தமிழ்த்தேசிய கொள்கையின் குறியீட்டு அரசியலே தமிழ்ப் பொதுவேட்பாளர்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் 46 ஆண்டுகால ஜனாதிபதித்துவ அரசாங்க முறைமையின் வரலாற்றில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் புதிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. ஈழத்தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலை மூலோபாய ரீதியாக கையாள்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளார்கள். தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவுத்தளமும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. தாயகத்தில் பரவலாக பொதுமக்களிடையே ஆதரவு நிலைப்பாடு அதிகரிக்கும் அதேவேளை, புலத்திலும் புலம்பெயர் அமைப்புக்கள் பல ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்கும் முடிவை வரவேற்றுள்ளனர். இந்நிலையிலேயே, தமிழ்ப் பொதுவேட்பாளர் உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு அப்பால் நடைமுறையாக்க தன்மையை பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஒன்றிணைந்த தமிழ் மக்கள் பொதுக்கட்டமைப்பு ஆகஸ்ட்-05அன்று, தமிழ்ப் பொதுவேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை அறிவித்துள்ளார்கள். தமிழ்ப் பொதுவேட்பாளராக அரியநேந்திரனின் முக்கியத்துவத்தை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முறைமையை ஈழத்தமிழர்கள் மூலோபாயரீதியாக அணுகுவதனூடாகவே, நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். 1990ஆம் ஆண்டில், அரசியல் விஞ்ஞானிகளான ஜுவான் லின்ஸ் (Juan Linz) மற்றும் டொனால்ட் ஹொரோவிட்ஸ் (Donald Horowitz) ஜனநாயகம் இதழில் ஜனாதிபதி முறையின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விவாதித்தனர். அதில் ஜுவான் லின்ஸ் ஒரு பாராளுமன்ற அமைப்பு ஆழமாகப் பிளவுபட்ட சமூகங்களுக்கு நன்மை பயக்கும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். மாறாக டொனால்ட் ஹொரோவிட்ஸ் இலங்கையின் ஜனாதிபதி முறைமையை உதாரணமாக சுட்டிக்காட்டி ஜனாதிபதி முறையை ஆழமாக பிளவுபட்ட சமூகங்களுக்கு நன்மை பயக்கும் நிலைப்பாட்டை விளக்கியிருந்தார். ஜனாதிபதி முறைமை 'வெற்றியாளர் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்' இயல்பு காணப்படுகிறது. எனினும் இலங்கையில் வெற்றியாளர் அனைத்தையும் எடுத்துக் கொள்வதை தடுக்கும் இயல்பு காணப்படுவதாக வாதிடுகின்றார். 'இலங்கையின் பல கட்சி அமைப்பில் பெரும்பாலான வேட்பாளர்கள் பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை என்பதால், மாற்று வாக்களிக்கும் முறை பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு வாக்காளரும் பல வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். அவர்களை விருப்பப்படி வரிசைப்படுத்தலாம். முதல் இரண்டு இடங்களுக்குள் இல்லாத வாக்காளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தேர்வுகளில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் பெரும்பான்மையை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது இன சிறுபான்மையினரை (குறிப்பாக இலங்கைத் தமிழர்கள்) அவர்களின் இரண்டாவது விருப்பங்களுக்கான விலையாக சமரசம் தேவைப்படும் நிலையில் வைக்கும். எனவே, ஜனாதிபதி முறையானது இனவாதிகளை நிராகரிக்கும். மிதவாதத்திற்கு ஊக்கமளிக்கும். மற்றும் ஒரு துண்டு துண்டான சமூகத்தில் சமரசத்தை ஊக்குவிக்கும்.' என ஹொரோவிட்ஸ் விபரிக்கின்றார். எனினும் ஜனாதிபதி தேர்தல்களின் அனுபவம் ஜனாதிபதி தேர்தல் முறைக்கும் தமிழர்களுக்கும் இடையில் எதிர்மறையான உறவையே உணர்த்துகிறது. 46 ஆண்டுகால ஜனாதிபதி முறைமையில் ஈழத்தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலை மூலோபாய ரீதியாக கையாள தவறியுள்ளனர். தென்னிலங்கையின் இழுவைகளுக்கு வினையாற்றுவதாகவே ஈழத்தமிழரசியல் காணப்பட்டிருந்தது.

2024ஆம் ஆண்டு நீண்ட காலம் உறங்கு நிலையிலிருந்த சிவில் சமுகத்தினரின் விழிப்பான செயற்பட்டாலும், கடந்த கால தவறான முடிவுகளிலிருந்து தெளிவடைந்துள்ள அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவாலும் ஜனாதிபதி தேர்தலை மூலோபாயரீதியாக கையாளும் செயற்பாட்டிற்கு ஈழத்தமிழரசியல் தயாராகியுள்ளது. தமிழ் மக்கள் பொதுக்கட்டமைப்பு நீண்ட விவாதங்கள் மற்றும் அலசலுக்கு பின் தமிழ்ப் பொதுவேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை தேர்வு செய்துள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பதவி அடிப்படையிலானது என்பதை நிராகரித்து, தமிழ்த்தேசிய கொள்கை அடிப்படையிலானது என்பதே மையக்கருத்தியலாகும். தமிழ்ப் பொதுவேட்பாளருக்குரிய வாக்குகள் தமிழ்த்தேசிய கொள்கையை வலுச்சேர்ப்பதாகவே அமைகின்றது. இவ்வடிப்படையிலே தமிழ்ப் பொதுவேட்பாளராய் முன்னிறுத்தப்படும் நபர் தமிழ்த்தேசிய கொள்கை குறியீட்டின் அடையாளமாக அமைதல் அவசியமாகிறது. அத்தளத்தில் பா.அரியநேந்திரனை அணுகுதல் அவசியமாகிறது.

பாக்கியசெல்வம் அரியநேத்திரன், தமிழர் தாயகக் கோட்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையை சேர்ந்தவர். 1981-2004 காலப்பகுதியில் கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தில் கால்நடை உத்தியோகத்தராக பணியாற்றியிருந்தார். 2004ஆம் ஆண்டு தனது 49வது வயதில் அரச சேவையிலிருந்து நீங்கி, தமிழ் மக்களின் பிரதிநிதியாக 2015ஆம் ஆண்டு வரையில் பணியாற்றியிருந்தார். இதனைத்தவிர மக்களுடன் அதிகம் ஊடாட்டத்தை தொடர்ச்சியாக பேணும் வகையில் ஊடகப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். 1990ஆம் ஆண்டு தொடக்கம் பகுதிநேர ஊடகவியலாளராகவும், 1995இல் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் பொருளாளராகவும் செயற்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையில் தமிழ்த்தேசியத்துக்கான அரசியல் சமுக கட்டுரைகளை தொடர்ச்சியாக தமிழ் பத்திரிகைகளில் எழுதி வருகின்றார்.

ஈழத்தமிழரசியலின் முக்கிய வரலாற்று காலகட்டமாகிய 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் இளைஞனாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். 2000ஆம் ஆண்டு கிழக்கு மாகாண செய்தியாளர் சங்கத்தின் முனைப்பில், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டிருந்தார். 2004ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்திருந்தார். 2024ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பொதுக்கட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்கி, தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கான இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மக்களின் திரட்சியான அரசியலை வலுப்படுத்துவதில் அரியநேந்திரன் வரலாறுதோறும் தனது பங்களிப்பை ஈடுபடுத்தி வந்துள்ளார். அரியநேந்திரனின் அரசியல் பயணம் தமிழ்த்தேசியத்தை இறுக நேசித்தமையால், இலங்கையின் அரச கட்டமைப்பின் நெருக்குவாரத்துக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயங்கரவாத குற்றப்புலனாய்வு கொழும்பு 4ஆம் மாடியில் எட்டுத்தடவை விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளார். மேலும், சகோதரன் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தேசியம் மீதான பற்றுறுதியாகவே தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான இணக்கமும் காணப்படுகின்றது.

தனியாளாக அரியநேந்திரனின் தமிழ்த்தேசியம் மீது விமர்சனங்கள் காணப்படுவதில்லை. எனினும் அரியநேந்திரன் பயணித்துள்ள அரசியல் நிறுவனமான தமிழரசுக்கட்சியின் கடந்த கால தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுவது அவரின் மீதான நன்மதிப்பை உயர்த்தக்கூடியதாகும். அண்மையில் தமிழரசுக்கட்சி விவாகரம் நீதிமன்றத்துக்கு நகர்த்தப்பட்டமை தமிழ்த்தேசிய அரசியலின் கோரிக்கைகளை மலினப்படுத்தும் செயலாக கண்டித்திருந்தார். 'இலங்கை அரசாங்கத்தின் நீதியை நாங்கள் நம்பவில்லை, சர்வதேசத்தை நோக்கியே நாங்கள் எங்கள் தீர்வை கேட்கின்றோம். ஆனால் நாங்கள் இன்று என்ன செய்கின்றோம். தீர்வுக்காக இலங்கை நீதிமன்றில் கையேந்தும் நிலையை இலங்கை தமிழரசு கட்சிக்குள் உருவாக்கி இருக்கின்றோம்' எனக்குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பிலும் தமிழரசுக்கட்சி இரு அணிகளாக பிளவுபட்டுள்ளமையால் உறுதியான முடிவினை வெளிப்படுத்தியிருக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் அணியினர் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் கடுமையான எதிர்விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு மாறாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிதரன் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டு வருகின்றார்கள். எனினும் இறுதியில் கட்சியின் முடிவுக்கு பயணிக்கப்போவதாக தமிழ்த்தேசியத்துக்கு உறுதியான கருத்தை வெளிப்படுத்த இயலாது உள்ளனர். இந்நிலையில் அரியநேந்திரன் வலுவாக தமிழ்ப் பொதுவேட்பாளர் காலத்தின் தேவை என்பதை வலியுறுத்தியதுடன், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளமை ஆரோக்கியமான அரசியலாகும்.

தென்னிலங்கையில் நீண்டகாலமாக அரசியல் கட்சிகளை கடந்து, சிங்கள பௌத்த இலங்கை அரசுக்கான விசுவாசத்தையே தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். 2015ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனா ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொது எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளரான களமிறக்கப்பட்டதும், தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சியின் நிலைப்பாட்டை புறக்கணித்து ரணில் விக்கிரமசிங்காவிற்கு ஆதரவளிக்கின்றமையும் சிறந்த எடுத்துக்காட்டாகும். எனினும் தமிழரசியல் தலைவர்கள் கட்சி என்பதற்கே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வந்துள்ளார்கள். கட்சித் தலைமை தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் நிலைப்பாடுகளை முன்னெடுத்த போதெல்லாம் கட்சிக்குள்ளேயே அடைபட்டிருந்தார்கள். கட்சிக்கு வெளியே தமிழ்த்தேசிய நலனை சிந்திக்க தவறியுள்ளார்கள். இந்நிலையிலேயே தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பில் அரியநேந்திரன் எடுத்துள்ள முடிவு தமிழரசுக்கட்சியின் ஏனையவர்களுக்கு முன்மாதிரியான படிப்பினையாக அமைகின்றது. மக்களுக்கானதே அரசியல் கட்சியும் அரசியல் தலைவர்களும் ஆகும். தமிழரசுக்கட்சிக்குள் தமிழ்த்தேசியத்தின் தேவை உணர்ந்து தமிழ்ப்பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டுடையோர், அரியநேந்திரன் போன்று தமிழ்த் தேசியத்துக்கான முதிர்ச்சியான அரசியலை வெளிப்படுத்த வேண்டும்.  

எனவே, அரியநேந்திரனின் நீண்ட கால அரசியல் அனுபவத்தின் முதிர்ச்சியும், தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்த தெளிவுமே தமிழ் மக்கள் பொதுக்கட்டமைப்பின் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கான தேர்வில் அரியநேந்திரன் மீதான பார்வையை குவித்துள்ளது. எனினும் எச்சந்தர்ப்பத்திலும் தமிழ்ப் பொதுவேட்பாளர் தனிநபர் மைய அரசியலை நோக்;கி நகர போவதில்லை. அரியநேந்திரன் தமிழ்த் தேசிய கொள்கைக்கான குறியீடாகவே காணப்படுகின்றார். அவரின் தெரிவிலும் தமிழ்த்தேசிய கொள்கை குறியீடே முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்தது. இவருக்குரிய வாக்கு தமிழ்த்தேசிய கொள்கையை வலுச்சேர்க்கக்கூடியதாகும். காலணித்துவ விடுதலைக்கு பின்னரான 76 ஆண்டுகால ஈழத்தமிழர்களின் ஜனநாயக அரசியலிலும், ஆயுதப் போராட்ட காலத்திலும் தனிநபர் மைய அரசியலே முதன்மை பெற்றிருந்தது. ஒருவரிடம் அல்லது ஒரு பிரபல்யம் தலைமையிலான குழுவிடம் பிரச்சினையை பாரப்படுத்திவிட்டு புறமொதுங்கி செல்லும் இயல்பையே ஈழத்தமிழர்கள் வரலாறுதோறும் கொண்டுள்ளனர். இந்நிலையிலிருந்து மாற்றத்திற்கான முயற்சியாகவே தனிநபர் மைய அரசியலை புறமொதுக்கி தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்தி மக்களை திரட்டுவதனூடாக மக்களை அரசியல் சமுகமயப்படுத்துமோர் கருவியாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் அமைகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-