சீர்குலைப்பு யுத்தத்தை தாண்டி செல்வதற்கான கருவியே தமிழ்ப் பொதுவேட்பாளர்! -ஐ.வி.மகாசேனன்-
தேசியம் திரட்சியை மையப்படுத்தியே அதன் இருப்பு காணப்படுகின்றது. தமிழ்த்தேசியத்தின் இருப்பும் தமிழ்த்தேசியத்தின் திரட்சியிலேயே பாதுகாக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சி முதல் பிரபாகரனால் நெறிப்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் வரை தமிழ் மக்களின் திரட்சியை வலுப்படுத்துவதனூடாகவே தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச தேசிய கோரிக்கைகளை முன்னிறுத்தி வந்தனர். 2001ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளின் முகாமைத்துவத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஜனநாயகவழியில் தமிழ் மக்களின் திரட்சியை பேணுவதற்கான நிறுவனமாகவே உருவாக்கப்பட்டது. இந்தப்பின்னணியிலேயே 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌணிக்கப்பட்டதற்கு பிற்படவும், தமிழ் மக்கள் தமது உயர்ந்தபட்ச திரட்சியை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பின்னால் வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் தமிழ் மக்களின் திரட்சியை சீர்குலைக்கும் வகையில் தமிழ் மக்கள் மீது சீர்குலைப்பு யுத்தமொன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இச்சீர்குலைப்பு யுத்தம் 2009களுக்கு பின்னர் தமிழ் மக்களிடையே இலகுவாக கட்டமைக்கக்கூடிய சூழல் அமையப்பெற்றுள்ளது. பிரதேசவாத, மதவாத பிரச்சாரங்கள் முதல் தமிழ் அரசியில் கட்சிகளின் பிளவுகள் வரை சீர்குலைப்பு யுத்தத்தின் விளைவுகளாகவே அமைகின்றது. இக்கட்டுரை அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ள சீர்குலைப்பு யுத்தத்தின் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
போரின் முக்கிய கருவிகள் இராணுவம் அல்லாத வழிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சகாப்தத்தில் நாம் இருக்கிறோம். அவை பலவீனப்படுத்துவதாகவும், சீர்குலைக்கும் மற்றும் இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மிகவும் இரகசியமாக உள்ளன. அவுஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை நிறுவனத்தின் '2025 இல் போர்' சர்வதேச மாநாட்டில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைத் தலைவர் தனது உரையில், நவீன அரசியல் போர் உருவாகியுள்ளதாகக் கூறினார். அரசியல் போரின் பயன்பாடு அரசின் தன்மையைப் பொறுத்தது என்று அவர் பரிந்துரைத்தார். மேற்கத்திய ஜனநாயகங்கள் போரின் குறுகிய கருத்தைக் கொண்டுள்ளன. அதில் நடவடிக்கைகள் தீர்க்கமானவை மற்றும் அரசியல் போர் ஒரு வலிமையான எதிரிக்கு எதிராகத் தேவைப்படாவிட்டால் அது விரும்பத்தகாததாகக் கருதப்படுகிறது. அரசியல் போரின் சில முக்கிய பண்புகளாக, ஆயுத மோதலின் வாசலுக்கு கீழே இருப்பது; குறைந்த செலவில் விளைவுகளை அடையும் திறன்;; பகிரப்பட்ட இன அல்லது மதப் பிணைப்புகள் அல்லது பிற உள் சீர்களை சுரண்டுதல்; குறிப்பிடத்தக்க முதலீடு மற்றும் புலனாய்வு வளங்கள் தேவைப்படுவதனை கண்டறிதல் என்பன அமைகின்றது. அரசியல் போரின் ஒரு பகுதியாகவே ஸ்திரத்தன்மையை குழப்பும் வகையிலான சீர்குலைப்பு யுத்தமும் (Destabilization warfare) காணப்படுகின்றது. ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதே ஒரு யுத்தமாகவே அமைகின்றது.
சர்வதேச அரசியல் பரப்பில் சீர்குலைப்பு யுத்தம் என்பது பிரதானமான அரசியல் கொள்கையாக காணப்படுகின்றது. எனினும் தமிழ்த்தேசிய பரப்பில் அதுதொடர்பான போதிய உரையாடல்கள் வளர்க்கப்படவில்லை. சீர்குலைப்பு யுத்தம் என்பது அந்நிய சக்திகள் மாற்றங்கள் என்ற பெயரில் சிக்கல்களை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு அரசாங்கம், அல்லது அரசியல் குழுவின் தலைமைத்துவத்தை குழப்புவது, திட்டமிடலை குழப்புவது, அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டை இழக்கச் செய்வது, அரசியல், பொருளாதார சூழ்நிலையை வலுவற்றதாக, பாதுகாப்பு அற்றதாக மாற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் யுத்தமே சீர்குலைப்பு யுத்தமாகும். இவ்யுத்ததின் மூலம் அரசாங்கம், மற்றும் அரசியல் குழுவின் அதிகார கட்டுப்பாட்டை இழக்கச் செய்து சீரழிவுக்கு உட்படுத்துகின்றது. இதன் வெளிப்பாடுகள் அரசுகளுக்கிடையிலான உறவுகளை கட்டமைக்கும் சர்வதேச பொறிமுறையில் பொருளாதார தடைகளூடாக நெருக்கடிகளை ஏற்படுத்தி, சமூக சீர்குலைவை உருவாக்குவதாகவே அமைகின்றது.
சர்வதேச வல்லாதிக்க அரசுகள் உடல் அழிவை விட உளவியல் விளைவுகளுக்கு முதன்மை தரும் மோதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியில் இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத கருவிகளை இணைக்கின்றனர். மூலோபாய தகவல்தொடர்பு அதிக மேலாதிக்கப் பாத்திரத்தை வகிக்கிறது. அதே நேரத்தில் இராணுவப் படை ஒரு துணைப் பாத்திரத்தை வகிக்கிறது. சோர்வு, மறுப்பு மற்றும் அடிபணிதல் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகின்றனர். சோர்வு எதிராளியை சோர்வடையச் செய்கிறது. நீண்ட தூர துல்லியமான வேலைநிறுத்த ஆயுதங்களின் பயன்பாட்டை மறுப்பதற்கான வழிகளை மறுப்பு கண்டுபிடிக்கிறது. அடிபணிதல் உளளூர் கருத்தை எதிரிக்கு எதிராக மாற்ற முயல்கிறது. இக்காரணிகளை மையப்படுத்தியே உலகின் வல்லாதிக்க அரசுகளாக அமெரிக்கா, ரஷ்சியா மற்றும் சீனா மோதலை நெறிப்படுத்துகின்றன.
ஒன்று, மேற்காசியப்பரப்பில் அமெரிக்காவின் இராஜதந்திர அரசியல் முதன்மையாக சீர்குலைப்பு அரசியல் கொள்கையையே வெளிப்படுத்தி நிற்கின்றது. மேற்காசியாவில் துளிர்விடும் போராட்டக்குழுக்களிற்கான ஆதரவு அதற்கான எடுத்துக்காட்டாகவே அமைகின்றது. இன்று அமெரிக்காவினால் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஓசாமா பின்லேடனின் அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற அமைப்புக்களின் ஆரம்ப கால வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு முதன்மை பெற்றிருந்தது. அத்துடன் சமகாலத்தில் ஈரான் இராணுவத்தளபதியின் மரணம் முதன் இன்று ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் விபத்து வரையில் அமெரிக்காவின் சீர்குலைப்பு அரசியியல் யுத்த கொள்கையில் அங்கம் என்ற சந்தேகங்களும் காணப்படுகின்றது.
இரண்டு, ரஷ்சிய மாதிரியானது கட்டுப்பாட்டு அரசுகள் மற்றும் வெளிநாட்டுத் தளங்களுக்கான புவி-அரசியல் போராட்டத்தில் ஒழுங்கற்ற போரை நடத்துவதற்கு பினாமிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பனிப்போர் பின்னகர்வை ஏற்படுத்துகின்றது. இருப்பினும், ரஷ்சிய மாதிரியானது தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, செயலிழக்கச் செய்வதன் மூலம் வினைத்திறன் மற்றும் செயல்திறனைப் பெறுகிறது. கிழக்கு உக்ரேனில் கிளர்ச்சியைத் தூண்டியதனூடாக கிரிமியாவைக் கைப்பற்றும் வாய்ப்பை ரஷ்சியா பெற்றுக்கொண்டது. தற்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உக்ரைன் சேர்வதை தடை செய்துள்ளது. இத்தகையதொரு அரசியலையே ஜோர்ஜியாவிலும் மேற்கொண்டிருந்தது. ஜோர்ஜியா நேட்டோவில் இணைவதை தடுத்திருந்தது. மேலும், சைபர் சமூக பொறியியலின் ரஷ்சியாவின் செல்வாக்கு அதன் எதிரிகளை சமூக ஊடகங்கள் வழியாக மாற்றுகிறது. செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது, நிரப்பு சித்தாந்தங்கள், பண சவால்கள், ஈகோ, சாகசத்திற்கான தேடல் மற்றும் தற்போதுள்ள அரசியல் அல்லது பொருளாதார அமைப்பில் உள்ள அதிருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களை குறிவைக்கும் திறனை மேம்படுத்துகிறது. கடந்த காலங்களில் (2016) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்சியாவின் ஈடுபாடும் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் முயற்சியும் இத்தகைய இலத்திரனியல் தொழில்நுட்பத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா ரஷ்சியா மீது குற்றம் சாட்டியுள்ளது.
மூன்று, சீனா ஊடுருவக்கூடிய மற்றும் தொடர்ச்சியான பிரச்சாரத்தை உருவாக்கக்கூடிய வகையில் தனது மூலோபாய சிந்தனையின் அடிப்படையில் வடிவமைத்துள்ளது. சீன மாதிரியானது சாம்பல் மண்டல (Gray Zone) செயல்பாடுகள் என்று சிலர் குறிப்பிடுவதை உள்ளடக்குகிறது. இது சர்வதேச சட்டத்தில் உள்ள தெளிவற்ற தன்மைகளை வேட்டையாடுகிறது மற்றும் ஒழுங்கற்ற போர் தந்திரங்களுடன் தொடர்புடைய வன்முறையின் அளவைத் தவிர்க்கிறது. ஆனால் நேரடியாகவும், நடைமுறையாகவும், பிரதேசத்தை கையகப்படுத்துவதை உள்ளடக்கியது. பாரா போலீஸ் மற்றும் கடலோர காவல்படை போன்ற வெளிப்படையான விரோத சக்திகளை சீனா நம்பியுள்ளது. சீனா தனது மீன்பிடி கப்பற்படையை நிராயுதபாணியான கடல்சார் போராளிகளாக பயன்படுத்துகிறது, எதிரி கப்பல்களை மிரட்டுவதற்கு அதிக எண்ணிக்கையிலான கப்பல்களை அனுப்புகிறது. ரஷ;சியாவைப் போலவே, சீனா மாதிரியானது தகவல் போர் மற்றும் மூலோபாய தகவல்தொடர்புகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அதன் காரணத்தின் நேர்மையை அதன் சொந்த மக்களை நம்பவைக்க மற்றும் சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் மரபுகள், விதிமுறைகள் மற்றும் தீர்ப்புகளைப் பின்பற்றத் தவறிய சீனாவின் சர்வதேச புகார்களை கடுமையாக்குகிறது. சீனாவின் சீர்குலைவு முயற்சிகள் கிளர்ச்சியில் தங்கியிருக்கவில்லை. மாறாக சாத்தியமான நட்பு எதிர்ப்பாளர்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஜனாதிபதி டுடெர்டேவை சீனா கவர்ந்ததால், அமெரிக்க-பிலிப்பைன்ஸ் உறவுகள் குளிர்ச்சியடைந்ததற்கு ஓரளவு காரணமாகும். அவ்வாறே ஐரோப்பிய நாடுகளுடான உறவை சீனா திட்டமிடுகின்றது.
சர்வதேச பரப்பில் முதன்மை பெறும் ஆயுதமற்ற யுத்த தொடர்ச்சியை தமிழ்த்தேசிய பரப்பிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் அதனை ஒரு யுத்தமாகவோ அல்லது ஆபத்தாகவோ கருதாத நிலையிலேயே ஈழத்தமிழர் அரசியலின் வறுமை காணப்படுகின்றது. ஈழத்தமிழரசியல் ஆயுதத்தால் நிகழ்த்தப்படும் போரையே யுத்தமாக கருதுகின்றது. மறுதலையாக இராஜதந்திரரீதியாக ஒருதேசத்தின் ஸ்திரத்தை குழப்பும் சீர்குலைப்பு அரசியலை போதிய அரசியல் ஞானத்துடன் பார்க்க தவறியுள்ளோம். சமகாலத்தில் சர்வதேச வல்லாதிக்க அரசுகளின் யுத்தம் பற்றிய பிரதான அரசியல் கொள்கையில் ஒரு பகுதியாகவே ஸ்திரத்தை குழப்பும் சீர்குலைப்பு யுத்தமே பிரதான நிலைபெறுகின்றது. சீர்குலைவினை தன்னியக்க நிகழ்வாக கடந்துவிட முடியாது. இது ஆழமான நிகழ்ச்சி நிரலின் ஓர் பகுதியாகும். 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌணிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழர்களின் ஸ்திரத்தன்மையை குழப்பும் வகையில் சீர்குலைப்பு யுத்தமொன்று அந்நிய சக்திகளால் தமிழ்த்தேசிய பரப்பிற்குள் திட்டமிட்டு நடாத்தப்படுகிறது.
தமிழ் மக்களின் ஸ்திரத்தை குழப்பும் சீர்குலைப்பு யுத்தத்தின் பகுதிகளாகவே, தமிழ் மக்களுக்கிடையில் ஊடுருவுவது; தமிழ் மக்களிளை பிளவுபடுத்துவது; தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர் குலைப்பது; தமிழ் மக்களின் திரட்சியை நிர்மூலமாக்குவது; துறைசார் நிபுணர்களின் வெளியேற்றம்; கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு என்பன அமைகின்றது. இதனை நுணுக்கமாக விளங்கி கொள்ளுதல் அவசியமாகின்றது.
முதலாவது, தமிழ்த்தேசிய போர்வையினுள்ளயே தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிகழ்ச்சி நிரலை செய்யக்கூடிய ஊடுருவல்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்குள் நிறைந்துள்ளமையை கடந்த 15 ஆண்டுகால அரசியலிலும் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. மக்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களித்துள்ள எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தேசியத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய முலாம்பூசப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது உண்மையில், தேசிய முலாம்பூசப்பட்ட கட்சிகளுக்குள் இடம்பெற்ற ஊடுருவல்களின் விளைவானதாகவே அமைகின்றது. அதனை சீர்செய்யவோ பரிசீலனை செய்யவோ யாரும் முன்வருவதில்லை. தமிழ்த்தேசிய பரப்பிற்குள் தமிழ்த்தேசிய அரசியலை சீர்குலைக்கும் வகையில் கடந்த 15 ஆண்டுகளில் பரவலான ஊடுருவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது, தமிழ் மக்களினை பிரதேசரீதியாகவும், மதரீதியாகவும், சாதியரீதியாகவும் பிளவுபடுத்தும் அரசியல் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்த்தேசிய பரப்பில் அதிகரிக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. தமிழ்த்தேசியம் பிளவுகளை கடந்த திரட்சியாகவே 2009 வரை கட்டமைக்கப்பட்டிருந்தது. பாரிய ஜனநாயகத்தை முதன்மைப்படுத்தும் அரசுகளே மதவாதத்துக்குள் அரசியலை நெறிப்படுத்தகையில், தமிழ்த்தேசியம் மதவாதம் கடந்ததொரு அரசியலை நெறிப்படுத்தியிருந்தது. ஒக்டோபர்-3, 1970அன்று சிலோன் டெய்லி நியூஸ் நாளிதழில் ஹெவன்பொல ரத்னசார தேரர் எழுதிய கடிதத்திற்கு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் வழங்கிய பதிலில், 'நீங்கள் எனது மதத்தை கிறிஸ்தவம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே தமிழர்களுடன் முக்கியமாக இந்துக்கள் மத அடிப்படையில் எனக்கு அதிக ஒற்றுமை இல்லை. நான் அவர்களை வழிநடத்துவதற்கு முன்பு எங்கள் நம்பிக்கையை மாற்றும்படி என்னையோ அல்லது பிற கிறிஸ்தவர்களையோ அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை என்பது இந்து மக்களின் பெருமைக்கு உரியது' எனக்குறிப்பிட்டிருந்தார். மேலும் இரா.சம்பந்தன் செயலற்ற தலைவராக விமர்சனங்கள் காணப்படுகின்ற போதிலும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவராகவே உள்ளார். இங்கு பிரதேசவாதம் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனினும் சமீப காலத்தில் தமிழ்த்தேசியத்துக்குள் அதிகரிக்கப்பட்டுள்ள மதவாத, பிரதேச மற்றும் சாதிய பிரச்சாரங்களின் மூலத்தை பரிசீலிக்குமிடத்து தமிழ் தேசிய பரப்பிற்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்குலைப்பு யுத்தத்தையே பிரதிபலிக்கின்றது.
மூன்றாவது, அதிகரிக்கப்படும் புலம்பெயர்வும் தமிழ்த்தேசியத்தின் ஸ்திரத்தை சீர்குலைக்கும் நிகழ்வாகவே அமைகின்றது. சமகாலத்தில் முதன்மையான உரையாடலை பெறும் கனடா சுற்றுலா விசா ஏற்பாடுகளூடாக, இரு வருடங்களுக்குள் கனடா சென்றவர்களின் தொகை அண்ணளவாக இருபதாயிரத்தை ஒத்ததாக மதிப்பிடப்படுகின்றது. தமிழ் மக்களின் தேசிய அரசியல் விடுதலை போராட்டத்தை சார்ந்தாகும். தற்போது ஜனநாயக தேர்தல் அரசியலுக்குள்ளேயே விடுதலை மார்க்கத்தை தேட வேண்டியதாக உள்ளது. இந்நிலையில் குறித்த இரு வருடத்திற்குள் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதி பெறும் எண்ணிக்கையை குறிக்கின்றது. புலம்பெயர்வின் அதிகரிப்பு இலங்கை பாராளுமன்றத்தில் தேய்ந்து கொண்டு செல்லும் தமிழ்த்தேசிய பிரதிநிதித்துவத்தை மேலும் குறைவடைய செய்ய காரணமாகின்றது. சரியான வினைத்திறனான கொள்கைகளுடைய நாடு பாரியளவில் மனித வளம் புலம்பெயர்ந்து செல்வதை அனுமதிக்காது. எனினும் இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வை அனுமதிப்பதற்கு பின்னால் சீர்குலைப்பு கொள்கை செயற்படக்கூடிய வாய்ப்புக்கள் மீது பொதுவான சந்தேகங்கள் காணப்படுகின்றது.
நான்காவது, தமிழ் அரசியல் கட்சிகளின் முரண்நகைகளால் தமிழ் மக்களின் தேசிய திரட்சி கடந்த 15 ஆண்டுகளில் தேர்தல் அரங்கில் பாரிய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. எழுக தமிழ்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி போன்றவற்றிலும் மற்றும் முள்ளிவாய்க்கல், மாவீரர் தினங்கள் போன்றவற்றிலும் தமிழ் மக்கள் தேசியமாக தன்னியக்க எழுச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறே 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் இனப்படுகொலையின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷh எதிர்ப்பு வாதத்திலும் தமிழ்த்தேசியத்தை பிரதிபலித்திருந்தார்கள். எனினும் பாராளுமன்ற தேர்தல்களில் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்துவதனூடாக தமிழ்த்தேசிய திரட்சி கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. பாராளுமன்ற தேர்தல்களின் நெகிழ்ச்சி தமிழ் அரசியல் தலைமைகளின் சீரற்ற நிலைமைகளின் வெளிப்பாடாகவே அமைகின்றது. 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற ஒற்றை கட்சியாக 22 தமிழ்த்தேசிய பிரதித்துவத்தை வெளிப்படுத்தியது. 2020ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த்தேசிய முலாத்துடன் பல கட்சிகள் போட்டியிட்டு 13 ஆசனங்களையே பெற்றுள்ளது. இது தமிழ் அரசியல் தலைமைகள் சீர்குலைக்கப்பட்டதன் விளைவாய் தமிழ்த்தேசியத்தின் ஸ்திரம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில் தமிழ் மக்களின் ஒற்றுமையை மற்றும் தேசிய திரட்சியை சீர்குலைப்பதில் கடந்த 15ஆண்டுகளில் அந்நிய சக்திகள் பெருமளவில் வெற்றியை பதிவு செய்துள்ளது. தமிழ்த்தேசிய அரசியல் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவ தேய்வும், தமிழ்த்தேசிய அரசியல் தொய்வும் அதனையே உறுதி செய்கின்றது. இதன் நீட்சி தமிழ் மக்களிடையே சோர்வையே ஏற்படுத்தக்கூடியதாகும். ஸ்திரத்தை குழப்பும் சீர்குலைப்பு யுத்தத்தின் காரணிகளில் ஒன்றாக சோர்வை ஏற்படுத்தி புறமொதுங்க செய்வதும் பிரதான நிலையை பெறுகின்றது. சமகாலத்தில் தமிழ் மக்கள் அரசியல் கட்சிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் தமிழ் மக்களிடம் வலுத்து வரும் ஏமாற்றத்தின் பிரதிபலிப்பான சோர்வையே உணர்த்தி நிற்கின்றது. இது தமிழ்த்தேசிய அரசியலின் இருப்பை நிர்மூலமாக்கக்கூடியதாகும். தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் ஒருதலைபட்ச சீர்குலைப்பு யுத்தத்திற்கு எதிர் செயற்பாடுகளை தமிழ் மக்கள் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும். சீர்குலைப்பை தாண்டி செல்வது என்பது சீர்குலைப்புக்கு எதிரான யுத்தமாகும். ஆத்தகைய யுத்தத்தின் முதல் படிநிலையாகவே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை முன்னிறுத்தி தமிழ் மக்களின் திரட்சியை வெளிப்படுத்தக்கூடிய அரசியலாகும். தமிழ்ப்பொதுவேட்பாளர் கருத்தியல் தமிழ் மக்களின் ஸ்திரத்தை குழப்புவதற்காக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் சீர்குலைப்பு யுத்தத்திற்கு எதிரானதொரு நகர்வாகும். தமிழ்ப்பாதுவேட்பாளரின் கருத்தியல் வெற்றி தமிழ் மக்களை சூழ்ந்துள்ள ஏமாற்றத்தை சோர்வை நீக்கக்கூடியதாகும். தமிழ் மக்களின் ஸ்திரத்தை குழப்ப தமிழ்த்தேசிய திரட்சியை பலவீனப்பத்த செயற்பட்ட அந்நிய சக்திகளிற்கு தோல்வியை ஏமாற்றத்தை விளைவிக்கக்கூடியதாகும்.
எனவே, தமிழ்ப்பொதுவேட்பாளர் எனும் கருத்தியல் வெற்றி தமிழ் மக்களின் ஸ்திரத்தை பலவீனப்படுத்த அந்நிய சக்திகளால் கடந்த 15 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஒருதலைபட்ச சீர்குலைப்பு யுத்தத்திற்கு எதிரான முதல் எதிர் வினையாகும். ஈழத்தமிழர்கள் மீது மறைமுக நிகழ்ச்சி நிரலூடாக கட்டமைக்கப்பட்டுள்ள சீர்குலைப்பு யுத்தத்தை வெற்றி கொள்வதனூடாகவே ஈழத்தமிழர் தமது அரசியல் களத்தில் சுதந்திரமாக களமாடக்கூடிய வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும். புவிசார் அரசியல்ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தை பகிரும் தமிழ்த்தேசிய இனம் கேந்திர முக்கியத்துவமான தேசிய இனமாக அமைகின்ற போதிலும், கடந்த 15 ஆண்டுகளில் ஏமாற்றமும் தோல்வியுமே தொடர்கின்றதாயின், தமிழ் மக்களிடையே கட்டமைக்கப்பட்டுள்ள சீர்குலைப்பு யுத்தத்திற்கு தமிழ் மக்கள் சரியான எதிர்வினையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. 2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் புதியதொரு களத்தை திறந்துள்ளது. தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தியலை கருவியாக பயன்படுத்திக் கொள்வதனூடாக, தமிழர்கள் தங்கள் தேசிய திரட்சியை அடையாளப்படுத்தவும், ஐக்கியத்தை உறுதிப்படுத்தவும், தேசிய இனமாகவே செயற்படுகின்றோம் என்பதை தமக்கும் அந்நிய சக்திகளுக்கும், சர்வதேச நாடுகளிற்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைகின்றது.
Comments
Post a Comment