கோரமற்ற ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு தமிழ் மக்களின் பலத்தை வீணடிக்கும் செயலாகும்! -ஐ.வி.மகாசேனன்-
தமிழ் அரசியல் பரப்பில் சிவில் சமுக குழுக்களிடையே தமிழ்ப் பொதுவேட்பாளர் சார் கருத்தியல் ஆழமான நிலையை பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் சார்ந்து ஏப்ரல்-30அன்று 35இற்கு மேற்பட்ட சிவில் சமுக குழுக்கள் ஒன்றிணைந்து பொதுக்கட்டமைப்பினூடாக தமிழ்ப்பொதுவேட்பாளரை நகர்த்துவது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஒரு மாத கால இடைவெளியில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவான சிவில் சமுக குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. கடந்த ஜூன்-05அன்று 100இற்கும் மேற்பட்ட சிவில் சமுகங்களின் பிரதிநிதிகளுடன் ஒன்றிணைந்து இரண்டாவது பொதுக்கூட்டத்தை நெறிப்படுத்தியுள்ளார்கள். அப்பொதுக்கூட்டத்தில் இதுவரை வடக்கு-கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்ற பெயரில் செயற்பட்டு வந்தோர், 'தமிழ் மக்கள் பொதுச்சபை' எனும் பெயரில் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்கி செயற்பாட்டை தொடர்கின்றனர். சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் பலரும் தன்னார்வமாக பொதுவேட்பாளர் தொடர்பான கருத்தியலலை பலமாக ஆதரிக்கும் நிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளிலும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் பொதுவேட்பாளருக்கான தமது ஆதரவை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். தமிம்த்தேசிய மக்கள் முன்னணி கருத்தியல்ரீதியாக பொதுவேட்பாளரை ஆதரிக்கின்ற போதிலும், நடைமுறை சவால்களை முன்வைத்து பொதுவேட்பாளரை நிராகரித்து தேர்தல் பகிஷ்கரிப்புகான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். இக்கட்டுரை இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பது ஈழத்தமிழரசியலுக்கு பொருத்தமான தந்திரோபாய செயற்படாக அமையுமா என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் மற்றும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமுக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலில், பொதுவேட்பாளர் மற்றும் தேர்தல் பகிஷ்கரிப்பு ஆகிய இரண்டும் ஏறக்குறைய ஒரே அடிப்படையைக்கொண்டவை என்பதை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்றுக்கொண்டனர். எனினும் பொதுவேட்பாளர் மற்றும் பகிஷ்கரிப்பு ஆகிய இரண்டு தெரிவுகளிலும் பொதுவேட்பாளர் தான் ஆபத்து அதிகம் என்று கூறி பொதுவேட்பாளரை நிராகரித்து, தேர்தல் பகிஷ்கரிப்பு முடிவை அறிவித்துள்ளனர். இதே கருத்தையே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சுகாஸிம் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், பொதுவேட்பாளர் தொடர்பான மூன்று காரணிகளை நடைமுறை ஆபத்தாக முன்வைத்திருந்தார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் பொதுவேட்பாளர் தொடர்பான ஆபத்துக்களின் பின்னாலுள்ள முன்னணியின் வலுவற்ற அரசியல் பிரச்சாரத்தை தெளிவாக புரிந்துகொள்ளல் அவசியமாகின்றது.
ஒன்று, வாக்குச்சாவடியை நோக்கி தமிழ் மக்களை கொண்டு செல்வதனால் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை பங்குபற்றச்செய்யும் ஆபத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னணியின் கடந்த கால உரையாடல்களுடன் தொகுக்கப்படுகையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பங்கு கொள்வது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்று பயணிப்பதெனும் குற்றச்சாட்டாகவே அமைகின்றது. சமதளத்தில், ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்ட பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் முனைப்பாக உள்ளனர். இதனை அரசியல் செயற்பாட்டின் தேவையாக நியாயப்படுத்துகின்றார்கள். மறுப்பதற்கில்லை. அவ்வாறானதொரு அரசியல் மூலோபாய செயற்பாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி தேர்தலை கையாள முயல்வதும் ஒற்றையாட்சி ஏற்கும் செயலாக அமையப்போவதில்லை. ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்ட பாராளுமன்ற, மாகாண சபை, மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் மக்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்வதால் ஏற்படும் ஆபத்திற்கு சமாந்தரமானதாகவே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை பங்குபற்றச்செய்யும் ஆபத்தும் உள்ளது.
இரண்டு, வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் இரண்டாம், மூன்றாம் தெரிவுகளை தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றவாறு குறிப்பிட்டுள்ளார். இது முன்னணியினருக்கு தமிழ் மக்களின் தேசப்பற்றுதியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தையே உருவாக்குகின்றது. சமகாலத்தில் பொதுவேட்பாளர் கருத்தியலை கூட்டிணைந்த சிவில் சமுக தரப்பினராகிய தமிழ் மக்கள் பொதுச்சபையே முன்னகர்த்தி வருகின்றனர். தமிழ் மக்கள் பொதுசபையின் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் மற்றும் அரசியல் பத்தி எழுத்தாளர் ம.நிலாந்தன் ஆகியோர் இரண்டாவது, மூன்றாவது தெரிவுகள் பற்றி எவ்வித உரையாடல்களும் இல்லை என ஊடகங்களுக்கு வழங்கும் நேர்காணல்களில் தெளிவாக தெரிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை காலமும் மக்கள் தெரிவு வாக்களிப்பில் ஈடுபட்டதில்லை. எனவே, பிரச்சாரமின்றி சுயாதினமாக மக்கள் தெரிவு வாக்களிப்பில் ஈடுபட போவதில்லை என்பது யதார்த்தமாக பார்வையாகும். இந்நிலையில் தேர்தல் வாக்குச்சாவடிக்கு செல்லும் மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் தெரிவை தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு அளிப்பார்களென சந்தேகிப்பது, முன்னணியினருக்கு தமிழ் மக்களின் தேசப்பற்றுறுதி மீது நம்பிக்கையின்மையையே வெளிப்படுத்துகின்றது.
மூன்று, பொதுவேட்பாளர் இறுதி நேரத்தில் பின்வாங்கி தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அறிவிக்கும் ஆபத்து இருப்பதாக முன்னணயினர் கருத்து வெளியிட்டுள்ளனர். இரா. சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகளிள் கடந்த கால நிலைமாறு அரசியலை முன்வைத்தே முன்னணியினர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது நடைமுறை ஆபத்து என்பதற்கு அப்பால் சந்தேக வெளிப்பாடாகும். இவ்வாறான சந்தேகங்களுடன் தமிழ் மக்கள் நகர்ந்திருந்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்திருக்க மாட்டார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பெயரிலேயே தேர்தல்களை எதிர்கொள்கின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சுதந்திர இலங்கையின் சுதந்திர இலங்கையின் ஆரம்ப காலங்களில் இணக்க அரசியலூடாக தமிழ் மக்களுக்கு எதிரான தென்னிலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு துணை சென்றார்கள் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. அச்சந்தேகங்களை தமிழ் மக்கள் இன்றும் தொடர்வார்களாயின் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த்தேசிய நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு பயனற்றதாக போய்விடக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது. தமிழ் மக்கள் போன்ற தெளிவை முன்னணியினரும் தகவமைத்து கொள்வது அவசியமாகின்றது.
தமிழ் பொதுவேட்பாளர் ஆபத்துகள் நிறைந்தது என்பது முன்னணியின் தவறான கணிப்பின் வெளிப்பாடாகவே அமைகின்றது. எனினும் நடைமுறையில் அரசியல் ஆபத்துக்கள் நிறைந்த விளையாட்டாகவே அமைகின்றது. அதனுள் தந்திரோபாய நகர்வுகளுக்குள் தமது நலன்களை ஈடேற்றி கொள்ளும் அரசியல் சமுகமே வெற்றி பெறக்கூடியதாக அமையும். அரசியலை ஆபத்தானதென தவிர்த்து செல்வோமாயின், தமிழ் தேசத்தின் மீது எதிரிகள் தமது நலனை ஈடேற்றி செல்ல நாம் வாய்ப்பை வழங்குவதாக அமையக்கூடியதாகும். தமிழ் பொதுவேட்பாளர் மற்றும் தேர்தல் பகிஷ;கரிப்பில் ஆபத்துக்களை கணித்து தெரிவை மேற்கொள்வது அரசியலாகாது. தமிழ்த்தேசத்தின் இன்றைய அரசியல் நகர்வில் கொள்கை ரீதியான பொருத்தப்பட்டின் பலத்தையும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதும் கணிப்பிடுவதே அவசியமானதாகும். இலங்கை தேர்தல் பகிஷ;கரிப்பு நடைமுறையில் கொள்கைரீதியான பாரிய தாக்கத்தை உருவாக்கப்போவதில்லை. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, இலங்கை ஜனாதிபதி தேர்தல் கோரம் (Quorum) அற்ற களமாகும். பகிஷ்கரிப்பு என்பது கோரம் உள்ள களத்திலேயே தாக்கத்தை தாக்கத்தை செலுத்தக்கூடியதாகும். கோரம் என்பது ஒரு கூட்டத்தில் குழுவை அமைப்பதற்கு தேவையான குழுவின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகும். இவ்வாறான கோரம் இல்லாத களத்தில் பகிஷ்கரிப்பு முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை. தாக்கத்தை ஏற்படுத்தாத பகிஷ்கரிப்பு பயனற்ற செயலாகவே அமையக்கூடியதாகும். இலங்கை தேர்தல்களில் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்புக்கு மாத்திரமே அரசியலமைப்பு கோரத்தை உறுதி செய்துள்ளது. அடிப்படையில் மக்கள் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 1/3 வாக்குகள் அளிக்கப்படாவிடில் மக்கள் தீர்ப்பு செல்லுபடியற்றதாக அறிவிக்கப்படும். மேலும், மக்கள் தீர்ப்பில் வாக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட வாக்களர்களில் 2/3 பங்கினர் வாக்களித்திருப்பின் சாதாரண பெரும்பாண்மை முடிவு ஏற்றுக்கொள்ளப்படும். மாறாக பதிவு செய்யப்பட்ட வாக்களர்களில் 2/3 பங்கிற்கு குறைவான வாக்காளர்களே வாக்களித்திருப்பின், 1/2 பங்கு வாக்குகளை முடிவு பெற்றிருப்பினும், பதிவு செய்யப்படட வாக்குகளில் 1/3 வாக்குகளுக்கு அதிகமான வாக்குகளை முடிவு பெற்றிருப்பது அவசியமானதாகும். பதிவு செய்யப்படட வாக்குகளில் 1/3 வாக்குகளை முடிவு பெறாவிடின் தேர்தல் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்படும். இத்தகைய தேர்தல் களத்தில் பகிஷ்கரிப்பு பயனுடையதாக தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் தென்னிலங்கையும் பகிஷ்கரிப்புக்கு பகுதியளவிலாவது ஒத்துழைக்க வேண்டும். இலங்கையின் முழு சனத்தொகையில் 70 சதவீதத்திற்கு மேல் சிங்கள மக்கள் வாழ்கிறார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்பின்னணியில் தமிழ் மக்களின் பகிஷ்கரிப்பு மக்கள் தீர்ப்பு தேர்தலை செல்லுபடியற்றதாக்குவத்தில் தாக்கத்தை செலுத்தக்கூடிய பலத்தோடு காணப்படுவதனால் தென்னிலங்கை கட்சிகளும் அதுசார்ந்த சர்வதேச சக்திகளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற உந்தப்படுவார்கள். எனினும் இலங்கை ஜனாதிபதி தேர்தலிற்கு அரசியலமைப்பில் எவ்வித கோரமும் வலியுறுத்தப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் கோரத்தை கொண்டிராத நிலையில் தமிழ் மக்களின் பகிஷ்கரிப்பு கரிசணையற்றதாகவே அமையக்கூடியது.
இரண்டாவது, தமிழ் மக்களின் ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு தென்னிலங்கையை சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கு எளிமையான வெற்றியை கொடுப்பதாகவும், இயல்பான நடைமுறையாகவுமே அமையக்கூடியதாகும். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியொருவர் வெற்றி பெறுவதற்கு 'அளிக்கப்பட்ட வாக்குகளில்' அறுதிப்பெரும்பான்மையை (51%) பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கும் சந்தர்ப்பத்தில், அரசியலமைப்பில் குறிப்பிடப்படும் 'அளிக்கப்பட்ட வாக்குகள்' என்ற கோர கணக்கில் தமிழ் மக்களின் தேர்தல் பகிஷ்கரிப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது. தென்னிலங்கையின் வாக்குகளுடன் அளிக்கப்பட்ட வாக்குளில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற ஜனாதிபதி இயல்பான முறையில் தெரிவு செய்யப்படும் நடைமுறையே காணப்படும். வாக்களிப்பு சதவீத வீழ்ச்சி பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே வாக்களிப்பு சதவீதம் 60-65 சதவீதமாகவே உள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு சதவீதம் கடந்த இரு தேர்தல்களிலும் 80-85 சதவீதமாக உள்ளது. தமிழ் மக்களின் 10-12 சதவீதம் வரையிலான வாக்குகள் புறக்கணிக்கையில் 70-75 சதவீதம் வாக்களிப்பு இலங்கையில் உறுதிப்படுத்தப்படக்கூடிய நிலையே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் தேர்தல் பகிஷ்கரிப்பு இலங்கை ஜனாதிபதி தேர்தலின் இயல்பான நடைமுறையில் கவணிக்கத்தக்க மாற்றத்தையோ தாக்கத்தையே வெளிப்படுத்த போவதில்லை.
மூன்றாவது, தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்காது, தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணிப்பதனூடாக தெரிவு செய்யப்படும் தென்னிலங்கை ஜனாதிபதியின் அறுதிப்பெரும்பான்மையை தமிழ் மக்கள் சவாலுக்கு உட்படுத்தலாம். தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணித்து தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதனூடாக தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலின் நிபந்தனையான 'அளிக்கப்பட்ட வாக்குகளில்' தமிழ் மக்களின் வாக்குகளும் உள்வாங்கப்படுகின்றது. சமகாலத்தில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி எதிர்வு கூறப்படுவதனால் தமிழ் மக்களின் அளிக்கப்பட்ட வாக்கு தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணித்துள்ளமையால், எந்தவொரு தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களும் முதல் சுற்றில் அறுதிப்பெரும்பான்மையை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். அரசியலமைப்பின் பிரகாரம், முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளர்களும் அறுதி பெரும்பான்மையை பெறாத நிலையில், முதல் சுற்றில் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற முதலிருவரும் தெரிவு செய்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் தெரிவுகள் கணிக்கப்படும். தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களை முழுமையாக புறக்கணித்து இரண்டாம் மற்றும் மூன்றாம் தெரிவையும் புறக்கணிப்பதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் தெரிவுகளின் கணிப்பிலும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது சாதாரண பெரும்பாண்மையை பெற்ற ஒருவர் இலங்கை ஜனாதிபதி பதவியை பெறும் நிலை ஏற்படும். இது தென்னிலங்கை அரசாங்கத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதாக அமையும்.
எனவே, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு பிரச்சாரம் தமிழ் தேசியத்திற்கு சாதகமான தாக்கத்தை வெளிப்படுத்தாத அதேவேளை, எதிரிக்கு சாதகமான சேவை செய்யக் கூடியதாகும். 2005ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பகிஷ்கரிப்பு அவர்களது அரசியல் இயலுமையை சார்ந்தாகும். அவர்கள் பலமான ஆயுத பலத்தை கொண்டிருந்தவர்களாக பகிஷ்கரிப்பினால் உருவாகக்கூடிய எந்தவொரு விளைவுகளையும் சந்திக்க தயாரான நிலையிலேயே அவ்வாறானதொரு முடிவினை அறிவித்து, தமிழ் மக்களின் ஆதரவினையும் பெற்றிருந்தனர். எனினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் முழுமையான ஜனநாயக அரசியல் பொறிமுறைக்குள்ளேயே இயங்குகின்றனர். ஆதலாலேயே கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாத ஒற்றையாட்சிக்குள் அவ்ஒற்றையாட்சியை பாதுகாப்பதாக சத்தியப்பிரமானம் செய்து பாராளுமன்ற அரசியலை நகர்த்துகின்றனர். இவ்யதார்த்தத்தை இலங்கை ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவதனூடாக தமிழ் மக்களின் திரட்சியை பலப்படுத்துவதற்கும், தமிழ் மக்களின் ஆணையை வெளிப்படுத்துவதற்குமான தந்திரோபாய கருவியாக இலங்கையின் ஜனாதிபதி தேர்தலினை பயன்படுத்த முன்வர வேண்டும். தமிழ்ப் பொதுவேட்பாளர் தெரிவில் தமிழ் தேசத்தை நேசிப்பவர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும்.
Comments
Post a Comment