தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியல் களம் தேர்தலுக்கான கொதிநிலையை பெற்றுள்ளது. தென்னிலங்கையின் பிரதான கட்களிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகள் முதன்மையான விவாதமாக உள்ளது. ஈழத்தமிழரசியலில் கருத்தாளர்கள் தளத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் மக்களின் வாய்ப்புக்கள் தொடர்பான உரையாடல் முனைப்பை பெற்றுள்ளது. எனினும் அரசியல் தரப்பினரும் சிவில் சமுகத்தினரும் இலங்கையின் தேர்தல்கள் தொடர்பில் முனைப்பான உரையாடல்களும் செயற்பாடுகளுமற்ற நிலையிலேயே காணப்படுகின்றார்கள். இது தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டின் பற்றாக்குறையினையே வெளிக்கொணர்கின்றது. இவ்இயல்பின் வெளிப்பாடே எதிரிக்கு எதிரி நண்பன் எனும் பொதுப்புத்தியில் ராஜபக்ஷhக்களை தோற்கடிப்பது எனும் ஒற்றை இலக்குடன், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான ஜனாதிபதி தேர்தல்களை கையாண்டு வருகின்றனர். இந்த நடத்தையிலிருந்து 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் கொள்கையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஜனாதிபதி தேர்தலை கையாள வேண்டுமென்பதே ஈழத்தமிழரசியல் கருத்தாளர்களின் வெளிப்பாடாக அமைகின்றது. இப்பின்னணியில் 2024ஆம் ஆண்டு தேர்தலின் பிரதான வேட்பாளர்களின் கடந்தகால நடத்தைகள் தொடர்பிலும் கொள்கைகள் தொடர்பிலும் தமிழ் மக்களிடம் தெளிவான பார்வை காணப்படுதல் வேண்டும். இதனூடாகவே கடந்த காலங்களை போலில்லாது, தமிழ் மக்கள் தமது கொள்கைக்கு உகந்த முடிவுகளை ஜனாதிபதி தேர்தலின் பின்பற்ற ஏதுவாக அமையும். இக்கட்டுரை ஜே.வி.பி கட்சியினது கொள்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை அணுகும் முறைமைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனதா விமுக்தி பெரன எனும் அரசியல் கட்சி இடதுசாரி கொள்கை எனும் பிராச்சாரத்துடன் கட்டமைக்கப்பட்ட ஆயுதக்குழுவிலிருந்தே பரிணமிக்கப்பட்டுள்ளது. 2015களில் தேசிய மக்கள் சக்தி எனும் கூட்டணியாக உருமாறியுள்ளது. அடிப்படையில் தங்களை இடதுசாரி கொள்கையாளர்களே பிரச்சாரப்படுத்தி வருகின்றனர். எனினும் செயற்பாட்டு பரப்பில் இடதுசாரி தத்துவவியலுக்கு முரணானதொரு போக்கினையே ஜே.வி.பி புரட்சிகர ஆயுதக்குழுவாக ஆரம்பித்தது முதல் அரசியல் கட்சியாக பரிணமித்து இன்று தேசிய மக்கள் சக்தி எனும் கூட்டணியின் பரிணாமம் வரை கடைப்பிடித்து வருகின்றது. ஜே.வி.பியின் ஆயுத மோதல்கள் காலப்பகுதி முழுவதிலும், தமிழர் கோரிக்கைகளுக்கு தங்கள் கடுமையான எதிர்ப்பை நியாயப்படுத்த மாக்சிசத்தின் பாசாங்குகளை ஆயுதமாக்கினார்கள். ஜே.வி.பி நிறுவுனர் ரோகண விஜேவீர, 1986ஆம் ஆண்டு தனது 'தமிழீழப் போராட்டத்திற்கான தீர்வுகள்' என்ற புத்தகத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுடன் இணைத்து சுயநிர்ணய உரிமைக்கான தமிழர் கோரிக்கைகளை வடிவமைத்தார்.

1971 மற்றும் 1983க்கு இடையில் ஜே.வி.பி கொள்கையளவில், லெனினிசத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தது. எனினும் இலங்கைக்குள் தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிராக சுயநிர்ணயத்தை வலியுறுத்தி போராடிய தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தை தொடர்ச்சியாக நிராகரித்தது. 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, ஜே.வி.பி திருப்திகரமான முடிவுகளைப் பெறவில்லை. இதனைத்தொடர்ந்து சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதில் இருந்து முழுமையாக பின்வாங்கியது. மற்றும் லெனின் கூட சோசலிச ஆட்சியின் கீழ் அதன் செல்லுபடியை நிராகரித்ததாக பிரச்சாரம் செய்தது. நாட்டின் குறிப்பிட்ட சமூக மற்றும் வரலாற்று நிலைமைகள், முதலாளித்துவத்தின் உயிர்வாழ்வதற்கான முதன்மையான நிபந்தனைகளில் ஒன்றாக தேசியப் பிரச்சினையை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க ஜே.வி.பி மறுத்தது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான ஜே.வி.பியின் எதிர்வினை, இடதுசாரி பொருளாதார கொள்கையுடன் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிமையாவதற்கான அறிகுறிகளையே வெளிப்படுத்தின. ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை நிராகரிக்கும் ஜே.வி.பியின் உரையாடல்கள் ஏனைய தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் மரபுவழி தொடர்ச்சியாகவே அமைந்தது.

இடதுசாரி மரபில் கொள்கையளவில் தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டத்திற்கு பலமான ஆதரவே பொதுவான மரபாக காணப்படுகின்றது. மாக்சிசம் 19ஆம் நூற்றாண்டு சூழமைவை வெளிப்படுத்தியதொரு கோட்பாட்டு வடிவமாக காணப்படுகின்றது. இப்பின்னணியில் வர்க்கப்போராட்டத்தின் நெருக்கடியை மாக்சிசம் முதன்மைப்படுத்தியிருந்தது. இதனால் தேசியவாத சித்தாந்தத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. தேசிய போராட்டம் தொடர்பில் கரிசணை கொண்டிருக்கவில்லை. இது ஐரோப்பிய சூழலின் பிரதிபலிப்பாகும். அங்கு ஒரு தேசம் ஒரு நாடு எனும் பின்னணியில் தேசிய அரசுகள் உருவாக்கப்பட்டிருந்தமையால், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் கார்ள் மாக்ஸின் சிந்தனைக்குள் முக்கியத்துவம் பெறவில்லை. எனினும் மாக்சிச கோட்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வந்த லெனினிசம் தேசிய போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளது. இது 20ஆம் நூற்றாண்டின் நிலைமையையும் யுரேசிய சூழலையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. தேசங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்தியலை வெளிப்படுத்தியுள்ளது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை லெனின் ஆதரித்துள்ளார். இதன் பின்னணியிலேயே இடதுசாரி கருத்தியல் வலுப்படுத்தப்படுவதாக நம்பப்படுகின்றது. 'உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள்' என்பதுவே மாக்சிசம் மற்றும் லெனினிசத்தின் அடிப்படை கோசமாக காணப்படுகின்றது. ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படுகையில், அத்தேசிய இனத்தின் பாட்டாளிகள் வர்க்கப்போராட்டத்தில் முதலாளிகளுக்கு எதிராக போராடுவது சாத்தியமற்றதாகிறது. இப்பின்னணியிலேயே மாக்சிக்கோட்பாட்டுக்கு நடைமுறையாக்க வடிவத்தை அளித்துள்ள லெனினிசம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துள்ளது. மார்க்சியம் மற்றும் லெனினிசம் இரண்டும் சர்வதேசியம் மற்றும் தொழிலாள வர்க்கத்தினரிடையே ஒற்றுமைக்காக வாதிடுகின்றன. இந்தப்பின்னணியிலேயே உலகப்பரப்பில் மாக்சிசம் மற்றும் லெனினிசம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சுயநிர்ணய உரிமைக்கான கருத்தாக்கம் ரஷ;சியப் புரட்சிக்கு சற்று முந்திய காலத்தில் லெனினால் வரையறுக்கப்பட்டுள்ளது. 'தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது அரசியல்ரீதியில் சுதந்திரத்திற்ககான உரிமையை குறிக்கின்றது. அடக்கி ஒடுக்கும் தேசிய இனத்திடமிருந்து அரசியல்ரீதியாக பிரிந்து செல்லும் உரிமையை குறிக்கும்.' என்றவாறு லெனின் வரையறுத்துள்ளார். ரஷ;சிய புரட்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் திட்டத்திலும் அதனை உள்ளீர்த்துள்ளார். இப்பின்னணியில் சுயநிர்ணய உரிமை என்பது அரசியல்ரீதியான ஒரு தேசிய இனம் பிரிந்து செல்லலாம் என்ற அர்த்தத்தை உள்ளடக்கியதாகவே உருப்பெற்று வளரத்தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சுயநிர்ணய உரிமையை அடையாளப்படுத்துகையில், 'எந்தவொரு வற்புறுத்தலோ அல்லது வற்புறுத்தலோ இல்லாமல், அவர்களின் சொந்த எதிர்காலம், அரசியல் அந்தஸ்து மற்றும் சுதந்திரத்தை தீர்மானிக்கும் இந்த அடிப்படை உரிமையை உணர்ந்துகொள்வதன் மூலம் மட்டுமே, கண்ணியம், நீதி, முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற மற்றவர்களை நாம் பேச ஆரம்பிக்க முடியும்' என்கின்றது. சுயநிர்ணய உரிமை பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற போதிலும், சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வது எனப் பொருள்படாது. அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய சமஷ;டி உருவாக்கமும், நான்கு தேசங்கள் ஒன்றிணைந்த ஒற்றையாட்சி அலகைப்பேணும் ஐக்கிய இராச்சிய மாதிரிகளும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையினை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பை நடாத்தியுள்ள போதிலும், பெரும்பான்மையான ஸ்கொட்லாந்து மக்கள் ஐக்கிய இராச்சியத்துக்குள் வாழவே வாக்களித்துள்ளனர். பொதுவாக்கெடுப்பு சுயநிர்ணய உரிமைக்கான சான்றாகவே அமைகின்றது.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையானது, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கெதிரான எழுச்சியாகவே பரிணமிக்கப்பட்டது. கடந்த முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தில் தனிநாட்டுக்கோரிக்கையினை முன்வைத்த போதிலும், சுயநிர்ணய உரிமையின் ஒரு பகுதியாகவே அரசியல்ரீதியாக சமஷ;டிக்கோரிக்கையை கடந்த 75 வருடங்களாக முன்வைத்துவருகின்றனர். எனினும் சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஒடுக்குமுறையக்குள்ளேயே பேணி வருகின்றார்கள். இடதுசாரி தத்துவங்களை மாக்சிச-லெனினிச சித்தாந்தத்தை முன்வைத்து இருமுறை புரட்சிக்கான எத்தனைப்புக்களை மேற்கொண்டிருந்த ஜே.வி.பியினரும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை முற்றாக நிராகரிக்கும் போக்கை ரோகண விஜேவீரவை பின்பற்றி இன்றும் நிலைப்படுத்தி வருகின்றனர். சிறுபகுதியளவிலும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை சென்றுவிடக்கூடாது என்பதில் இனவாத கட்சிகளுக்கு ஒத்த இயல்பையே ஜே.வி.பியினரும் பின்பற்றி வருகின்றனர்.

அண்மையில் ஜே.வி.பி தலைவர் அநுர குமாரதிசநாயக்க மற்றும் குழுவினர் இந்தியாவின் அழைப்பில் மேற்கொண்;ட விஜயம் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் (ஜேவிபி) விஜிதா ஹேரத், 'ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தோம். மேலும் பல உயிர்களை பலி கொடுத்து இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான எங்கள் முயற்சிகளை அர்ப்பணித்தோம். இந்த நிலைப்பாடு மாறவில்லை. மாறாது.' எனத் தெரிவித்திருந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை முழுமையாக பாதுகாக்கப்படவில்லை என்ற விமர்சனம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. தமிழ்த்தரப்பில் ஒருபகுதியினர் ஆரம்ப புள்ளியாகவே இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவிலான 13ஆம் திருத்தத்தை கருதுகின்றார்கள். ஆரம்ப புள்ளியையும் ஏற்காத மனநிலையில் தேசிய மக்கள் சக்தியாக உருமாறிய ஜே.வி.பி உறுதியாக உள்ளது என்பதையே ஹேரத்தின் கருத்து உறுதி செய்கின்றது. மேலும், ஜே.வி.பி கூட்டாட்சிக்கு எதிரானது என்பதை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றது. 2015ஆம் ஆண்டு அப்போதைய பிரச்சார செயலாளர் ஹேரத், 'ஜே.வி.பி கூட்டாட்சிக்கு எதிரானது. தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். கூட்டாட்சி என்பது தீர்வு அல்ல' என்று வுhந ஐளடயனெ பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கு அதிகாரப்பங்கீடு ஊடாகவும் சுயநிர்ணய உரிமையை வழங்க முடியாது எனும் மூலக்கொள்கையுடனேயே இன்றும் ஜே.வி.பி தேசிய மக்கள் சக்தி என்ற பெயர்ப்பலகையின் கீழ் இயங்குகின்றது.

எனவே, லெனினிச சித்தாந்தம் வரையறை செய்துள்ள சுயநிர்ணய உரிமையை புறந்தள்ளும் மாக்சிச-லெனினிச பெயர்ப்பலகை பொறிக்கப்பட்ட இடதுசாரி இனவாத கட்சியான ஜே.வி.பியினாலும் அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்காவாலும் தமிழ் மக்களுக்கான ஆட்சியை வழங்க முடியாது என்பதே நிதர்சனமாகும். இலங்கையின் இறையாண்மைக்கும் ஜே.வி.பி சிங்கள பௌத் பேரினவாதத்தையே பாதுகாக்க செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களின் இறையாண்மையை முழுமையாக நிராகரித்துள்ளது. தமிழ் மக்களின் இறையாண்மை ஏற்றுள்ளதாயின் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். எனினும் பகுதியளவிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை சென்றுவிடக்கூடாது என்பதிலேயே ஜே.வி.பியின் கவனம் குவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மக்களின் இறையான்மைக்கு சமாந்தரமாக தமிழ் மக்களின் இறையாண்மையை ஜே.வி.பி அங்கீகரிக்காத போது, ஜே.வி.பி தமிழ் மக்களை புரட்சிக் கொடியில் அணிதிரள முடியாது. தமிழ் மக்கள் ஜே.வி.பிக்கும் தமது இறையாண்மையை வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. சிவப்பு, நீலம் மற்றும் பச்சை வர்ணங்களில் தென்னிலங்கை கட்சிகள் மாறினாலும் அனைத்தும் பேரினவாதம் எனும் ஒரு புள்ளியில் சங்கமிப்பவையாகவே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் இறையாண்மையை அது தழுவி சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத தென்னிலங்கை கட்சிகளை புறந்தள்ளி, தமது இறையாண்மையை வெளிப்படுத்தக்கூடிய பொறிமுறையையே தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்வது ஆரோக்கியமானதாகும்.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-