தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலை பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடு! -ஐ.வி.மகாசேனன்-
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை வலியுறுத்திய தமிழ் பொதுவேட்பாளர் கருத்தின் வீச்சு வடக்கு-கிழக்கில் பரவலாக அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இது முழு இலங்கையையும் தமிழ் பொதுவேட்பாளரின் கருத்துநிலை தொடர்பில் ஆழமான விவாதத்தை விரிவுபடுத்தியுள்ளது. தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியல் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. அண்மைக்கால தென்னிலங்கை வேட்பாளர்களின் வடக்கு நோக்கிய விஜயங்களும் பொதுவேட்பாளர் தொடர்பிலான உரைகளும் அதனையே வெளிப்படுத்துகிறது. மேலும், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு அப்பால் பொதுவேட்பாளர் கருத்தியலின் எழுச்சி சில தமிழ் அரசியல்வாதிகளையும் அச்சமூட்டியுள்ளது. அதனையே தமிழரசுகட்சியின் அரசியல்வாதிகள் சிலரின் பதட்டம் உறுதிசெய்கின்றது. எனினும் தமிழ் பொதுவேட்பாளரின் வெற்றி, கருத்துநிலையில் தொடர்ச்சியாக அது பலப்படுவதிலேயே தங்கியுள்ளது. இக்கட்டுரை தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையில் பலப்படுத்தக் கூடிய அணுகுமுறையை பரிந்துரைப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் அஞ்சலோட்டத்தில், தமிழ் பொதுவேட்பாளர் ஒரு பகுதியை நிரப்பக்கூடியதாக அறிவியல் தளத்தில் கருத்தாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இனவழிப்பு யுத்தத்துக்கு பின்னர் தமிழ் மக்களிள் தன்னம்பிக்கை சக்தியை தமிழ் மக்களின் திரட்சியூடாக வலுப்படுத்துவதற்கான கருவியாக தமிழ் பொதுவேட்பாளர் கருத்தாக முன்னிலைப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ் பொது வேட்பாளர் தமிழரசியல் பரப்பில் கருத்தாக மாத்திரமே நிலைபெற்றிருந்தது. 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தின் தேவைப்பாட்டை தமிழரசியலின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் தொடர்ச்சியாக முதன்மைப்படுத்தி வந்திருந்தார். 2019ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவை சுயாதீன குழு ஒன்றினூடாக தமிழரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளர் கருத்தை கருத்துநிலை எனும் அடுத்த பரிமாணத்திற்கு நகர்த்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர். எனினும் தமிழரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பின்மையால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. மீளவும் கருத்தாகவே சுருங்கி காணப்பட்டது.
2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய தமிழரசியல் நகர்வில் தமிழ் பொதுவேட்பாளர் கருத்து குறிப்பிடத்தக்களவில் கருத்து நிலை என்ற பரிணாமத்திற்கு நகர்வடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழரசியல் பரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையை பெற்றுள்ளமையினாலேயே, 'அதனை தோற்கடிப்பதற்கு களத்தில் இறங்குவேன்' என்ற ஆவேச கொதிநிலையை தமிழரசுகட்சியின் ஊடகப்பேச்சாளர் வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தார். கருத்து (Idea) என்பது தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் எண்ணக்கருக்களிலிருந்து பிறப்பிக்கப்படுமோர் பார்வையாகும். ஒரு பார்வை (Opinion) அல்லது நம்பிக்கைகளின் தொகுப்பு வேறுபட்ட கருத்துக்களின் தொகுப்பிலிருந்து உருவாக்கப்படலாம், அவை தனிப்பட்ட எண்ணங்கள் (Thoughts) அல்லது எண்ணக்கருக்களை (Concepts) சார்ந்தாகும். மறுபுறம், ஒரு கருத்துநிலை (Ideology) என்பது தனிநபர்களின் குழுவால் பொதுவாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அல்லது மதிப்புகளின் தொகுப்பாகும். 2024களுக்கு முன்னர் தனிப்பட்ட கருத்தியலாளர்களின் அறிவியல் பர்வைக்குள்ளே தமிழ் பொதுவேட்பாளர் கருத்தாக மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்பட்டது. எனினும் இன்று வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவு முயற்சியினால் தமிழ் மக்கள் பொதுச்சபை எனும் தனிநபர்களின் குழுவால் பொதுவாக கொண்டிருக்கும் நம்பிக்கையாக தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையாக பரிணமிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமுக குழுக்களின் வெளிப்பாடாக தமிழ் பொதுவேட்பாளர் முன்னகர்த்தப்படுகையிலேயே பதினைந்து ஆண்டுகளாக நிலவிய கருத்து, கருத்துநிலையாக எழுச்சி பெறலாயிற்று. தனிமனித பார்வையிலிருந்து தனி நபர்களின் குழுவின் பொதுவிருப்பாக எழுச்சி பெறலாயிற்று. இது தமிழ் பொதுவேட்பாளரை பரிட்சிக்கக்கூடிய களச்சூழலை திறந்துள்ளது. கருத்துநிலை திணிப்பால் உருவாக்கப்படுவதில்லை. இயல்பூக்கமான தேவைப்பாடுகளிலிருந்து மக்கள் எண்ணங்களில் உணரப்படுவதாக அமைகின்றது. அதன் வெளிப்பாடாகவே வடக்கு-கிழக்கை சேர்ந்த 35இற்கு மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் கூட்டாக பிரேரிக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளர் குறுகிய காலப்பகுதியில் 80இற்கு மேற்பட்ட பொது அமைப்புக்களின் சேர்க்கையுடன் தமிழ் பொதுமக்கள் சபையின் கூட்டு முயற்சியாக பலப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் சபையின் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புக்களில் தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையாக பலமடைந்துகொண்டே செல்கின்றது.
தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையாக இலகுவில் பரிணமிக்க மக்களின் தேவையாக தமிழ் பொதுவேட்பாளர் முதன்மை நிலையை பெறுவதே காரணமாகிறது. 'கருத்துநிலை' விபரண நிலைப்பட்ட ஏற்புடமை பொருந்திய மொழிபெயர்ப்பாக பேராசிரியர் க.சிவத்தம்பி, 'ஒரு வர்க்கத்தினது அல்லது ஒரு தனிமனிதனுக்கு இயல்பாகவுள்ள சிந்தனை முறைமை; ஒரு குறிப்பிட்ட அரசியல் அல்லது பொருளாதார கொள்கை அல்லது அமைப்பின் அடித்தளமாக அமையும் கருத்துக்கள்' என்பதே முனைப்பு பெறுகின்றது எனத்தெரிவித்துள்ளார். மார்க்சிஸ் லெனினிஸ்ட் A.P.செபுருலின் (யு.P.Sepurulin) கருத்துநிலை தொடர்பாக, 'கருத்துநிலை என்பது மக்கள் வாழ்க்கையினதும், சமூக இருக்கை நிலையினதும் பருப்பொருளான நிலைகளை பிரதிபலிக்கும் கருத்துகள், உளப்பாங்குகள் ஆகியவற்றின் முழுமையை தர்க்க நெறிப்படி ஒழுங்குபடுத்தி தருவது' என விளக்கியுள்ளார். அதாவது மக்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கருத்துக்கள் உளப்பாங்குகள் முழுவதும் ஒன்றிணைந்த கருத்தாக முகிழ்க்கும் சூழலே கருத்துநிலை ஆகிறது. இக்கருத்துநிலை சமுகப்பிரக்ஞையின் (Social Consciousness) சித்தாந்த நிலைப்பிரதிபலிப்பாகும். தமிழ் மக்களின் சமுகப்பிரக்ஞையாக உள்ளார்ந்த ரீதியில் காணப்பட்ட தமிழ் பொதுவேட்பாளரை சிவில் சமுக குழுக்கள் சில பிரதிபலிக்க முற்படுகையில், இயல்பான எழுச்சியை பெற்று வருகின்றது.
எனினும் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியல்நிலையின் தெளிவை தொடர்;ச்சியாக விரிவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. மக்களின் எண்ணங்களுக்குள் கருத்துநிலையாக வலுப்பெற வேண்டியது அவசியமாகிறது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.
முதலாவது, தமிழ் பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் திரட்சியை வலுப்படுத்துவதற்கான கருவியாகும். இந்நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையாக தமிழ் மக்களிடம் ஆழமாக கொண்டு சேர்க்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தமிழ் மக்கள் பிரதேசமாக, மதமாக, சாதியமாக, கட்சிகளில் அணியாக பிரிந்து சிதறடிக்கப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமாகும். இது தேசியத்தின் எழுச்சிக்கு ஆபத்தானதாகும். தேசியம் மண், மக்கள் மற்றும் மாண்பு என்ற கருத்தில் திரட்சியை வலியுறுத்துகிறது. துpரட்சியற்ற தனியன்களுக்கு தேசிய உரித்து காணப்படுவதில்லை. தமிழ் மக்கள் தங்களை தேசிய இனமாக அடையாளப்படுத்துகிறார்களாயின் அவர்களிடம் திரட்சி பேணப்படுவது அவசியமாகின்றது. தமிழ் மக்களின் தேசியத்துக்கு எதிராக செயற்படுவோர் முதலில் இலக்கு வைப்பது தமிழ் மக்களின் திரட்சியை குழப்புவதே ஆகும். அந்த பின்னணியிலேயே 1948களில் டி.எஸ். சேனநாயக்கா குடியுரிமை சட்டம் மூலமாக மலையகத்தமிழ் மக்களின் பிரஜாவுரிமையை பறித்து நாடாற்றவராக்கினார். வடக்கு-கிழக்கை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான குடியேற்றமும் தமிழ் மக்களின் திரட்சியை சீர்குலைப்பதேயாகும். இன்று மாவிலாறில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றமூடாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயக நிலத்தொடர்ச்சி சீர்குலைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்குள் பிளவுகளை மையப்படுத்தி பிரச்சாரம் செய்பவர்களின் பின்புலங்களை பரிசிலீக்கையில் தமிழ் தேசிய விரோத சேர்க்கையை கண்டறியலாம். திரட்சி தமிழ்த்தேசியத்திற்கு அடிப்படையாகிறது. அதனை துரிதப்படுத்தக்கூடிய கருவியாக தமிழ் பொதுவேட்பளர் அமைகின்றது. இச்செய்தி மக்களிடம் இலகுவான புரிதலில் சென்றடைவது அவசிமாகிறது.
இரண்டாவது, கருத்துநிலையின் நியாயப்பாட்டை தமிழ் மக்கள் புரிந்து கொள்கையில் பலமான ஆதரவை வெளிப்படுத்தி அதனை சாத்தியப்படுத்த இலகுவாகின்றது. 2009களுக்கு பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் மீள் நிர்மாணம் கருத்துநிலை திரட்சியின் வெற்றிக்கான பலமான சான்றாகும். தமிழ் மக்களின் வெற்றி மனப்பாங்கை சீர்குலைக்க நினைப்போர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணத்தை தமிழ் உள்ளக முரண்பாட்டாக சித்திரிப்போரும் உள்ளனர். எனினும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அப்பாற்பட்ட செயலாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழக செயற்பாடுகளில் இராணுவ தலையீடு அதிகமானதாகும். முன்னாள் துணைவேந்தர் விக்னேஸ்வரன் இராணுவ பரிந்துரையில் பதவி விலக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறனதொரு பின்புலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் உடைப்புக்கு பின்னால் இலங்கை பேரினவாத அரசாங்கத்தின் ஈடுபாடே முதன்மையானது. அதன் வெளிப்பாடே அன்றிரவு உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் மாணவர் சமுகம், தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களின் வலுவான ஒத்துழைப்புடன் தாயகத்தில் போராட்டம் வலுக்கப்பட்டது. இது தாயகத்துக்கு வெளியே தமிழக மற்றும் சர்வதேச ஆதரவை திரட்டியது. தாயகம், தமிழகம் மற்றும் சர்வதேசம் என கருத்துநிலையின் நியாயப்பாட்டை தமிழ் மக்கள் உணர்ந்து திரட்சியடைந்தமையால், அரசின் அநுமதியுடனேயே யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள் நிர்மாணிக்கப்பட்டது. இது கருத்துநிலையின் நியாயப்பாட்டின் பின்னால் மக்களின் அணிதிரட்சியே சாத்தியப்படுத்தியது. தமிழ் பொதுவேட்பாளரின் நியாயப்பாடுகளையும் ஜனரஞ்சப்படுத்தல் வேண்டும்.
மூன்றாவது, கிளர்ச்சி கூட்டு நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைவதுடன் கூட்டு உளவியலை பலப்படுத்துகிறது. தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் கருத்துநிலையாக வலுப்பெறும் சிவில் சமுகங்களின் நகர்வு கிளர்ச்சியின் இயல்புகளை பிரதிபலிக்கிறது. தமிழரசியலில் பரப்பில் 2009களுக்கு பின்னர் வடக்கு-கிழக்கில் எண்பதுக்கும் மேற்பட்ட சிவில் சமுகங்களின் கூட்டு செயற்பாடாக, தமிழ் பொதுவேட்பாளர் சார்ந்த அரசியலிலே காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ஓர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிவில் சமுகங்கள் தமக்குள் ஒன்றுகூடி முடிவெடுத்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக வடக்கு-கிழக்கில் இயங்கும் ஏனைய பொது அமைப்புக்களுடன் தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலை தொடர்பான உரையாடலை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இது படிமுறையாக தமிழ் மக்களிடையே பரவலான உரையாடலை வளர்த்து வருகின்றது. இதன் வளர்ச்சி கிளர்ச்சிக்குரிய பக்குவத்தையே வெளிப்படுத்துகின்றது. கிளர்ச்சி என்பது மாற்றத்தை உருவாக்குவதேயாகும். மாற்றம் எளிமையாக உருவாகுவாதில்லை. சமுக பிரக்ஞையினிலேயே வெளிப்படக்கூடியதாகும். தமிழ் மக்கள் பொதுச்சபை தமிழ் பொதுவேட்பாளர் சார்ந்த நியாயப்பாடுகள் தொடர்பான உரையாடலை விஷ;தரிக்கையில், மக்களிடையே சமுக பிரக்ஞையை ஏற்படுத்துகிறது. இது கிளர்ச்சிக்குரிய பரிமாணத்தையே தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலைக்கு வழங்குகிறது.இக்கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமான மாற்றம் தமிழ் மக்களின் கூட்டு உளவியலை தொடர்ச்சியாக பலப்படுத்தும். கூட்டு உளவியலின் வலுவாக்கம் தோற்கடிக்கப்பட்ட சமுகம் என்ற கடந்த 15 ஆண்டுகால அரசியல் பிரக்ஞையை களையக்கூடிய சூழலை உருவாக்கக்கூடியதாகும்.
எனவே, இத்தகைய காத்திரமான அரசியலை வெளிப்படுத்தக்கூடியதொரு நிலையிலேயே தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையாக வலுப்பெற்று வருகின்றது. காய்க்கின்ற மரத்திற்கே கல்லெறி விழும் என்பது தமிழர் முதுமொழியாகும். இந்த பின்னணியிலேயே தமிழ் பொதுவேட்பாளரை தோற்கடிப்போம் என்ற சூளுரைக்குள் சிலர் பயணிக்க முற்படுகின்றனர். ஜனநாயக அரசியலில் மாற்று கருத்துக்கள் வரவேற்கக்கக்கூடியதாகும். பொதுவிருப்பு அங்கீகாரத்தை பெறுகின்றது. தமிழ் மக்களிடம் தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையாக எழுச்சி பெறுகையில் தமிழ் மக்களின் சமுக பிரக்ஞையாக தமிழ் பொதுவேட்பாளர் வெளிப்படக்கூடியதாக அமையும். இந்நிலையில் பொதுவிருப்பாகவும் தமிழ் பொதுவேட்பாளர் ஆரோக்கியமான முடிவை தரக்கூடியதாக காணப்படும்.
Comments
Post a Comment