யாழ்-நாகை கப்பல் சேவை இடைநிறுத்த ஆரம்பிக்கப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இந்தியா-இலங்கை உறவில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்துக்குமான உறவை இந்தியாவும் இலங்கையும் முரணான நிலையிலேயே தமது வெளியுறவுக்கொள்கையில் இணைத்துள்ளன. இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்கள் தமிழகத்துடன் நேரடியான உறவை ஏற்படுத்துவதை நிராகரிக்கும் முனைப்பிலேயே செயற்படுகின்றது. மாறாக இந்தியா தமிழக-ஈழத்தமிழர்கள் உறவினூடாக இலங்கையை அணுகின்றது. கடந்த கால போராட்ட இயக்கங்களின் வரலாறும் அதனையே உறுதிசெய்கின்றது. சமகாலத்தில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் இந்தியாவின் முதலீடுகளும் அதன் தொடர்ச்சியாகவே அமைகின்றது. தமிழகத்தையும் ஈழத்தமிழர்களையும் நெருக்கத்திற்கு கொண்டு வரக்கூடிய செயற்பாடுகளை இந்திய அரசு திட்டமிடுகின்றது. இந்த பின்னணியிலேயே, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவையின் ஆரம்பம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் யாழ்ப்பாணம்-நாகப்பட்டிணம் கப்பல் சேவையின் ஆரம்பமும் அமைகின்றது. அத்துடன் இராமேஸ்வரம்-தலைமன்னாருக்கு இடையிலான தரைவழிப் பாதையாக பாளம் உருவாக்குவதற்கான உரையாடலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவை தமிழக-ஈழத்தமிழர்களின் உறவில் நெருக்கத்தை உருவாக்குகிறது. எனினும் இந்நெருக்கத்தை உடைப்பதிலேயே இலங்கை அரசின் செயற்பாடுகள் காணப்படுகின்றது. இக்கட்டுரை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்-நாகை கப்பல் சேவையின் நிலையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்-16அன்று 41 பயணிகளுடன் சிவகங்கை கப்பல் நாகப்பட்டனத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கான மீளோட்டத்தில் முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தது. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதாரா பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை வலுப்படுத்துவது ஒரு முக்கிய அங்கமாகும். காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக இந்தியா அரசு, இலங்கைக்கு 63.65 மில்லியன் டாலர் மானிய உதவியையும் வழங்கியுள்ளது. இந்த கூட்டு ஆவணத்தின் பிரகாரம், ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர்-14 இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளியினூடாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஆரம்ப உரையாடல்களில் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும், தமிழகத்தின் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலேயே கப்பல் சேவை மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டது. எனினும் காரைக்கால் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதால் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தை காங்கேசன்துறை துறைமுகத்துடன் இணைக்கும் நேரடி பயணிகள் கப்பல் சேவை சுமார் மூன்றரை மணி நேரத்தில் 111 கிலோமீட்டர் (60 கடல் மைல்) தூரத்தை கடப்பதாக ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் கப்பல் நிறுவனம் (ளுஊஐ) மூலம் இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐனெளுசi குநசசல ளுநசஎiஉநள என்ற தனியார் நிறுவனத்தால் படகுச் சேவை இயக்கப்படுகிறது.
யாழ்-நாகை கப்பல் சேவை ஒக்டோபர்-14 ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, ஒக்டோபர்-10 மற்றும் ஒக்டேபார்-12ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டு மாற்றப்பட்டிருந்தது. பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்ட யாழ்-நாகை பயணிகள் கப்பல் சேவை ஒரு வார காலப்பகுதிக்குள்ளேயே ஒக்டோர்-20அன்று இடைநிறுத்தப்பட்டது. பிரதானமாக மோசமான வானிலை காரணமாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பயணிகளின் எண்ணிக்கை குறைவும், கப்பல் சேவை இடைநிறுத்தத்திற்கு காரணமாக அறியப்படுகிறது. இடைநிறுத்தப்பட்ட கப்பல் சேவை ஜனவரியில்(2024) ஆரம்பிக்கப்படுமென முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் அதுதொடர்பான செய்திகள் முழுமையாக மௌனிக்கப்பட்டது. பின்னர் மே மாதம் ஆரம்பிக்கப்படுவதாக முன்பதிவுகளும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணங்காட்டி, பயணம் மீள ஆரம்பிக்கப்பட முதலே இடைநிறுத்தப்பட்டிருந்தது. இவ்நீண்ட இழுபறியான கசப்பான வரலாற்றுடனேயே, ஆகஸ்ட்-16 யாழ்-நாகை சிவகங்கை கப்பலின் மீள் ஓட்டம் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டது. அதன் வெளிப்படாகவே முதல் நாள் பயணிகளின் எண்ணிக்கை 41ஆக காணப்படுகின்றது. இதிலும் பெரும்பாலானோர் இந்திய ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீள் ஓட்டம் ஆரம்பிக்கப்படுகையில், ஆகஸ்ட்-18 முதல் தினசரி கப்பல் சேவை இடம்பெறுவதாக முன்னறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது, 'போதியளவான முன்பதிவு இல்லாத காரணத்தினால் வாரத்தில் 3 நாட்களுக்கு (செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை) கப்பல் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும்' சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இது பயணம் ஆரம்பிக்க முதல் பயணம் இடைநிறுத்தப்படுவதற்கான எதிர்வுகூறலை வெளிப்படுத்துகிறதா என்ற சந்தேகத்தையே உருவாக்கின்றது. கப்பல் பயணத்தில் போதியளவு பயணிகள் வருகை இல்லையாயின் அதற்குரிய ஆய்வினையே சீராக மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
ஒன்று, பயணப்பொதியின் அளவு மட்டுப்பாடு பயணிகளிடையே விசனத்தை உருவாக்குகின்றது. கடந்த வருடம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுகையில் பயணி ஒருவர் 60முப பொதியை கொண்டு செல்லக்கூடிய வசதிகள் காணப்பட்டது. எனினும் மீள ஆரம்பிக்கப்பட்ட கப்பல் சேவையில் பயணிகளின் பொதி அளவு 25முப-ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தை தேர்ந்தெடுப்போர் பெரும்பாலும் பொதியின் அளவை பிரதானமாக கருத்திற் கொள்வார்கள். குறிப்பாக சாதாரண ஈழத்தமிழர்களின் தமிழகத்துக்கான பயணம் ஆலயங்களுக்கான தரிசன சுற்றுலாவுடன், ஆடைக்கொள்வனவிலும் அதிக அக்கறை செலுத்துவார்கள். வசதி உள்ளவர்கள், திருமண மற்றும் மங்கள நிகழ்வுகளுக்கு தமிழகத்தில் ஆடை கொள்வனவு செய்வது பொது மரபாகி உள்ளது. அவ்வாறே தமிழகத்திலிருந்து சுற்றுலாவை மையப்படுத்தி வருபவர்களுக்கும் குறித்த அளவு பொதி மட்டுப்பாடு பெரும் சிரமமாகவே காணப்படுகின்றது. மேலும், வர்த்தகர்களும் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு கப்பல் பயணத்தை விரும்பி தேர்வு செய்வார்கள். எனினும் பயணப் பொதியின் அளவு மட்டுப்பாடு பயணத்திற்கு பெருந்தடையாக உள்ளது. யாழ்-சென்னை விமான சேவையில் 30மப வரை கொண்டு செல்லக்கூடியதாக அமைகின்றது. அதுவும் கொழும்பு விமான சேவைகளுடன் ஒப்பிடுகையில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைகின்றது. பொதி அளவு மட்டுப்பாடு யாழ்ப்பாண-தமிழக பயணிகள் அளவை மட்டுப்படுத்துவதற்கான செயற்பாடா என்பது பொதுவான சந்தேகமாக காணப்படுகின்றது. முதல் நாள் கப்பல் பயண அனுபவத்தில் நாகப்பட்டினத்திலிருந்து 25முப-இற்கு அதிகமான பயண பொதி அனுமதிக்கப்பட்டது. எனினும் காங்கேசன்துறையில் துறைமுக அதிகாரிகள் பயணிகளின் பொதிகளை அளவிட்டு 25முப-இற்கு கூடிய பொதிகளை கொண்டு வந்த பயணிகளிடம் தண்ட பணம் பெற்றுக்கொண்டார்கள். இது பொதி அளவு மட்டுப்பாட்டில் இலங்கையின் கரிசணை தெளிவாகிறது.
இரண்டு, பயண நேரம் அலைச்சலை உருவாக்கக்கூடியதாக அமைகின்றது. நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துடன் இணைக்கும் 111 கிலோமீட்டர் கடப்பதற்கு ஆரம்ப பயத்தில் மூன்றரை மணிநேரம் தேவைப்பட்டது. தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள பயணத்தில் நான்கு மணிநேரம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் பயண நேரம் நான்கு தொடக்கம் ஐந்து மணி நேரம் தேவைப்படுகின்றது. இப்பயண நேரம் பயணிகளை கப்பல் பயணம் சார்ந்து சலிப்பை உருவாக்குவதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக பயண நேரம் அதிகரிக்கும் அதேவேளை சொகுசு பயணத்துக்கான வாய்ப்பை கப்பல் வழங்கவில்லை. கப்பலுக்குள் மூன்று இடங்களில் தொலைக்காட்சி பொருத்தப்பட்டு தமிழ்த் திரைப்படம் போடப்படுகின்றது. எனினும் தொலைக்காட்சிக்கான செயற்பாடுகள் கப்பல் இயக்குனர்களிடம் காணப்படுவதனால், அச்சேவை தொடர்ந்து இயங்குவதில் குறைபாடு காணப்படுகின்றது. அதேவேளை இருக்கைகளும் சொகுசு இருக்கைகளாக காணப்படவில்லை. சரித்து உறங்க கூடிய வசதிகள் இல்லை. இலங்கையின் அரச பேருந்து இருக்கைகள் போன்றே காணப்படுகின்றது. நேரம் அதிகரிக்கப்படும் வேளையில் பயணத்தை சொகுசாக்கும் போதே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடியதாக அமையும்.
மூன்று, காங்கேசன்துறைமுகத்தில் துறைமுக அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்களத்தின் நெருக்குவாரங்கள் பயணிகளை சிரமப்படுத்துவதாக அமைகின்றது. காங்கேசன்துறை துறைமுகம் சிவில் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை கடற்படைத்துறை கட்டமைப்பாகவே காணப்படுகின்றது. சிவில் சேவைக்குரிய சூழலை உருவாக்கவில்லை. குடிவரவு மற்றும் குடியகல்வ அதிகாரிகளுடனான உரையாடல்கள் மாத்திரமே சிவில் சேவையாளர்களுடன் உரையாடக்கூடிய உணர்வை ஏற்படுத்துகிறது. மிகுதி அணைத்தும் கடற்படை துறையின் கட்டுப்பாடாகவே காணப்படுகின்றது. குறிப்பாக காங்கேசன்துறை துறைமுகத்திற்குள் சிவகங்கை கப்பல் நுழைகையில், அதனை சுற்றி கப்பற் படை ஆயுதங்களுடன் ரோந்து நடடிவக்கையில் ஈடுபடுகின்றனர். இராணுவ முகாமுக்குள் நுழையும் உணர்வையே வழங்குகின்றது. நீண்டகால யுத்தத்துக்குள்ளும், கொடிய இனஅழிப்புக்குள்ளும் உள்ளான சமுகம் இத்தகைய இராணுவ அரணுக்குள் நுழைந்து பயணிப்பது உளவியல்ரீதியான சிரமமான விடயமாகவே காணப்படுகின்றது. ஒப்பீட்டளவில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இராணுவ முகாந்திர உணர்வை வழங்காத போதிலும், காங்கேசன்துறை துறைமுகம் முழுமையாக இராணுவ முகாந்திரமாகவ காணப்படுகின்றது. இது சிவில் சேவைக்கு மாற்றப்படுகையிலேயே பயணிகள் சுதந்திரமான உணர்வில் பயணிக்கக்கூடியதாக அமையும்.
நான்கு, காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் வளர்ச்சி திட்டங்களை அப்பிராந்திய அரச நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்க வேண்டும். இரண்டும் வளர்ச்சியில் பின்தங்கிய சூழலிலேயே காணப்படுகின்றது. நாகப்பட்டினத்தில் துறைமுகத்திற்கு வருகை தருவதும், யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருவதும் சிரமமாக உள்ளது என்ற கருத்தை பயணிகள் வெளிப்படுத்தியிருந்தனர். துறைமுக சேவையின் ஆரம்பம் நாளடைவில் அப்பிராந்தியத்தின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும். எனினும் இச்சேவை இழுபறிக்குள்ளும் தொடர வேண்டியது அவசியமாகும். பயணிகளுக்கு சரியான சூழலை உருவாக்கி கொடுக்காது, பயணிகள் வருகையின்மையால் பயண சேவையை இடைநிறுத்த முற்படுவது, வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது. காங்கேசன்துறை துறைமுகம் சிவில் சேவைக்கான கப்பல் சேவையை ஆரம்பித்துள்ளமையால், அச்சூழலை அபிவிருத்தி செய்வதில் தொழில் முதலீட்டாளர்களின் பங்களிப்பும், அப்பிரதேச உள்ளூராட்சி கட்டமைப்பின் பங்களிப்பும் முதன்மையானதாக காணப்படுகின்றது. கப்பல் சேவை இடைநிறுத்தத்திற்கு முழுமையாக மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலை மாத்திரம் குறைகூறிவிட முடியாது. பிரதேச அபிவிருத்தி என்பது ஈழத்தமிழர்களின் எண்ணங்களிலும் செயலிலுமே தங்கியுள்ளது.
எனவே, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்-நாகை கப்பல் சேவை இடைநிறுத்தாது தொடர்வதற்கான ஏற்பாடுகளை ஈழத்தமிழ் சமுகம் ஆதரவாகவும் அழுத்தமாகவும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். தென்னிலங்கை அரச வெளியுறவுக்கொள்கை இந்தியாவுடன் சமரசத்திற்கு முற்படுகின்ற போதிலும், ஈழத்தமிழர்-தமிழக நெருக்கத்தை விருப்பங் கொள்ளவில்லை. பௌத்தத்தினூடாவே சமரச முயற்சிகளை மேற்கொள்கிள்கின்றது. கொழும்பு-குஷpநகர் (புத்தர் பரிநிர்வானம் அடைந்த இடம்) விமான சேவையின் ஆரம்பமும், தொடர்ச்சியும் அதனையே உறுதி செய்கின்றது. இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் மரபாக காணப்படும் ஈழத்தமிழர்-தமிழக பிணைப்பை பயன்படுத்தும் உத்தியை, ஈழத்தமிழர்களும் கையாள வேண்டிய தேவை காணப்படுகின்றது. யாழ்-நாகை கப்பல் சேவை ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் சேவை வழங்குவதால், இலகுவாக ஈழத்தமிழர்-தமிழக உறவை இணைக்க வசதியாகிறது. சாதாரண மக்கள் இலகுவாக பயணிக்க கூடியதாக அமைகின்றது. இந்நன்மைகளை அனுபவிக்க சில சிரமங்களை கடப்பதும், அதனூடாக சிரமங்களை களைவதும் அவசியமாகின்றது. யாழ்-நாகை கப்பல் சேவை தொடர்வது ஈழத்தமிழர்-தமிழக உறவில் உறுதியான பிணைப்பை உருவாக்கும்.
Comments
Post a Comment