தமிழ்த்தேசிய முழக்கத்தை சங்கு ஒலிக்கும்! -ஐ.வி.மகாசேனன்-

ஆகஸ்ட்-15அன்று வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல்தல் வாக்குசீட்டில் 39 வேட்பாளர்கள் பெயரும் சின்னங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான சின்னங்களும், பிரச்சார அரங்குகளுமே இலங்கை அரசியலை முழுமையாக நிரப்பியுள்ளது. சுயேட்சையாக களமிறங்கியுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளரிற்கான சின்னமாக சங்கு வழங்கப்பட்டுள்ளது. சமுக வலைத்தளங்களில் நேராகவும் எதிராகவும் சங்கு முதன்மையான விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் சின்னம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்ப் பொதுவேட்பாளர் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் பொதுவெளியில் அதிகரிக்கப்பட்டு வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. முன்னைய அனுபவங்களினடிப்படையில், தமிழ்ப்பொதுவேட்பாளர் உரையாடலுடன் சுருங்கக்கூடியதெனும் எண்ணமே ஆரம்பத்தில் காணப்பட்டது. எனினும் வேட்புமனு தாக்கல் மற்றும் சங்கு சின்னம் பெற்றுக்கொண்டமை பொதுவெளியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆகஸ்ட்-18அன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற தமிழ்ப் பொதுவேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஈடுபாடும் உறுதி செய்கின்றது. இக்கட்டுரை பொதுவெளியில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் சமகால நிலையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் குரலாகவும், குறியீடாகவும் களமிறக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனின் பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட்-18அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில், தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவுத்தூபியில் மலர்வணக்கம் செலுத்தி, பிரச்சாரத்துக்கான ஆரம்பத்தை முன்னறிவித்தார்கள். தொடர்ச்சியாக அன்றைய தினம் மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியிலும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது. பெருந்திரளான மக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், பொதுவேட்பாளருக்கு மாலைகள் அணிவித்து வரவேற்றிருந்தனர். அறிமுக பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த பொதுச்சபையின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் திரட்சியும், தேசிய அபிலாசையை பொதுவேட்பாளரினூடாக வெளிப்படுத்த வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பிலும் பொதுக்கூட்டத்தில் வளவாளர்களால் கருத்து முன்வைக்கப்பட்டது. 

அதேவேளை தமிழ் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேந்திரன் ஆகஸ்ட்-19அன்று பிரச்சாரக்கூட்டங்கள் ஏற்பாட்டாளர்களுக்கு, 'தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் சகல பிரசாரக்கூட்டங்களிலும் மாலை அணிவித்தல், பொன்னாடை போர்தல், ஆராத்தி எடுத்தல், கௌரவிப்பு செய்தல் போன்ற விடயங்களை தவிர்த்து பிரசாரப்பணிகளை மட்டும் செய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் முற்கூட்டியே தெரியப்படுத்தவும். முதலாவது அறிமுக கூட்டம் என்பதால் நேற்று (18.08.2024) முல்லைத்தீவில் எதிர்பாராத விதமாக மக்கள் மாலை அணிவித்தார்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றேன். இனி எந்த ஒரு பிரசார நடவடிக்கையிலும் மாலை, பொன்னாடை, என்பவைகளை தவிர்த்து பிரசாரங்களை முன்எடுக்க சகல ஏற்பாட்டார்களுக்கும் முற்கூட்டியே அறிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்' எனும் வேண்டுகோளை விடுத்துள்ளார். இது பொதுவேட்பாளர் தனிநபர் அடையாளமின்றி, தேசிய அபிலாசைக்குரிய அடையாளம் அல்லது குறியீடு என்பதை பா.அரியநேந்திரன் மீளவும் உறுதி செய்கின்றமையையே வெளிப்படுத்துகின்றது. 

மேலும், தேர்தல் பிரச்சார பயண ஒழுங்கு பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரைக்குமான தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதுமாக நடைபெறும் வகையில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பால் திட்டமிடப்பட்டு, முன்னறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்அறிவிப்பில், 'வடக்குக் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களிற்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 19-25ஆம் திகதிகளில்  யாழ்ப்பாணத்திலும், 26-29ஆம் திகதிகளில்  கிளிநொச்சியிலும், ஆகஸ்ட் 30 - செப்ரெம்பர் 03ஆம் திகதிகளில்   முல்லைத்தீவிலும், செப்ரெம்பர் 04-06ஆம் திகதிகளில்  மன்னாரிலும், செப்ரெம்பர் 07-09ஆம் திகதிகளில்  வவுனியாவிலும், செப்ரெம்பர் 10-12ஆம் திகதிகளில் திருகோணமலையிலும், செப்ரெம்பர் 13-14ஆம் திகதிகளில் அம்பாறையிலும், செப்ரெம்பர் 15-19ஆம் திகதிகளில் மட்டக்களப்பிலும் பொதுவேட்பாளர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடைபெறும்' என தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தரப்பினர் தொடர்ச்சியாக அதுசார் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்யக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. இது தமிழ்த்தேசிய கருத்தியலை சமுகமயப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குகின்றது. தேர்தலுக்கு பின்னரும் இதன் தாக்கம், தமிழ்த்தேசிய கருத்தியலின் எழுச்சிக்கு வாய்ப்பளிக்கிறது.

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் சின்னமான ஷசங்கு', தமிழ் பொதுவேட்பாளரின் குறியீட்டு அரசியலுக்கு பலம் சேர்ப்பதாகவே அமைகின்றது. சங்கு தமிழர் வாழ்வியலில் நேர்க்கணியமாக ஆழமாக பிணைந்துள்ளது. ஆண்டாள் பாசுரத்தில், 'மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே' எனும் பக்தி பரவசமும்; பாவேந்தர் பாரதிதாசன் பாடலில், 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' எனும் உணர்ச்சி செருக்கிலும் சங்கின் உள்ளடக்கம், அதன் அன்றாடப் பயன்பாட்டில் இருந்த முக்கியத்துவத்தின் காரணமாகத்தான் அமைந்துள்ளது. தமிழர் பண்பாட்டுடன் ஆழமாக பொருந்தியுள்ள சங்கு, தமிழ் மக்களின் தேசிய அரசியலை முன்னிறுத்தும் தமிழ்ப்பொதுவேட்பாளரின் சின்னமாவது, தமிழ்ப் பொதுவேட்பாளரை பலம் சேர்ப்பதாகவே அமைகின்றது. சமுக வலைத்தளங்களில் பாவேந்தர் கவிதையில் உருவாகிய 'சங்கே முழங்கு..' பாடலை இளையோர்கள் பலரும் பகிர்வது, தமிழ்ப் பொதுவேட்பாளர் நேர்க்கணியமாக எழுச்சியடைவதனையே உறுதி செய்கின்றது. 

சங்கின் ஒலி கெட்டவற்றை நீக்கி நன்மையைக் கூட்டும் என்பதும் நம்பிக்கை ஆகும். இந்நம்பிக்கையையே தமிழ்ப் பொதுவேட்பாளரும் ஈழத்தமிழரசியலுக்கு வழங்குகின்றது. ஜனாதிபதி தேர்தல்களில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிப்பின் மூலம் இழைத்த தவறுகளை நிவர்த்தி செய்யும் கருவியாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் மேலோங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனா, சஜித் பிரரேமதாசா போன்ற சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். இவ்வாக்களிப்பு இவ்ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாடுகளை தமிழ் மக்கள் அங்கீகரிப்பதாகவே அமைகின்றது. அத்துடன் 2010இல் போர்க்கால இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்திருந்தனர். இது இனப்படுகொலைக்கான அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவதாகவே அமைந்துள்ளது. இத்தவறுகளை நிவர்த்தி செய்யும் அரசியல் குறியீடாகவே தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்கு முழக்கம் அமைகின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதை வலியுறுத்தியதாகவே அமைகின்றது என்பதை வலியுறுத்தும் அடையாள அரசியலையே தமிழ்ப் பொதுவேட்பாளர் எனும் கருவி முதன்மைப்படுத்துகின்றது.

பல சொற்கள் பொருள்மாறிப் பயன்படுத்தப்படுவதைப் போலவே, சங்கு ஊதுதல் என்பதும் எதிர்மறைப் பொருளில் சிலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை அர்த்தமற்றவை என்பது சங்கின் ஆன்மிக மருத்துவப் பயன்பாடுகள் வெளிப்படுத்துகின்றது. அவ்வாறே தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் முன்வைக்கப்படும் எதிர்க்கணிய கருத்துகள் பொருள் மாறி பயன்படுத்துபவையாகவும், அர்த்தமற்ற உரையாடலாகவுமே அமைகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து உரையாடுவோர், சமகாலத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பொருத்தமற்றது என்பதே வாதமாக காணப்படுகின்றது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணமாக, 'தமிழ் மக்கள் சிதறியுள்ளதாகவும், இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தி பொதுவேட்பாளர் களமிறங்கி, வாக்கு சதவீதம் குறைவடைவதால் தமிழ் மக்களின் தேசிய கோரிக்கை நலிவடையும்' என்பதே காணப்படுகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிப்போரும், தமித்தேசிய முகமூடி அணிவது அவசியம் என்பதே அவர்களது காரணம் உறுதி செய்கின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிப்பதற்கு தமிழ்த் தேசிய முகமூடி அணிய வேண்டியிருப்பது, தமிழ்த்தேசியம் வலுவாக உள்ளமையையே உறுதி செய்கின்றது. 

வெளித்தோற்றத்தில் புலப்படும் தமிழர்களின் ஒற்றுமையின்மை என்பது அரசியல் கட்சிகளுக்கான ஆதரவை சார்ந்ததாகவே அமைகின்றது. மாறாக தமிழ்த்தேசியத்தில் தமிழ் மக்கள் பற்றுறுதியாக உள்ளார்கள். தமிழ்த்தேசியத்தினை சார்ந்த திரட்சியை நிறுவனமயமாக்கும் பொறிமுறையாகவே பொதுவேட்பாளர் அமைகின்றது. ஏற்கனவே இது காலந்தாழ்த்தப்பட்டதொரு நிகழ்வாகவே அமைகின்றது. குறிப்பாக 2010ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களான மகிந்த ராஜபக்சா மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் போர் வெற்றியை தமதாக்க ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி கொண்டார்கள். மறுவலம் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து, ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வை தென்னிலங்கை தனது நலனுக்கு ஏற்றவாறு சுருக்கியது. இந்நிலையில், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலாவது தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களினை நிராகரித்து, தமிழ் மக்களின் அபிலாசையை வலியுறுத்த வேண்டிய தேவை காணப்பட்டது. எனினும் அதற்குரிய களத்தை, தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையாக பிரகடனப்படுத்தி கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் உருவாக்கியிருக்க முடியவில்லை. அதன் பின்னர் கட்சிகளின் பிளவுகளுக்குள் தமிழ் மக்களின் அரசியலும் பிளவுபட தொடங்கியுள்ளது. இன்று சிவில் சமுகங்கள் தன்னார்வ முனைப்பில், அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான களத்தை உருவாக்கியுள்ளார்கள். இது தமிழ் மக்களின் தேசிய திரட்சியையும், அபிலாசைகளை முன்னிறுத்துவதற்கான களமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை தேசியமாக திரட்டுவதற்கான உத்தியாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் முன்னிறுத்தப்படுவது அடிப்படையானதாகும்.

தற்போது தமிழ் மக்கள் பிளவுபட்டுள்ளமையால், தமிழ்ப் பொதுவேட்பாளர் உகந்த காலமில்லையென நிராகரிப்பவர்கள், தமிழ் மக்களை தேசியமாக திரட்டுவதற்கான மூலோபாயங்களையும் முன்வைக்க வேண்டும். அவ்வாறான மூலோபாயங்களின்றி எழுந்தமானமாக தமிழ்ப் பொதுவேட்பாளர் மூலோபாயத்தை முட்டாள்தனமாக சித்தரிப்பது, தமிழ் மக்கள் தேசியமாக திரள கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே அமைகின்றது. இது தமிழ் மக்களை முட்டாளாகவும், தங்களை அதிமேலாவிகளாகவும் எண்ணி வெளிப்படுத்தும் பிதற்றலாகவே அமைகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிக்க, சமகாலத்தில் தேசிய முகமூடியை அணிந்து கொண்டு பிதற்றுபவர்கள், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு பொதுவெளியின் அதிகரிக்கும் ஆதரவை கண்டு அச்சப்படுவதையே உணர்த்துகின்றது.

மேலும், தமிழ்ப் பொதுவேட்பாளரின் ஆரம்ப வெற்றியாக அமைவது, 'கடந்த காலங்களை போன்று தென்னிலங்கையை ஆதரிக்கும் தமிழ் அரசியல்வாதிகளாலும், தமிழ் அரசியல் கட்சிகளாலும் எழுந்தமானதாக தென்னிலங்கை வேட்பாளரை ஆதரித்து கருத்திட முடியவில்லை.' ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சியால் உத்தியோகபூர்வ முடிவை வெளியிட முடியவில்லை. தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பரிசீலித்த பின்னரே தமிழரசுக்கட்சி முடிவெடுக்குமென, கடந்த இரு மாத காலங்களாக மத்திய குழு மற்றும் பொதுக்குழு கூட்ட முடிவுகளாக அறிவித்து வருகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழர்களின் உயர்ந்தபட்ச தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றது. தென்னிலங்கை வேட்பாளர்கள் தேசிய இனப்பிரச்சினை தீர்வாக சமஷ;டியை வெளிப்படுத்தாது, தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து தென்னிலங்கைக்கான ஆதரவை வழங்க முடியாத இறுக்கத்தில் தமிழரசுக்கட்சி பிணைக்கப்பட்டுள்ளது. மாறாக தென்னிலங்கையின் குறைந்தபட்ச தீர்வு திட்டத்துடன் தமிழரசுக்கட்சி இணைந்து செல்லின், அது தமிழ் மக்களின் அரசியலிலிருந்து தமிழர் விடுதலைக்கூட்டணி போல் செல்வாக்கிழந்து போகக்கூடிய வாய்ப்புகளே காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டோர், தமிழ் மக்களின் வாக்குகளை கண்மூடித்தனமாக தென்னிலங்கைக்கு விற்பதை தமிழ்ப் பொதுவேட்பாளர் தடுத்துள்ளது. 

எனவே, தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலாய் தமிழ்த்தேசிய எழுச்சிக்கான சூழலை உருவாக்கி வருகிறது. களச்சூழலும் அதனையே உறுதி செய்கின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளர் கட்டமைப்புக்குள் காணப்படும் ஒரு சில அரசியல் கட்சிகள் நிலையற்றவர்களாய் தடுமாறும் நிலையை வெளிப்படுத்துகின்ற போதிலும், மக்களின் எழுச்சி அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தக்கூடியதாக அமைகிறது. பாவேந்தர் கவிதையின், 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' எனும் வரிகளே சமகால தமிழ்ப்பொதுவேட்பாளரின் நிதர்சனமான அரசியலாகும். தமிழர்களின் திரட்சி பகைவர்களின் சூழ்ச்சிகளை களைவதாக அமைதல் வேண்டும். இது தமிழ்த் தேசிய அரசியலை நிறுவனமயப்படுத்தி பேணக்கூடியதாக அமைதல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-