ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் நலனுக்குள்ளேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகள்! -சேனன்-
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் இலக்கு பல முக்கிய புள்ளிகளின் அரசியல் காய் நகர்த்தலை கேள்விக்குற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்த ஏற்பாடுகள் கடந்த வருடத்தில் இருந்து உணரப்பட்டு அதற்கான அரசியல் நகர்வுகளும் இலைமறை காயாய் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் வருகின்ற செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் இன்றுவரை தென்னிலங்கை அரசியல் கட்சிகள் உறுதியான வேட்பாளர் தொடர்பான முடிவுகளை அறிவிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மாக்ஸிச லெனினிச பாரம்பரியத்தை உரையாடும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகள் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளர்ளை அறிவித்துள்ளது. ஆளும்தரப்பினை சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளினை சேர்ந்தவர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உறுதியான வெளிப்படுத்தலை மேற்கொள்ளவில்லை. இச்சூழ்நிலையில் சம்பள முரண்பாடுகளை மையப்படுத்தி அதிகரித்துவரும் தொழிற்சங்க போராட்டங்கள் மற்றும் கடந்த காலங்களில் ஆளுந்தரப்பான பொதுஜன பெரமுனவின் கூட்டாளிகளான சிங்கள பௌத்த பேரினவாதிகளின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல் ஆளுந்தரப்பின் ஆட்சிக்கனவிற்கு நெருக்கடியாக அமைகின்றது. இது தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தக்கூடியதாகும். இப்பின்னணியிலேயே இக்கட்டுரை ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் அதிகரித்துவரும் நெருக்கடிகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மே-03அன்று பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக விரிவுரைகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஏறத்தாழ 50 நாட்களை தாண்டி நாடுமுழுவதும் பல்கலைக்கழகத்தின் சுமுகமான நடவடிக்கைகள் குழப்பமடைந்துள்ளது. ஒரு சில பல்கலைக்கழகங்களில் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு நிகழ்வு காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சுடன் சம்பளமுரண்பாடு தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவும் தோல்வியடைந்துள்ளன.
அதிபர்-ஆசிரியர் சங்கங்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக கடந்த ஜூன்-26அன்று சுகவீன விடுமுறையை பதிவு செய்து அதிபர்-ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாக செல்ல முற்பட்டதை தொடர்ந்து நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கலவரம் ஏற்பட்டது. இதனால் ஜூன்-27அன்று தொடர்ச்சியாக சுகவீன விடுமுறை போராட்டம் இடம்பெற்றிருந்தது. அதிபர்-ஆசிரியர்களின் போராட்டத்தின் காரணமாக நாட்டில் உள்ள 10,026 அரச பாடசாலைகள் மூடப்பட்டு, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அதிகரிக்கும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு போராட்ட நடவடிக்கைகளின் தீர்வு இன்றிய தொடர்ச்சிகள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை அதிகரிக்க செய்கின்றது. அதேநேரம் எதிர் கட்சிகள் தேர்தல் சார்ந்த முனைப்பான வேகத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சஜித் பிரேமதாசா தென்னிலங்கை பிரசாரத்திற்கு சமாந்தரமாக வடக்கு-கிழக்கிற்கு நேரடி விஜயம் செய்து தமது கட்சி கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருகின்றார். மறுபக்கம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வடக்கு-தெற்கில் பிரச்சாரம் செய்துவருகின்றார். அதேவேளை ஐரோப்பிய தேசங்களுக்கு விஜயம் செய்து புலம்பெயர் மக்களிடமும் ஆதரவை திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். ஆனால் ஆளும் தரப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிகழ்ச்சிகளை தேர்தலுக்கான உத்தியாக பயன்படுத்துவதற்கு சமாந்தரமாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையே காணப்படுகின்றது.
அரசாங்கம் நெருக்கடியை கையாள முடியாத நிலையில், தேர்தலை பிற்போடும் உத்தியை முன்னகர்த்துகிறதா எனும் சந்தேகம் ஆளுந்தரப்பின் செயற்பாடுகள் ஏற்படுத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவி காலத்தை மேலும் இரண்டு வருடம் அதிகரிக்க பரிந்துரைத்துள்ளமை இலங்கை அரசியலில் அதிக குழப்பதை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்து விட்டதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரின் அரசியல் செயல்பாடுகள் மறைமுக தேர்தல் பிரச்சாரமாகவே விமர்சிக்கப்படுகிறது.
கடந்த ஜூன்-26 ரணில் விக்கிரமசிங்க கடன் மறுசீரமைப்பு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கையொப்பமிட்ட பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரை பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்காவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டுள்ளதாகவும், அதற்கான உரிமை கோரும் உரையாகவே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களின் மூலம், இருதரப்பு கடன் தவணைகளையும் 2028ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும். அத்துடன் சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து கடன்களையும் செலுத்த 2043 வரை நீண்டகால அவகாசம் கிடைக்கும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மீட்பு கோசம் ஜனாதிபதி பதவிக்கான ஆதரவு கோரிக்கையாகவே அமைகிறது. தேர்தல் முன்னாயத்த நகர்வுகள் நடுவில் இவ்இருதரப்புக் கடன் மறுசீரமைப்பின் வெற்றி ரணில் விக்கிரமசிங்காவை வலுப்படுத்தக்கூடியதாகும். தந்திரோபாய அரசியல் மூலமாக காய்நகர்ந்தும் ரணிலின் செயற்பாடுகளை நாம் உற்று நோக்கினால் அவை தேர்தலை பின்புலமாக கொண்டு நகர்த்தப்படுவதை அவதானிக்கலாம். மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில், 'அதிகாரத்திற்காக இருட்டில் தடவிக் கொண்டிருக்கும் குழுக்களுடன் இணைவதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். உண்மையை புரிந்துகொண்டும் வாக்களியுங்கள்' என்றவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், 'சிலர் ஜனாதிபதி பதவிக்காக கடுமையாக பாடுபடும் நிலையில், தான் நாட்டிற்காக பாடுபட்டு வருவதாகவும், ஒருசிலர் தமக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றிக் கனவு காணும் போது, தான் நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிக் கனவு காண்பதாகவும்' கூறியுள்ளார். இவை தேர்தல் பிரச்சாரத்தை இலக்குவைத்த காய்நகர்தலாகவே அமைகின்றது.
இருப்பினும் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் தொடர்பான நகர்வு கணிக்க முடியாத ஒன்றாகவே தென்னிலங்கை அரசியலில் அவதானிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கா தேர்தலுக்கு அச்சப்படும் தென்னிலங்கை தலைமையாகவே ஊடகங்கள் கேலி செய்கின்றது. ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் நடத்தையும் அதனையே பிரதிபலிக்கிறது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே மாகாண சபை தேர்தலை பிற்போட்டிருந்தார். 2018ஆம் ஆண்டு இலங்கையின மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்திருந்தது. அன்றைய காலப்பகுதியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக செயற்பட்டிருந்தார். மகாண சபை தேர்தல் திருத்த சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றத்தில் முன்மொழிந்து மாகாண சபை தேர்தல் இக்காலப்பகுதியில் பிற்போடப்பட்டது. தொடர்ச்சியான இரண்டு ஜனாதிபதிகள் மாறிவிட்டார்கள். ரணில் விக்கிரமசிங்கா நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாகமவும் மாறிவிட்டார். ஆறு ஆண்டுகள் கடந்தும் மாகாணசபை தேர்தல் இழுபறியிலேயே காணப்படுகின்றது. மகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் பெருங்குழப்பத்துக்குள் காணப்படுவதனால், தேர்தல் சட்ட திருத்த முயற்சிகளும் இழுபறியிலேயே காணப்படுகின்றது. தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் மாகாண சபை தேர்தல்களை பற்றி உரையாடுகின்ற போதிலும், அதற்கான சூழமைவு சாத்தியப்பாடற்றதாகவே காணப்படுகின்றது.
இரண்டாவது, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்காவே பொறுப்புக்கூறல் வேண்டும். 2022ஆம் ஆண்டு முடிவடைந்த உள்ளூராட்சி சபைகளின் பதவிகாலத்தை உள்ளூராட்சி சபைகளுக்கான இராஜாங்க அமைச்சரின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக ஓர் ஆண்டுகள் தன்னிச்சையாக அதிகரிக்கப்பட்டது. பிற்பட 2023ஆம் ஆண்டு மேலதிக பதவிக்காலமும் முடிவடைந்தது. எனினும் ஓர் ஆண்டுகள் கடந்தும் தேர்தலற்ற நிலையில் அரச உத்தியோகத்தர்களான ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கீழேயே உள்ளூராட்சி சபை செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களை மேற்கொண்ட போதிலும், அரசாங்கத்தின் தலையீடு மற்றும் நிதி அளிக்க மறுத்தமையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
மூன்றாவது, ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து ஜனாதிபதியின் பதவி காலத்தை அதிகரிக்கும் பரிந்துரை ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்டள்ளமை ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான சந்தேகங்களையும் வலுப்படுத்துகின்றது. அரசியலமைப்பில் காணப்படும் குழறுபடிகளால் மக்கள் தீர்ப்பற்று, பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் ஜனாதிபதி பதவி காலத்தை ரணில் விக்கிரமசிங்க நீடிக்கும் செயற்பாடுகளில் முயலக்கூடிய எதிர்பார்ப்புகளும் காணப்படுகிறது. அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாலின சமத்துவ யோசனை மீதான உயர்நீதிமன்ற நிர்ணயம் தொடர்பில், நீதித்துறை மீது ஜனாதிபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், ஜூன்-26 முடிவடைகின்ற இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சேவை நீடிப்பு செய்துள்ளார். இவை அரசியலமைப்பு மற்றும் நீதித்துறையின் நீதிப்புனராய்வை மீறி ஜனாதிபதி செயற்படக்கூடிய சூழலையே எடுத்துக்காட்டுகிறது. இச்சூழ்நிலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு முகம் கொடுக்காமல் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடிய எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
எனவே, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ரணில் விக்கிரமசிங்க தேர்தல் போக்கை மாற்றுவதற்காக மறைமுகமாக கையாளுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் செயற்பாடுகள் மற்றும் திடீர் முடிவுகள் தனது அரசியல் நெருக்கடிகளை சீர்செய்வதற்காக தேர்தலில் எதேச்சதிகரமான அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஒத்திவைப்பை மேற்கொள்ளலாம் என்ற எதிர்வுகூறல்களை பிரதிபலிக்கின்றது. ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரைக்கும் ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய அரசியல் சூழலை மையப்படுத்திக் கொண்டுதான் நகர்க்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது.
Comments
Post a Comment