தமிழரசியல் தரப்பின் இராஜதந்திரமற்ற செயற்பாடுகளால் தமிழ்த்தேசியம் இருப்பை இழக்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் தேசிய இனமுரண்பாட்டில் தமிழ்த்தேசிய இனம் அரசற்ற தரப்பாக, அரச இயந்திரத்தினை கொண்டு இயங்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராகவே போராடி வருகின்றது. அரசுடைய தரப்பு அரச இயந்திரத்தின் முழுமையான செயற்றிறனையும் கொண்டுள்ளது. குறிப்பாக வெளியுறவுக்கொள்கை மற்றும் இராஜதந்திர பொறிமுறைகளூடாக சர்வதேச உறவுகளில் அரசுடைய தரப்பு தனது பாதுகாப்பை கட்டமைத்து கொள்கின்றது. அரசற்ற தரப்பாகிய ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகளினது செயற்பாடுகளும் இலங்கை அரசிற்கு சேவகம் செய்வதாகவே காணப்படுகின்றது. மாறாக தம்மை தேசிய இனமாக சர்வதேச அரங்குகளில் அடையாளப்படுத்த தவறுவதுடன், வினைத்திறனான இராஜதந்திர பொறிமுறைகளை வெளிப்படுத்துவதனூடாக சர்வதேச அரசுகளின் கவனத்தை உள்வாங்க தவறி வருகின்றனர். இப்பின்னணியிலேயே தமிழ்த்தரப்பு தேசியத்தை சொற்பிரயோகத்துக்குள்ளேயே மட்டுப்பத்தியுள்ளதேயன்றி, நடைமுறையாக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பது பொதுவான விமர்சனமாக காணப்படுகின்றது. இக்கட்டுரை தமிழ்த்தரப்பின் இராஜதந்திரமற்ற செயற்பாடுகளால் இழந்துபோகும் தேசியப்போக்கினை சுட்டிக்காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தரப்பில் முழுமையாக இராஜதந்திரப் பொறிமுறை இல்லாத போதிலும், அண்மையில் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் அண்மைய உரையொன்றின் உள்ளடக்கமே இக்கட்டுரை உருவாக்கத்துக்கான எண்ணத்தை வழங்கியிருந்தது. இந்தியாவின் வெளி விவகார அமைச்சகத்தினுடைய அழைப்பில் டெல்லியில் நடைபெற்ற  Raisina Dialogue-2024இல் சாணக்கியன் கலந்து கொண்டு சர்வதேச அரசியல் விவகாரங்களை உரையாடியிருந்தார். இம்மாநாட்டின் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டிருந்தார். இவ்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன், 'இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு பற்றிய கரிசணையில் இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னத்தையும், ஈழத்தமிழர்கள் சீனாவை வரவேற்பதில்லை' என்றவாறும் தெரிவித்திருந்தார். உரையின் பெரும்பகுதியில் இலங்கை அரசின் பிரதிநிதியாக இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான பங்காளிகளாக குவாட் நாடுகளை மையப்படுத்தியே உரையாடியிருந்தார். மேலும், சீனா எதிர்ப்பையும் பாரியளவில் வெளிப்படுத்தியிருந்தார். மாறாக தமிழ் மக்களின் உரிமைசார்ந்த நிலைப்பாட்டினையோ, அதற்கான குவாட் நாடுகளின் பங்களிப்புக்கான கோரிக்கைகளையோ சுட்டிக்காட்ட தவறியிருந்தார். தமிழ் அரசியல் தலைமைகள் வடக்கு-கிழக்கு நிலப்பரப்புக்குள்ளேயே வாக்கு வங்கிகளை பலப்படுத்துவதற்கான ஆதாரமாகவே தமிழ்த்த்தேசியத்தை முன்னிறுத்துகிறார்களேயன்றி, சர்வதேச அரங்கில் தமிழ்த்தேசியத்தை புறந்தள்ளி இலங்கை நாட்டை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முதன்மைப்படுத்துகிறார்களெனும் குற்றச்சாட்டையே சாணக்கியனின் செயற்பாடும் உறுதிசெய்வதாகவே அமைந்துள்ளது.

இச்செயற்பாடுகளின் பின்னணியில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் இராஜதந்திரமற்ற போக்கே அடிப்படையாகின்றது. இது தமிழ்த்தேசியத்தின் இருப்பை தொடர்ச்சியாக மலினப்படுத்துவதாக அமைகின்றது. பொதுவாக இராஜதந்திரம் என்பதனை அரசின் நடவடிக்கையாக அரசாங்க செயற்பாடாக மட்டுப்படுத்தும் மரபே காணப்படுகின்றது. எனினும் உலக ஒழுங்கில் மலிந்துள்ள தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டங்கள் 1648ஆம் ஆண்டு தேசிய அரசு பற்றி மறுவரையறைக்கு உட்படுத்த வேண்டிய உரையாடலை விஷ்தரித்துள்ளது. இந்த பின்னணியிலேயே இராஜதந்திரத்தையும் நாடுகளிற்கிடையிலான பொறிமுறையாக மட்டுப்படுத்த இயலாத நிலை காணப்படுகின்றது. இராஜதந்திரம் என்பது அரசியல் எண்ணக்கருவாக, 'நாடுகள், குழுக்கள் அல்லது தனிநபர்களிடையே அமைதியான உறவுகளைப் பேணுவதற்கான கலை மற்றும் அறிவியலாகும். பெரும்பாலும் இராஜதந்திரம் என்பது மோதல், வர்த்தகம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் அல்லது பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் வௌ;வேறு குழுக்களின் பிரதிநிதிகளைக் குறிக்கிறது.' எனவே இராஜதந்திரத்தின் நாடுகளுக்கிடையிலான தொடர்பின் மட்டுப்பாடு என்பது பண்டைய மரபை குறித்து நிற்பதாகவே அமைகின்றது.

இராஜதந்திரம் எப்போதும் வௌ;வேறு அரசாங்கங்களுக்கு இடையில் மட்டுமே நடைபெறாது. சில சமயங்களில் அதிகாரம் மற்றும் செல்வாக்கின் பிற தளங்களுக்கு இடையில் நிகழ்கிறது. இதில் பெரிய நிறுவனங்கள், மத அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் போராட்ட குழுக்கள் என்பன காணப்படுகின்றது. ஒரு நாட்டின் குடிமக்கள் மீது மகத்தான அதிகாரம் இருப்பதால், இந்த அளவுக்கு அதிகாரம் கொண்ட நிறுவனங்கள் சில சமயங்களில் இராஜதந்திரத்தைப் பயன்படுத்திக் கையாள வேண்டும். ஈழத்தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புகளாக தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுக்கான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக காணப்படுகின்றார்கள். ஈழத்தமிழர்களுக்கான இராஜதந்திர பொறிமுறையை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, தமிழ் மக்கள் சர்வதேசத்தில் இயங்கும் எந்தவொரு அரசையும் முழுமையாக எதிர்ப்பது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தக்கூடியதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பலும் சீன எதிர்ப்பு அரசியலையே முன்னிறுத்துவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அண்மையில் சுயளைiயெ-2024இல் சீன எதிர்ப்புவாத உரையாடலை முன்னிறுத்தியது போன்றே கடந்த காலங்களிலும் இலங்கை பாராளுமன்றத்தில் இராசமாணிக்கம் சாணக்கியன் சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிறுத்தியுள்ளார். 'இலங்கை வலிமிகுந்த பொருளாதார வீழ்ச்சியை அடுத்து முன்னாள் ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றிய 'கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்' இயக்கத்திற்கு நிகரான 'சீனா வீட்டிற்குச் செல்லுங்கள்' பிரச்சாரத்தை முன்னெடுக்கப்போவதாக' தெரிவித்துள்ளார். இவ்வாறான போக்கையே ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர்கள் அனைவரும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு-கிழக்கில் சீன முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருவதுடன், ஈழத்தமிழர்களை சீன எதிர்ப்பாளர்களாக விம்பப்படுத்தி வருகின்றார்கள். ஈழத்தமிழர்கள் உரிமைக்காக போராடும் தேசிய இனமாக தமது உரிமையை வென்றெடுப்பதில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பையே எதிர்பார்த்துள்ளது. சமகாலத்தில் உலக ஒழுங்கில் பல மாறுதல்களை அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, சர்வதேச அரசியல் அவதானிகள் உலக ஒழுங்கில் சீனாவின் முதன்மையை சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இலங்கைத்தீவின் சீனாவின் பிரசன்னமும் தலையீடும் இலங்கை அரசியலின் தீர்மான சக்தியில் சீனாவின் தவிர்க்க இயலாத நிலையின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றது. இப்பின்னணியில், சீனர்கள் குறித்த தமிழரின் அறிவு விஷ;தரிக்கப்பட் வேண்டும். அதேவேளை சீன இராஜதந்திர மட்டத்தில் தமிழர்களின் இலங்கையில் உள்ள இருப்புநிலை குறித்த உரையாடல் வளர்க்கப்பட வேண்டும். சீன-தமிழர் உரையாடலின்மையே சீனா தமிழர்களையும் தமிழர்கள் சீனாவையும் எதிர்கொள்வதில் தடையாக உள்ளது. சீன-தமிழர் உரையாடல் இராஜதந்திர மட்டத்தில் ஆரம்பிக்கப்படுவதனூடாக, ஈழத்தமிழர் அரசியல் உரிமை போராட்டத்திற்கான புதிய வாய்ப்புக்களை உருவாக்க ஏதுவாக அமையும். 

இரண்டாவது, சர்வதேசத்தில் இயங்கும் அரசுகளோடு பேரம்பேசலற்று முழுமையாக அவ்அரசை சரணடைவதும் பயனற்ற முடிவுகளையே வழங்கக்கூடியதாகும். ஈழத்தமிழரசியல் நீண்டகாலமாக பிராந்திய அரசாகிய இந்தியாவை தங்கியே காணப்படுகின்றது. பிராந்திய அரசாகிய இந்தியாவின் ஒத்துழைப்பு ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதாகும். எனினும் மாறாக, இந்தியாவின் நலனுக்குள் ஈழத்தமிழர்களின் நலனை ஒன்றிணைக்கக்கூடிய பொறிமுறையின்றி, இந்தியாவின் விருப்புக்களை வெளிப்படுத்தும் சக்தியாக மாத்திரம் தொடரின், இந்தியாவின் நலனுக்கு சேவகம் செய்யக்கூடிய சக்தியாகவே ஈழத்தமிழர்கள் காணப்படுவார்கள். 1980களில் இந்திரா காந்தி அரசாங்கம், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்துக்கு பெரும் ஆதரவை வழங்கியிருந்தார். அது அன்றைய உலக ஒழுங்கின் அரசியல் பிரதிபலிப்பாகும். பனிப்போர் இரு துருவ அரசியலின் வெளிப்பாடாகும். ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை இந்தியா ஆதரிக்கும். ஆனால் 'ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை' என்பதை அங்கீகரிக்க முடியாதென இந்திய பிரதமர் இந்திரா காந்தி 1983இல் தன்னிடம் கூறியதாக கவிஞர் புலமைப் பித்தன் 2008இல் வழங்கிய நேர்கணால் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இந்திய அரசினால் இலங்கை இனப்பிரச்சினைக்கு வழங்கிய தீர்வுப்பொதி தொடர்பிலேயே இறுக்கமான நடைமுறையை ஈழத்தமிழர் சார்ந்து வெளிப்படுத்த இயலாத நிலையிலேயே இந்திய-ஈழத்தமிழர்களின் உறவுநிலை காணப்படுகின்றது. இப்பின்னணயில் தொடர்ச்சியாக எவ்வித பேரம்பேசலுமின்றி பிராந்திய அரசு என்ற அடிப்படையில் இந்தியாவை சரணடைவது தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு சேவகம் செய்யக்கூடியதாகவே காணப்படும். மாறாக ஈழத்தமிழர்களின் நலன்கள் பூர்த்தியடைய போவதில்லை.

மூன்றாவது, ஈழத்தமிழர்கள் தெளிவானதொரு அணிசேராக்கொள்கைசார் கருத்தியலை வலுப்படுத்த வேண்டும். அரசுகள் பலதுமே தம் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அணிசேராக்கொள்கையையே வலுவான தந்திரமாக நடைமுறைப்படுத்துகின்றது. இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கான மீட்சிக்கான வெளியுறவுக்கொள்கையாக அணிசேராக்கொள்கையையே முதன்மைப்படுத்தி வருகின்றது. சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுகின்ற அதேவளை பொருளாதார நெருக்கடி மீட்சிக்கான பலமான ஆதவை இந்தியாவியடமிருந்து பெற்று வருகின்றது. இப்பின்னணியில் எந்தவொரு இந்திய அரங்கிலும் அல்லது பொது அரங்கிலும் சீன எதிர்ப்பு அரசியலை இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் முன்னிறுத்தி உரையாடுவதில்லை. அவ்வாறே இஸ்ரேல் அரசாங்கம் மேற்காசியாவில் அமெரிக்காவின் பொம்மை அரசாங்கமாக செயலாற்றுகின்ற போதிலும், சீனாவுடன் சமதளத்தில் ஆரோக்கியமான உறவை உறுதிப்படுகின்றது. அரசு இயந்திரத்தை கொண்டு இயங்கும் அரசாங்கங்களே தமது அரசின் இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு அணிசேராக்கொள்கையை வலுவாக வெளியுறவுக்கொள்கையில் கட்டமைத்து வருகின்றனர். இவ்வாறான பின்னணியில் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகள் ஒரு அணியை சார்ந்து அரசியல் நகர்வை முன்னெப்பது, அரசியல் தலைவர்களின் சுயலாபங்களை ஈட்டுவதற்கு பயனாக அமையுமேயன்றி தேசத்திற்கு எவ்வித நன்மையான விளைவுகளையும் எற்படுத்தப்போவதில்லை. கடந்த கால அனுபவங்கள் அதனையே உறுதி செய்கின்றது. சீன எதிர்ப்பு மற்றும் இந்திய சார்பு அரசியல் ஈழத்தமிழர்களுக்கு பயனுடைய அறுவடையை ஏற்படுத்தவில்லை. ஆகக்குறைந்தது சாந்தன் எனும் ஒரு ஈழப்போராளியின் தாயின் ஆசையைக்கூட நிறைவேற்ற இயலாத நிலைமையையே கடந்த வாரம் சாந்தனின் மரணம் வெளிப்படுத்தும் செய்தியாக அமைகின்றது.

எனவே, ஈழத்தமிழரசியல் தனது வெளியுறவுக்கொள்கையை கட்டமைப்பதில் வினைத்திறனான இராஜதந்திர பொறிமுறையை நெறிப்படுத்த வேண்டி உள்ளது. மாறாக எவ்வித பேரம் பேச்சும் இன்றி சீனாவை எதிர்ப்பதும், இந்தியாவை ஆதரிப்பதும் தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இருப்பையே கேள்விக்குட்படுத்துவதாக அமையக்கூடியதாகும். ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை உணர்வுகளை இந்திய அரசு புரிந்துகொள்ளும் வரை தமிழ்த் தேசியக் கட்சிகள் சீன அபிவிருத்தித்  திட்டங்களை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை. இராஜதந்திர ரீதியிலான உபாயத்தை கட்டமைக்க முன்வர வேண்டும். இந்தியாவிற்கு மாறாக சீனாவிடம் அடிபணிவது தீர்வினை பெற்றுத்தரப்போவதில்லை. தமிழ்த்தேசிய இனத்தை அழிக்கும் உபாயமே மாறாக்கூடியதாகும். இந்தியாவையும் சீனாவையும் சர்வதேச அரசியலின் இரு பிரதான சக்திகளாக சமதளத்தில் இருத்தி தமிழ்த்தேசிய நலனுக்குள் அவ்அரசுகளின் நலனை ஒருங்கிணைக்கும் வகையில் இராஜதந்திர உபாயத்தை வகுக்க வேண்டும். 1992இல் பொசோவா அரச இயந்திரத்திற்கு சமாந்தரமாக தானியக்கமாய் ஓர் பொதுக்கட்டமைப்பை வெவ்வேறு இயங்கு துறைகளில் நெறிப்படுத்தியது. இவ்வாறன சர்வதேச அனுபவங்களின் பயிற்சியை ஈழத்தமிழ் அரசியல் தரப்பும் பின்பற்றுதல் வேண்டும்.


Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-