தமிழரசு கட்சி தமிழ் மக்களிற்கான அரசியல் தலைமையை வழங்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்கள் அரசியலை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வெகுவாக குழப்பி உள்ளது. ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் சிவில் சமுகம் பலமான கருத்தியலை உருவாக்கி, மக்களிடம் விதைத்துள்ளார்கள். எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த கால எண்ணங்களுடன், மக்களிடமிருந்து வெகுதொலைவாகவே தொடர்ச்சியாக பயணிக்கிறார்கள். தலைமைத்துவ கிரீடங்களை தமக்கு தாமே சூடிக்கொள்வதிலேயே முனைப்பாக உள்ளார்கள். எனினும் தலைமைத்துவத்திற்கான இயல்பை கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் வலுவான சந்தேகங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நிறைவில், ஊடகவியலாளர் சந்ததிப்பில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 'அரசியல் தலைமைத்துவம் வகிக்கும் கட்சியாக’ தங்களை பிரகடனப்படுத்தி கொண்டார். இது பொதுப்பரப்பில் கேலிக்கையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை தமிழரசு கட்சி ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமான அரசியல் தலைமையை வழங்குகின்றதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பட தமிழ் மக்கள் அதிகம் நம்பிக்கையை குவித்த அரசியல் இயக்கமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பே காணப்படுகின்றது. தமிழ் மக்கள் தனிக்கட்சிகள் மீதும், தனிநபர்கள் மீதும் நம்பிக்கையை குவிக்க தயாராகவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் தோற்கடிக்கப்படும் நிலைகளே உருவாகியது. எனினும் காலப்போக்கில் தமிழ்த்தேசிய கூட்மைப்புக்குள், தமிழரசுக்கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களின் ஆதிக்கம் தொடர்பான குற்றச்சாட்டு அதிகரிக்கப்பட்டது. இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக, தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் பரப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எழுச்சி பெற்றது. 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளை தென்னிலங்கை அரசியல் கட்சியும், அதற்கு ஆதரவான கூட்டு கட்சியின் உறுப்பினர்களும் பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த அங்கயன் இராமநாதனும், மட்டக்களப்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டனர். மேலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏகபோக உரிமமும் சிதைக்கப்பட்டிருந்தது. தமித்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைமைத்துவம் பலவீனப்பட்டதில் தமிழரசுக்கட்சியின் தனியாதிக்கமே ஏகபோக காரணமாகும். 

தமிழரசு கட்சியின் மனநிலை அதன் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலத்திலேயே இன்றும் காணப்படுகிறது. தமிழரசு கட்சியின் தற்போதைய உறுப்பினர்கள், கட்சிசார்ந்த உரையாடலை முன்னிறுத்துகையிலும், செல்வநாயகத்தின் அரசியலையே முன்னிலைப்படுத்துகிறார்கள். மாறாக, தமது அரசியல் செயற்பாடுகளை தற்துணிவாக சொல்ல தயாரில்லை. தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையையும், செல்வநாயகம் காலத்திலேயே வழங்கியிருந்தது. அதற்கு பின் போராட்ட இயக்கமும், போராட்ட இயக்க ஆதரவுமே தமிழ் மக்களுக்கான தலைமையாக நோக்கப்பட்டது. எனினும் 2009களுக்கு பிற்பட தமிழ் மக்கள் மேய்ப்பானற்ற மந்தைகளாகவே சர்வதேச அரங்கில் அவதானிக்கப்பட்டார்கள். தலைமைகளாக நோக்கப்பட்டவர்கள் தலைமைத்துவ இயல்பை கொண்டிருக்கவில்லை. அதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, தலைமைக்குரிய முதன்மையான பண்பு ஒருங்கிணைப்பு ஆகும். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையாக  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நோக்கப்பட்டது. அதனுள் ஆதிக்கம் செலுத்திய தமிழரசுக்கட்சி தலைவர்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டுப்பலதை சிதைத்தார்கள். தமிழ் மக்கள் தேசிய இனமாக திரட்சியே அரசியல் பலமாகும். அதனை முன்னிறுத்தியே 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி உருவாக்கத்தில் செல்வநாயம் முன்னின்று விட்டுக்கொடுப்புடன் செயற்பாட்டார். தான் உருவாக்கிய தமிழரசு கட்சியினை முடக்கி, கூட்டணி செயற்பாட்டை முதன்மைப்படுத்தினார். கூட்டணி உருவாக்கத்திற்கு, அரசியல் எதிரியான ஜி.ஜி.பொன்னம்பலத்தை நாடிச்சென்று, கூட்டணிக்குள் அழைத்து வந்தார். தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியது. தமிழர் ஐக்கியம் வலுவானது. எனினும் சமகால தமிழரசு அரசியல் தலைமைகளின் நடாத்தைகள் செல்வாநாயகத்திற்கு முரணானதாக அமைகின்றது. விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் கிழக்கு ஊடகவியலாளர்களால் கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை, தமிழரசுக் கட்சி தனது எதேச்சதிகார மோகத்தால் சிதைத்துள்ளது. இன்று தமிழ் அரசியல், கட்சிகளின் பிணக்கினையே அதிகம் முன்மைப்படுத்தி பயணிக்கிறது. தேசிய விடுதலை சார் அரசியல் கட்சிகளிடம் இல்லாமல் போயுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட தமிழரசியலை பாதுகாக்க முடியாது, தமது எதேச்சதிகாரத்தால் சிதைதுள்ளவர்கள், தம்மை தலைமையாக அடையாறப்படுத்துவது விமர்சனத்திற்குரியதாகும்.

இரண்டாவது, தலைமை என்பது தன்னை பின்தொடர்பவர்களை சரியாக நெறிப்படுத்துபவராக காணப்படுதல் வேண்டும். தமிழரசு கட்சி ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்களை நெறிப்படுத்த தவறியே வருகின்றது. தமிழ் மக்களிடம் ஆழமாக வேருன்றியுள்ள ராஜபக்சா எதிர்ப்புவாதத்திற்கு பின்னாலே ஓடுவதே தமிழரசு கட்சியின் தலைமை செயற்பாடாக அமைந்துள்ளது. 2009ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சா போர்வெற்றியை முதன்மைப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டார். 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ் மக்கள், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை ராஜபக்சாவை பழிவாங்குவதற்கு பயன்படுத்தி கொண்டார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதலால் மரணத்திற்கு சென்று வந்த சரத் பொன்சேகாவை சிங்கள மக்களே போர் நாயகனாய் ஏற்றுக்கொள்ளாத போது, தமிழ் மக்கள் சாதாரண அறிவில் இனப்படுகொலை தளபதியாக ஆராய போவதில்லை. எனவே தமிழ் அரசியல் தலைமை, இலங்கை அரசு சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பு என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தி, மக்களை சீராக நெறிப்படுத்தியிருக்க வேண்டும். மக்கள் விழிப்பற்ற எண்ணங்களுக்கு பின்னால் ஓடியிருக்க கூடாது.

மூன்றாவது, தலைமை பொறுப்பு கூறுவோராக இருத்தல் வேண்டும். தமிழரசு கட்சி 2009களுக்கு பின்னரான தனது அரசியலுக்கு பொறுப்புக்கூற தயாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. இன்று தமிழரசுக் கட்சி தலைவர் தெரிவு விவகாரம், நீதிமன்றில் கட்சியை முன்னிறுத்தியுள்ள போதிலும், தலைமைக்கான தேர்தலை ஜனநாயக பொறிமுறையாக புகழாரம் சூடிக்கொள்கின்றார்கள். 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில், பௌத்தத்திற்கு முதன்மையளித்து ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு உருவாக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேரிலான தமிழரசு கட்சி பலமான ஆதரவை வழங்கியது. தமது சாதனையாகவும் உரிமை கொண்டாடியது. அவ்அரசியலமைப்பு உருவாக்க முடியாமல் போனால் பதவி விலகுவதாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். எனினும் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியடைந்த பின்னும், புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வருமென காரணங்களையே கூறினர். ஜனநாயகத்தை உரையாடும் போதும், ஜனநாயகத்தின் அடிப்படை செயல்முறையான பொறுப்புக்கூறலை செய்ய தயாரில்லாத அரசியலையே தமிழரசுகட்சியும் அதன் உறுப்பினர்களும் பின்தொடர்கின்றார்கள்.

நான்காவது, அரசியலில் தலைமைத்துவம் என்பது பொருத்தமான களத்தை ஆராய்ந்து மூலோபாயத்தை பயன்படுத்தும் ஆளுமை திறனாகவே அமைகின்றது. இதனையே அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது பட்டறிவிலும் அரசியல் ஆய்விலும் உறுதி செய்துள்ளார். எனினும், தமிழரசு கட்சி கடந்த 75வருடங்களில் மூலோபாய செயற்பாடுகளை கொண்டிருக்கவில்லை. அரசியலில் தொடர்ச்சியாக ஒரே அணுகுமுறையையே பின்பற்றுவதை பெருமையாய் பார்க்கிறார்கள். 2024ஆம் ஆண்டு அரசியல் நடவடிக்கையையும், 1950-1970களில் செல்வநாயகத்தை பின்பற்றியே முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் செல்வநாயகத்தின் அணுகுமுறையை தொடர்வதாக பெருமை பாராட்டுகிறார்கள். குறிப்பாக இணக்க அரசியல் முன்முயற்சி, தென்னிலங்கையுடன் பேச்சுவார்த்தை என்பவற்றை தொடருகையில் செல்வநாயகத்தை சுட்டியே அணுகுமுறையை தொடருகின்றார்கள். 50 ஆண்டுகளை கடக்கிறது. உலக ஒழுங்கு இருதுருவம், ஒரு துருவமாகி, பல் துருவமா? துருவமற்ற அரசியலா எனும் வாதம் வரை பரிணமித்துள்ளது. ஈழத்தமிழ் அரசியல் கட்சி இன்றும் இருதுருவ உல ஒழுங்கு காலத்தின் நடைமுறையையே தொடர்ச்சியாக இறுக பற்றியுள்ளார்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டும். அதுவே மூலோபாய தலைமைத்துவத்தின் சிறப்பாகும். மாறாக கடந்த கால நடைமுறையையே நிகழ்காலம், எதிர்காலமென தொடர்ச்சியாக பின்பற்றுவது தலைமையே ஆகாதாகும்.

ஜந்தாவது, தலைமை புதிய பாதையை உருவாக்கி பயணிக்கக் கூடியதாகும். தமது எதிரிகளின் பாதையை தொடர்வது தலைமை ஆகாது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முடிவு, தமது அரசியல் எதிராளிகளை பின்பற்றுவதாகவே அமைய உள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தல் அண்மிக்கையிலேயே, தமிழரசு கட்சி தனது முடிவை அறிவிப்பதாக முன்மொழிந்துள்ளது. இது தமிழரசுக்கட்சி பிறரின் முடிவுக்குள் பயணிக்க வேண்டிய சூழலையே உருவாக்கக் கூடியதாகும். தென்னிலங்கை கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்துக்குள் சமஷ்டியை உள்வாங்காவிடில், தேர்தலை புறக்கணிப்பதோ அல்லது தமிழ்ப்பொதுவேட்பாளரை ஆதரிப்பதே தீர்வாகும். இரண்டுமே தமிழரசியலில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானமாகும். மாறாக சமஷ்டியை அங்கீகரிக்காத தென்னிலங்கையை ஆதரிக்கும் இணக்க அரசியல் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணாவின் அரசியல் வகையறாவாகும். ஏனையோரின் பாதையில் பின்னால் ஓட முனையும் தமிழரசுக்கட்சி தமிழர்களின் அரசியல் தலைமை என்ற உரையாடலுக்கு பொருத்தமற்றதாகும்.

எனவே, தமிழரசு கட்சி ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமை என்பது, வெறுமையாக தமிழரசுக்கட்சியின் தேர்தல் அரசியல் உத்தியாக மாத்திரமே அமைகின்றது. நடைமுறையில் தமிழரசுக்கட்சி தலைமைத்துவத்திற்குரிய பண்பை வெளிப்படுத்தியிருக்கவில்லை. குறைந்தபட்சம் ஓர் அரசியல் கட்சியாக, தமது கட்சியின் தலைவரையே தமிழரசுக்கட்சியால் தெரிவு செய்ய முடியவில்லை. தமிழரசுக்கட்சியின் தலைவர் யார் என்பதே பொதுவெளியில் பலமான கேள்வியாக காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் மூடிய கூட்டங்களில் தலைமை மாவை சேனாதிராசா குறிப்பிடப்படுகிறார். தென்னிலங்கை வேட்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பை ம.ஆ.சுமந்திரன் மேற்கொள்கின்றார். பொதுக்குழுவில் இடம்பெற்ற தலைவர் தேர்தலில் சி.சிறிதரன் வெற்றி பெற்றிருந்தார். ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையாக தம்மை அடையாளப்படுத்த முற்படும் தமிழரசுக்கட்சியினர், முதலில் தமக்கான தலைவரை தெரிவு செய்வது அவசியமாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-