தென்னிலங்கை வேட்பாளர்களின் வடக்கு விஜயமும் மாயமான் பிரச்சாரங்களும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிக்கப்படாவிடினும், தேர்தலை மையப்படுத்திய வேட்பாளர்களின் வாக்காளர் வேட்டை ஆரம்பமாகி விட்டது. தமிழ் பரப்பில் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பில் பொது அமைப்புக்களின் ஆதரவை திரட்டி வருகின்றது. இது தமிழ் மக்களிடையே ஆழமான செல்வாக்கை பெற்று வருகின்றது. மறுதளத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் செயலாற்றி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் தமிழ் மக்களை குறிவைத்து அபிவிருத்தி எனும் மாயையுடன் வடக்கு நோக்கி நகரும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களின் மேடைகளை தமிழரசியல் தலைமைகளும் அலங்கரித்து வருகின்றனர். எனினும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கடந்தகால இரட்டை நிலை அரசியலையே தென்னிலங்கை பிரதான வேட்பாளர்கள் தொடர்ச்சியாக பேணி வருகின்றனர். இக்கட்டுரை தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் யாழ்ப்பாண விஜயத்தின் அரசியல் வெளிப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை முன்னரே அறிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவையும், தேசிய மக்கள் சக்தி அனுர குமார திசாநாயக்கவையும் அறிவித்துள்ளது. ஆளுங்கட்சிக்குள்ளேயே தீர்க்கமான முடிவின்றி குழப்பகரமான சூழல்கள் காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவதை வெளிப்படுத்துகின்ற போதிலும், கூட்டணி தொடர்பான இழுபறிகளால் உறுதிப்பாடான செய்திகள் வெளிவரவில்லை. எனினும் ரணில் விக்கிரமசிங்கா, சஜித் பிரேமதாசா மற்றும் அநுர குமார திசாநாயக்கா மூவரும் தேர்தலை மையப்படுத்திய பிரச்சார வேலைகளை வேகப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று பிரதான தென்னிலங்கை வேட்பாளர்களும் நீண்டதொரு பயணமாக வடக்கிற்கு விஜயம் செய்திருந்ததுடன், தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இரண்டு நாள் பயணமாக மே 24-25ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து பல அரச அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் திறப்பு விழாக்களில் கலந்து கொண்டிருந்தார். வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்வது போன்று தாராள மனதுடன் பொது நிதியை ஒதுக்கி வருகின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் மேடைகள் அனைத்திலும் தமிழரசுக்கட்சி, புளெட் மற்றும் ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். ரணில் விக்கிரமசிங்க தேர்தல் தொடர்பில் உரையாடாத போதிலும் ஆதரவாளர்கள் பிரச்சாரத்தையே மேற்கொண்டிருந்தார்கள். குறிப்பாக தமிழரசியல் தலைவர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்காவை புகழ்ந்து உரையாற்றியிருந்தார்கள். தொடர்ந்து ஜூன் 9-13ஆம் திகதிகளில் 'பிரபஞ்சம்' நிகழ்ச்சியுடன் சஜித் பிரேமதாசா வடக்கிற்கு 5 நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்ற தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவைக்கோரி சந்திப்பை முன்னெடுத்திருந்தார். மேலும் மதத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டிருந்தார். மேலும், ஏற்கனவே ஏப்ரல் முதல் வாரம் வடக்கிற்கு விஜயம் செய்து பல களங்களில் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த அநுரகுமார திசாநாயக்கா ஜூன்-11அன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தமிழரசுக்கட்சி, புளொட் ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். மேலும் சில பொதுஅமைப்புக்களுடனும் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.
முதலாவது, தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தற்போது உள்ள 13ஆம் அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலேயே கருத்துரைத்துரைத்திருந்தனர். எனினும் தமிழ் மக்கள் 1987ஆம் ஆண்டிலிருந்தே 13ஆம் அரசியல் திருத்தத்தை தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் பிற்காலத்தில் 13ஆம் அரசியல் திருத்தத்தில் பல அதிகாரங்கள் அகற்றப்பட்ட நிலையிலேயே தற்போதைய 13ஆம் அரசியல் திருத்த நடைமுறை உரையாடலட தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களிடையே காணப்படுகின்றது. மேலும், தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடையே 13ஆம் அரசியல் திருத்தம் என்பது பிரச்சாரப் பொருளாகா மாத்திரமே காணப்படுகின்றதன்றி, நடைமுறையாக்க திறன்களை கொண்டிருக்கவில்லை. 13ஆம் அரசியல் திருத்தம் ஏற்கனவே அரசியலமைப்பில் நடைமுறையில் உள்ளதொன்றாகும். அதனை நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியினால் இலகுவாக நடைமுறைப்படுத்த முடியும். எனினும் கடந்த இரு வருடங்களாக அனைத்து கட்சி மாநாடு என்ற போர்வையில் காலத்தை இழுத்தடித்ததுடன், தற்போது தேர்தல் பிரச்சார பொறியாக ரணில் விக்கிரமசிங்க 13ஆம் அரசியல் திருத்தத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார். இவ்வாறே ஏனைய தென்னிலங்கை வேட்பாளர்களும் செயல்திறனற்ற பிரச்சாரமாகவே 13ஆம் அரசியல் திருத்தத்தை உரையாடுகின்றனர். குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாண விஜயத்தின போது சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க 13ஆம் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரமற்ற நிலைப்பாட்டுடனேயே சஜித் பிரேமதாசாசவும் காணப்படுவதாக கூறியிருந்தார். பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாசா கத்தோலிக்க மதகுருவுடனான உரையாடலில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தேசிய பொது விவகாரமாக கலந்துரையாடலின் பின்னரே தீர்மானிக்க முடியுமென தெரிவித்திருந்தார். இப்பின்னணியில் தமிழ் மக்களினால் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாதவொரு வெறும் பொதியை கூட செயல்திறனற்ற தேர்தல் பிரச்சாரமாக மாத்திரமே முன்னெடுக்கும் மனோநிலையிலையே தென்னிலங்கை கொண்டுள்ளது.
இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகிய மூவரும் வடக்கு விஜயத்தில் மகாணசபை தேர்தலை நடாத்துவதாக கூறுவது ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் முட்டாளாக்கும் செயற்பாடாகும். இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றைய தமிழரசுக்கட்சியும் இணையக்கூடியது. 2017ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலை ஒத்திவைப்பதில் அனைவரும் பங்களித்துள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உடன்பாட்டுடனேயே தேர்தலை காலவரையின்றி ஒத்திவைக்க மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது. அன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மற்றும் துணைத்தலைவராக சஜித் பிரேமதாச செயற்பட்டிருந்தார். ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக மாகாண சபை ஆளுநரின் அதிகாரத்தின் கீழேயே செயற்பட்டு வருகின்றது. பின்னர் மாகாண சபை தேர்தலை நடாத்தக்கூடிய வகையிலான தனியாள் சட்ட பிரேரணையை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டு வந்த போதிலும், அது இழுத்தடிப்பிலேயே செல்கின்றது. இன்று தேர்தல் பிரச்சாரத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் பிரேரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 2017இல் மாகாணசபை தேர்தல் ஒத்திவைப்புக்கான பொறுப்புக்கூறலை ஏற்க வேண்டும். இல்லையேல், மாகாண சபை தேர்தல் நடாத்துவது தொடர்பிலான உரையாடல் தேர்தலுக்கான போலி பிரச்சாரங்களில் ஒன்றாகவே அமையக்கூடியதாகும்.
மூன்றாவது, அநுரகுமார திசாநாயக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கடந்த கால பலவீனமான அரசியல் இயல்பை கொண்டு தமிழரசுக்கட்சியை கையாள முற்பட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் தன்னுடைய காலத்தில் புதியதொரு அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் இறுக்கமாக இருந்தார். புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்றதா? தமிழ் மக்களின் நீண்ட கால தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க கூடிய ஏற்பாடுகளை கொண்டுள்ளதா? என்ற ஆழமான விவாதங்களுக்கு அப்பால் புதிய அரசியலமைப்பு முயற்சி மீதே ஆழ்ந்த அக்கறையுடன் செயற்பட்டிருந்தார். 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பு ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமைகளை வழங்கிய போது தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தார். எனினும் 2015ஆம் ஆண்டு இரா.சம்பந்தன் ஏக்கிய இராச்சிய மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமைகளை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு முயற்சிகளை ஆதரித்திருந்தனர். இதனை முன்னுதாரணமாக கொண்டே அநுரகுமார திசாநாயக்க தமிழரசுகட்சியுடனான பேச்சுவார்த்தையில், 'ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றிபெறும் பட்சத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் 13வது திருத்தத்தினை தற்காலிக தேவையாக நடைமுறைப்படுத்துவதுடன், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்' எனத்தெரிவித்திருந்தார். தீர்வற்ற 13ஆம் திருத்ததிற்கெதிராகவே பெரும் இரத்தக்களரி புரட்சியை ஜே.வி.பி மேற்கொண்டிருந்தது. மேலும் இணைந்த வடக்கு-கிழக்கை நீதிமன்ற தீர்ப்பினூடாக பிரித்தனர். இன்றுவரை கடந்த கால தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூறவோ அல்லது குறைந்தபட்ச வருத்தத்தை கூட தெரிவிக்க முன்வரவில்லை. இத்தகையோரின் புதிய அரசியலமைப்பு தொடர்பான உரையாடலே சந்தேகத்திற்குரியதாகும். அத்துடன் புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் பற்றி ஜே.வி.பி கருத்துரைக்கவில்லை. இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் உள்ளடக்கமற்ற புதிய அரசியலமைப்பு முயற்சியை இன்றுவரை 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமையின் வெற்றியாக தானே கூறிவருகின்றார்கள். இப்பலவீன இயல்பை கையாள முற்படும் உத்தியாகவே அநுரகுமார திசாசாயக்காவின் புதிய அரசியலமைப்பு உருவாக்க உரையாடலை நோக்க வேண்டியுள்ளது.
நான்காவது, தமிழ் மக்களிடையே தேசிய பிரச்சினையை புறந்தள்ளி அபிவிருத்தி எனும் மாயை அரசியலை மையப்படுத்தி தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் வடக்கு-கிழக்கை கையாள முற்படுகின்றனர். தமிழ் மக்களிடையே தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான கோரிக்கை மலினப்பட்டுவிட்டதென்ற தோற்றப்பாட்டை உருவாக்க முற்படுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாண விஜயத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடுகையில், 'அரசியல் ரீதியான விடயங்கள் என்று வருகின்றபோதும் கூட அதனையும் பொருளாதாரத்துக்குள்ளேயே சுரக்கியிருந்தார். மேலும், '40 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளையோர்கள் பொருளாதார தேவையை மையப்படுத்தியே இயங்குகின்றார்கள். தேசிய எண்ணங்கள் அவர்களிடம் காணப்படுவதில்லை' என்ற சாரப்படவே தெரிவித்ததாக விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார். சஜித் பிரேமதாசாவின் யாழ்ப்பாண விஜயமும் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, பேருந்து என்பவற்றுடனேயே அமைந்திருந்தது. மேலும், நீண்ட கால தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்றான சர்வதேச விளையாட்டு மைதானம் உருவாக்குவது தொடர்பிலும் சஜித் பிரேமதாசா சிலாகித்திருந்தார். மாறாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் நாளாந்த பிரச்சினைகளான காணமல் ஆக்கப்பட்போர் மற்றும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்க தயாரில்லை.
எனவே, தமிழர்களின் தேசிய அபிலாசைகளை புரிந்து கொள்ளாதவர்கள் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதே, தமிழ் மக்களை உதாசீனப்படுத்தும் செயலுக்கு ஒப்பானதாகவே அமைகின்றது. தென்னிலங்கை தமிழ் மக்களை ஜனாதிபதி தேர்தல் காலத்து வாக்கு தேவைக்காக பயன்படுத்தி செல்லும் கருவியாகவே கையாள முற்படுகின்றது. இதற்கு தமிழரசுகட்சி போன்ற தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் பின்செல்வது தமிழினத்தின் சாபமாகவே அமைகின்றது. தமிழரசுக்கட்சியின் எதிர்கால தலைவர்களை கருத்தில் கொண்டு தான் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தமிழ் மக்களை கடவுளிடம் பாரப்படுத்தினாரோ என்பதாகவே செல்வநாயகத்துக்கு பின்னாலான தமிழரசுக்கட்சி தலைமைகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியையும் செல்வநாயகத்தின் விளைச்சலிலும் அறுவடை செய்ய முனையும் தமிழரசுக்கட்சியின் இன்றைய தலைவர்கள் செல்வநாயகம் இட்ட கொள்கை விதையையும் ஆழமாக விளங்கி கொள்ளுதல் அவசியமாகின்றது. தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதனூடாவே தமிழர்களின் கூட்டுப்பலத்தினூடாக தமிழ் மக்களின் சுயநிர்ணயஉரிமையை பாதுகாக்கலாம் என்பதுவே செல்வநாயகத்தின் விதையாகவும் காணப்பட்டது. தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் கூட்டுப்பலத்திற்கான கருவியேயாகும்.
Comments
Post a Comment