தென்னிலங்கையின் பொருளாதார பிரச்சாரமும்! ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையும்! -சேனன்-

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி இலங்கை அரசியல் புதிய மாயைகளுக்குள் பயணிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகளின் மாஜை வார்த்தைகளுக்குள்ளே தென்னிலங்கையின் அரசியல் விம்பம் பிரதிபலிக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், இலங்கைத்தீவு வளர்ச்சி பாதையில் பயணிப்பதாவும் ஆளுந்தரப்பு பிரச்சாரப்படுத்துகிறது. அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் எதிர்த்தரப்பின் வாதமும் பொருளாதார பிரச்சினைக்கேயே சுழலுகின்றது. மாறாக இலங்கையின் பொருளாதாரா பிரச்சினை பரந்ததொரு அரசியல் பொருளாதார பிரச்சினை என்பதையும், அதன் அரசியல் பகுதியையும் ஒட்டுமொத்த தென்னிலங்கையும் இலாபகரமாக மறைக்க முயலுகின்றனர். இம்மாஜை பிரச்சாரர்களை ஆதரிக்க வேண்டுமென்றே, அரசியல் உரிமை கோரும் தமிழ்த்தேசிய இனத்தின் சில அரசியல் பிரதிநிதிகளும் முட்டிமோதுவது தமிழினத்தின் சாபமாகும். இக்கட்டுரை தென்னிலங்கையின் அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் பயணிக்க வேண்டிய போக்கை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள். வரலாறுகாணாத வகையில் பலமுனை போட்டி எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களாக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்சா  ஆகியோர் நோக்கப்படுகின்றார்கள். இதனைத்தவிர ஈழத்தமிழ் அரசியலில் தமிழ்ப் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை இணைந்து தமிழ்ப் பொதுவேட்பாளரை நகர்த்துகிறது. தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவினை உறுதிப்படுத்தாத போதிலும், தமிழரசுக்கட்சியின் பாரளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் வெற்றி பெற்ற சிறிதரன் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தனது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழ்ப் பொதுட்பாளர் ஈழத்தமிழர் தேசிய அரசியலில் பலமான ஆதரவை பெற்று வருகின்றது. இதனை தவிர சுயேட்சை வேட்பாளர் சரத் பொன்சேகா, அரகலய போராட்க்காரர்களின் மக்கள் போராட்டத்திற்கான கூட்டணியின் ஜனாதிபதி  வேட்பாளர் நுவான் போபகே மற்றும் மலையக தமிழ் வேட்பாளர் .திலகராஜா குறிப்பிட்ட வாக்குகளில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக எதிர்பார்க்கப்படுகின்றது.  

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அதிகரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கையும் பிரச்சாரமும் இலங்கையின் பொருளாதார பிரச்சினையையும் அதுசார்ந்து நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற சூழலையும், பொருளாதார மறுசீரமைப்பையுமே உரையாடி வருகின்றனர். மாறாக அரசியல் பிரச்சினையை வடக்கு-கிழக்குள் முடக்க முற்படுகின்றார்கள். தேசிய இனப்பிரச்சினை தீர்வுசார் உரையாடல்களை தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் வடக்கு-கிழக்கு விஜயத்தின் போதும் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடனான உரையாடல்களுடன் மாத்திரமே மட்டுப்படுத்துகிறார்கள். மாறாக தென்னிலங்கை பிரச்சார கூட்டங்களில் தேசிய இனப்பிரச்சினை பிரதான நிலையை பெறவில்லை. தமிழ் தரப்புடனான தீர்வுசார் உரையாடலிலும் அரசியலமைப்பில் ஏற்கனவே 37 வருடங்களுக்கு மேலாக காணப்படும் 13ஆம் திருத்தமே மைனஸ், பிளஸ் மற்றும் சமன் எனும் எண் கணிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. 13ஆம் திருத்தம் அரசியலமைப்புக்குள் காணப்படும் காலப்பகுதியிலேயே 22 ஆண்டு காலம் கொடிய போர் மற்றும் 2009ஆம் ஆண்டு இனவழிப்பும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவை எதனையும் நிறுத்த அல்லது குறைந்தபட்சம் கட்டுப்படுத்த முடியாத அரசியலமைப்பில் ஏற்கனவே காணப்படும் 13ஐ பற்றி மீள மீள உரையாடுவது தமிழ் மக்களை ஏமாற்றும் உத்தியாகவே காணப்படுகின்றது. இவ் ஏமாற்றத்தை தவிர்க்கும் முனைப்பிலேயே தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு தமிழ்ப் பொதுவேட்பாளரூடாக தமிழ் மக்களின் அபிலாசையை முன்னிறுத்தும் அரசியலை மேற்கொள்கிறது.

பேரம் பேசுவதற்கு ஈழத்தமிழர்கள் தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு பின்னால் திரண்டிருந்தார்கள். 2001ஆம் ஆண்டுக்கு பின்னரான தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் அளித்த அளித்த அங்கிகாரங்கள் அதனையே உறுதி செய்தது. இந்த பின்னணியில் தமிழ் மக்கள் ஆயுதரீதியாகவும் பலமான போராட்ட அமைப்பை கொண்டிருந்தார்கள். பேரம் பேசக்கூடிய பலமான சக்தியாக தமிழர்கள் காணப்பட்டார்கள். இந்த பின்ணியிலேயே 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை பேச்சுவார்த்தை களத்தில் ஏற்றுக்கொண்டு இலங்கை அரச தரப்பும் பேச்சுவார்த்தை முன்னகர்த்தலை மேற்கொண்டிருந்தார்கள். எனினும் இன்று அவாறானதொரு சூழல் காணப்படவில்லை. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னரான தேர்தல் அரசியலில் மக்களின் திரட்சியே பேரம் பேசுவதற்கான பலமாகும். மறைந்த தமிழரசுக்கசியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் திரட்சியை உறுதிப்படுத்த தவறியுள்ளார்கள். 2010ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேற்றமும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பரிணாமமும் இடம்பெற்றது. 2015ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியேறியது. 2018ஆம் ஆண்டு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கினார். இவர்களை தவிர ஐங்கரநேசன், அனந்தி சசீதரன் என தனியன்களாகவும் பலர் வெளியேறி தமிழ் அரசியல் பரப்பில் புதிய புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கினார்கள். ஏழு ஆசனங்களை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஆறு கட்சிகளுக்கு மேல் தமிழ்த்தேசிய முலாத்துடன் தேர்தலில் போட்டியிடுகின்றன. இது எண்கணிய தேர்தல் களத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து, தமிழ் மக்களின் திரட்சியின்மையையே வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களில் தென்னிலங்கை கட்சி வேட்பாளர்களே அதிகூடிய விருப்பு வாக்குககளை பெற்றுள்ளளனர். அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் எவருமே ஆசனத்தை பெற்றிருக்கவில்லை. எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகலாம் எனும் அச்சம் காணப்படுகிறது.

இவ்வாறான பிளவுகள், தமிழ் மக்களின் பேரம் பேசலை பலவீனப்படுத்தியே உள்ளது. தாயகத்தின் பிளவுகள் புலத்தின் ஆதரவிலும் பிளவுகளையே பிரதிபலிக்கின்றது. சில தரப்பு ஈழத்தமிழர்களின் ஒருமித்த கருத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லையென தமிழ் மக்களின் கோரிக்கைக்கு தார்மீக ஒத்துழைப்பை வழங்க முடியாது விலகி செல்கிறார்கள். தமிழகம் வரலாறுதோறும் ஈழத்தமிழர்களிற்கு வலுவான ஆதரவை வழங்கி வந்துள்ளது. தமிழகத்தில் பல பொதுமக்கள், ஈழத்தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள். எனினும் 2009களுக்கு பின்னர் தமிழக-ஈழத்தமிழர் உறவில் பல பின்னடைவுகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியலில் தமிழக வளரும் தலைமுறை போதிய கரிசணையை வெளிப்படுத்துவதாகவில்லை. இதன் பின்னாலும் ஈழத்தமிழர்களின் பிளவும் வலுவான காரணமாகிறது. குறிப்பாக தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் நிகழ்வொன்றிற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த தமிழ்த்தேசிய பற்றாளர் கவிஞர் யுகபாரதி, “கடந்த காலங்களில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் விடுதலை புலிகளின் விம்பத்தில் ஒற்றைக்குரலாக ஒலித்தமையால் தமிழக ஆதரவு திரட்டப்பட்டிருந்தது. எனினும் சமகாலத்தில் ஈழத்தமிழரியலில் காணப்படும் பிளவுகளால் தமிழ் மக்களின் கோரிக்கையை தமிழக மக்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.” எனும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். தூதரங்களும் தமிழ் அரசியலில் காணப்படும் பிளவுகளை சுட்டிக்காட்டியே தமிழ் மக்களின் கோரிக்கைகளிள் விலகல் இராஜதந்திரத்தை கையாண்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் ஈழத்தமிழ் அரசியலில் திரட்சியின்மையால் தாயகத்திலும், புலத்திலும் பலவீனப்பட்டுளனர். அவ்வாறே, பிராந்திய மற்றும் சர்வதேச மக்கள் மற்றும் அரசுகளினதும்  ஆதரவும் பலவீனப்பட்டுள்ளது. பலவீனப்பட்டுள்ள சமுகம் தனது பேரம் பேசும் ஆற்றலையும் இழந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் உருவாக்கத்திலும், இயக்கத்திலும்  சிறுபான்மை தேசிய இனங்களின் ஆதரவே கணிசமான செல்வாக்கை செலுத்தியிருந்தது. குறிப்பாக ஈழத்தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலமான ஆதரவை வலிந்து வழங்கியது. பின்னாளில் தமிழரசுக்கட்சியின் வீழ்ச்சிக்கு பலமான அடித்தளமும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்துக்கான இணக்க அரசியலே காரணமாகும். இக்காலப்பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்ககளின் கோரிக்கை பேரம்பேசப்பட்டதாகவும், அவை இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர். கடந்த காலங்களில் எழுத்து மூலமான பேரம்பேசல்கள் மற்றும் பிராந்திய சர்வதேச அரசுகளின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட பேரம் பேசல்களையே இலங்கை அரசாங்கங்கள் உதாசீனப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தென்னிலங்கைக்கு தமிழ் மக்களின் வாக்குகள் அவசியப்படுகின்ற போதிலும், தமிழ் அரசியல்கட்சிகளால் இதயத்தாலேயே பேரம்பேசக்கூடிய சூழ்நிலை காணப்பட்டதென்பது, தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தி பலவீனப்பட்டுள்ளதையே உறுதி செய்கின்றது.

தற்போது மீளவும் தென்னிலங்கை போலியான வகையில், தெற்கிற்கும் வடக்கிற்கும் வேறுபட்ட பிரச்சாரங்களை முன்னிகழ்த்துகையில், இன்றும் தமிழ் மக்களிடம் பேரம்பேசும் சக்தி இருப்பதாவும், இதனை பயன்படுத்த வேண்டுமெனவும் தமிழரசு கட்சியின் சில பிரதிநிதிகள் முழங்குவது, தென்னிலங்கையுடன் கூட்டு சேர்ந்து தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை ஏமாற்றும் நாடமாகவே அமைகின்றது. தமிழ் மக்கள் அரசியல் யதார்த்தத்தை புரிதல் வேண்டும். தமிழ் மக்களின் திரட்சியே சமகாலத்தில் தமிழ் மக்களின் பலமாகும். தமிழ் மக்களின் அரசியல் 2009களுக்கு பின்னர் தேர்தல் கள அரசியலாகவே சுருங்கியுள்ளது. தேர்தல் எண்கணிய அரசியலாகும். இங்கு எண்களே முக்கியமாகிறது. தமிழ்த் தேசிய கருத்தியல் எண்ணிக்கையில் பலமானதாக வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் களங்களில் தமிழ்த்தேசியம் ஒற்றைக்குரலாக ஓரணியில் ஒலிப்பதாயும், மக்கள் அதன் பின்னால் அணிதிரள்வதாகவும் அமைதல் வேண்டும். இதுவே தமிழ் மக்களின் கூட்டை வெளிப்படுத்துவதோடு, பேரம் பேசும் ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாகும். உலக ஒழுங்கே மக்கள் தொகையை நோக்கியே நகருகிறது. இன்று இந்தியாவை சுற்றி உலக கரிசணை அதிகரிப்பது இந்தியாவின் மக்கள் தொகையே காரணமாகும். தேர்தல் அரசியலில் இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவு பொதுத்தேர்தல்களில் தமிழ்த்தேசியத்தை சிதறடிப்பதாகவே உள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 11 சதவீத ஈழத்தமிழர்களால், சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரத்துக்குள் ஜனாதிபதியாக வர முடியாது என்பது நிதர்சனமானதாகும். எனவே, தேர்தல் அரசியல் நலனுக்குள் இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி தேர்தல் நன்மையளிப்பதில்லை. குறைந்தபட்சம் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியிலாவது, தமிழ்த்தேசிய பலத்திற்காக உழைப்பார்களாயின், தமிழ் மக்களின் திரட்சியை ஒருங்கு சேர்க்க முடியும். தமிழ் மக்கள் திரட்சியை உறுதிசெய்வதே 2009க்கு பின்னரான அரசியலில் தமிழ் மக்ககளின் பலத்தை வெளிப்படுத்த உள்ள வாய்ப்பாகும். ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் தமது தேசிய திரட்சிக்கு பயன்படுத்துவதும், தமது பலத்தை வெளிப்படுத்துவதுமே உசிதமானதாகும். இதனூடாக தமிழ் மக்கள் தமது பேரம் பேசும் ஆற்றலை வலுப்படுத்தலாம். தாயகத்திலும், புலத்திலும் பலமான சக்தியாக மீளெழுச்சி பெறலாம். பிராந்திய மற்றும் சர்வதேச மக்கள் மற்றும் அரசுகளினது ஆதரவை திரட்டலாம்.

எனவே, தென்னிலங்கையின் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இலங்கையின் பொருளாதார ஸ்திரமற்ற சூழலை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகிறது. பொருளாதார ஸ்திரமின்மைக்கு காரணமான தேசிய இனப்பிரச்சினை மற்றும் அரசியல் முறைமை தொடர்பில் பாரிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உருவாக்கப்படவில்லை. தென்னிலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி போட்டி, பிரச்சார உள்ளடக்கங்களில் அதிகரிக்கப்படவில்லை. பிரச்சார உள்ளடக்கம் முன்னைய தேர்தல்களை விட மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் வழமை போன்றே வடக்கிற்கும் தெற்கிற்கும் வேறுபட்ட உள்ளடக்கங்கள் காணப்படுகிறது. தென்னிலங்கையின் நெருக்கடி காலங்கள் முழுவதும் சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானித்துள்ளது. எனினும் பேரம் பேசலற்ற பலத்துடன் தமிழ் மக்கள் மீளவும், தென்னிலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்யும் கருவியாக மாத்திரம் பயணப்பட முடியாது. 2009க்கு பின்னர் பலவீனப்படுத்தப்பட்டுள்ள தமிழ் சமுகம் தாம் தமது பலத்தை அறிவதுடன், திரட்சியூடாக தமது பலத்தை இலங்கை அரசாங்கம் மற்றும் பிராந்திய சர்வதேச சக்திகளுக்கும் வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-