தமிழக அரசியல் தலைமைகள் தமிழக வாக்குகளுக்காவே ஈழத்தமிழர்களை கையாண்டு வருகிறார்கள்! -ஐ.வி.மகாசேனன்-
கடந்த வாரம் ஈழத்தமிழ் அரசியலில் மீண்டுமொரு தடவை இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசு மீதான ஈழத்தமிழர்களின் சீற்றம் அதிகரித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்தை மையப்படுத்தி இந்தியாவிற்குமிடையில் மொழி மற்றும் கலாசார ரீதியிலான வலுவான பிணைப்பு காணப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் இந்தியாவினை தொப்புள்கொடி உறவாக அதிக நம்பிக்கையினை வரலாறு தோறும் வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் இந்திய அரசுகள் ஏற்படுத்தும் ஏமாற்றமும் துரோகங்களும் காலத்துக்கு காலம் ஈழத்தமிழர்களிடம் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை வலுப்படுத்த சாதகமாகின்றது. குறிப்பாக தியாக தீபத்தின் மரணம் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது தமிழக முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் என்பன கடந்த காலங்களில் இந்தியாவின் துரோகம் தொடர்பில் ஈழத்தமிழர்களிடையே இந்திய எதிர்ப்புவாதத்தை உருவாக்கியது. எனினும் யாவற்றையும் கடந்து ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மக்களின் உறவு இந்திய-ஈழத்தமிழ் உறவை தொடர்ச்சியாக பேணி வந்தது. இந்நிலையிலேயே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தனின் மரணம் மீளவும் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசுகள் மீது ஈழத்தமிழர்களிடையே தன்னெழுச்சியான கோபத்தை உருவாக்கியுள்ளது. சாந்தனின் மரணமும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் உணர்வுகளும் அதனை உறுதிசெய்கின்றது. இக்கட்டுரை தமிழக அரசியல் தலைமைகள் எவ்வாறு ஈழத்தமிழர்களை கையாள முற்பட்டுள்ளார்கள் என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் இந்தியா தொடர்பான பார்வை தமிழகத்தோடு இணைந்ததாகவே காணப்படுகின்றது. தமிழகத்தின் மொழி மற்றும் வரலாற்று பண்பாட்டு ஒற்றுமையுடன் தமிழகத்துடனான பிணைப்பு அமையப்பெற்றுள்ளது. இப்பிணைப்பினை மையப்படுத்தியே இலங்கையின் ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை ஈழத்தமிழரசியலின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கவுரசு, 'பெரும்பான்மை இனத்தின் சிறுபான்மை எண்ணங்களே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு காரணமென' குறிப்பிட்டுள்ளார். அதாவது இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள சமூகத்திடையே ஈழத்தமிழர்களை தமிழகத்தின் எட்டுக்கோடி மக்களுடன் இணைத்து பிரச்சாரப்படுத்தி சிறுபான்மை எண்ணத்தையும் அச்சத்தையும் வரலாற்று ரீதியாக வடிவமைத்துள்ளனர். இலங்கையின் புராதான நூலாகிய மகாவம்சம் அவ்வாறானதொரு மனோநிலையை உருவாக்கியுள்ளது. எனவே ஈழத்தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதில் வரலாற்றுரீதியாக இந்தியாவிற்கு பெரும் பொறுப்பு உள்ளது. எனினும் இந்திய அரசியல் தலைமைகள் இப்பொறுப்பை உதாசீனம் செய்யும் போக்கையே வெளிப்படுத்தி உள்ளனர். எனினும் தமிழக மக்களின் ஈழத்தமிழர் தொடர்பான கரிசனைகளே இந்திய அரசுகளை ஈழத்தமிழர்கள் பக்கம் கடந்த காலங்களில் திசைதிருப்பியுள்ளது.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் ஒடுக்குமுறைக்கெதிராக தமிழக மக்கள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்ததோடு உயிர்த்தியாகங்களையும் செய்துள்ளனர். தமிழக மக்களின் போராட்ட அதிர்வலைகள் இந்திய அரசாங்ககளின் கொள்கையில் ஈழத்தமிழர்கள் உரிமைப்போராட்டத்தை இணைக்க வேண்டிய தேவையை உருவாக்கியது. தற்போதும் இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தமிழக பிரச்சாரங்களில் ஈழத்தமிழர்கள் பற்றிய விடயங்களும் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழக மக்கள் ஈழத்தமிழர்கள் மீது வெளிப்படுத்தும் பிணைப்பை தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டுள்ளார்களா என்பதில் வரலாற்றுரீதியாக நெருடல்களே காணப்படுகின்றது. தமிழக மக்களின் வாக்குகளுக்காக ஈழத்தமிழர்களை தமிழக அரசியல் தலைமைகள் அரசியல் பொம்மையாக பயன்படுத்தியுள்ளார்களெனும் விமர்சனங்கள் பொதுவெளியில் காணப்படுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட ஆரம்ப காலத்தில் ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் மற்றும் பிளவுகள் அதிகரிக்கப்பட்டமையில் தமிழக அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் வலுவான பின்னணியை வழங்குகின்றது. தமிழகத்தின் திரட்சியான ஆதரவே ஈழத்தமிழர்களுக்கு பலமானதாகும். தமிழக அரசியல் போட்டியில் தமிழகத்தின் கட்சிகளுக்கிடையிலான போட்டிகளில் ஈழத்தமிழரசியல் விலகி நிற்பதுவே ஆரோக்கியமானதாகும். எனினும், தமிழக மக்களிடையே ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையை வெளிப்படுத்த வேண்டுமெனும் போட்டியில் சிதறிக்கிடந்த தமிழ்ப்போராட்ட ஆயுதக்குழுக்களை தமிழகத்தின் ஒவ்வொரு கட்சிகளும் தம்பக்கம் இழுத்து கொண்டன. குறிப்பாக முன்னாள் தமிழக முதல்வரும் அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவருமான எம்.ஜீ.ஆர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கியதுடன் நிதியுதவியையும் அளித்தனர். அதற்கு போட்டியாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி ஸ்ரீசபாரத்தினம் தலைமையிலான ரெலோ அமைப்பின் ஆதரவாளராக செயற்பட்டிருந்தார். சபாரத்தினம் கொலை உள்ளிட்;ட விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை கருணாநிதி விமர்சித்திருந்தார். எனினும் அரசியல் தலைமைகளின் எண்ணங்களுக்கு அப்பால் தமிழக மக்களிடையே திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவாளர்களிடையே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் சார்ந்து விடுதலைப்புலிகளுக்கு பெரும் ஆதரவான செயற்பாடு காணப்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு பிரபாரகன் எனும் பெயரிட்டு இரசித்த வரலாறுகளும் உண்டு. எனினும் தமிழக அரசியல் தலைமைகள் தமிழக மக்களின் உணர்வுகளை சீண்டி வாக்குகளை பெறுவதற்காக ஈழத்தமிழ் ஆயுதக்குழுக்களின் பிளவுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஆதரவு என்ற பெயரில் அதிகப்படுத்தி குழு மோதல்களுக்கு காரணமாயிருந்தனர்.
இரண்டாவது, ஈழத்தமிழர்களுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் கருணாநிதியின் ஆதரவு பிரதான அரசியல் போட்டியாளரான எம்.ஜீ.ஆரின் அரசியலுக்கு எதிர்வினையாக மாத்திரமே காணப்பட்டது எனும் சந்தேகங்களை, எம்.ஜீ.ஆரின் இறப்புக்கு பின்னரான கருணாநிதியின் ஈழத்தமிழர்சார் அரசியல் செயற்பாடுகள் உருவாக்குகின்றது. ஈழப்போராட்டத்திற்கான தமிழக தலைவர்களின் ஆதரவில் எம்.ஜீ.ஆர் முதன்மையான நிலையை பெறுகின்றார். தமிழக மக்களிடம் நிதி திரட்டி ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு நிதி உதவி செய்தமையானது, ஈழத்தமிழ் போராட்டத்தை தமிழகத்தில் சமூகமயப்படுத்தியதில் பிரதான செயற்பாடாக அமைகின்றது. இவ்வாறான எம்.ஜீ.ஆரின் ஈழத்தமிழ் போராட்ட ஆதரவை கௌரவிக்கும் வகையிலேயே ஈழத் தமிழ்ப்பரப்பின் பல இடங்களில் எம்.ஜீ.ஆருக்கான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜீ.ஆர் தனது ஈழ ஆதரவு கருத்தியலை தன் கட்சியினரிடையே ஆழமாக கொண்டு சேர்க்கவில்லை. எம்.ஜீ.ஆரின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா ஈழப்பிரச்சினையில் எம்.ஜீ.ஆருக்கு முற்றிலும் எதிர்த்திசையில் இயங்கினார். இக்காலத்தில் வெளிப்படையான ஈழப்போராட்ட ஆதரவை தி.மு.க கைவிட்டது. புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோ தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்ட போது, 'கருணாநிதியை கொல்ல புலிகள் சதித்திட்டம் தீட்டியதாக' உளவுத்துறை அறிக்கையே காரணமாக முன்வைக்கப்பட்டது. அத்துடன் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது தமிழகத்தில் தி.முக ஆட்சியில் இருந்ததுடன், மத்திய அரசாங்கத்தின் காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தது. எனினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இனப்படுகொலை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கவில்லை. தமிழக மக்களின் பெரும்போராட்டங்களின் பின்னரே ஒருநாள் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றியிருந்தார். இது தமிழக மக்களிடையேயும் தி.மு.க தொடர்பில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதுடன், கருணாதிநிதியின் அரசியல் பிம்பத்துக்கு களங்கத்தை உருவாக்கியது. தொடர்ந்து வந்த தேர்தலில் தி.மு.க எதிர்க்கட்சி தலைமையை பெற முடியாத அளவுக்கு தோற்கடிக்கப்பட்டது. ஈழத்தமிழர் நலன் சார்ந்த தமிழக மக்களின் சீற்றம் ஜெயலலிதாவின் ஈழப்பிரச்சினை சார்ந்த விம்பத்தை மாற்ற வேண்டிய தேவையை உருவாக்கியது. தமிழீழ தீர்வு பிரச்சாரத்தை ஜெயலலிதா முன்னெடுத்திருந்தார். அதுமட்டுமன்றி, 'இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்', 'ராஜீவ் காந்தி கொலைவழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும்' போன்ற தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். ஜெயலலிதாவின் மாற்றத்துக்கு பின்னாலும் தமிழக மக்கள் ஈழத்தமிழர் நலனின் வெளிப்படுத்திய ஆர்வமும் ஜெயலலிதாவின் தேர்தல் இலக்குமே காரணம் என்பது மறுக்கமுடியாத விடயமாகவே காணப்படுகின்றது.
மூன்றாவது, தமிழக அரசியல் தலைமைகள் ஈழத்தமிழர் தொடர்பாக கரிசணை செலுத்த வேண்டிய தேவைப்பாடு தமிழக மக்கள் மற்றும் ஈழத்தமிழர் உறவின் பிணைப்பிலேயே உருவாகுகின்றது. இந்நிலையிலேயே தமிழக மக்களிற்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையே பிளவுகளை உருவாக்குவதில் தமிழக மற்றும் இலங்கையின் அதிகார வர்க்கங்களும் அரசியல் தலைமைகளும் முனைகின்றன. அதற்கான சான்றாகவே தமிழக மற்றும் ஈழத்தமிழ் மீனவர் பிரச்சினை காணப்படுகின்றது. இப்பிணக்கு இருதரப்புக்குமிடையிலான கூட்டுப்புரிந்துணர்வால் தீர்க்கப்படக்கூடியதாகும். இருதரப்பு அரசியல் தலைமைகளின் மத்தியில் முறையான பேச்சுவார்த்தையை நகர்த்துவதன் மூலம் தீர்க்க வேண்டியதாகும். இந்தியாவின் தமிழக மற்றும் கேரளா மாநில மீனவர்களுக்குமிடையில் எல்லைகளை மீறி மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிணக்குகள் சுமுகமாக தீர்க்கப்பட்ட முன்அனுபவங்கள் தமிழக அரசிடம் காணப்படுகின்றது. மேலும், தமிழக மற்றும் ஈழத்தமிழ் மீனவர் பிரச்சினையில் பெரும் முதலாளிகள் இலாபத்தையும் மீனவர்களின் உயிரிழப்பில் தமிழக மக்கள் மற்றும் ஈழத்தமிழர் உறவில் விரிசலும் ஏற்படுத்தப்படுகின்றது. இலங்கை அரசாங்கமும் தமிழக-ஈழத்தமிழர் மீனவர்களிடையே பிளவுகளை அதிகரிக்கும் வகையில் இலங்கையின் மீன்பிடித்துறைக்கான அமைச்சையும் பேரினவாத அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படக்கூடிய தமிழ் அரசியல்வாதியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சு பிரச்சினையை சுமுகமாக்குவதனை தவிர்த்து அதனை கிடப்பில் போடுவதனூடாக பெரிதுபடுத்தும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றது. அதன் விளைவாகவே ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களும் ஒன்றுகூடும் கச்சதீவு உற்சவத்தில் தமிழக மக்கள் புறக்கணிப்பும், தமிழக மீனவர்களுக்கு எதிரான ஈழத்தமிழ் மீனவர்களின் கறுப்பு கொடி போராட்டமும் காணப்படுகின்றது. இப்பிளவு தமிழக-ஈழத்தமிழ் உறவிலேயே பெரும் பின்னடைவை உருவாக்குகின்றது. இது தமிழக மற்றும் இலங்கை அரசியல் தலைமைகளுக்கு சாதகமான சூழலையே உருவாக்கக்கூடியதாகும்.
எனவே, ஈழத்தமிழர்களின் பார்வையில் இந்தியாவாக கருதப்படும் இந்தியாவின் ஓர் மாநிலமான தமிழகத்தில் ஈழத்தமிழர் கரிசனை என்பது தமிழக மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக நிலைபெறுகின்றது. தமிழக மக்களின் உணர்வு சீற்றத்துக்கு அடிபணிந்தே காலத்துக்கு காலம் தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினையில் தமது கரிசணையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக தமிழ அரசியல் தலைவர்கள் தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்கான பிரச்சாரமாகவே ஈழத்தமிழர்களின் பிரச்சினையை கையாண்டு வந்துள்ளனர். தமிழக மக்களின் வாக்குகளுக்காக ஈழத்தமிழர்களின் பிரச்சினையை கையாளும் தமிழக அரசியல்வாதிகளை ஈழத்தமிழர்கள் நம்புவது இலவுகாத்த கிளியாகவே அமையக்கூடியதாகும். சமகாலத்தில் திட்டமிட்டு தமிழக மக்கள் மற்றும் ஈழத்தமிழர்களிடையே ஏற்படுத்தப்படும் விரிசல் முழுமையாக தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் பிரச்சினையை ஓரங்கட்டுவதற்கான செயற்பாடாகவே அமைகின்றது. இது ஈழத்தமிழர்களுக்கான பிராந்திய பலத்தில் இழப்பை ஏற்படுத்துகின்றது. சாந்தன் மரணம் தொடர்பில் ஈழத்தமிழர்களின் சீற்றமும் கொதிநிலையும் தமிழக மக்களிடம் பிரதிபலிக்கப்படவில்லை. தமிழக அரசியல்வாதிகளிடம் குவிந்துள்ள ஊடகப்பலம் சாந்தனின் மரணம் தொடர்பான ஈழத்தமிழர் சீற்றத்தை இருட்டடிப்பு செய்வதனூடாக ஈழத்தமிழர்களின் உணர்விள் பிரதிபலிப்பை தமிழகத்தில் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளமையையே தமிழக மக்களின் அமைதி உணர்த்துகிறது.
Comments
Post a Comment