புடினின் உளவியல் தந்திரோபாய விளையாட்டு அமெரிக்க தேர்தலின் முடிவினை தீர்மானிக்குமா? -சேனன்-
2024ஆம் ஆண்டு உலக அளவில் ஜனநாயக திருவிழாவிற்குரிய காலமாகவே காணப்படுகின்றது. உலகின் ¼ பகுதி நாடுகள் தேர்தலை எதிர்கொள்கின்றது. குறிப்பாக இலங்கையர்களாக நாம் ஜனாதிபதி தேர்தலா? பாராளுமன்றத் தேர்தலா? முதலில் இடம்பெறும் என்ற அரசியல் விளையாட்டை இரசித்து கொண்டுள்ளோம். அதேவேளை உலகப்பரப்பில் ரஷ்சியா மற்றும் அமெரிக்க தேர்தல்கள் முதன்மையான கவனத்தை பெற்றுள்ளது. மார்ச் 15-17 நடைபெற்ற ரஷ்சியா ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மறுதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீளவும் குடியரசுக்கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடனும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு பின்னால் ரஷ்சிய அரசின் ஈடுபாடு காணப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு மீள அரசியல் அவதானிகளிடையே பரவலான கவனத்தை பெற்றுள்ளது. எனினும் புடின் தனது பிரச்சார காலத்தில் பைடனுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் அமெரிக்க-ரஷ்சிய இராஜதந்திர மட்டத்தில் அதிக கவனத்தை பெற்றிருந்தது. இக்கட்டுரை ரஷ்சிய ஜனாதிபதி புடினின் பைடன் மீதான கரிசணையின் தந்திரோபாய நிலைப்பாட்டை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
புடின் தனது தேர்தல் பிரச்சார காலப்பகுதியில் ரஷ்சிய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், நிருபர் பாவெல் ஜரூபின், 'எங்களுக்கு யார் சிறந்தவர், பைடன் அல்லது ட்ரம்ப்?' எனக் கேட்டிருந்தார். 'பைடன்' எனப்பதிலளித்த புடின் 'அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் கணிக்கக்கூடியவர். அவர் ஒரு பழைய பாணி அரசியல்வாதி.' எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும், 'நான் சுவிட்சர்லாந்தில் பைடனைச் சந்தித்தபோது, அது சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் செயல்பட முடியவில்லை என்று சிலர் ஏற்கனவே கூறினர். நான் அப்படி எதையும் பார்க்கவில்லை.' எனவும் புடின் பைடனின் முதுமை மீதுள்ள விமர்சனத்தையும் நிராகரித்துள்ளார். விளாடிமிர் புடினின் பைடனுக்கு ஆதரவான கருத்துகள் சர்வதேச அரசியல் அவதானிகளிடையே வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. ஏனெனில் பைடனது ஆட்சிப்பரப்பிலேயே ரஷ்சிய மற்றும் புடின் மீது கடுமையான எதிர்வினைகளை புடின் மேற்கொண்டிருந்தார். புடினை அமெரிக்க ஜனாதிபதி பைடன், 'ஒரு கொலைகார சர்வாதிகாரி. ஒரு தூய குண்டர். நிலம் மற்றும் அதிகாரத்தின் மீது மோகம் கொண்டவர்' என்றெல்லாம் பல தடவைகள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பை இனப்படுகொலையாக சர்வதேச நீதிமன்றத்தில் பைடன் நிர்வாகம் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், ரஷ்சியா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், ஏனைய நாடுகளையும் பொருளாதார தடைக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
இவ்வாறான அரசியல் நிகழ்வுகளின் பின்புலத்தில் புடினின் பைடனுக்கான ஆதரவு அதிக குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இவ்ஆதரவை நேரான பார்வையில் பார்க்க முடியுமா? அல்லது எதிரான உள்நோக்கங்களை கொண்டுள்ளதா என்பதில் சர்வதேச அரசியல் அவதானிகள் தேடலை விஷ்தரித்துள்ளனர். இதனை கடந்த கால அனுபவங்களுடனேயே தொடர்புபடுத்தி அணுக வேண்டியுள்ளது.
2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு பின்னால் ரஷ்சியாவின் புலனாய்வுத்துறை செய்பாடுகள் பிரதான வகிபாகத்தை செலுத்தியிருந்தது என்பது அமெரிக்க அரசியலின் பரவலான செய்தியாக உள்ளது. ரஷ்சியா சமூக ஊடகங்களை பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு எதிராகவும், குடியரசுக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவும் செயற்பட்டமைக்கான ஆதாரங்களின் தொகுப்பு 2018இல் அமெரிக்காவின் முதன்மை செய்தியாக காணப்பட்டது. ரஷ்சியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள திட்டத்தில் பணிபுரியும் சுமார் 80 ரஷ்சியர்களில் ஒருவரான இரினா வி. காவர்சினா என்பவர் சில செய்திகளுடன் குடும்ப உறுப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 'எங்களுக்கு இங்கே வேலையில் ஒரு சிறிய நெருக்கடி இருந்தது. FBI எங்கள் செயல்பாட்டை முறியடித்தது. எனவே, சக ஊழியர்களுடன் சேர்ந்து தடங்களை மறைப்பதில் நான் ஆர்வமாக இருந்தேன். இந்த படங்கள் மற்றும் இடுகைகள் அனைத்தையும் நான் உருவாக்கினேன். மேலும் இது அவர்களின் மக்களால் எழுதப்பட்டது என்று அமெரிக்கர்கள் நம்பினர்.' என ரஷ்யாவின் திட்டத்தைப் பற்றி அவர் மின்னஞ்சலில் எழுதியுள்ளார். இம்மின்னஞ்சலை அடிப்படையாய் கொண்டு 37 பக்க குற்றப்பத்திரிக்கை, 2018, பெப்ரவரி-16அன்று அமெரிக்காவின் அடிப்படை நீதித்துறை அலகான கிராண்ட் ஜூரியால் வாஷிங்டனில் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க அரசியல் முரண்பாட்டைத் தூண்டுவதற்கும், ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதி பிரச்சாரத்தை சேதப்படுத்துவதற்கும், மறுதளத்தில் எதிர் வேட்பாளர்களான பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜில் ஸ்டெய்ன் ஆகியோருடன் சேர்ந்து டொனால்ட் ட்ரம்பின் வேட்புமனுவை வலுப்படுத்துவதற்கும், கவனமாக திட்டமிடப்பட்ட மூன்றாண்டு கால ரஷ்சிய திட்டத்தை இந்த குற்றச்சாட்டு முன்வைத்தது.
ரஷ்சியர்கள் அமெரிக்க குடிமக்களின் அடையாளங்களை திருடி, அரசியல் ஆர்வலர்களாக காட்டிக்கொண்டு, குடியேற்றம், மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் பிரதான புள்ளிகளைப் பயன்படுத்தி பிரச்சாரத்தை கையாண்டுள்ளனர். அதில் அந்த பிரச்சினைகள் ஏற்கனவே குறிப்பாக பிளவுபட்டன என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, ரஷ்சியர்களில் சிலர் ட்ரம்ப் பிரச்சாரத்துடன் தொடர்புடைய அறியாத நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்றவாறே தெரிவித்துள்ளது. விசாரணைக்கு தலைமை தாங்கும் சிறப்பு ஆலோசகரான ராபர்ட் எஸ். முல்லர் ஐஐஐ, ட்ரம்ப் அல்லது அவரது கூட்டாளிகள் தெரிந்தே சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. 'ரஷ்சிய சதிகாரர்கள் அமெரிக்காவில் முரண்பாட்டை ஊக்குவிக்கவும், ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் விரும்புகிறார்கள் என்றே குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டுகிறது' என விசாரணையை மேற்பார்வையிடும் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ஜே. ரோசன்ஸ்டீன் ஒரு சுருக்கமான செய்தி மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
இவ்வரலாற்று குற்றச்சாட்டினை முன்வைத்தே புடினின் பைடனுக்கான ஆதரவை அவதானிக்க வேண்டி உள்ளது. கடந்த காலங்களில் ரஷ்சியா ஹிலாரி கிளின்டனை எதிர்த்தமைக்கு பின்னால், அவர் ஒபாமா ஆட்சிக்காலப்பகுதியில் வெளிவிவகார செயலாளராக ரஷ்சியாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுத்தமையே காரணமாகின்றது. ஹிலாரி கிளின்டன் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தபோது, பெரிய அளவிலான அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால் ரஷ்சியாவில் அமைதியின்மையை தூண்டுவதாக புடின் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறான பின்னணியில் 2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டனிற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த ரஷ்சியா, இனப்படுகொலை குற்றச்சாட்டை முன்வைக்கும் பைடனை ஆதரிப்பதன் முரண்நகையான மாற்றத்தை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
விளாடிமிர் புடினின் நேரடியான பைடனுக்கான ஆதரவு கருத்துரை, மறைமுகமாக ட்ரம்ப்-க்கு நேரான விளைவை உருவாக்குவதாகவே அமைகின்றது. ஏனெனில் 2016 தேர்தலில் கிளாரி கிளின்டனுக்கு எதிரான ரஷ்சியாவின் பிரச்சாரத்தின் நேரான விளைவை பெற்றவராக டொனால்ட் ட்ரம்பே காணப்படுகின்றார். ஆதலால் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் மத்தியில் ரஷ்சியாவின் ஆதரவுடனேயே ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானர் எனும் பிரச்சாரம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக களமிறங்க ட்ரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையிலேயே புடின் பைடனுக்கு ஆதரவாக கருத்துரைப்பது, ட்ரம்ப்-புடின் பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதுவாக அமையக்கூடிய வாய்ப்புகள் எதிர்வுகூறப்படுகின்றது. ட்ரம்ப் மற்றும் பைடன் ஆட்சிக்காலப்பகுதிகளில் ட்ரம்ப் இனுடைய காலப்பகுதியே ஒப்பீட்டளவில் ரஷ்சியா மற்றும் புடினுக்கு நன்மையானதாக அமைந்துள்ளது. ட்ரம்ப் ஆட்சிக்காலப்பகுதியில் புடினை, 'புத்திசாலி மற்றும் மேதை' என விழித்துள்ளார். மேலும், அண்மையில் நேட்டோ உறுப்பு நாடுகள் பற்றி ட்ரம்ப் தெரிவித்த கருத்தின் விளைவு ரஷ்சியாவுக்கே சாதகமானதாகும். மேற்கத்திய இராணுவக் கூட்டணியினான நேட்டாவின் உறுப்புரிமை கட்டணத்தைச் செலுத்தத் தவறிய எந்தவொரு நேட்டோ உறுப்பினரையும் தாக்க ரஷ்சியாவை ஊக்குவிப்பதாக ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவ்வாறனதொரு ஆட்சியாளர் அமெரிக்க ஜனாதிபதியாக வருவதனையே புடினும் விருப்பம் கொள்வார்.
எனவே, புடினின் பைடனுக்கான ஆதரவு பிரச்சாரம் என்பது புடினின் தந்திரோபாய நகர்வாகவே அமைகின்றது. மீள உளவியல்ரீதியாக அமெரிக்க தேர்தலில் தந்திரோபாய விளையாட்டை புடின் நகர்த்தியுள்ளார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவதனூடாகவே தனக்கு சாதகமாக அமெரிக்க சூழலை கையாளலாம் என்பதுவே புடினின் எண்ணங்களை நிரப்பக்கூடியது. புடின் தனது தேர்தல் வெற்றியின் பின்னரான உரையில், ரஷ்சியாவின் தேர்தலில் ஜனநாயகத்தை விமர்சிக்கும் அமெரிக்க தரப்புக்கு எதிராக ட்ரம்ப் அமெரிக்க அரசினூடாக ஜனநாயக நெருக்கடியை எதிர்கொள்கின்றாரென குறிப்பிட்டுள்ளார். இது ட்ரம்ப் சார்ந்த ரஷ்சியா அபிமானத்தையே சுட்டுகின்றது. ரஷ்சிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியை கையாள்வதனூடாகவும் மற்றும் ரஷ்சியா-உக்ரைன் போரில் ஊடகப்பிரச்சாரத்தினுடாகவும் ரஷ்சிய ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க தலையிட முனைந்த போதிலும், அதில் புடின் வெற்றி பெற்றியுள்ளார். இந்நிலையிலேயே தற்போது 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் மீள 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்கான சூழலை மாற்றியமைக்குமா ரஷ்சியாவின் ஈடுபாடு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா என்பது சர்வதேச அரசியல் அவதானிகளின் கேள்வியாக உள்ளது.
Comments
Post a Comment