1982இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முடிவை; 2024இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விமர்சிக்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் நிறைவேற்றுத்துறைக்கான ஜனநாயக திருவிழா அண்மிக்கையில், அதுசார்ந்த சூடான பேரம் பேசல்களும் நிலை தாவல்களும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லா அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. தென்னிலங்கைக்கு சமாந்தரமாகவே ஈழத்தமிழரசியலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முட்டி மோதுகிறது. ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் மூலோபாயமாக கையாள வேண்டிய களமாகும். அதற்குரிய வாய்ப்பே தமிழ் பொதுவேட்பாளரால் உருவாக்கப்படுகிறது. தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், தென்னிலங்கைக்கு நேரடியாகவும் மமறைமுகமாவும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியும் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் சேவகம் செய்கின்றனர்.  இப்பந்தியில் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் தொடர்பாடல் நீண்ட விளக்கங்கள் முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரை 1982ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அன்றைய தமிழ் அரசியல் கட்சிகளான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்ககள் முன்னணியின் தேர்தல் பதிவான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்  அரசியல் நடத்தையை  தேடுவதாக உருவாக்கப்பகிறது.

ஈழத்தமிழர்களின் அரசியலில், தென்னிலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை விவாதத்துக்கும் மோதலுக்கும் உட்படுத்த வேண்டிய களமாகவே இலங்கை பாராளுமன்றம் அமைகின்றது.  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அண்மைக்காலமாக தமிழரசியலுக்குள் நிகழும் உள்ளக போட்டிகளை, தென்னிலங்கைக்கு அறிக்கையிடும் களமாகவே பாராளுமன்றத்தை பயன்படுத்தி வருகின்றார். கறுப்பு ஜூலை தினத்தன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், 'தமிழ்ப் பொதுவேட்பாளர் என்கின்ற ஒரு சதி அரங்கேற்றப்படுகின்றது. இங்கே ரணில் விக்கிரமசிங்காவிற்கு இரண்டு ஆண்டுகள் கால நீடிப்பு வழங்க வேண்டும் என்று சொல்கின்ற வடக்கு-கிழக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அங்கே பொதுவேட்பாளர்; வேண்டுமென்று சொல்லி பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகின்றார்கள்' என தெரிவித்துள்ளார். துமிழ்ப் பொதுவேட்பாளர் தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணிப்பதை அடிப்படையாய் கொண்டு கட்டியெழுப்பும் கருத்தியல் என்பதை வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்கள் ஏப்ரல்-30அன்று வவுனியாவில் ஒன்று கூடிய எடுக்கப்பட்ட தீர்மானத்திலேயே தெளிவாக வரையறுத்துள்ளனர். 'ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது' எனத் தீர்மானித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீள மீள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தென்னிலங்கை வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான உத்தியாக தமிழ்ப் பொதுவேட்பாளரை உரையாடுவது, கடந்த காலங்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் தமிழ் வேட்பாளராக களமிறங்கியமைக்கான காரணங்களை சந்தேகத்திற்குரியதாக்கிறது.

இன்று தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலை நிராகரிக்கும் தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் தாய்க்கட்சியான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸே தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான அடிப்படை சித்தாந்தத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் 1982ஆம் ஆண்டு முதலாவது ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் குமார் பொன்னம்பலம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதாகவே குமார் பொன்னம்பலம் ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். மாறாக இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மேற்கொள்ளும் புறக்கணிப்பை 1982ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மேற்கொண்டிருந்தது. குறிப்பாக ஈழக்கொள்கையும், 1978ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாமையை சுட்டிக்காட்டியும் அமிர்தலிங்கம் புறக்கணிப்புக்கான அழைப்பை விடுத்திருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளாது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ் வேட்பாளரை களமிக்கியிருந்தது. 1982ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழரசியல் நடத்தையை தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியமாகின்றது.

1982ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் இயங்கிய கட்சிகள் மாறுபட்ட முடிவுகளுடன் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார். வடக்கு-கிழக்கில் யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் குமார் பொன்னம்பலத்தை விட தென்னிலங்கையின் வேட்பாளர்கள் அதிக வாக்கினை பெற்றிருந்தார்கள். அதேவேளை அன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழர் விடுதலை கூட்டணி புறக்கணித்திருந்தார்கள். ஏ.ஜே.வில்சன் (A.J.Wilson) இலங்கையின் உடைவு: சிங்களவர்-தமிழ் மோதல் (The Break-Up of Sri Lanka : The Sinhalese-Tamil Conflict) எனும் நூலில் தமிழர் விடுதலை கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு தொடர்பில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பை பதிவு செய்துள்ளார்.

'ஒரு நாள் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஜனாதிபதி ஜெயவர்த்தன மற்றும் பிரதமர் பிரேமதாஸவுடனான சந்திப்பிற்கு அழைக்கப்பட்டார், அவர்கள் இருவரும் போட்டியை எதிர்கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவு ஜனாதிபதிக்கு முக்கியமானது என்று அவரிடம் தெரிவித்தனர். ஜெயவர்தன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மாவட்ட அபிவிருத்தி சபைகள் ஆரம்பிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டது. புதிய அரசியலமைப்பின் செல்லுபடியாகும் தன்மையை தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி அங்கீகரிக்காததால், தேர்தலில் போட்டியிடுவது அல்லது அதில் பங்கு பெறுவது என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதே அமிர்தலிங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. அவர் தனது கட்சியின் ஆதரவை உறுதி செய்ய முடியவில்லை அது நடுநிலையாக இருக்கும். ஜனாதிபதி இந்த நிலையை அவர் வாக்காளர்களை எதிர்கொள்ள ஒரு அடிப்படையாக ஏற்றுக்கொண்டார்.'

1982ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் விடுதலை விடுதலைக்கூட்டணியின் முடிவில் பல்வேறு விமர்சனங்கள் பொதுவெளியில் காணப்படுகின்றது. குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நலன்கள் முதன்மைப்படுத்தி அமிர்தலிங்கம் செயற்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ் விடுதலை கழகத்தின் இணைத்தலைவரான குட்டிமணியை தமது ஆதரவு வேட்பாளராக முன்னிறுத்துமாறு பலதரப்பட்ட அழுத்தங்கள் இருந்த போதிலும், தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவின் கோபத்திற்கு அஞ்சியிருந்தார் என்ற விமர்சனம் காணப்படுகின்றது. இவ்விமர்சனங்களை மெய்ப்பிப்பதாகவே ஏ.ஜே.வில்சனின் அமிர்தலிங்கம்-ஜே.ஆர்.ஜெயவர்த்தன உரையாடல் குறிப்பும் பின்னிகழ்வும் அமைகின்றது. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை தவிர ஏனைய வடக்கு-கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் 50சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்தது. அவ்வாக்குப்பதிவில் அதிகூடிய வாக்குகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவே பெற்றிருந்தார்.

தமிழ் அரசியல் தலைமைகள் முதலாவது ஜனாதிபதி தேர்தலிலேலேயே சிதறுண்ட முடிவுகளையே எடுத்திருந்தார்கள். எனினும் எடுக்கப்பட்ட முடிவுகளுக்காகவும் வினைத்திறனுடன் செயற்பட்டிருக்கவில்லை. 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் பேராதரவளித்து தமிழர் விடுதலை தேசிய கூட்டணிக்கு பின்னால் ஒன்றிணைந்தார்கள். வடக்கு மாகாணத்தில் முழுமையான 14 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக்கூட்டணி பெற்றிருந்தது. சிங்கள மற்றும் முஸ்லீம் இனங்களின் நில ஆக்கிரமிப்பால் சிதைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் 12 ஆசனங்களில் 4 ஆசனங்களையும் பெற்றிருந்தது. எனினும் குறுகிய கால இடைவெளியில் 1982ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெற்றி கொள்ள முடியாமை தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயற்பாட்டையே கேள்விக்குட்படுத்துகிறது. மேலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தமிழ் வேட்பாளர் முடிவு, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை தவிர ஏனைய வடக்கு-கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் எழுச்சி பெற்றிருக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலும் 50சதவீதத்தினை கூட தமிழ் வேட்பாளராக குமார் பொன்னபலத்தினால் பெற்றிருக்க முடியவில்லை. தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி கட்டமைக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் நடுநிலைமை முடிவு, குமார் பொன்னம்பலத்தின் 'தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை நிரூபிப்பதற்காக' பிரச்சாரத்தை வலுவற்றதாக்கியிருந்தது. தேர்தல் புறக்கணிப்பை அறிக்கையுடன் மட்டுப்படுத்தி அதற்குரிய பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கவில்லை. இது அமிர்தலிங்கம், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நலனுக்காக நடுநிலைமை முடிவை எடுத்தார் என்ற குற்றச்சாட்டையே உறுதி செய்கின்றது. பின்னாளில், வடக்கு-கிழக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவே 1983ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு காரணகர்த்தாவாக இருந்தார். வடக்கு கிழக்கில் கணிசமான உயர்வான வாக்களிப்பு சதவீதங்கள் தமிழர் விடுதலை கூட்டணியின் புறக்கணிப்புக்கான அழைப்பின் தோல்வியை உறுதிப்படுத்தியது.  மறுதளம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தமிழ் வேட்பாளர் பிரச்சாரமும் தமிழர்களிடம் பலவீனப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மற்றும் அபிலாசைகளை பிரச்சாரப்படுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸினால் அரசியல் கட்சிகளாய் கூட்டு முடிவினை வெளிப்படுத்த தவறியிருந்தனர். தனியன்களாக தமது விருப்புக்கு உட்பட்டே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் வேட்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்தியிருந்தார். இது தமிழ் மக்களில் குமார் பொன்னம்பலம் உயர்வீச்சான செல்வாக்கை பெற முடியவில்லை. 

தமிழ் மக்களின் அபிலாசை மற்றும் திரட்சியை வெளிப்படுத்தும் மூலோபய நகர்வு தமிழ்ப் பொதுவேட்பாளர் எனும் கருத்தியலாலேயே சாத்தியப்படுத்தக்கூடியாகும். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத்தின் பொது அடையாளம். அத்தகைய பொது அடையாளத்தைக் கொண்ட வேட்பாளரை சிவில்தரப்புக்கள், தொழில்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் மற்றும் பொதுத்தளத்தில் தமிழ் தேசியத்தோடு இயங்கும் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் என்ற பெரும் கூட்டின் அனுசரணையோடு நிறுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியச் சக்திகள் தமிழ் பொது வேட்பாளர் பொறுத்து உடன்பாட்டைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அதேநேரம் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களும் மலையக மக்களும் ஆதரிப்பதற்கான சூழலை அத்தகைய தமிழ் பொது வேட்பாளரின் பிரகடனம் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு ஒரு பொதுத்தளத்தில் பொது அங்கீகாரத்துடன் தமிழ் பொது வேட்பாளர் சார்ந்த நடைமுறை உருவாக்கப்படும் போது மட்டுமே அதனை தமிழ் பொது வேட்பாளர் எனக்கணிப்பிட முடியும். அதுவே, ஈழத்தமிழர்களிள் பொதுவிருப்புக்கும், கூட்டுத்திரட்சிக்குமான அங்கீகாரமாகும்.

எனவே, தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலாக 1982ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தமிழ் வேட்பாளர் எனும் முயற்சியின் தவறுகளிலிருந்து சீர்திருத்தப்பட்டதாகும். தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் 2010ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி கருத்தியலாளர்கள் மத்தியில் உரையாடப்படுகிறது. எனினும் இதற்கான அடித்தளம் கடந்த கால அனுபவங்களிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கைக்கு ஆதரவான முயற்சிகளின் பாதகமான விளைவுகளும், தமிழ் வேட்பாளரின் சாதகமான அனுபவங்களும் பரிசீலிக்கப்பட்டு, வகுக்கப்பட்ட கருத்தியலாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் அமைகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான முன்னணியின் சதிக்கோட்பாடுகள், அவர்களின் கடந்தகால அரசியல் முயற்சிகளை அவர்களே விமர்சிப்பதாகவே அமைகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-