ராஜபக்ஷாக்களின் வெளியுறவுக்கொள்கையை பின்தொடரும் ரணில்? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் புதிய இடைக்கால ஜனாதிபதியும் நீண்ட அரசியல் பாரம்பரியத்தையுமுடைய ரணில் விக்கிரமசிங்காவின் சமகால அரசியல் நடவடிக்கைகள் அதிக குழப்பத்தை உருவாக்குகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் பிரதமராகி, பதில் ஜனாதிபதியாகி, தற்போது இடைக்கால ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் கொள்கை தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களிடையே விமர்சனப்பார்வையே காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் மரபுக்குள் வளர்ந்த புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் கொள்கை அமெரிக்க தலைமையிலான மேற்கு சார்ந்த இயல்புடையதாகவே காணப்பட்டு வந்துள்ளது. மாறாக பொதுஜன பெரமுன, மேற்கிற்கு எதிராக கிழக்கே சீனா சார்பான கொள்கையையே முதன்மைப்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியேற்கையில் பலரும் இலங்கையின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படுவதுடன் ரணில் விக்கிரமசிங்காவின் மேற்குசார் விம்பத்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்ட நிதியுதவிகள் தடையின்றி கிடைக்குமென்ற எதிர்பார்ப்புகளையும் உருவாக்கி கொண்டனர். எனினும் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளும் உள்ளக மற்றும் வெளியக செயற்பாடுகள் இலங்கை அரசியல் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்ற எண்ணப்பாங்கினையே உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வெளியுறவு கொள்கை நடத்தைகளை தேடுவதாகவே அமையவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் புதிய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் மே-12 அன்று முதலில் இணைந்து, நாட்டின் பிரதமராகவும், பின்னர் அதன் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தை பெற்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் உறுப்பினராக எழுபத்தைந்தாவது முழு நாளைக் கடந்து உள்ளார். இவ்அரசியல் பயணத்தில் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரியத்தை தவிர்த்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இயல்புக்குள் நகர்வதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஜூலை-20அன்று, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெற்ற விதம், பல இலங்கையர்களின் பார்வையில் அவருக்கு ராஜபக்சா குடும்பத்தின் ஆதரவு இருந்தது என்பதை நிரூபித்தது. ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், ராஜபக்சாக்களே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பராளுமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துகின்றனர். ராஜபக்சாக்கள் மீது சுமத்தப்படும் எண்ணற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து ரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பாதுகாப்பார் என்ற குற்றச்சாட்டுகளையும் அவரது தேர்தல் முடிவுகள் வலுப்படுத்தியது. மேலும், அவரது அரசியல் செயற்பாடுகளும் பொதுஜன பெரமுன நிகழ்ச்சி நிரலை ஒத்ததகாவே காணப்படுகின்றது.
குறிப்பாக உள்ளக அரசியலில், ஜூலை-13அன்று அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி கோட்டா நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே விக்கிரமசிங்க எதிர்மறையான அரசியல் பரிமாணத்தையும் சேர்த்தார். அவர் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தெரு ஆர்ப்பாட்டங்களை அடக்க முற்படுகிறார். புதிய ஜனாதிபதி இலங்கையை அவசரகாலச் சட்டத்தின் கீழ் வைத்துள்ளார். பாதுகாப்புப் படையினர் மக்களைத் தடுத்து வைத்து கைது செய்ய அனுமதிக்கின்றனர். ஜனாதிபதி பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு ஜூலை-22அன்று, இராணுவத்தையும் பொலிஸாரையும் ஒரு முக்கிய போராட்டத் தளத்தை அகற்ற அனுப்பினார். இது பதட்டமான காட்சிகளுக்கு வழிவகுத்தது. இந்நிகழ்வுகளை மையப்படுத்தி கடந்த வாரம் இதே பகுதியில், 'அரசியலமைப்புக்குட்பட்ட தாராண்மைவாதியின் எதேச்சதிகாரமும் இலங்கை அரசியலும்' எனும் தலைப்பில் ரணில் விக்கிரமசிங்காவின் உள்ளக அரசியல் செயற்பாட்டின் போக்கு அணுகப்பட்டிருந்தது.
ரணில் விக்ரமசிங்க, ஐந்து தசாப்தங்களாக நீடித்த அரசியல் வாழ்க்கையில் உயர் பதவிக்கான இரண்டு தோல்வியுற்ற தேர்தல் முயற்சிகளுக்குப் பிறகு, இறுதியில் பாராளுமன்றத்தில் ராஜபக்சாக்களின் ஆளும் கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவியை வென்றமையால், எவ்வாறாயினும் அவர் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு தேவைப்படும். தேசிய அமைதி சபை (யேவழையெட Pநயஉந ஊழரnஉடை) நிர்வாக இயக்குனர் ஜெஹான் பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் எதிர்காலம் பற்றி குறிப்பிடுகையில், 'ராஜபக்சேக்கள் நீண்ட காலம் தாழ்ந்து கிடப்பார்கள், ஆனால் அவர்கள் கூச்சலிடுவார்கள்' என்று கூறினார். இந்நிலையில் அதிகாரத்தின் மீதான தனது பிடியைப் பெறுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொடர்ச்சியான ஆதரவில் ரணில் விக்கிரமசிங்க தங்கியிருப்பது, அவரை பொதுஜன பெரமுனவின் கொள்கை செயற்பாட்டாளராகவே வெளிப்படுத்தி வருகின்றது. இதனை புதிய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சமகால வெளிநாட்டு அரசியல் நகர்வுகளை ஆழமாக நோக்குவதனூடாக அறிய முடிகிறது.
முதலாவது, ஜூலை-22அன்று அதிகாலை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட அராஜகத்திற்கு ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்தின் மீது மேற்கு நாடுகளின் தூதரகங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தன. இந்த தாக்குதல்கள் பல இலங்கையர்கள் மற்றும் இராஜதந்திர சமூகம் மத்தியில் விக்கிரமசிங்கவின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாணய நிதியமும் அரசியல் ஸ்திரமின்மையை முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. இதற்கு கவலைகளை தெரிவித்த தூதரகங்களை அழைத்து ரணில் விக்கிரமசிங்க தன் செயற்பாட்டை கடுமையான தொனியில் நியாயப்படுத்தினார். நாட்டில் ஒழுங்கை மீட்டெடுக்கத் தொடங்குவதற்கு இராணுவமும் காவல்துறையும் எடுத்த நடவடிக்கையை அவர் வலுவாக ஆதரித்தே தூதரகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அமெரிக்க தூதுவர் சுங்குடனான கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றியதை, ஜோ பிடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில், 2021 ஜனவரி 06ஆம் திகதி அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலுடன், ஜனாதிபதி விக்கிமசிங்க ஒப்பிட்டுப் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதி மேற்கு தூதரகங்களை அழைத்து கடுமையான தொனியில் எதிர்வினையாற்றியமையை ராஜபக்ஷாக்களின் பெருந்தேசியவாதத்தை ஆதரிக்கும் சமரசமற்ற தீவிர தேசியவாதியும், மியன்மாருக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான பேராசிரியர் நளின் டி சில்வா ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார். மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா மேற்கின் கருத்துக்களை உதாசீனம் செய்து செயற்பட்டமையை, மேற்குலக அரசாங்கங்களின் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதிலை பேராசிரியர் டி சில்வா சமன் செய்தார்.
இரண்டாவது, அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக கட்டமைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புக்கு போட்டியாக சீனாவால் நெறிப்படுத்தப்படும் பிரிக்ஸ், ரஷ்சியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டான பிரிக்ஸ் அமைப்பின் உதவியை ரணில் விக்கிரமசிங்க நாடியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜூன் இறுதிப்பகுதியில் பிரதமராக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றில், 'வரலாற்று நட்பு நாடுகளாக இருந்த இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் ஆதரவு எங்களுக்குத் தேவை. இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வு காண இந்த நாடுகளின் பங்களிப்புடன் நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்' என்று கூறினார். குறித்த காலப்பகுதியில் பிரிக்ஸ் தலைவர்களின் மாநாடு இடம்பெற்றிருந்ததுடன், இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பிலும் குறித்த மாநாட்டில் உரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) குழுவுடனான பேச்சுவார்த்தைகள் சமகாலப்பகுதியில் சிறப்பாக நடந்துள்ளன. இருப்பினும், பொதுஜன பெரமுனவின் எண்ணங்களுடன் பிணைந்துள்ள புதிய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அப்பால் உதவிகளை பெறுவதிலேயே அதிக சிரத்தை வெளிப்படுத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் சமூக, அரசியல் மற்றும் உள் பாதுகாப்பு முனைகளில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்ற எண்ணங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆரம்ப நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை தவிர்க்க காரணமாகியது.
மூன்றாவது, மேற்கு நாடுகள் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் செயற்பாடுகள் தொடர்பில் கண்டனங்களை வெளிப்படுத்தும் அதேவேளை, சீனா மற்றும் ரஷ்சியா ஜனாதிபதிகளிடமிருந்து புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் உலகத் தலைவராக சீன மக்கள் குடியரசு ஜனாதிபதி ஷி ஜின்பிங் காணப்படுகின்றார். ஜூலை-22அன்று திகதியிட்ட தனது வாழ்த்துக் கடிதத்தில், விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், தற்காலிக சிரமங்களைத் தாண்டி இலங்கையால் பொருளாதார மற்றும் சமூக மீட்சிக்கான செயல்முறையை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையையும் ஷி வெளிப்படுத்தினார். மேலும், 'சீனா-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். மேலும் உங்களது முயற்சிகளில் உங்களுக்கும் இலங்கை மக்களுக்கும் என்னால் இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்க தயாராக உள்ளேன்' என்று விக்ரமசிங்கவிற்கு அனுப்பிய கடிதத்தில் ஷி தெரிவித்துள்ளார். அவ்வாறே ரஷ்சிய ஜனாதிபதி புடின் தனது வாழ்த்து செய்தியில் இலங்கை-ரஷ்சியா பாரம்பரிய உறவை சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்காவது, வெளியுறவுக்கொள்கை செயற்பாட்டில் இராஜதந்திர வகிபாகத்தில் துதுவர்களின் வகிபாகம் முக்கியமானது. அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கையடிப்படையிலேயே நாடுகளின் தூதுவர்களும் முக்கியத்துவப்படுகின்றார்கள். அதனடிப்படையிலேயே பெருமளவில் அரசாங்கம் மாற்றமுறுகையில் பிரதான நாடுகளுக்கான தூதுவர்களும் மாற்றமுறுவதுண்டு. எனினும் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்க காலப்பகுதியில் பணியாற்றிய தூதுவர்களே தொடர்ச்சியாக காணப்படுகின்றார்கள். அத்துடன் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின் தொடர்ச்சியே காணக்கூடியதாகவும் உள்ளது. சீனாவிற்கான இலங்கைத்தூதுவர் பாலித கோஹோன ராய்ட்டர்ஸிற்கு வழங்கிய நேர்காணல் அவ்வாறானதாகவே அமைகின்றது. 'இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக' குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனா தொடர்பான புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது என எதிர்பார்ப்பதாக கொஹோனா கடந்த 2016இல் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்-ரணில் விக்கிரமசிங்க சந்திப்பை சுட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே, புதிய இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற முதல் வாரங்களில் வெளியுறவு கொள்கை சார்ந்த பிரதிபலிப்புக்களில் காணப்படும் மேற்கின் முரண்பாடும், சீனா-ரஷ்சிய சார்பும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் உறுப்பினராக தொடருகின்றமையையே வெளிப்படுத்துகின்றது. எனினும் இவ்விம்பத்தை இலகுவாக ஏற்றுக்ககொள்ள இயலாத பின்புலத்தையே இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டுள்ளார். விக்கிரமசிங்காவின் ஐந்து தசாப்த அரசியல் வரலாறு மற்றும் அவரின் அரசியல் பிதா ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் ஈடுபாடு என்பன இலகுவில் அரசியல் திருப்பத்தை ஏற்றுக்கொள்ளாது. கொழும்பில் உள்ள ஏசியா செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் லக்ஷினி பெர்னாண்டோ இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றி கூறுகையில், 'ரணிலிடமிருந்து முதல் அறிகுறிகள் பெரிதாக இல்லை. ஆனால் குடிமக்களின் கடுமையான தேவைகள் என்ன என்பதில் அவர் கவனம் செலுத்தினால், அது சில அழுத்தங்களைக் குறைக்கலாம். இது நீண்ட விளையாட்டு. ரணில் நீண்ட ஆட்டத்தில் வல்லவர்' என்றார். நீண்ட ஆட்டத்தில் முதல்வாரங்கள் இறுதிவாரங்களை கணிக்க போதுமானதாக அமையாது என்பதும் ஏற்கக்கூடிய வாதங்களாகவே அமைகின்றது.
Comments
Post a Comment