ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கா பொறுப்புக்கூறுவாரா? -ஐ.வி.மகாசேனன்-

சர்வதேச, பிராந்திய அரசுகளின் பார்வையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய ஆளுமையாக  தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா  முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார். குறிப்பாக பகுதியளவில் இடம்பெற்ற சில கருத்துக்கணிப்புக்களும், 2022இல் இடம்பெற்ற அரகலயாவில் ஜே.வி.பி கட்சியின் தாக்கமும் அனுரகுமார திசாநாயக்க மீதான பார்வைக்குவிப்புக்கு காரணம் எனலாம். எனினும் அனுரகுமார திசாநாயக்க மீது போலியானதொரு விம்பம் கட்டப்படுவதை பல அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்பகுதியிலும் முன்னைய கட்டுரையொன்றில் உரையாடப்பட்டுள்ளது. தென்னிலங்கையை மையப்படுத்தி அனுரகுமார திசாநாயக்கா மற்றும் ஜே.வி.பி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் தற்போது சிறுபான்மை தேசிய இனங்கள் பக்கமும் திருப்பப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே,  ஈழத்தமிழர்கள் அனுரகுமார திசாநாயக்கா மற்றும் ஜே.வி.பி தொடர்பில் நம்பிக்கையை வைக்கலாமா என்பதை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் அரசியல் தென்னிலங்கையை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் வடக்குக்கான விஜயங்களையும், ஈழத்தமிழர்களை அணுகுவது தொடர்பிலும் ஜே.வி.பியின் அரசியல் போக்கு பரிணமிக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக பெப்ரவரி இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பேரவை உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா ஜூலை கலவரத்தை தமிழ் மக்களுக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சியின் போர்குற்றமென குறிப்பிட்டிருந்தார். மேலும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் தங்களுடன் இணைந்து பயணிப்பதாகவும், தாம் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பான கட்சியாகவும் தெரிவித்திருந்தார். அவ்வாறே தேசிய மக்கள் கட்சியின் (NPP) தலைவர் அனுரகுமார திசாநாயக்க, கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்து, தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடிய கட்சியாக தம்மை பிரகடனப்படுத்தினார். வடக்கு விஜயத்தின் போது வவுனியா மற்றும் கிளிநொச்சியில் இரண்டு பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். வவுனியாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நாட்டின் ஆட்சியில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் தமிழ் தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். ஏப்ரல்-04அன்று யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச்-20அன்று கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அனுரகுமார திசாநாயக்க அங்கு தமிழ் மக்களையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடா தமிழ்ப் புலம்பெயர் சமூகம் வலிமையாக உள்ள நாடுகளில் முதன்மையானது. 

இவ்வாறான பின்னணிகளில் ஜே.வி.பி தேசிய மக்கள் சக்தி என்ற பரிணாமத்தில் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் தமிழ் தரப்பிலும் ஆதரவானதொரு உரையாடலை மேலெழ செய்துள்ளது. அனுரகுமார திஸாநாயக்கா மற்றும் அவரின் தாய்க்கட்சியான ஜே.வி.பியின் கடந்த கால அனுபவங்களை மறந்து தமிழ் மக்களிடயே தேசிய மக்கள் சக்தி தொடர்பிலானதொரு அபிப்பிராயம் கட்டமைக்கப்படுகின்றது. எனினும் அனுரகுமார திஸாநாயக்கா மற்றும் ஜே.வி.பியின் கடந்த கால செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு விரோதமானதாகவே அமைந்துள்ளது. இதனை ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

முதலாவது, ஸ்தாபக ஜே.வி.பியின் பிரதான கொள்கையான இந்திய எதிர்ப்புவாதத்தின் உந்து சக்தியாக சிங்கள பேரினவாதத்தின் தமிழ் எதிர்ப்பு உணர்வே அடிப்படையானதாகும். இலங்கையின் பெரும்பான்மை இனத்தின் சிறுபான்மை எண்ணமே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையாகும். குறிப்பாக ஈழத்தில் உள்ளவர்களைத் தவிர, கிட்டத்தட்ட எட்டு கோடி தமிழ் மக்களை கொண்ட தமிழ்நாட்டை மையப்படுத்தியதாகவே இந்திய விரோத மனப்பாங்கு வளர்க்கப்படுகின்றது. தென்னிலங்கையின் 'இந்திய விரோத மனப்பாங்கின்' நீண்ட வரலாறு, சிங்கள-பௌத்த தேசியவாதத்தால் இயக்கப்படுகிறது. ஜே.வி.பியும் இச்சகதிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கத்திலிருந்தே, ஜே.வி.பி சிங்கள ஜனரஞ்சகவாதத்துடன் கிராமப்புற தெற்கு மத்தியில் ஆதரவைக் கண்டது. ஜே.வி.பி ஸ்தாபாகர் ரோகண விஜேவீர அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுடன் இணைந்தாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை விமர்சித்தார். மேலும், ஜே.வி.பியின் 1987ஆம் ஆண்டு இரண்டாவது புரட்சி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியப்பட்ட அதிகாரப்பகிர்வு முலாம் பூசப்பட்ட 13ஆம் திருத்தத்துக்கு எதிரானதாவே அமைந்தது. தமிழ்த்தரப்பால் அதிகாரப்பகிர்வற்ற பொதி என விமர்சிக்கப்பட்டதையே, நாட்டை துண்டாடக்கூடியது என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி ஜே.வி.பி ஆயுத கிளர்ச்சியை மேற்கொண்டிருந்தது. இன்றுவரை 13ஆம் திருத்தம் நாட்டை துண்டாடக்கூடியது என்ற பிரச்சாரத்தையே ஜே.வி.பி தெரிவித்து வருகின்றது. ஜே.வி.பி தலைவர்களின் இந்திய விஜயத்துக்கு பின்ரான ஊடக சந்திப்பிலும் ஜே.வி.பியின் மூத்த தலைவர் ஹேரத் 13ஆம் திருத்தம் தொடர்பான நிலைப்பாட்டை தொடர்ச்சியாக உறுதிப்படுத்தியிருந்தார்.

இரண்டாவது, ஜே.வி.பியின் இனவாத செயற்பாடுகளில் அனுரகுமார திசாநாயக்காவின் பங்கும் காணப்படுகின்றது. அனுரகுமார திசாநாயக்கா 2000ஆம் ஆண்டு ஜே.வி.பியின் தேசிய பட்டியலூடாக பாராளுமன்ற பிரவேசத்தை ஆரம்பித்துள்ளதுடன், குறுகிய காலப்பகுதியிலேயே 2004ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளார். இப்பின்னணியில் 2000களுக்கு பின்னர் ஜே.வி.பியின் தீர்மானமிக்க தலைவர்களில் அனுரகுமார திசாநாயக்காவும் முதன்மையாக காணப்படுகின்றார். 2001ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை ஜே.வி.பி கடுமையாக எதிர்த்திருந்தது. 2004ஆம் ஆண்டு அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் இணைந்த சுனாமிக்குப் பிந்தைய கூட்டு உதவிகளை வழங்குவதற்கான சாத்தியத்தை நிராகரித்திருந்தனர். இதன்போது ஜே.வி.பியின் அன்றைய தலைவர் அமரசிங்க எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, அனுரகுமார திசாநாயக்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கியதுடன், போர் வெற்றிக்கும் துணையாக செயற்பட்டுள்ளனர். இறுதிப்போரின் முன்னணிப்படை வீரர்களாக ஜே.வி.பி செயற்பாட்டாளர்கள் காணப்பட்டதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது. பெப்ரவரி-21அன்று இணையத்தள செய்தியை சுட்டிக்காட்டி தினக்குரல் பத்திரிகை, 'தமிழருக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியதை அனுரகுமார திசாநாயக்க ஒப்புக்கொள்வதாக' செய்தி பிரசுரித்திருந்தது. மறுநாள் விஜித ஹேரத் அச்செய்தியை மறுத்திருந்தார். எனினும் போர்க்கால அரசாங்கமான மகிந்த ராஜபக்ஷhவின் வெற்றிக்கு 2005ஆம் ஆண்டு ஜே.வி.பியினர் செயற்பட்டிருந்தமை மறுக்க முடியாததாகும். ஜே.வி.பி ராஜபக்ஷhவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினடிப்படையில் ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. மேலும், 2006இல் யுத்தத்தை மையப்படுத்திய வரவு-செலவுத்திட்டத்திற்கு ஜே.வி.பி ஆதரவாக வாக்களித்திருந்தது. இப்பின்னணியில் தமிழ் மக்கள் மீதான ராஜபக்சா அரசாங்கத்தின் இனப்படுகொலை யுத்தத்தில் அனுரகுமார திசாநாயக்காவின் பங்கும் பகுதியளவில் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை - இந்திய ஒப்பந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் இணைந்து இருந்த ஈழத்தமிழர் தாயகத்தை, நீதிமன்ற நடவடிக்கையூடாக 2006ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் என இணைப்பு ரத்து செய்தவர்களும் ஜே.வி.பினர்தான். அதைத் தங்களின் பெருஞ்சாதனையாக பிரச்சாரப்படுத்தியே தென்னிலங்கை சிங்கள பௌத்த பேரினவாத வாக்குகளை பாதுகாத்து வருகின்றனர்.

மூன்றாவது, கடந்த காலத்துக்கு பொறுப்புக்கூற தயாரில்லாத சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் தொடர்ச்சியான இயல்புகளையே அனுரகுமார திசாநாயக்காவும் வெளிப்படுத்தி வருகின்றார். ரோஹன விஜேவீரவின் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளில் அவருக்கு எந்த அனுதாபமும் இல்லை என்றவாறான இனவாத பேச்சுக்கள், மகிந்த ராஜபக்சவுடன் இனவாதக் கூட்டணியை உருவாக்கியமை, இனவாத பிரதம நீதியரசர் சில்வாவுடன் இணைந்து சோமவன்ச இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகை உடைத்தமை போன்ற ஜே.வி.பியின் கடந்த கால பகிரங்க இனவாத செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூற தயாரில்லாத நிலைமையிலேயே ஜே.வி.பி என்.பி.பி ஆக மாற்றப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அனுரகுமார சிவில் சமூகக் குழுக்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் ஏனைய 25 அமைப்புகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி (NPP) எனப்படும் ஒரு கூட்டணியை உருவாக்கினார். மக்கள் விடுதலை முன்னணி (JVP) இப்போது தேசிய மக்கள் சக்தி (NPP)இன் பதாகையின் கீழ் தேர்தலில் போட்டியிடுகிறது. இது கடந்த காலத்தை திசைதிருப்பதுக்கான 'மறுபெயரிடுதல்' பயிற்சியாக காணப்படுகின்றது. பெயர் மாற்றம் கடந்த கால தவறுகளுக்கான பதிலாக அமையப்போவதில்லை. அரசியலில் பொறுப்புக்கூறலே அவசியமானதாகும். அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தமிழர் பிரச்சினையில் மரபுரிமையாக இருந்து வந்த நிலைப்பாட்டை திருத்துவதற்கு தடையாக இருப்பது சந்தர்ப்பவாத இனவாதிகளான ரோகண விஜேவீர, சோமவன்ச போன்ற ஜே.வி.பி தலைவர்களின் இனவாத செயற்பாடுகளை சுட்டிக்காட்ட தயக்கம் காட்டுவதே ஆகும். இது  தேசிய மக்கள் சக்தி ஜே.வி.பி இயல்புகளுக்குள் இருந்து வெளிவராமையையே உறுதிசெய்கின்றது.

நான்காவது, தேசிய மக்கள் சக்தி தங்களை முற்போக்கு சக்தியாக பிரச்சாரப்படுத்தி காட்சிப்படுத்த முனைகின்ற போதிலும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வெளிப்படையாக முன்வைக்க தயாரில்லாத நிலையிலேயே காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியில் வவுனியா பொதுக்கூட்டத்தில் அனுரகுமார திசாநாயக்கா, 'தேசிய மக்கள் சக்தியின் அழைப்பில் கூட்டாட்சி முறைமை அல்லது 13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் வாக்குறுதிகள் உள்ளடக்கப்படவில்லை. அது ஒரு பரிவர்த்தனை. ஒரு வணிக ஒப்பந்தம். நாங்கள் ஈடுபடும் அரசியல் பரிவர்த்தனை அல்ல. அது எங்களுக்கும் மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கை' எனத்தெரிவித்திருந்தார். 13ஆம் திருத்தம் மற்றும் கூட்டாட்சி எனும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை மறுக்கும் அதேவேளை தேசிய இனப்பிரச்சினைக்கு வினைத்திறனான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க திராணியற்றவராகவே உள்ளார். இது தென்னிலங்கையின் இனவாத கட்சிகளின் மரபார்ந்த செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது.  சிங்கள பௌத்த பேரினவாத தரப்பபை பகைத்துக் கொள்ளாமல், தமிழர்களை ஏமாற்றும் தென்னிலங்கை அரசியலையே அனுரகுமார திசாநாயக்காவும் முற்போக்கு விம்பத்துடன் வெளிப்படுத்தி வருகின்றார். 

எனவே, பெயர் மாற்றப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி ஜே.வி.பியின் சந்தர்ப்பவாத இனவாத இயல்புகளினையே தொடர்ச்சியாக பேணி வருகின்றது. ஜே.வி.பி உறுப்பினர்களும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இலங்கை அரசாங்கத்தால் இரண்டு முறை படுகொலை செய்யப்பட்டது. அதன் பின்னரும், ஜே.வி.பி ஈழத்தமிழர்கள் மீது எந்த அனுதாபத்தையும் அல்லது ஒற்றுமையையும் காண்பிக்கவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் ஜே.வி.பி துணை நின்றது. இந்த வரலாற்று பின்னணியை ஈழத்தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஜே.வி.பியின் இனப்படுகொலை பங்கில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவிற்கும் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினராக பகுதியளவு பங்கு உண்டு என்பதும் நிதர்சனமானதாகும். இந்த கடந்தகால வரலாற்று அனுபவங்களுடனேயே ஈழத்தமிழர்கள் தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பியினையும் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவையும் அணுக வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி மற்றும் அனுரகுமார திசாநாயக்கா தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய தலைமையெனும் பிரச்சாரம் போலியான விம்பங்களே ஆகும்.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-