எதேச்சதிகார தமிழ் அரசியல்வாதிகளை சிவில் சமுகத்தின் எழுச்சி அச்சமூட்டுகிறதா! -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழர் அரசியலில் சிவில் சமுக செயற்பாடு இலங்கை ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி ஆரோக்கியமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நீண்ட காலமாக தமிழ்ப்பரப்பில் எதிர்பார்க்கப்படும் நிலையானதொரு பொதுக்கட்டமைப்புக்கான முன்முயற்சிகளும் சிவில் சமுக தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் எழுச்சி பெற்ற சிவில் சமுக கட்டமைப்பு முயற்சிகள் பெரும்பாலும் அறிக்கையிடும் கட்டமைப்பாகவும், பிரமுகர் கட்டமைப்பாகவுமே செயற்பட்டுள்ளன. எனினும் தற்போது தமிழ் மக்கள் பொதுச்சபை என பரிணமிக்கப்பட்டுள்ள சிவில் சமுகங்களின் கூட்டிணைவு பரவலாக வடக்கு-கிழக்கில் இயங்கும் பொது அமைப்புக்களின் தன்னார்வ ஈடுபாட்டினூடாக ஒன்றிணையப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி தமிழ் சமுகத்திற்கு அவசியமானதாகும். எனினும் சிவில் சமுகங்களின் வளர்ச்சியால் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரசியல் கட்சிகள் தமது தனியுரிமையை பாதுகாக்க சிவில் சமுகங்களை புறமொதுக்க முற்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிவில் சமுகம் பற்றிய சரியான புரிதலின்றி சிவில் சமுகத்தை மலினப்படுத்தும் கருத்துக்களை அரசியல் பரப்பில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை சிவில் சமுகத்திற்கு மக்களிடையே உள்ள கோட்பாட்டு ரீதியான உறவினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூகம் என்ற கருத்து பரந்தளவில் மேற்கத்திய அறிவுசார் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இது ஜனநாயகம், முதலாளித்துவம், நகரமயமாக்கல், அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி, முடியாட்சியின் முடிவு மற்றும் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் அல்லது அதற்கு மேற்பட்ட நவீன முன்னேற்றங்களுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. சிவில் சமூகத்தின் முரண்பாடு என்னவென்றால், அது பரந்த அளவிலான செயல்பாடுகளையும் பரந்த அளவிலான உறுப்பினர்களையும் உள்ளடக்கியது. ஆதலால் சிவில் சமுகம் தெளிவான வரையறையை உள்ளடக்கியிருக்கவில்லை. சிவில் சமூகத்தைப் பற்றிய நமது தற்போதைய புரிதல் கடந்த பல தசாப்தங்களாக அறிவார்ந்த முறையில் ஒன்றாக இணைக்கப்பட்ட பல்வேறு கருத்துக்களின் ஒருங்கிணைப்பாகவே அமைகின்றது. சிவில் சமூகத்தில் பல்வேறு வகையான சமூக இயக்கங்கள், கிராமங்கள், சுற்றுப்புறச் சங்கங்கள், பெண்கள் குழுக்கள், மதக் குழுக்கள், அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள், குடிமை அமைப்புகள், தொழில் வல்லுநர்கள் சங்கங்கள், தொழில்முனைவோர் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்குகின்றனர். இந்த பின்னணியிலேயே சிவில் சமுகம் பொதுமக்களிடையிருந்து கட்டமைக்கப்படும் பல நிறுவன தொகுதியாக அமைகின்றது.
தாராளவாத தத்துவத்தில், சிவில் சமூகம் முதன்மையாக குடிமக்களின் உரிமைகள் மற்றும் அரசுக்கு எதிராக பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சிவில் சமூகத்தின் யோசனை ஐரோப்பிய முழுமையான எதிர்ப்பு சிந்தனையின் பாரம்பரியத்துடன் உருவாக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளை நவீன உலகமாக மாற்றும் சூழலில், மேற்கத்திய அரசியல் அமைப்பை மிகவும் மேம்பட்ட ஜனநாயகமாக கருதும் சூழலில், சிவில் சமூகம் அதன் பிறப்பின் போது இருந்த அரச விரோத தோரணையை தக்க வைத்துக் கொண்டிருக்கவில்லை. சிவில் சமூகம் வெறுமனே அரசுக்கு விரோதமாக வளரக்கூடாது. அரசுடன் நேர்மறையான ஈடுபாட்டின் சில கூறுகள் அவசியம். சிவில் சமூக அரசு உறவுகள் மோதல் மற்றும் ஒத்துழைப்பு இரண்டின் கலவையாகும். சிவில் சமூகத்தின் புதிய உரையாடலில், அரசுக்கு எதிரான அதிகார அணுகுமுறை மிகவும் உச்சரிக்கப்படுகிறது. உண்மையில், சிவில் சமூகத்தின் மறுகண்டுபிடிப்பு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் ஜனநாயகத்தின் மூன்றாவது அலையுடன் தொடர்புடையது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொம்யூனிச ஆட்சிக்கு எதிராக தன்னார்வ சங்கங்களில் உள்ள சாதாரண குடிமக்களின் எதிர்ப்பு இயக்கங்களின் வெளிப்பாடாகும். புதிதாக நிறுவப்பட்ட ஜனநாயக நாடுகளின் சிவில் சமூகங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக, அவற்றை நல்லாட்சி மற்றும் ஜனநாயகமயமாக்கலின் உலகளாவிய திட்டத்துடன் இணைக்கிறது. ஒரு நெறிமுறைக் கண்ணோட்டத்தில், அரசு மற்றும் பொருளாதரத்தின் கருவி நெறிமுறைகளால் காலனித்துவப்படுத்தப்படாத வாழ்க்கைக் கோளமாக சிவில் சமூகம் வரையறுக்கப்படுகின்றது. சந்தை மற்றும் அரசுகளால் ஆதிக்கம் செலுத்தும் உலகில், சிவில் சமூகத்திற்குள் நடக்கும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரையாடல் பொதுமக்களின் தேவைகளை மதிக்க தேவையான நிலைமைகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் முக்கியமானது. இது நல்ல ஜனநாயக ஆட்சி மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பை வளர்ப்பதற்கான மூலோபாய முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்துகிறது. பதிலளிக்கக்கூடிய ஜனநாயக மாதிரிகள் ஆரோக்கியமான சிவில் சமூகத்தின் வினையூக்கி மூலம் மட்டுமே வெளிப்படும்.
தேசிய அரசியல் ஜனநாயகத்தின் உயிர்ப்பிலேயே வலுப்பெறக்கூடியதாகும். தேசியம் என்பது மக்கள் திரட்சியை மையப்படுத்தியதாகும். மக்கள் திரட்சியை தொடர்ச்சியாக தன்னார்வமாக பேணிக்கொள்ள ஜனநாயக கட்டமைப்பிலேயே சாத்தியப்படுத்தக்கூடியதாகும். வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படும் திரட்சிகள் சிறு இடைவெளி ஏற்படுகையில் சிதறக்கூடியதே யதார்த்தமானதாகும். ஜனநாயகம் என்ற எண்ணம் இல்லாமல் தேசியவாதம் என்ற கருத்து சாத்தியமற்றது. மற்றும் தேசியவாதம் இல்லாமல் ஜனநாயகம் ஒருபோதும் இருக்காது. இரு கருத்தியல்களும் ஒருவித சிக்கலான உறவில் இணைந்துள்ளன. ஒருவரையொருவர் இல்லாமல் வாழ முடியாது. ஆனால் கிட்டத்தட்ட நிரந்தரமான பதற்ற நிலையில் இணைந்து வாழ்கின்றனர். கொம்யூனிசத்தின் சரிவு மற்றும் சோவியத் பேரரசின் உடைவு நிகழ்ந்த விதம் ஜனநாயகம் மற்றும் தேசியவாத உறவுகளின் அணுகுமுறையின் சரியான தன்மையை நிரூபிக்கிறது. எர்னஸ்ட் கெல்னர் சொல்வது போல், 'தேசியவாதம் தேசங்களை உருவாக்குகிறது' என்று கூறுவது ஜனநாயக மாற்றங்கள் நாடுகளை உருவாக்குகிறது என்பதையும் குறிக்கிறது. அதனால்தான், உருவாகும் ஜனநாயக நாடுகளில், ஜனநாயகத்திற்கான இயக்கங்களும், சுதந்திரத்திற்கான இயக்கங்களும் பெரும்பாலும் ஒன்றாக அமைகின்றது. இரு அமைப்புக்களுமே 'சுய நிர்ணயம்' என்ற பெயரில் செயல்படுகிறார்கள். தேசிய இருப்பிற்கு ஜனநாயகப்பொறிமுகளை பலப்படுத்துவது அவசியமாகின்றது.
தமிழரசியல் பரப்பில் 2009களுக்கு பின்னரான அரசியில் நெருக்கடியான சூழலில் சிவில் சமுகத்தின் தளர்ச்சி அரசியல் கட்சிகளின் எதேச்சதிகாரத்தை மேலோங்க செய்துள்ளது. 2009களுக்கு பின்னரான தமிழரசியல் பரப்பில் தமிழரசியில் கட்சிகளின் தனித்த ஆதிக்கம், சிவில் சமூகத்தை விட அரசியற் சமூகம் பலமானதாகவும் சிவில் சமூகத்தின் சுயாதீனமான வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துவதாகவும் அமையப்பெற்று விட்டது. சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்வதற்கு ஜனநாயகச் சூழல் அவசியமானது. எனினும் ஆயுத மோதல்கள் நிறைந்த காலத்தின் தொடர்ச்சி சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது. மேலும் தோல்வியுற்ற சமுகமாக தமிழ் மக்களின் விரக்தி சிவில் தரப்பின் செயற்பாடுகளையும் மௌனிக்க செய்திருந்தது. எனினும் மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் போன்ற ஒருசில தன்னார்வ சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் முயற்சியில் 2009இன் இறுதியில் தமிழ் மக்களின் நெருக்கடிகளுக்கு குரல் கொடுக்க தமிழ் சிவில் சமுக அமையம் உருவாக்கப்பட்டது. எனினும் பெரும்பாலும் தமிழ் சிவில் சமுகம் பரந்தளவில் தமிழ் மக்களினை பிரதிநிதித்துவப்படுத்தாத நிலையில், தமிழ் மக்களின் நெருக்கடிகளை அறிக்கையிடும் அரசியலே தமிழ் சிவில் சமுக அமையத்தின் செயற்பாட்டின் உயர்வீச்சாக அமைந்தது. எனினும் தமிழ் மக்களின் நெருக்கடி காலத்தில் துணிந்து குரல்கொடுக்க தோற்றம்பெற்றதாக தமிழ் சிவில் சமுக அமையத்திற்கு முதன்மையான வகிபாகம் காணப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற ஜனநாயக இடைவெளியில் சிவில் சமுக செயற்பாட்டுக்கு தமிழ் பரப்பில் வாய்ப்பு உருவாகியது. எனினும் நீண்ட கால சிவில் சமுகங்களின் மௌணிப்பு, விரக்தி மற்றும் அரசியல் சமுகத்தின் தனியாதிக்க எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சவால்களுக்குள் தமிழ் சிவில் சமுக செயற்பாடு பிரமுகர் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவை பெருமளவில் பிரமுகர் கட்டமைப்பாக அமையப்பெற்றது. ஆதலாலேயே அது குறுகிய காலத்தில் பாரிய எழுச்சியை வெளிப்படுத்தியிருந்தது. அக்காலப்பகுதியில் சிவில் சமூகத்தில் எழுக தமிழ் பேரணிகள் போன்ற ஆரோக்கியமான அரசியல் செயற்பாடுகள் நடைபெற்ற போதிலும் செயற்பாட்டு முனைப்பு கொண்ட சமூக இயக்கங்கள் போதியளவு வளர்ச்சியடையாமல் இருந்தன. இந்நிலையிலேயே பிரமுகர்களின் தனிப்பட்ட நலன்களுக்குள் குறுகிய காலத்தில் சடுதியான எழுச்சி பெற்ற தமிழ் மக்கள் பேரவை சிதைந்து போனது.
இவ்வாறான அனுபவ பின்னணிகளை கொண்டே வடக்கு-கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை பரிணமிக்கப்பட்டது. இதனுள் 2009களுக்கு பின்னரான அரசியலில் சிவில் சமுக தரப்பாக தமிழ் மக்களின் எழுச்சியை நெறிப்படுத்திய தமிழ் சிவில் சமுக அமையம், தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி செயற்பாட்டாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது கடந்த கால தவறுகளை மதிப்பீடு செய்து தமிழ் பொதுமக்கள் சபையை பலமான தமிழ் மக்களின் பொதுக்கட்டமைப்பாக வலுப்படுத்தக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. கடந்த கால அறிக்கையிடல் பாணி மற்றும் பிரமுகர் வெளிப்பாட்டை களைந்து வடக்கு-கிழக்கில் கிராமிய மட்டத்தில் இயங்கும் பொது அமைப்புக்களின் கூட்டிணைவாக தமிழ் மக்கள் பொதுச்சபை கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் பொதுச்சபையை தமிழ் மக்களின் எண்ணங்களினை பிரதிபலிக்கும் நிறுவனமாக சிவில் சமுக கோட்பாட்டை பூரணப்படுத்துவதாக அமைகின்றது. இதன் எழுச்சி அரசியில் கட்சிகளின் தன்னியக்க செயற்பாடுகளுக்கு சவால் செய்யக்கூடியதாகும். இந்த பின்னணியிலேயே அரசியல் கட்சிகள் சிவில் சமுகத்தை தமிழ் மக்களிலிருந்து வேறுபடுத்தி பிரச்சாரப்படுத்த முற்படுகின்றார்கள். எனினும் சிவில் சமுகம் என்பது மக்கள் சமுகத்தையே குறிக்கின்றது. சிவில் சமுக கட்டமைப்புக்கள் மக்கள் குழுக்களிலிருந்தே உருவாக்கம் பெறுகின்றது. சிவில் சமுக கட்டமைப்புக்களின் பிரதிபிலிப்புக்கள் பொதுமக்களின் பரவலான பிரதிபலிப்பாகவே அமைகின்றது.
சீன மற்றும் இந்திய சிவில் சமூக செயலாக்கத்தை குறிப்பிட்டு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினை பெற்ற பேராசிரியர் ஆமார்த்யா சென் முன்வைத்துள்ள கருத்து கவனிக்கத்தக்கதாகும். இந்தியாவிலும் சீனாவிலும் நிகழ்ந்த பட்டினிச் சாவுகள் குறித்து ஆய்வினைச் செய்த அவர், சுதந்திர இந்தியாவில் பட்டினிச் சாவுகள் நிகழாது தடுத்தமையில் அங்கு நிலவிய ஜனநாயகச் சூழலின் பங்கும் சிவில் சமுக செயற்பாடு தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் இந்தியாவில் நிலவியமை பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கான வாய்ப்பினைக் கொடுத்தது. பட்டினிச் சாவுகள் தொடர்பான அபாயச் சங்கை முன்னரே வலுவானமுறையில் ஒலிக்க வைத்து இந்திய அரசை முன்கூட்டியே எச்சரித்துப் போதிய முன்னேற்பாடுகளைச் செய்வதற்கான அழுத்தங்கள் வழங்கக்கூடிய நிலைமை நிலவியமை பட்டினிச் சாவுகளைத் தடுக்க உதவியது எனவும் சென் குறிப்பிடுகிறார். முhறாக சீனாவில் இத்தகைய ஜனநாயகச் சூழல் இல்லாமையே பட்டினிச் சாவுகளைத் தடுப்பதில் எதிர்மறையான விளைவையே தந்தன என்று சென் வாதிடுகிறார். சென் பட்டினிச் சாவுகள் குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஈழத் தமிழர்கள் தனது அரசியல் தொடர்பாக ஆழமாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். அரசியற் சமூகம் வழிதவறிப் போகாமால் இருப்பதற்கு, பிழையான முடிவுகளை எடுக்காமல் இருப்பதற்கு சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் முற்கூட்டியே அபாயச் சங்கை ஊதக்கூடிய நிலை இருப்பது தமிழர் தேசத்தின் அரசியலுக்குச் சாதகமானது. மேலும் இது அரசியல் சமுகத்தின் பொறுப்புக்கூறலையும் பலப்படுத்தக்கூடியதாகும்.
எனவே, சிவில் சமுகத்தின் எழுச்சியின் மீதான தமிழ் அரசியல் கட்சிகளின் பதட்டம் தமிழ் மக்கள் அரசியல் கட்சிகளின் எதேச்சதிகாரத்துக்கு கடிவாளம் போடும் முயற்சியின் விளைவினதாகும். அரசியற் சமூகத்தின் மீது சிவில் சமூகத்தாலும் சமூக இயக்கங்களாலும் வழங்கப்படும் அழுத்தங்களால் பயன் தரக்கூடிய நன்மைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிவில் சமூகத்தினதும் சமூக இயக்கங்களதும் வளர்ச்சி அரசியற் சமூகத்துக்கு ஒரு கடிவாளமாக அமையக் கூடியது. இதனாலேயே, அரசியற் சமூகம் சிவில் சமூகத்தினது வளர்ச்சியினை விரும்பாது தமிழ் மக்களிலிருந்து சிவில் சமுகத்தை வேறுபடுத்தி பிரச்சாரம் செய்ய முற்படுகின்றனர். இதற்கு சில ஊடகங்களும் துணைபோவது தமிழ்த்தேசியத்துக்கு ஆபத்தானதாக அமையக்கூடியதாகும். தமிழ்த்தேசியத்திற்குள் ஜனநாயகத்தை பலப்படுத்துவதனூடாக தேசியத்தை வலுப்படுத்துவதற்கு சிவில் சமுக கட்டமைப்பை பலப்படுத்துவதே அவசியமானதாகும்.
Comments
Post a Comment