ஜனாதிபதி பதவிக்காலம் நீடிப்பு அரசியலமைப்பு முரணும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-
2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரசியல் மாற்ற கோரிக்கை, ஆட்சி தலைவர்களின் மாற்றத்துடன் சுருக்கப்பட்டது. இது போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்த்தரப்புக்களிடமிருந்து மக்கள் ஆணையை புதுப்பிப்பதற்கான தேர்தல் கோரிக்கையை வலுப்படுத்தியது. எனினும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம், தேர்தல்களை இழுத்தடிப்பதிலும், தவிர்ப்பதிலும் மும்மரமாக செயற்பட்டு வந்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 16க்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு மே மாத தொடக்கத்தில் தெரிவித்தது. முரணாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, 'ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டையும் ஒத்திவைப்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கும், மிகவும் தேவையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்காக இரண்டு வருடங்கள் பதவிக்காலத்தையும் நீட்டிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளது.' இது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பிற்கு முரணானது எனும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எனினும் சட்ட நிபுணர்கள் அரசியலமைப்பில் மக்கள் தீர்ப்பற்ற முறையில் ஜனாதிபதி பதவியை தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இக்கட்டுரை ரணில் விக்கிரமசிங்கா அரசியலமைப்பை கையாண்டு தேர்தலை இழுத்தடிப்பு செய்யக்கூடிய வழிமுறைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மே-28அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரா, 'ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பது' தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரை, இலங்கை அரசியலமைப்பு தொடர்பில் பரந்த விவாதத்தை உருவாக்கியுள்ளது. ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியியலூடாவே (Governance), இலங்கை பொருளாதார மீட்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளதாகவும், சர்வதேச நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தக்கவைத்துக்கொள்ள, 'ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலங்களை நீடிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நாங்கள் முன்மொழிகிறோம். அது மிகவும் ஜனநாயக வழி' என பாலித ரங்கே பண்டார செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ஆகிய இருவரின் பதவிக் காலத்தையும் நீடிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் அழைப்பு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க முயற்சிப்பது அரசியலமைப்புக்கு முரணானது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி இந்த நடவடிக்கையை அனைத்து ஜனநாயக சக்திகளாலும் எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 'இது தேர்தலை எதிர்கொள்ள ஜனாதிபதியின் அச்சத்தை காட்டுகிறது. அவர் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்' என அதன் பேச்சாளர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏதிர்த்தரப்புகள் மற்றும் ஆளும் கூட்டணியின் எதிர்ப்புக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடைபெறும் என்பதை ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இந்த ஆண்டு தேர்தலை நடாத்துவதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. எனினும் ஆளுந்தரப்பாகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்காமை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான குழப்பத்தை தொடர்ச்சியாக பேணுவதாகவே அமைகின்றது. கடந்த ஜூன்-26ஆம் திகதி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவிப்புடன், கடன் மறுசீரமைப்பு இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் (MoUs) கைச்சாத்திடப்படுவதை அறிவிப்பதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரையும் ஜனாதிபதி அறிவிப்பார் என்ற ஊகங்கள் எழுந்தன. எனினும் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரணில் விக்கிரமசிங்க நேரடியாகக் கூறவில்லை. எவ்வாறாயினும், நாட்டின் எதிர்காலம் குறித்து சரியான முடிவை எடுக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 'பிரச்சினையை அதன் தொடக்கத்திலிருந்தே புரிந்துகொண்டு, நடைமுறை தீர்வுகளை வழங்கிய மற்றும் முடிவுகளை வழங்கிய என்னுடன் நீங்கள் முன்னேறுவீர்களா? அல்லது இருளில் சிக்கித் தவிப்பவர்களுடன், இன்னும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுபவர்களுடன் ஒத்துப்போவீர்களா? உங்களுக்கும் தேசத்துக்கும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நீங்கள் தொடர்ந்து செல்வீர்களா? அல்லது வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பீர்களா? பாதையை விட்டு விலகுவது அல்லது தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பது போன்ற ஆபத்துகளை நாம் அனைவரும் அறிவோம். எனவே, சரியான முடிவை எடுங்கள். அந்தத் தெரிவைச் செய்ய உங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் உள்ளது.' என்றவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி ஓட்டத்தில் தான் இருப்பதை ரணில் விக்கிரமசிங்காவின் உரை உறுதிப்படுத்துகின்றது. எனினும் அது ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலிலா? என்பதை ரணில் விக்கிரமசிங்கா வெளிப்படுத்தாமை தொடர்ச்சியாய் குழப்பத்தை பேணுவதாகவே அமைகின்றது.
ஒன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் பரிந்துரைத்துள்ள பாலித ரங்கே பண்டாரா, 'பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பிரேரணையை அங்கீகரித்து, அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தினால், தேர்தலை தாமதப்படுத்துவது ஜனநாயகத்தை குழிபறிக்காது' என வலியுறுத்தினார். ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து, மக்கள் தீர்ப்பினூடாக ஜனாதிபதியின் பதவி காலத்தை அதிகரிப்பதை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. அரசியலமைப்பின், அரசியலமைப்பை திருத்துதல் எனும் எட்டாம் அத்தியாயத்தில் மக்கள் தீர்ப்பினால் சிலவகை சட்டமூலங்கள் அங்கீகரிக்கப்படுதல் எனும் பகுதியில் 83ஆம் உறுப்புரையின் 'ஆ' பகுதியில் மக்கள் தீர்ப்பினூடாக ஜனாதிபதி பதவி காலத்தை அதிகரிக்கும் ஏற்பாடு முன்மொழியப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பு தொடர்பில் இலங்கையின் முன்அனுபவம் காணப்படுகின்றது. டிசம்பர் 22, 1982இல் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஆறு ஆண்டுகள் நீடிப்பதற்கு மக்கள் தீர்ப்பு தேர்தல் நடாத்தப்பட்டது. இலங்கையில் முதல் மற்றும் இதுவரை நடத்தப்பட்ட மக்கள் தீர்ப்பு இதுவாகும். இந்த வாக்கெடுப்பு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் கோரப்பட்டது. 1982ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கப்பெற்ற 2/3 பெரும்பன்மையை தக்கவைத்து கொள்வதற்காக மக்கள் தீர்ப்பை முன்மொழிந்தார். எதிர்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை ஜெயவர்த்தனவின் சர்வாதிகார நடவடிக்கையாகக் கண்டன. வாக்கெடுப்பை கடுமையாக எதிர்த்தன மற்றும் வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தை நீட்டிக்க முன்மொழியப்பட்டதை தோற்கடிக்க பிரச்சாரம் செய்தன. எனினும் 1982ஆம் ஆண்டு மக்கள தீர்ப்பில் 5,747,206 (70.5%) வாக்குகள் பதிவாகின. அதில் 3,141,223 (54.66%) நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படுவதற்கு ஆதரவாகவும், 2,605,983 (43.3%) எதிராகவும் வாக்களித்தன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் முன்அனுபவத்தை அவரது மருமகன் மற்றும் அரசியல் வளர்ப்பு ரணில் விக்கிரமசிங்கா பின்பற்றுவாரா என்பது தொடர்பில் பொதுவேளியில் சந்தேகங்கள் காணப்படுகின்றது. எனினும் கால இடைவெளி போதாமை தொடர்பிலும் உரையாடப்படுகின்றது.
இரண்டு, மக்கள் தீர்ப்பற்ற முறையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் அதிகரிக்கக்கூடிய சூழலை அரசியலமைப்பின் தவறு ஏற்படுத்தியுள்ளதாக சட்ட நிபுணர்கள் மத்தியில் முதன்மையான உரையாடல் எழுச்சி பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி பதவி காலத்தை அதிகரிப்பதற்கான மக்கள் தீர்ப்பை முன்மொழியும் ஏற்பாட்டில் ஆறு ஆண்டுகள் தொடர்கின்றமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு வாய்ப்பான சூழலாக அரசியல் தரப்பில் உரையாடப்படுகின்றது. அரசியலமைப்பில் காணப்படும் காணப்படும் சட்ட நுணுக்க தவறு பெரும் வாதத்தை உருவாக்கியுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 30 இன் 2ஆம் வாசகத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் கொண்ட தவணை காலமாக வரையறுத்துள்ளது. 'குடியரசின் சனாதிபதி மக்களினால் தேர்ந்தடுக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், அவர் ஐந்தாண்டுகள் கொண்டவொரு தவணைக்கு பதவி வகிக்க வேண்டும்' என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக ஜனாதிபதி பதவிக்காலத்தை அதிகரிப்பதற்கான மக்கள் தீர்ப்பு பற்றி குறிப்பிட்டுள்ள ஏற்பாட்டில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு வருடத்திற்கு மேலதிகமாக அதிகரிக்கப்படுவதற்கே மக்கள் தீர்ப்பை குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின், அரசியலமைப்பை திருத்துதல் எனும் தலைப்பிலான எட்டாம் அத்தியாயத்தில் மக்கள் தீர்ப்பினால் சிலவகை சட்டமூலங்கள் அங்கீகரிக்கப்படுதல் எனும் பகுதியில் 83ஆம் உறுப்புரையின் 'ஆ' பகுதியில், 'விடயத்துக்கேற்ப சனாதிபதியின் பதவிக்காலத்தை அல்லது பாராளுமன்றத்தின் வாழ்காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு காலத்துக்கு நீடிக்கின்ற 30ஆம் உறுப்புரையின் (2)ஆம் பந்தியின் ஏற்பாடுகளை,....' என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தவறினூடாக மக்கள் தீர்ப்பற்ற முறையில் ஜனாதிபதி பதவியை ஆறு ஆண்டுகாலம் தொடரக்கூடிய சட்ட நுணுக்கங்களை ரணில் விக்கிரமசிங்கா கையாளக்கூடிய முனைப்பு காணப்படுகின்றது.
மூன்று, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கடந்த காலங்களில் நீதிமன்ற தீர்ப்புக்களை மீறி பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டு சட்டங்களை இயற்றியுள்ளன. இவ்வாறான முன்அனுபவங்களில் ஜனாதிபதி பதவிக்கால நீடிப்பையும் தொடர வாய்ப்புள்ளதாக அரசியல் தரப்பில் சந்தேகிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க-பொதுஜன பெரமுன அரசாங்கம் செப்டெம்பர்-19, 2023அன்று நிகழ்நிலை பாதுகாப்பு மசோதாவை வர்த்தமானியில் வெளியிட்டது. பெப்ரவரி-01, 2023அன்று சபாநாயகரின் ஒப்புதலூடாக சட்ட அங்கிகாரத்தை பெற்றிருந்தது. குறித்த காலப்பகுதிக்கு இடையே உயர்நீதிமன்றம் நீதிப்புனராய்வு அதிகாரத்தின் கீழ், நிகழ்நிலை பாதுகாப்பு மசோதாவின் பல பிரிவுகள் பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையினூடாவே நிறைவேற்ற முடியுமென தீர்ப்பளித்திருந்தது. எனினும் நீதியமைச்சர் அதில் பல விடயங்களை திருத்தங்களின்றி சமர்ப்பித்து, சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளார். இது உயர்நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வை நிராகரிப்பதனூடாக அரசியலமைப்பை மீறும் செயலாகும். அமைச்சரவை கூட்டு பொறுப்புள்ள நிறுவனம் என்ற அடிப்படையில் நிகழ்நிலை பாதுகாப்பு மசோத அரசியலமைப்பை மீறி சட்டமாக்கப்பட்டதில் அமைச்சரவையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் பொறுப்புடையவராகவே காணப்படுகின்றார். மேலும், ஜூன்-18அன்று பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கா, 'உயர்நீதிமன்றத்தை மீறி, சட்டமாக்கல் தத்துவத்தை பாராளுமன்றம் தன்னிச்சைப்படி முன்னெடுக்கலாம்' என்ற சாரப்பட கருத்துரைத்துள்ளார். இது அதிக விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்கா தமது பதவிகாலத்தை நீடிப்பதற்கான முயற்சியில் உயர் நீதிமன்றம் நீதிப்புனராய்வு என்ற போர்வையில் ஏற்படுத்தக்கூடிய தடைகளை உதாசீனப்படுத்துவதற்கான பூர்வாங்க முயற்சியாக உயர்நீதிமன்ற முடிவைப் புறக்கணித்து சட்டமாக்கலாம் என்ற உரை அவதானிக்கப்படுகின்றது.
எனவே இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் சாத்தியப்பாடு, வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிக்கும் வரையில் உறுதிப்படுத்தி கொள்வதில் பெரும் இடரே காணப்படுகின்றது. 47ஆண்டு கால தேர்தல் அரசியலில் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு தேர்தல் அச்சமூட்டும் பூதமாகவே அமைகின்றது. தேர்தல்களை தவிர்த்து அல்லது நேரடியான தேர்தல் போட்டியை தவிர்த்து தமது ஆட்சியதிகாரத்தை உறுதிப்படுத்தி கொள்வதில் ரணில் விக்கிரமசிங்கா அனைத்து வியூகங்களையும் பரிட்சித்து பார்க்க பின்நிற்கப்போவதில்லை என்பது கடந்த கால அனுபவங்களாகும். உள்ளூராட்சி சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போது, 'அரசாங்கம் மற்றும் அதன் கூட்டணியிலிருந்து தேர்தலுக்கான தடை தொடர்பில் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக' தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment