குர்திஷ் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதா! -ஐ.வி.மகாசேனன்-
ஒற்றை மைய உலக ஒழுங்கில், முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. சமகாலத்தில் ஒற்றை மைய உலக ஒழுங்கிற்கு பின்னரான உலக ஒழுங்கின் மாறுதல்கள் பற்றி பல கோணங்களில் உரையாடப்பட்டு வருகிறது. இம்மாற்ற காலப் பகுதியில் தேசிய இனங்களின் விடுதலை போராட்டத்திற்கு உள்ள வாய்ப்புகளையும் சவால்களையும் அணுகுவதும் அவசியமாகும். நடைமுறையில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் நெருக்கடியான அல்லது குழப்பகரமான விளைவுகளையே அடையாளப்படுத்துகின்றன. குறிப்பாக மேற்காசியாவில் குர்துக்கள் மற்றும் பலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டம் வெளிப்படுத்தி உள்ள விளைவுகள், தேசிய இனங்களின் போராட்டத்தின் எதிர்போக்குகளையே விளக்குகின்றன. குர்துக்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் இருந்து விலகுவதற்கான சமிக்ஞையை துருக்கி மற்றும் சிரியாவில் வெளிப்படுத்தியுள்ளார்கள். பலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையை எதிர்கொண்டுள்ளார்கள். இந்தப் பின்னணியிலேயே இக்கட்டுரை குர்துக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தின் சமகால போக்கினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
குர்துக்களின் விடுதலைப் போராட்டம் மேற்காசியாவின் பிரதான அரசுகளான ஈராக், துருக்கி, சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டதாகும். இப்பின்னணியில் குர்துக்களின் விடுதலைப் போராட்டத்தை அலசும் ஆய்வாளர்கள் மத்தியில் குர்துக்களின் இறுதி இலக்கு அதிகம் தெளிவற்றதாகவே காணப்படுவதுண்டு. ஈராக்கில் குர்துக்களால் அடையப்பட்டுள்ள தன்னாட்சி பிராந்தியமே மிகப்பெரிய மற்றும் இறுதி வெற்றியாக சுட்டிக்காட்டப்படுவதுண்டு. எனினும் குர்துகள் ஈராக்கில் கிடைக்கப்பெற்ற வெற்றியை அடித்தளமாகக் கொண்டு, அவ்மாதிரியை பின்பற்றி சிரியா மற்றும் துருக்கி போன்ற அரசுகளிலும் தமது சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டுவதற்காக போராடி வந்துள்ளார்கள். சிரியாவை பொறுத்த வரையில் குர்துக்களின் சிரிய ஜனநாயக படை (SDF) அமெரிக்காவின் பினாமியாக ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவை அழிப்பதில் முன்னணி இராணுவப் பிரிவாக செயற்பட்டிருந்தது. எனினும் ஐ.எஸ்.ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்காவிடம் சிரிய குர்துக்கள் எதிர்பார்த்த தன்னாட்சி அதிகாரத்துக்கான ஆதரவு கிடைக்கப் பெறவில்லை. இதன் பின்னணியில் அமெரிக்காவின் துருக்கி ஆதரவு தளம் காணப்படுகிறது. இந்நிலையில் 2024இன் இறுதியில் துருக்கி ஆதரவு கிளர்ச்சிக்குழு சிரிய ஜனாதிபதி பஷhர் அல்-சதாத்தை அகற்றி ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இக்கிளர்ச்சிக்குழு சர்வதேச ஆதரவு தளத்தையும் பெற்று வருகின்றது. இது சிரிய குர்துக்களுக்கான சூழமைவை மேலும் மேலும் பலவீனப்படுத்துவதாகவே அமைகிறது. அத்துடன் துருக்கியை பொருத்தவரை குர்த்துக்களின் போராட்டத்தில் அப்துல்லா ஓகலன் தலைமையிலான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) பிரதான செயற்பாட்டு தளமாக காணப்படுகின்றது. எனிலும் ஓகலன் 1999ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகள் இஸ்தான்புல்லின் இம்ராலி சிறைத் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலதிகமாக கடந்த 5 ஆண்டுகளில் பார்வையாளர் வருகையை தடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறான குழப்பகரமான சூழமைவினுள்ளேயே சிரிய மற்றும் துருக்கி குர்துக்களின் பின்வாங்கல் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களிடையே கவனக்குவிப்பை பெற்றுள்ளது.
மார்ச்-1அன்று துருக்கியில் தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓகலன், துருக்கிய அரசுக்கு எதிரான 40 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ஆயுதங்களைக் களையவும் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பு விடுத்தார். இந்த அமைதிக்கான அழைப்பு, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (AKP), டெவ்லெட் பஹ்சேலியின் தேசியவாத நடவடிக்கைக் கட்சி (MHP) மற்றும் குர்திஷ் அதிகாரிகளைக் கொண்ட துருக்கியின் ஆளும் கூட்டணிக்கு இடையே பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. இது ஒரு வகையில் துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் ஆளும் அரசாங்கத்தின் விருப்பின் அடிப்படையிலேயே முன்னகர்த்தப்பட்டுள்ளது. குர்திஷ் அரசியல் சக்திகளிடம் எர்டோகனின் சமீபத்திய முயற்சிகள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டின் போது எர்டோகன் தனது உரையில், 'துருக்கியர்கள் மற்றும் குர்துகளிடையே ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட வரலாற்றை' வலியுறுத்தினார். எர்டோகனின் உரை குர்துகளுடன் மீண்டும் ஈடுபட விருப்பம் தெரிவிப்பது மட்டுமல்லாமல், பரந்த அரசியல் சமரசத்திற்கான சாத்தியக்கூறுகளையும் பரிந்துரைத்தது. அக்டோபர் 2024 இல், எர்டோகனின் கூட்டாளியும் தேசியவாத நடவடிக்கைக் கட்சி தலைவருமான பஹ்சேலி, 'துருக்கிய ஜனாதிபதியின் போக்கை மாற்றியமைத்து கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தலைவர் ஓகலனை பாராளுமன்றத்திற்கு அழைப்பதன் மூலம் அத்தகைய நல்லிணக்கத்திற்கு வழிவகுத்தார்.' போர்நிறுத்தத்திற்கு ஈடாக ஓகலனை விடுவிக்கவும் பஹ்சேலி முன்மொழிந்தார்.
குர்திஷ் பிரச்சினையைத் தீர்ப்பதாக கடந்த காலங்களிலும் அரசியல் நெருக்கடி பகுதிகளில் எர்டோகன் ஜனரஞ்சக உரையாடலை முன்னகர்த்தியுள்ளார். எனினும் தளர்த்தப்பட்ட அரசியல் நெருக்கடியில் அல்லது தீவிர துருக்கி தேசியவாத போக்கில் குர்திஷ் பிரச்சினையை சமாதான முறையில் தீர்ப்பதற்கான முன்னகர்வுகள் தளர்த்தப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட 'குர்திஷ் திறப்பு' திட்டத்தை அவர் தொடங்கினார். 2008–11 மற்றும் 2013–15 ஆம் ஆண்டுகளில் இதே போன்ற முயற்சிகள் பின்பற்றப்பட்டன. ஆனால் அரசியல் கருத்து வேறுபாடுகள், மாறிவரும் கூட்டணிகள் மற்றும் எர்டோகனின் ஆட்சிக்கு அதிகரித்து வரும் சர்வாதிகார அணுகுமுறை காரணமாக அனைத்து முயற்சிகளும் இறுதியில் சரிந்தன. இந்தப்பின்னணியிலேயே பத்தாண்டுகளுக்கு பின்னர் மீண்டுமொரு சமரச முயற்சி பற்றிய உரையாடல்கள் மீள எழுந்துள்ளது. இந்தப் புதிய முயற்சியும், முந்தைய செயல்முறைகளைக் குறிக்கும் அதே பரிவர்த்தனை தர்க்கத்தைப் பின்பற்றுகிறது. குர்துகளுடன் ஈடுபடுவதில் எர்டோகனின் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், அமைதியை ஏற்படுத்துவதற்கான விருப்பத்தை தாண்டி, அரசியல் தேவையால் அதிகமாகவும் உந்தப்பட்டதாகத் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
உள்நாட்டில், எர்டோகன், தீவிர தேசியவாத தரப்புடனான கூட்டணியை அதிகளவில் நம்பியுள்ளது. இந்தக் கூட்டாண்மை 2023ஆம் ஆண்டு அவர் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதி செய்தாலும், அதன் பலவீனம் நாட்டின் 2024 உள்ளூர்த் தேர்தல்களில் தெளிவாகத் தெரிந்தது. அப்போது எதிர்க்கட்சி வேட்பாளர்கள் நாடு முழுவதும் முக்கிய மேயர் பதவிப் போட்டிகளில் வெற்றி பெற்றனர். இவ்வெற்றியில் குர்திஷ் ஆதரவு மக்கள் சமத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மறைமுக ஆதரவுகள் உதவியது. இவ்வாறன பின்னணியில் சிறையில் இருந்து ஓகலனின் அறிக்கை, துருக்கிய அரசியலில் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. இது எர்டோகன் தலைமையிலான ஆளும் தரப்பு 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களை ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகங்களை வலுவடைய செய்துள்ளது.
பரந்த குர்திஷ் இயக்கத்துடன் ஈடுபடுவதன் மூலம், எர்டோகன் உடையக்கூடிய மற்றும் உடைந்த எதிர்க்கட்சி கூட்டணியை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயல்கிறார். ஏதிரணியின் ஒற்றுமை என்பது எர்டோகனுக்கு எதிரான பொதுவான எதிர்ப்பைச் சார்ந்துள்ளது. அவற்றின் தொடர்ச்சியாகவே குர்திஷ; ஆதரவு அரசியல் கட்சியான மக்கள் சமத்துவம் மற்றும் ஜனநாயக கட்சியினதும் அதன் குர்திஷ் வாக்காளர்களின் மறைமுக ஆதரவையும் எதிரணி பெற்றுள்ளது. குர்துக்களுடனான புதிய உரையாடலைத் தொடங்குவதன் மூலம், குர்திஷ் ஆதரவு தரப்பை ஒரு சலுகை பெற்ற பேச்சுவார்த்தை கூட்டாளியாக நிலைநிறுத்துவதன் மூலம் எர்டோகன் தனக்குச் சாதகமாக சமநிலையை ஏற்படுத்திக்கொள்ள முயலுகின்றார். எதிர்க்கட்சிகளிடமிருந்து குர்திஷ் அரசியல் ஆதரவைப் பெறுவதும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு குர்திஷ் ஆதரவைப் பெறுவதும், எர்டோகன் மற்றொரு ஜனாதிபதி பதவிக்காலத்தை நாட அனுமதிக்கும். துருக்கி பாராளுமன்ற மொத்த 600 ஆசனங்களில் 57 ஆசனங்களை கொண்டதாக குர்திஷ் ஆதரவு தரப்பு குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது.
எர்டோகனின் சமரசத் தொனி இருந்தபோதிலும், இந்த அமைதி முன்னெடுப்பின் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாகவே உள்ளது. குர்திஷ் அரசியல் சுயாட்சி, கலாச்சார உரிமைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றிய தீர்க்கப்படாத கேள்விகள் காரணமாக முந்தைய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன. பரந்த குர்திஷ் அரசியல் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யாமல் ஆயுதக் குறைப்பில் எர்டோகனின் ஆளும் தரப்பு காட்டிய முக்கியத்துவம் இறுதியில் உரையாடலில் முறிவை ஏற்படுத்தியது. இம்முறையும் அரசியல் இயல்பாக்கம் சாதாரணமாக கருத முடியாது. துருக்கி அரசியலில் ஒரு இயல்பாக்க நடைமுறையை உருவாக்குவதற்கான களத்தை குர்துகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால் அரசியல் இயல்பாக்கம் ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது. குர்திஷ் ஆய்வுகள் மையத்தின் (கே.எஸ்.சி) ஒருங்கிணைப்பாளர் ரெஹா ருஹாவியோக்லு இரண்டு முக்கிய கட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார். முதலாவதாக, ஆயுதக் குறைப்பின் தொழில்நுட்ப மற்றும் தளவாட அம்சங்களை குறிக்கிறது. இரண்டாவதாக, ஒரு பரந்த ஜனநாயகமயமாக்கல் செயல்முறை. இதில் 2016 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செலாஹட்டின் டெமிர்தாஸ் போன்ற உயர்மட்ட குர்திஷ் அரசியல்வாதிகளின் விடுதலை, குர்திஷ் ஆதரவு அரசியல் கட்சியான மக்கள் சமத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சி நடத்தும் நகராட்சிகளில் இருந்து அரசு நியமிக்கப்பட்ட அறங்காவலர்களை நீக்குதல் மற்றும் குர்திஷ் அரசியல் வெளிப்பாட்டை விரிவுபடுத்துவதற்கான சட்ட சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும் என ருஹாவியோக்லு விபரிக்கின்றார். எனிலும் குர்துக்களின் ஆயுதக் குறைப்பு என்பது ஓகலனின் விடுதலை சார்ந்த நிபந்தனையாகவே அமைகின்றது. துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட விவாதங்களுக்கு மத்தியில், துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான், ஆயுதங்களை கீழே போடுவதற்கான உள் தீர்மானத்தை தாமதமின்றி செயல்படுத்துமாறு குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரான துரான் கல்கான், 'ஆயுதக் குறைப்பு தொடர்பான எந்தவொரு முடிவும் சிறையில் உள்ள குர்திஷ் தலைவர் அப்துல்லா ஓகலனிடம் மட்டுமே உள்ளது என்றும், அவரது தீவிர பங்கேற்பு இல்லாமல் எந்த வெளிப்புற அதிகாரமும் அத்தகைய நடவடிக்கையை அமுல்படுத்த முடியாது' என்றும் வலியுறுத்தியுள்ளார். இது ஆயுதக்குறைப்புக்கான முன்நிபந்தனையில் ஓகலனின் 26 ஆண்டு கால சிறைவாழ்க்கைக்கான முடிவை வலியுறுத்துகிறது.
துருக்கி குர்துக்களுக்கு சமாந்தரமாக சிரியாவிலும் ரோஜாவ எனும் சுயாட்சி பிரதேச அறிவிப்பை பின்வாங்கி, சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் சமரச உரையாடலுக்கான ஆரம்பத்தை சிரிய குர்துக்களின் அரசியல் இயக்கமான சிரிய ஜனநாயகப்படை வெளிப்படுத்தியுள்ளது. இதுவொரு வகையில் குர்துக்களின் பின்வாங்கல் உத்தியாக அமைகின்றது. பிராந்தியத்தில் அதிகரிக்கும் நெருக்கடியும் தளர்வடையும் சர்வதேச தளத்தையும் ஈடுசெய்வதற்கான பொறிமுறையாகவே இவ்பின்வாங்கலை தேர்வு செய்துள்ளார்கள். தொடர்ச்சியாக குர்துக்களின் சுதந்திர போராட்டம் முழுமையாக நசுக்கப்படுவதிலிருந்து பாதுகாத்து கொள்ள பின்வாங்கும் பொறிமுறையை தேர்வு செய்வதாகவே குர்துக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த குர்திஷ் செயற்பாட்டாளர் நாசன் ஊஸ்ருண்டாக்கும் வடக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புக்களில் இக்கருத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் முழுமையாக அகற்றப்பட்டதிலிருந்து தாம் படிப்பினையை பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
எனவே, மேற்காசிய பிராந்தியத்தின் அரசியல் சூழமைவை ஈடுசெய்வதற்கான உத்தியாகவே குர்துக்களின் பின்வாங்கல் அமைகின்றது. அதேவேளை எர்டோகன் தனது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கான உத்தியாக குர்துக்களை அரவணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது இரு துருவங்களின் அரசியல் நலனின் ஒருமித்த புள்ளியை இனங்காட்டியுள்ளது. நீடித்த அமைதி மற்றும் நிலையான தீர்வு என்பது வரும் மாதங்களில் எவ்வாறு அமைதிச் செயல்முறைகள் வெளிப்படும் என்பதைப் பொறுத்து, அல்லது அடக்குமுறை மற்றும் மோதல்களின் மற்றொரு சுழற்சி ஏற்படுமா என்பது தெளிவாகும்.
Comments
Post a Comment