காசா போரின் இனப்படுகொலையும் கட்டவிழ்க்கும் சர்வதேச முறைமையின் யதார்த்தமும்! -சேனன்-

உலக ஆதிக்கத்தை மையப்படுத்தி செயற்படும் அரசுகள் தமது சித்தாந்தங்களூடாவே உலகின் மேலான்மை உறுதி செய்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் காலனித்துவ சிந்தனையூடகவும், சமகாலத்தில் நவகாலனித்துவ பொறிமுறையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் முதன்மை பெறுகின்றன. இப்பின்னணியிலேயே, ஒற்றைமைய உலக ஒழுங்கில் அமெரிக்கா ஏனைய அரசுகள் மீது தனது ஆதிக்கத்தை பலப்படுத்தி வந்துள்ளது. அமெரிக்காவின் மேலாதிக்கம் தொடர்பான கேள்விகள் ஏற்படும் போதெல்லாம் ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை சித்தரிப்பதை வழமையாக்கி கொண்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஜனநாயகத்துக்கான மாநாடு அவ்வகையிலானதாகவே அமைகிறது. மேலும், ஒற்றைமைய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அடையாளப்படுத்திய 1991ஆம் ஆண்டு வளைகுடா போர் முதல் இன்று செங்கடலில் ஹவுதிகள் மீதான் தாக்குதல் வரையில் ஈராக், ஈரான், சிரியா, யேமன் போன்ற மேற்காசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் நேரடி தாக்குதல்களும், ஆதரவு கூட்டணி தாக்குதல்களும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம் எனும் சொல்லாடல்களூடாகவே நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் சமகாலத்தில் இஸ்ரேல் காசாவில் நிகழ்த்தும் இனப்படுகொலை விவகாரங்களின் பின்னால் அமெரிக்காவின் முழுமையான ஆதரவு குவிக்கப்பட்டுள்ளமையானது, அமெரிக்காவின் ஜனநாயக முகம் மீது பலமான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது. இது உலக ஒழுங்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சவாலுக்குட்படுத்துவதாகவும் அமைகிறது. இக்கட்டுரை காசா போரின் இனப்படுகொலை வெளிப்படுத்தும் உலக ஒழுங்கின் யதார்த்தத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி-08அன்று அமெரிக்க செனட் 95 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிப் பொதிக்கு வாக்களிக்கத்திருந்தது. இவ்உதவி தொகையில், இஸ்ரேலுக்கு 14 பில்லியன் டொலர் உதவி உட்பட உக்ரைன் மற்றும் இந்தோ-பசிபிக் நட்பு நாடுகளுக்கான உதவித்தொகைகளும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாக்களிப்பின் போது, நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களைப் பெற்ற இஸ்ரேல், காசாவில் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளில் சர்வதேச சட்டத்தை பின்பற்றுகிறதா என்பது குறித்து ஜனநாயக கட்சியினை சார்ந்த செனட்டர்களே கேள்வி எழுப்பியிருந்தார்கள். ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் நெதன்யாகு போரைத் தொடுத்த விதம் குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஒருமுறை 'கண்மூடித்தனமான குண்டுவீச்சு' என்று விவரித்ததில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மற்றும் பேரழிவிற்குள்ளான பகுதிக்கான உதவி இஸ்ரேலிய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டிருந்தது என்பதையும் செனட்டர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்விவாதத்தை முன்னிறுத்தி ஐனநாயக கட்சியை சேர்ந்த செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் வெளிநாட்டு உதவி மசோதாவைத் திருத்துவதற்கான பிரேரணையை முன்வைத்தார். இப்பிரேரணை உதவி பெறும் எந்த நாடும் சர்வதேச சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதனை மேலும் பலப்படுத்தி, அமெரிக்க ஆயுதங்களைப் பெறும் நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய தரநிலைகளை வகுக்கும் குறிப்பாணையை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நாடுகள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பது குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க காங்கிரசுக்கு நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அமெரிக்க ஆயுதங்களைப் பெறும் நாடுகளிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தைப் பெறுவதற்கு வெளியுறவுத் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பது மற்றும் அமெரிக்க மனிதாபிமான உதவியை எளிதாக்குவது ஆகியவை அடங்கும்.

அமெரிக்க ஜனாதிபதி பைடனின் வெளிநாடுகளுக்கான ஆயுத விநியோக குறப்பாணையின் செயலாக்கத்தன்மை சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. எனினும் குறிப்பானை அமெரிக்கா மேலாதிக்கத்திற்கான ஜனநாயகம் சார்ந்த போலி பிரச்சாரத்துக்கான எதிர்ப்பு அமெரிக்காவினுள்ளேயே எழுந்துள்ளமையை அடையாளப்படுத்தக்கூடியதாக உள்ளது. அமெரிக்க செனட்டில், ஆளும் ஜனநாயக கட்சியை சார்ந்த செனட்டனர்களே வெளிநாடுகளுக்கான ஆயுத உதவிகள் தொடர்பில் சிறப்பு மசோதாவை வலியுறுத்தியுள்ளமை, அமெரிக்க அரசின் முரணான நடத்தைகள் தொடர்பில் அமெரிக்க நிலப்பரப்புக்குள்ளேயே எதிர்ப்பு வளர்ந்துள்ளமையையே வெளிப்படுத்துகின்றது. மேலும், காசா போரின் இனப்படுகொலைக்கான நகர்வுகளில் அமெரிக்காவின் ஆதரவு, சர்வதேச ஒழுங்கிலும் பூகோள முறைமையின் யதார்த்தத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது. இது உலக ஒழுங்கின் மாறலுக்கான வாய்ப்பாகவே சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

முதலாவது, அரசுகள் மற்றும் மக்கள் இறைமை தொடர்பிலான புனித பிரச்சாரங்களின் பொய்மையை காசா போர் வெளிப்படுத்தியுள்ளது. அதாவது யதார்த்தவாத அரசியல் நகர்வை உறுதிசெய்துள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழககத்தின் சர்வதேச உறவுகள் கற்கையின் பேராசிரியர் டங்கன் பெல்  குறிப்பிடுவது போல் யதார்த்தவாதம், 'யதார்த்தவாதத்தின் முக்கியத்துவத்தின் விளைவாக சர்வதேச உறவுகளின் தேசிய பாதுகாப்பு சார்ந்த ஆய்வில், போரை எப்போதும் சாத்தியமானதாக கணிக்கும் ஒரு சோகமான உலகத்தைக் காண அரசாங்கங்கள் முடிவு செய்கின்றன.' யதார்த்தவாதிகள் பிறர் ஏமாற்றப்பட்ட இலட்சியவாதம் அல்லது சுய-நீதியான ஒழுக்கம் என எதைப் பார்க்கிறார்கள் என்பதை எதிர்த்து, மனித இயல்பு மற்றும் சர்வதேச உறவுகளின் அவசியமான கட்டமைப்பு பற்றிய போலியான உண்மைகளை சுட்டிக்காட்டி, அரசியல் நடத்தையின் செயல்பாட்டுச் சட்டங்கள் குறித்து சந்தேகத்திற்குரிய முடிவுகளை எடுக்கிறார்கள். யதார்த்தவாதத்தின் செல்வாக்கின் கீழ், சர்வதேச அராஜக நிலையில் அனைத்து அரசுகளும் சர்வதேச சட்டத்தின் மீது உண்மையான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அதைச் செயல்படுத்துவதற்கான எந்த வழியையும் அங்கீகரிக்கவில்லை. மேலும் அவை முதன்மையாக தங்கள் சொந்த பாதுகாப்பிற்குத் தேவையான அதிகாரத்தை அதிகப்படுத்துவதில் வல்லாதிக்க அரசுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதனையே காசா போரின் விளைவுகளும் உறுதி செய்கின்றன. சர்வதேச சட்டத்தை வலியுறுத்தி உக்ரைன் போரில் சர்வதேச நீதிமன்றத்தை நாடிய அமெரிக்கா, காசா போரில் சர்வதேச நீதிமன்றத்தை நாடிய தென்னாபிரிக்கா மீது கண்டனங்களை வெளிப்படுத்தி இருந்தது. காசா மக்கள் மீதான கொலைகாரத் தாக்குதல், 'ஒழுக்கமற்ற அரசியல் நெறிமுறையின்' சாத்தியக்கூறுகள் மீதான போட்டியின் மூலம் யதார்த்தவாதம் பற்றிய அறிவியல் விவாதங்களுக்கு மிகத் தெளிவாக அருகில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இரண்டாவது, அரசியல் சித்தாந்தங்கள் அரசுகளின் நலன்சார் சிந்தனைக்கான மட்டுப்பாடுகளையே கொண்டுள்ளது. அரசறிவியல் தளத்தில் கூறப்படும் அரசியல் நெறிமுறைகள் அரசியல் செயற்பாட்டு தன்மையை கொண்டிருப்பதில்லை என்பதையே காசாவின் இனப்படுகொலையில் அமெரிக்காவின் ஆதரவும், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில் ரஷ்சியாவின் நிலைப்பாடுமென அண்மைய போர்களின் நடைமுறை தன்மை உறுதி செய்கின்றது. தத்துவஞானி பெர்னார்ட் வில்லியம்ஸ் அரசியல் நெறிமுறை என்பது ஒரு தனித்துவமான கருத்து எனத்தெரிவித்துள்ளார். அரசியல் நெறிமுறையின் கருத்துடன் ஒத்துப்போவது, அரசியல் மதிப்புகள் மற்றும் தார்மீக மதிப்புகள் அல்ல. அரசியல் அறம் மாறுபட்ட வடிவத்தையே பெறுகின்றது. குறிப்பாக அரசுகளின் தேசிய நலன்களுக்குள்ளேயே அரசியல் அறமும் வரையறுக்கப்படுகின்றது. பெப்ரவரியின் முதல் வாரங்களில் அமெரிக்க ஊடகவியலாளர் ரக்கர் கர்ல்சன்க்கு (Tucker Carlson) ரஷ்சிய ஜனாதிபதி புடின் வழங்கியுள்ள நேர்காணல் பூகோள முறைமையின் பல யதார்த்தங்களை பகிரங்கப்படுத்தியதாக சர்வதேச அரசியலில் அதிர்வலையை உருவாக்கியிருந்தது. குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்சியா ஆக்கிரமிப்புக்கான நியாயப்பாடுகளை ரஷ்சியாவின் தேசிய நலன் சார்ந்த வரலாற்று நிகழ்வுகளுடன் தொகுத்திருந்தார். மேலும், ரஷ்சிய-உக்ரைன் போரில் மேற்கு நாடுகளின் ஈடுபாட்டை போரின் நீடிப்புக்கான காரணமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.  புடின், இவ்நேர்காணலில் சித்தாந்தங்களின் போலியை உடைத்ததுடன், அதிகாரம் மற்றும் தேசிய நலன் சார்ந்த பூகோள முறைமையின் யதார்த்தத்தை வெளிப்படுத்தியிருந்தமையே சர்வதேச அரசியலின் அதிர்வலைக்கு காரணமாக அமைகின்றது. சர்வதேச விவகாரங்களில் அரசுகளினை முடிவெடுக்க வழிநடத்தும் கருவிகளாக அதிகாரம் மற்றும் நலன்கள் மட்டுமே முக்கியமானதாகும். அதிகாரம் மற்றும் நலன் புனிதமானவை அல்ல. அவை குறுகிய சுயத்தன்மைக்கு உட்பட்டதாவே அமைகின்றது.

மூன்றாவது, வல்லரசு தன் இலக்கினை நோக்கிய நகர்வில் மக்களின் உயிர்களை பெரும்பொருட்டாக கொள்வதில்லை என்பது மீளவொரு தடவை காசாவிலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. காசாவில் நிராயுதபாணியான அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு இடம்பெயர்ந்தமை ஒரு தெளிவான மற்றும் வெறுக்கத்தக்க போர்க் குற்றங்களின் தொகுப்பாகும். அமெரிக்கா பயங்கரவாதத்தை அழித்தல் அல்லது ஜனநாயகத்தை பாதுகாப்பதாக ஆரம்பிக்கும் போர்களின் மனித உயிர்களின் செலவே அதிகமாக காணப்படுகின்றது. மேற்கு ஆசியாவில் ஈராக் முதல் சிரியா வரை அமெரிக்காவின் உள்நுழைவால் ஏற்பட்ட அழிவுகளே அதிகமானதாகும். வியட்நாம், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றங்கள் அமெரிக்காவின் செலவீனம் அதிகரிக்கப்பட்டதன் விளைவே ஆகும். அவற்றில் அமெரிக்காவின் ஜனநாயகத்தின் பாதுகாப்பு விமர்சனத்திற்குரியதாகவே அமைகின்றது. ரிச்சர்ட் ஹாஸ், 'போர் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து விருப்பமாகவோ அல்லது அவசியமாகவோ இருக்கலாம். போர் ஒரு கருவி.  தேர்வுக்கான போர்கள் தீவிர கவனத்துடன் மற்றும் சாத்தியமான செலவுகள் மற்றும் நன்மைகளை கருத்தில் கொண்டு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்' என்கின்றார். அமெரிக்கா தெரிவு செய்யும் போர்கள் அமெரிக்கர்களுக்கானதொரு ஆவேசமாக உள்ளது. இவை பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் மீட்பு மற்றும் உயிர்வாழ்வு போன்ற நீதியான காரணங்களுக்கானது என்பது போலிப்பிரச்சாரமே ஆகும். இவை குறுகிய அமெரிக்க தேசிய நலன்களுக்கானதாகவே அமைகின்றது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களின் உயிர்கள் மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்வதை விட, அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய ஜனநாயக அரசாங்கங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக ஒழுக்கமற்ற அரசியல் மதிப்பு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

நான்காவது, மனித உரிமை பற்றிய உரையாடல்களின் நலன்கள் வல்லரசுக்கான பாதுகாப்பு உத்தியே அன்றி மக்களுக்கானது இல்லை. ஒரு அராஜக சர்வதேச அமைப்பில், அரசின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் மிக உயர்ந்த முன்னுரிமையை பெறுகின்றது. மோதல் மற்றும் அதிகாரம் ஆகியவை சர்வதேச அரசியலின் தவிர்க்க முடியாத மற்றும் மைய அம்சங்கள்; மேலும், சர்வதேச விவகாரங்களில் மனித உரிமை விவகாரம் என்பது அரசியல் ஒழுங்கு மற்றும் ஸ்திரத்தன்மையை விட குறைந்த முன்னுரிமையையே ஈர்க்கிறது. யதார்த்தவாதத்தின் கட்டளைகளுக்கு அர்ப்பணிப்பினால் மட்டுமே, காசாவில் படுகொலைகள் மற்றும் அழிவிலிருந்து அரசியல்வாதிகள் தள்ளிப்போடுவதையும் தூர விலக்குவதையும் விளக்க முடியும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இஸ்ரேலின் போரின் ஆயுதக் களஞ்சியமாக அமெரிக்காவைக் கண்டிக்காமல், ஏழை பாலஸ்தீனியர்களுக்காக அரசாங்கங்களிலிருந்து முதலைக் கண்ணீர் பெருக்கெடுப்பதை யதார்த்தவாத தர்க்கத்தால் மட்டுமே பார்க்க முடியும். இந்த தர்க்கம் மட்டுமே இஸ்ரேலுக்கு எதிரான பலவீனமான கண்டனங்களையும், உக்ரைனில் நடந்த குற்றங்களையும் காசா குற்றங்களையும் பிரித்தறிய முடியாதவையாக பார்க்கத் தவறியதை விளக்க கூடியதாகவும் உள்ளது. காசாவைப் புறக்கணிப்பதன் மூலம் அரசியல் தலைவர்கள் போரை மேலும் ஒரு புவிசார் அரசியல் கருவியாக சட்டப்பூர்வமாக்கும் நிலையாகவே அமைகின்றது. இது மனித உரிமைகளை தொடர்ச்சியான செயற்பாடற்ற பிரச்சார உத்தியாக கைக்கொள்ளும் ஒழுக்கமற்ற உலகையே உறுதி செய்கின்றது.

எனவே, காசா போரின் விளைவுகளும், சமகால உலகின் நடைமுறையும் பூகோள முறைமையின் யதார்த்தத்தையே வெளிப்படுத்தியுள்ளது. பூகோள முறைமையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம் எனும் போலிப்பிரச்சாரங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இலட்சியவாதத்தின் பொய்மையை உறுதி செய்கின்றன. இது விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களுக்கு வலுவான படிப்பினையை வழங்குகின்றது. ஈழத்தமிழர், உக்ரேனியர் மற்றும் குர்திஸ் போன்ற தேசிய இனங்கள் காசா இனப்படுகொலையில் அவிழ்க்கப்படும் பூகோள முறைமையை விளங்கிக்கொள்வது அவசியமாகின்றது. யதார்த்தவாதத்தின் கூறுகளே உலக இயக்கத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்அனுபவத்தில் ஆதிக்க அரசுகளின் ஏகாதிபத்திய நலனுக்குள் தேசிய இனங்கள் தமது நலன்களை ஒன்றிணைப்பதனூடாகவே தமது இலக்குகளை சாத்தியப்படுத்த முடியும். பாலஸ்தீனம் சர்வதேச சட்டத்தினூடாக தமது மனித உரிமைகள் மீறப்படுவதை உறுதி செய்கின்ற போதிலும், வல்லாதிக்க அரசின் நலனுக்குள் தமது நலன்களை ஒன்றிணைக்க முடியாமையாலேயே தொடர்ந்து போராட வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-