தமிழர் மீதான ஒடுக்குமுறையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகிறதா தொல்லியல் பாதுகாப்பு சட்டம்? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின், சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ச்சியானதொன்றாகவே அமையப்பெற்றுள்ளது. அரச இயந்திரத்தின் முழு ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதம் இயங்குவதனால், அதனை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதொன்றாகவே காணப்படுகின்றது. தமிழ்த்தரப்பு தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள நீதிமன்றங்களை நாடி சார்பான உத்தரவுகளை பெற்றுக்கொள்கின்ற போதிலும், சிங்கள பேரினவாதம் நீதிமன்ற தீர்ப்புக்களை புறந்தள்ளி பொலிஸாரின் ஆதரவுடன் தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை கட்டற்ற முறையில் நிகழ்த்தி வருகின்றது. அண்மையில் வெடுக்குறாறி மலையில் பேரினவாத பௌத்த பிக்குகளை மகிழ்விப்பதற்காக, தமிழர்கள் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற தீர்ப்பினூடாகவே வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும் அரச இயந்திரங்களான பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் கூட்டு, தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை தடை செய்ததுடன், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இது தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பு தொடர்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை வெடுக்குநாறி மலை விவகாரத்தை மையப்படுத்தி வெளிப்படுத்தப்படும் ஈழத்தமிழர் அரசியல் சவால்களையும் வாய்ப்புக்களையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச்-08அன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு திரண்ட பக்தர்கள் மீது பொலிஸார் மிலேச்சத்தனமாக செயற்பட்டுள்ளனர். சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு பக்தர்கள் முனைந்த போது அவர்களை அங்கிருந்து பொலிஸார் பலாத்காரமாக வெளியேற்றியிருந்தனர். மேலும், ஆலய பூசகர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்குட்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மார்ச்-12அன்று வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றது. விசாரைணயில் தொல்பொருள் திணைக்களத்தினர், அங்குள்ள தொல்பொருள் சின்னங்களை சந்தேகக நபர்கள் சேதப்படுத்தினர் என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் மார்ச்-19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஆலயப்பூசகர் உட்பட ஐவர் விளக்கமறியலில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மறுதளத்தில் தமிழர் தாயகப்பகுதிகளில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் நீண்ட இழுபறிகளை கொண்டது. கடந்த காலங்களிலும் ஆலயப்பகுதியை தொல்பொருள் முக்கியத்துவமிக்க பிரதேசம் என பிரகடனப்படுத்தி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகளை தடுக்கும் வகையில் சிங்கள பேரினவாதம் பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுகளுடன் செயற்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றத்தினை நாடி உத்தரவுகளை பெற்றே வழிபாட்டு உரிமையை தக்கவைத்து வந்துள்ளனர். சிவராத்திரி வழிபாட்டு ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் நீதிமன்ற அநுமதியுடனேயே மேற்கொண்டிருந்தனர். சிவராத்திரியை முன்னிட்டான விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி கோரி ஆலய நிர்வாகத்தினர் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றமும் தொல்பொருள் பிரதேசத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்ற தீர்ப்பை முன்னைய வழக்கு தீர்ப்பை சுட்டிக்காட்டி தெரிவித்திருந்தது. எனினும் வழமைபோன்றே சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் சிவராத்திரி கால விசேட பூஜை ஏற்பாடுகளை தடைசெய்வதற்கான முனைப்புக்களை அரச இயந்திரத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது. பௌத்தர் தகவல் நிலையம் எனும் அமைப்பு மார்ச்-07அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளை நிறுத்தக்கோரி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்திருந்தனர். இதற்கு இணங்கவே சிவராத்திரி தினத்தன்று காலையில் மக்கள் ஆலய வழிபாட்டுக்காக சென்றபோது ஐந்து கிலோமீற்றருக்கு அப்பால் தடைகளை விதித்திருந்தனர். ஆரம்பத்தில் உள்நுழைய மறுத்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை மற்றும் மக்கள் திரட்சியை தொடர்ந்து வாகனங்களில் செல்ல அனுமதி மறுத்து, ஐந்து கிலோமீற்றருக்கு நடந்து செல்ல பணித்திருந்தனர். மேலும் குடிநீர் கொண்டு செல்வதற்கும் அனுமதி மறுத்ததுடன், மாலை 6 மணிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென்ற நிபந்தனைகளையும் விதித்திருந்தனர். இந்நிலையிலேயே சிவராத்திரி முதலாம் சாம பூஜை நடத்துவதற்கு மக்கள் முயன்ற போது, பொலிஸார் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை அநாகரீகமான முறையில் தூக்கி வந்து வெளியே இருத்தினார்கள். இப்பின்னணியிலேயே எட்டுப்பேரை கைது செய்திருந்தனர்.

தமிழர் பகுதிகளில் தொல்பொருள் முக்கியத்துவத்தின் பேரிலும், வனவள பாதுகாப்பு என்ற பெயரிலும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நிகழ்ச்சித்தொடர் 2009களுக்கு பின்னர் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. அதன் மற்றுமோர் சாட்சியமாகவே வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் சிவராத்திரி விவகாரம் அமைகின்றது. நீதிமன்ற அனுமதிபெற்று மேற்கொள்ளப்பட்டதை பொலிசார் தடைசெய்துள்ளதுடன், கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதையும் ஈழத்தமிழர்கள் நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையானது, அரச இயந்திரத்தினை முழுமையாக கொண்டு அரச ஆதரவற்ற தேசிய இனத்தின் மீது நிகழ்த்தப்படுகின்றது. சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கையின் சட்டம், நிர்வாகம் மற்றும் நீதித்துறைகளை தமது ஒடுக்குமுறைக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றது. அதன் சாட்சியமாகவே வெடுககுநாறி மலை விவகாரம் அமைகின்றது. நீதிமன்றம் தீர்ப்பினை வழங்குகின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்தும் கருவியாக பொலிசாரே காணப்படுகின்றனர். பொலிசார் சிங்கள பௌத்த பேரினவாதம் விரும்பாத தீர்ப்புக்களை புறக்கணித்து, சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு இசைவான நீதிமன்ற தீர்ப்புக்களையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதி நீதிமன்ற தீர்ப்பு மூலம் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. குறிப்பாக ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரங்கள் திருடப்பட்ட நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் மீள நிர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், பொலிஸாரின் நடத்தைகளை புரிந்துகொண்டே சிவராத்திரி விசேட பூஜைக்கான அனுமதியை ஆலய நிர்வாகத்தினர் மீளவும் நீதிமன்றிலேயே கோரியிருந்தனர். நீதிமன்ற அனுமதியையும் பெற்றிருந்தனர். நீதிமன்றம் தீர்ப்பை உதாசீனம் செய்யும் வகையிலே பொலிசார் சிவராத்திரி பூஜைக்கான இடையூறுகளை மேற்கொண்டிருந்தனர். மாறாக முல்லைத்தீவு குருந்தூர் மலையினை தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து, நீதிமன்ற உத்தரவை மீறியும் பௌத்த விகாரையை நிர்மானித்திருந்தது. இதற்கான அனுமதியை நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தி பொலிஸார் வழங்கியிருந்தனர். அரச இயந்திரமான நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி அரச இயந்திரமமான பொலிஸ் பாதுகாப்புடனேயே பிறிதொரு அரச இயந்திரமான தொல்லியல் திணைக்களம் பௌத்த விகாரையை நிர்மானித்திருந்தது. இதனை கேள்விக்குட்படுத்திய நீதிபதி, சிங்கள பௌத்த பேரினவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறிய செயலே இடம்பெற்றிருந்தது. இங்கு நீதிமன்ற தீர்ப்புக்களும் உத்தரவுகளும் தமிழ் மக்களுக்கு அரணாக அமைய போவதில்லை எனும் செய்தியே மீள மீள உறுதிப்படுத்தப்படுகின்றது.

இரண்டாவது, நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தி சிவராத்திரி பூஜை வழிபாடுகளை தடைசெய்த பொலிஸாரை பாதுகாப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை பெற்று இயங்கியவர்கள் விளக்கமறியலுக்கு உட்படுத்துவதாகவுமே இலங்கையின் சட்டமும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸாரின் செயற்பாடும் அமையப்பெற்றுள்ளது. விளக்கமறியலுக்கு உட்படுத்திய எட்டு பேரும் தொல்லியல் பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக தொல்லியல் திணைக்களம் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது. அதனை மையப்படுத்தியே பொலிஸார் கைதுக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளனர். எனினும் குருந்தூர் மலையில் தொல்லியல் பிரதேசத்தை சிதைக்கும் வகையில் இடம்பெற்ற நிர்மான பணிகளுக்கான பாதுகாப்பையும் பொலிஸாரே வழங்கியிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசர கால சட்டங்கள் போன்றே தொல்பொருள் சின்னங்கள் தொடர்பான சட்டங்களும் இலங்கையின் சிறுபான்மை தேசிய இனங்களை இலக்கு வைத்து செயற்படும் சட்டப்பிரிவாகவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சட்டம் தொல்லியல் பகுதியை அனுமதியின்றி ஆய்வு செய்தல், தொல்லியல் சின்னங்களை, தொல்லியல் பொருட்களை பாதித்தல், அவற்றை அழித்தல், உருமாற்றம் செய்தல் ஆகியன  குற்றங்கள் என வகைப்படுத்துகின்றது. இக்குற்றங்களானது ஷசட்டப்பிரிவு 15ஊ' இன் கீழ் பிணை வழங்கப்பட முடியாத ஒரு குற்றங்களாகும். மேற்படி சட்டத்தில் வரலாற்று ரீதியாக, விஞ்ஞான ரீதியாக உறுதிப்பாடு இல்லாமல் எந்தவொரு  இடத்தையும் தொல்லியல் சின்னம் என அறிவிப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரமே 2018ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் வரலாற்று ரீதியானவோ, விஞ்ஞான ரீதியானவோ ஆதாரமின்றி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை பௌத்த தொல்லியல் பகுதியாக அறிவித்தது. இப்பின்னணியில் தொல்லியல் பகுதி சிவராத்திரி வழிபாட்டின் போது சேதமடைந்தாக ஆலய பூசகர் உட்பட 8 பேர் மீது பிணை வழங்க முடியாத வழக்கை தாக்கல் செய்துள்ளமையானது தமிழ் மக்களுக்கும் அவர்களின் அரசியல் பரப்பிற்கு விடப்படும் எச்சரிக்கையாகவே அமைகின்றது. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீள முடியாத அரசியல் கைதிகளின் பட்டியல் காணப்படுகிறது. இந்நிலையில் தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் என்ற போர்வையில் புதியதொரு ஒடுக்குமுறையை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதற்கான அறைகூவலாகவே வெடுக்குநாறி மலை வழக்கு அமைகிறது. தற்போது தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொல்லியல் மற்றும் வனவள திணைக்களங்களூடாகவே நிகழ்த்தப்படுகையில், அதற்கெதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கான முனைப்பாகவே வெடுக்குநாறிமலை வழக்கை அவதானிக்க வேண்டி உள்ளது.

மூன்றாவது, தமிழ் அரசியல் தரப்பில் வினைத்திறனான எதிர்ப்பை கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனூடாகவே தொல்லியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரின் விடுதலையை உறுதிசெய்வதுடன், எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் மீது தொல்லியல் திணைக்களத்தின் பேரில் நிகழ்த்தப்படவுள்ள ஆக்கிரமிப்புக்களை கட்டுப்படுத்தக்கூடியதாகவும் அமையும். வடக்கு-கிழக்கு தமிழர் நிலப்பகுதியில் 2,000இற்கும் அதிகமான பௌத்த தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தியுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சொல்லும் நிலையில், அதனை எதிர்கொள்வது தொடர்பில் வினைத்திறனான போராட்ட நுட்பங்களை கண்டறிய வேண்டி உள்ளது. ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையானது, முழு அரச இயந்திரத்தினூடாகவே நெறிப்படுத்தப்படுகின்றது. நீதிமன்றங்களினூடாகவும் தமிழ் மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இயலாத நிலையையே, முல்லைத்தீவு நீதவான் சரவணராஜாவின் நாட்டை விட்டு வெளியேற்றம் உறுதி செய்திருந்தது. அதுமட்டுமன்றி சமகாலத்தில் வெடுக்குநாறிமலை விவகாரம் உட்பட பல சந்தர்ப்பங்களில் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஒத்துழைத்து நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை நிகழ்த்தியுள்ளனர். பொலிஸார் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனம் செய்த கடந்த கால பதிவுகளுக்கு நீதிமன்ற எவ்வித ஆரோக்கியமான எதிர்வினையையும் ஆற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு பின்னால் சிதறிக்கிடக்காது தமது வாழ்வுரிமை உறுதிசெய்ய ஒன்றுபடுவதனூடாக அரசியல் தலைமைகளை ஒன்றுபட்டு செயற்பட தூண்டுதல் வேண்டும். தமிழ் மக்கள் தமது திரட்சியை, இறைமையை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களில் தமது திரட்சியை மற்றும் இறைமையை வெளிப்படுத்தக்கூடிய முடிவுகளை பரிசீலனை செய்வதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பை உறுதி இலங்கையில் உறுதி செய்யக்கூடியதாக அமையும். 

எனவே, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் தொடர்ச்சியை வலுச்சேர்ப்பதாகவே அமைகின்றது. தமிழ் மக்களுக்கு இலங்கைக்குள் என்றும் பாதுகாப்பற்ற சூழலே காணப்படுவதனையும் உறுதி செய்துள்ளது. மேலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக தொல்லியல் பாதுகாப்பு சட்டத்தினூடாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான முன்னாயர்த்தத்தை வெடுக்குநாறி மலை விவகாரம் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வெளிப்படுத்தல்களை சரியான புரிதலுடன் கையாள வேண்டிய கடமைப்பாடு தமிழரசியல் பரப்பில் காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கான பாதுகாப்பு அரணாக தொல்லியல் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த முற்படுவதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதனூடாகவே தமிழ் மக்கள் தமது இருப்புக்காக போராடக்கூடிய சூழலையாவது பாதுகாக்கக்கூடியதாக அமையும்.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-