சஜித் பிரேமதாசாவின் அரசியல் பயணம் சிங்கள பௌத்தத்தினை மையப்படுத்தியே நகர்த்தப்பட்டுள்ளது!! -ஐ.வி.மகாசேனன்-

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதான நிலையில் காணப்படுகின்றார். குறிப்பாக தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களில் நிலையான கூட்டணி ஆதரவுடன் சஜித் பிரேமதாசா காணப்படுகின்றார். கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்காவிற்கான ஆதரவினை நிராகரித்ததை தொடர்ந்து சஜித் பிரேமதாசாவின் பலமே அதிகரிக்கப்பட்டுள்ளதா தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கருத்துரைத்துள்ளனர். கடந்த கால அனுபவங்களில் தமிழரசுகட்சியின் சுமந்திரன் அணி சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவை வழங்கும் நோக்கிலேயே, தமிழ்ப்பொதுவேட்பாளரை நிராகரிப்பதாக தமிழ் அரசியல் அவதானிகள் கருத்துரைத்துள்ளள்ளனர். தென்னிலங்கை மற்றும் தமிழ் அரசியல் அவதானிகளின் பொதுக்கருத்தாக ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் பலம் உறுதிப்படுத்தக்கூடியதாக அமைகின்றது. எனினும் தமிழ்த்தரப்பு சஜித் பிரேமதாசாவை தேர்வு செய்வது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. கடந்த வாரம் இப்பகுதியில் சஜித் போர்க்குற்ற இராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அரணாக செயற்படுவது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இக்கட்டுரை சஜித் பிரேமதாசாவின் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னரான ஈழத்தமிழர் அரசியலை மறைந்த தமிழரசுக்கட்சியின் பொருந்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே நெறிப்படுத்தியிருந்தது. குறிப்பாக 2018 உள்ளூராட்சி சபை தேர்தல் வரையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநித்துவத்தை வழங்கியிருந்தார்கள். இரா.சம்பந்தனின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு என்பது நல்ல பேய் தெரிவு (Choice of Good Evil) முறையாகவே அமைந்திருந்தது. நடைமுறையில் பேய் மனிதனை அச்சமூட்டுவதாகவும் நெருக்கடியை கொடுப்பதாகவும் அமையக்கூடியதாகும். எனவே தென்னிலங்கை வேட்பாளர்கள் பேய் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு நெருக்கடியானவர்கள் என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் ஏற்றுக்கொண்டே தென்னிலங்கை வேட்பாளர்களுக்கான ஆதரவை வழங்கி வந்துள்ளார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாகவும், தமிழ் மக்கள் கூட்டணியாகவும் செயற்படுவோர் கடந்த கால தவறுகளிலிருந்து தங்களை மாற்றி கொண்டுள்ளார்கள். தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து, ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்தி தமிழ் மக்களின் திரட்சியை வலுப்படுத்துவதற்கான முன்னாயர்த்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழரசுக்கட்சி கடந்த காலத்திலிருந்து பாடங்கற்காதவர்களாகவே உள்ளனர். தொடர்ச்சியாக சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு ஜனாதிபதி தேர்தல்களில் ஆதரவளித்து கொண்டு, சிங்கள பௌத்த பேரினவாதத்தால் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பேச்சுப்போட்டி நடாத்தி வருகின்றார்கள். 

அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம். அதிகாரத்தை கைப்பற்றுவதை மையப்படுத்தியே செயற்பாடுகள் கட்டமைக்கப்படும். இலங்கை அரச அதிகாரம் பௌத்த மதபீடங்களுடன் இணைந்ததாகவே அமைகின்றது. எனவே, இலங்கை அரச அதிகாரத்தை கைப்பற்ற முனைவோர் சிங்கள பௌத்தத்திற்கான தமது உயர்ந்தபட்ச சேவகத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயற்படுவதே மரபாகும். இலங்கையின் அரசியலமைப்பே அத்தியாயம் ஐஐ-இனூடாக பௌத்தத்திற்கான சிறப்புரிமையை நியாயப்படுத்துகிறது. 'இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10ஆம், 14(1)(உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்' இந்நியாயத்துக்குள்ளேயே தென்னிலங்கை அரசியல்தரப்பின் செயற்பாடுகள் அமைகிறது. சஜித் பிரேமதாசா விதிவிலக்கல்ல. 

ஒன்று, சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணம் சிங்கள பௌத்தத்தினை மையப்படுத்தியே நகர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சஜித் பிரேமதாச இரு தடவைகள் அமைச்சுப்பதவியை பெற்றுள்ளார். 2001-2004ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் இளைய உறுப்பினராய் பிரதி சுகாதார அமைச்சராக செயற்பட்டிருந்தார். 2015-2020ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் தேசிய அரசாங்க காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ;ட தலைவராக வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக செயற்பட்டிருந்தார். வீட்டுவசகதி மற்றும் கட்டுமானம் அமைச்சினை தந்தை ரணசிங்க பிரேமதாசாவின் தொடர்ச்சியை முன்னிறுத்தி தெரிவு செய்திருந்தார். மறுதளம் கலாசார அலுவல்கள் அமைச்சினை பௌத்தத்திற்கான சேவகத்தை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்திருந்திருந்தார். குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு-கிழக்கில் 1000 விகாரைகள் நிர்மானிக்கப்படுமென ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், சஜித் பிரமதாசா கலாசார அலுவல்கள் அமைச்சராக, 'பௌத்த சாசனத்திற்கும் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி' சங்க சபையினால் கௌரவத்தை பெற்றார். இக்கௌரவிப்பு நிகழ்வு மல்வத்த பீடாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இதனூடாக சஜித் பிரேமதாசா தன்னை சிங்கள பௌத்த பாதுகாவலனாக செயற்படுவதனை முதன்மைப்படுத்துகின்றமை உறுதியாகிறது.

இரண்டு, 2015-2019 காலப்பகுதியில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியிருந்தார். திருகோணமலை மாவட்டத்தில் வாழைச்சேனை, ஈராவூர் மற்றும் ஊறுகாமம் ஆகிய இடங்களில் மூன்று மாதிரி கிராமங்கள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சத்தால் தொடங்கப்பட்டது. சஜித் பிரேமதாச திருகோணமலை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மாதிரி கிராமங்களை ஆரம்பித்து, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக பிரச்சாரப்படுத்தினார். அவ்வறே மட்டக்களப்பிலும் நான்கு மாதிரி கிராமங்களை நல்லிணக்க போர்வையில் தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியிருந்தார். குறிப்பாக கெவுலியா மடுவில் உருவாக்கப்பட்ட மாதிரி கிராமம் நீண்ட சச்சரவினை உருவாக்கியிருந்தது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேச எல்லையில் அமைந்துள்ள கெவுலியா மடு, சிங்கள பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் ஆதரவுடன் சிங்கள குடியேற்றவாதிகளால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இக்கிராமம் நீண்டகாலமாக சிங்களக் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசசத்திலேயே நல்லிணக்க போர்வையில் சிங்கள குடியேற்றங்களை சஜித் பிரேமதாசா உருவாக்கியிருந்தார். இனநல்லிணக்கம், ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குவதால் ஏற்படப்போவதில்லை. கிழக்கு மாகாணத்தில் பரவலாக தமிழ் பேசும் முஸ்லீம் பயனாளிகள் பாரம்பரிய தமிழ் கிராமங்களுக்கும், சிங்கள குடியேற்றவாசிகள் பெரும்பான்மையாக முஸ்லிம் மற்றும் தமிழ் பகுதிகளுக்கும் கொண்டு வரப்பட்டதால் மாதிரி கிராமம் திட்டங்கள் இன பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. இத்தகைய அரசியலையே வடக்கு மாகாணத்திலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக முன்னெடுத்திருந்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக சஜித் பிரேமதாசா தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை சட்டபூர்வமாக்குவதையே முதன்மை செயற்பாடாக மேற்கொண்டிருந்தார்.

மூன்று, சஜித் பிரேமதாசாவின் அரசியல் வளர்ச்சி வலுவான பௌத்த பின்னணிகளுடன் இறுகப்பிணைந்தாக அமைகின்றது. குறிப்பாக 1994ஆம் ஆண்டு அரசியலுக்கு பிரவேசித்த ஆரம்ப காலப்பகுதியில் ஜன சுவாயா மற்றும் சசுனதா அருணாவைத் தவிர அவர் தனது தருண சவியா போன்ற அமைப்புக்கள் மூலம் சிங்கள பௌத்த இளைஞர்களுடன் உறுதியான பிணைப்பை பேணினார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் பயணிக்கையிலும் அரசியல் அரங்குகளில் தொடர்ச்சியாக தன்னை சிங்கள பௌத்தராக மற்றும் சிங்கள பௌத்த தேசியவாத நிலைப்பாட்டையே முதன்மைப்படுத்தியிருந்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்கு சார்பு மற்றும் தாராளவாத நிலைப்பாட்டில் இருந்து விலகி, தன்னை ஒரு பக்தியுள்ள சிங்கள பௌத்தராக சித்தரித்து கட்சிக்கு சிங்கள பௌத்த தேசியவாத நோக்குநிலையை சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். பின்னாளில் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்திலும் அதனையே உறுதிப்படுத்தி கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தி 'சமகி ஜன பலவேகய' (ளுயஅயபi துயயெ டீயடயறநபயலய) என சிங்களத்திலேயே பெயரிடப்பட்டுள்ளமையும் அதனையே உறுதி செய்கின்றது. மேலும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரங்களில் பகிரங்கமாகவே, 'ரணசிங்க பிரேமதாசவின் தேசபக்தியும் பௌத்த குணங்களும் தன்னிடம் இருப்பதாகவும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும்' தெரிவித்திருந்தார்.

நான்கு, தமிழ் மக்கள் சர்வதேசரீதியாக கோரும் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்திலும், அதற்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாதிகளை பாதுகாப்பவராகவே சஜித் பிரேமதாசா செயற்பட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த பாரிய இராணுவத் தாக்குதலை இலங்கை இராணுவம் நடத்தியதால், சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்து, 2014இல் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு ஞானிசாரா எனும் பௌத்த பிக்கு அணிவகுப்பு நடத்தினார். 2019ஆம் ஆண்டு குறித்த துறவி மருத்துவ சிகிச்சையில் இருக்கையில் கொழும்பில் நடைபெற்ற சமய வைபவமொன்றில், சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்சா மற்றும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, ஆசிர்வாதம் கோரிய பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பௌத்தம் மனித உரிமைகளையும் அமைதியையுமு; போதிக்கும் மார்க்கமாகும். அம்மார்க்கத்தை பின்பற்றும் துறவி மனித உரிமை குற்றங்களை விசாரிப்பதற்கு எதிராக அணிவகுப்பு செய்கையிலேயே, பௌத்த மார்க்க போதனையை இழக்கின்றார். அவருக்கான ஆசிர்வாத பிரார்த்தனையில் இனப்படுகொலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுடன் இணைந்து சஜித் பிரேமதாசாவின் ஈடுபாடு, தென்னிலங்கையின் அரசியல்வாதிகள் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சியில் சமனாக உள்ளார்கள் என்பதையே உறுதி செய்கிறது.

எனவே, சஜித் பிரேமதாசாவின் அரசியல் பயணம் தென்னிலங்கையின் அரசியல் கலாசாரத்தை ஒத்து பயணிக்கும் பௌத்த தேசியவாதம் முதன்மையானதாகவும் தவிர்க்கமுடியாத அம்சமாகவும் மிளிர்கின்றது. சஜித் பிரேமதாசாவின் அரசியல் பரிணமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி மேற்கு சார்பு தாராள ஜனநாயக கொள்கையை முன்னிறுத்தியது. மேற்குசார் ஜனநாயகம் என்பது வெள்ளையினத்திற்கானது. அதாவது வெளிளையினத்தின் ஜனநாயகமே மேற்குலக ஜனநாயகம் என்பதாக அது பிரதிபலிக்கிறது. இது அடிப்படையில் ஜனநாயகப் பண்புகளை அதிகம் கொண்டிருந்தாலும் அதன் முதன்மை வெள்ளையினத்தின் ஆதிக்கமாகவே தெரிகிறது. இப்பண்புகளுக்குள்ளேயே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனநாயகமும் அதிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனநாயகமும் அமைகின்றது. இது சிங்கள பௌத்தத்தின் ஆதிக்கத்திற்குள்ளேயே ஜனநாயகத்தை வரையறை செய்கிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பேரினவாதிகளுக்கும் தமிழ் மக்கள் வாக்களிப்பதனூடாக, தமக்கு எதிரான ஆக்கிரமிப்பையும் ஒடுக்குமுறைகளையும் தமிழ் மக்களும் அங்கீகரிப்பதாகவே அமைகின்றது. அதற்கான வழிகாட்டலையே தமிழரசுக்கட்சியினர் தமிழ் மக்களுக்கு வழங்குகின்றார்கள்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-