளர்ச்சிக்கான பாதையை நோக்கி தன்னைத்தானே வழிநடத்தும் சவாலை எதிர்கொள்ளும். இருப்பினும், தோல்வியுற்ற நிலைகளின் கடந்தகால உதாரணங்களிலிருந்து எப்படி வித்தியாசமாக இருக்க முடியும் என்பதை போகன்விலே தொடர்ந்து நிரூபித்து வருகின்றது. ஆயுதப்போராட்டத்தின் விளைவாக சடுதியான சுதந்திர கோரிக்கைக்கு அப்பால், போருக்கு பின்னரும் பப்புவா நியூ கினியாவுடன் 20ஆண்டுகளுக்கு மேற்பட்ட இணைந்த பயணம் மற்றும் அதிக உரையாடல்களை மேற்கொண்டே சுதந்திரத்திற்கான முன்னாயர்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன் உள்நாட்டுப் போரில் இருந்து குணமடைய கடந்த இரண்டு தசாப்தங்களாக வேலை செய்து வருகிறது. இது போகன்விலே பப்புவா நியூ கினியாவுடன் தொடர்ந்து பேணவுள்ள நட்புறவையே அடையாளப்படுத்துகிறது. இது இந்நூற்றாண்டின் முன்னைய புதிய சுதந்திர அரசுகளான தெற்கு சூடான் மற்றும் கிழக்கு திமோர் போன்றவற்றிலிருந்து போகன்விலேயின் இயல்பை வேறுபடுத்துகிறது. அது வெற்றிக்கான தெளிவான திசையைக் கொண்டே பயணித்து வந்துள்ளது. இவ்அனுபவ மேலோட்டத்துடன் பசுபிக் தீவுகளை சூழ்ந்துள்ள அமெரிக்க-சீன புவிசார் அரசியல் போட்டியையும் தந்திரமாக கையாளும் வெளியுறவுக்கொள்கையை வடிவமைக்குமாயின் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதுடன் ஏனைய இறையாண்மைக்காக போராடும் தேசிய இனங்களுக்கும் முன்னுதாரணமாக காணப்படும். மாறாக புவிசார் அரசியல் சுழலுக்குள் சிக்குமாயின் மீள தன் இறையாண்மையை நவகாலணித்துவத்திற்குள் சிதைக்கும் துர்ப்பாக்கியமே உருவாகும்.
Comments
Post a Comment