இஸ்ரேல்-ஈரான் யுத்தம் | மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமா! | உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமா! -ஐ.வி.மகாசேனன்-
கடந்த காலங்களில் மேலோட்டமாகவும், மறைமுகமாய் பினாமி போர்களையும் நிகழ்த்திய இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடிப் போருக்குள் நகர்ந்துள்ளது. இது உலகப் போருக்கான உரையாடலை மீள அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக திரளக்கூடிய அணி உருவாக்கங்களே உலகப்போருக்கான அச்சத்தையும் உருவாக்குகிறது. எனினும் இரு துருவ அரசியல்கள் பெருமளவில் மறைந்துள்ள போக்குகளே சர்வதேச அரசியலில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இது உலகப் போருக்கான அணி உருவாக்கங்களை சாத்தியமற்றதாக்கி உள்ளமையே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் அவதானமாகவும் அமைகின்றது. உலகில் அதிகரிக்கும் அரசுகளுக்கிடையிலான போர்கள் சர்வதேச பொருளாதாரத்தை தாழ்வான நிலைக்கு நகர்த்தி சர்வதேச அரசுகளின் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு நகர்த்தும் நிலைமைகளே அண்மைய வெளிப்பாடுகளாக அமைகின்றது. அதிகரிக்கும் இஸ்ரேல்-ஈரான் போரும் உலக பொருளாதாரத்திற்கான நெருக்கடியின் மற்றொரு ஆதாரமாகவே அமைகின்றது. இக்கட்டுரை இஸ்ரேல்-ஈரான் போர் ஏற்படுத்தக்கூடிய சர்வதேச அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இஸ்ரேல்-ஈரான் போர் விபரிக்கப்படுகின்றது. ஹமாஸ் ஈரானின் பினாமியாக செயற்பட்டிருந்தது. இந்த பின்னணியிலேயே இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு சமாந்தரமாகவே ஈரானின் அணு விஞ்ஞானிகள், இராணுவ தளபதிகள் மற்றும் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. அதுமட்டுமன்றி கடந்த வருடம் ட்ரோன் தாக்குதலூடாக நேரடி யுத்தத்திற்கான முனைப்பை இருதரப்பும் மேற்கொண்டிருந்தது. இஸ்ரேலும் ஈரானும் மோதியபோது, அவர்கள் குறுகிய காலத்தில் பதட்டத்தை தணிக்கும் வழியையும் கொண்டிருந்தனர். இது பொதுவாக சில மணிநேரங்களுக்குள் முடிவடையும் போர்களாகவே அமைந்திருந்தது. ஜூன்-12 ஈரான் மீதான இஸ்ரேலின் வான் தாக்குதலும் பதிலடியான ஈரானின் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல்களும் ரஷ்சியா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் வரிசையில் முடிவற்ற புதியதொரு போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது. இப்போருக்கான மையக்காரணி ஈரானின் அணுவாயுத உற்பத்தி தொடர்பான அச்சமாக அமைவதனால், அணுசக்தி பயன்பாடு தொடர்பான அச்சத்தை சர்வதேச அரசியலின் பொதுப்புத்தியில் உருவாக்கியுள்ளது. இப்பின்னணியிலேயே மூன்றாம் உலகப்போரும் எதிர்வுகூறப்படுகிறது.
ஈரான் மீதானா இஸ்ரேல் தாக்குதலின் ஆரம்ப கால செய்திகள் இஸ்ரேலுக்கானதாகவே அமைந்திருந்தது. குறிப்பாக ஈரானின் இராணுவ தளபதி, ஈரானின் புரட்சிகர படையின் தளபதி மற்றும் அணுவாயுத விஞ்ஞானிகளை இஸ்ரேலிய தாக்குதல்கள் இலக்கு வைத்து கொலை செய்தது. இது ஈரானுக்கு எதிரான வலுவான சீர்குலைப்பு யுத்தத்திற்கான (Disruptive warfare) ஆதராமாகவே இருந்தது. சீர்குலைப்பு யுத்தம் என்பது, ஒரு போர் அல்லது மோதலில், வழக்கமான போர் முறைகளைப் பின்பற்றாமல், எதிராளியின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் நடத்தப்படும் போரைக் குறிக்கும். நவீன தொழில்நுட்பம் மற்றும் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, எதிரியின் கட்டமைப்பு, தகவல் தொடர்பு மற்றும் தளவாடங்களை சேதப்படுத்தி, அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கு ஈரானின் தலைமை ஆளுமைகளை இலக்கு வைப்பதனூடாக கட்டமைப்பை சீர்குலைக்கும் அணுகுமுறையை ஈரான் பின்பற்றியிருந்தது. எனினும் ஈரானின் கோபம் வலுவான எதிர்வினையாக அமைந்திருந்தது. இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் தனது இராணுவ ஆயுத பலத்தை உறுதி செய்து கொண்டது. ஈரானின் அணி சேர்க்கை தொடர்பில் வலுவான சந்தேகங்கள் காணப்படுகின்ற போதிலும், உறுதியான எதிர்வினை மூலம் போருக்கான உறுதிப்பாட்டை ஈரான் வழங்கியிருந்தது. இது 'தாக்குதல் தான் சிறந்த தற்காப்பு வடிவம்' (attack is the best form of defence) என்ற இராணுவ உத்தியினை வெளிப்படுத்தியது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலின் இழப்புகள் சர்வதேச செய்திகளில் உறுதிப்படுத்த முடியாத போதிலும், சமூக வலைத்தள காணொளிகள் பெரியதொரு அழிவை அடையாளப்படுத்துகிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்கள் ஒரு வாரத்தை நெருங்குகின்றது. இது இரு எதிரிகளுக்கும் இடையேயான கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்களின் தொடக்கமாகும். முழுமையான போரைத் தவிர்க்க இரு தரப்பினரும் உடனடியாக பதட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று வெளிநாட்டுத் தலைவர்கள் கோரினாலும், இஸ்ரேலும் ஈரானும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர மறுக்கின்றன. இஸ்ரேல் 'மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றுகிறது' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புதிய தளபதி முகமது பாக்பூர், தனது முன்னோடி ஹொசைன் சலாமியைக் கொன்ற இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக 'நரகத்தின் வாயில்களைத் திறப்பேன்' என்று சபதம் செய்தார். இவ்உரையாடல்கள் இருதரப்பும் நிலையான போருக்கு செல்வதற்கான அறிகுறியையே வழங்குகின்றது.
ஈரான்-இஸ்ரேல் போருக்கான எதிர்வுகூறல்களிலிருந்து மூன்றாம் உலக யுத்தத்துக்கான எச்சரிக்;கைகளும் சமஅளவு வீச்சைப் பெற்றுள்ளது. அரசுகளுக்கிடையிலான போர்கள் ஆரம்பிக்கும் போதேல்லாம் மூன்றாம் உலகப் போருக்கான எச்சரிக்கைகளும் உயரளவிலான பிரச்சாரத்தை பெற்று வருகின்றது. ரஷ்சியா-உக்ரைன், இந்தியா-பாகிஸ்தான் என்ற வரிசையில் இஸ்ரேல்-ஈரான் யுத்தமும் உலகப்போருக்கான எச்சரிக்கை பிரச்சாரங்களை தூண்டியுள்ளது. நவீன உலக ஒழுங்கில் அணிகள் குழப்பமானதொரு கருத்தியலாகும். சாமுவேல் பி. ஹன்டிங்டன் அடையாளப்படுத்திய 'நாகரீகங்களின் மோதல்' எல்லாம் கடுமையாக சீர்குலைந்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் என்பது, ஈரானின் இஸ்லாமிய பிராந்திய அரசுகளின் ஒத்துழைப்பை இஸ்ரேல் பெற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே உத்வேகம் பெற்றிருந்தது. இங்கு இஸ்லாமின் நுணுக்கமான சியா-சன்னி முரண்பாடு விவாதிக்கப்படுகின்றது. எனினும் இதன் பொருத்தப்பாடும் சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. சியா-சன்னி உள்ளக முஸ்லீம் மோதலின் வெளிப்பாடாய் இஸ்லாமிய நாடுகளிள் யூதத்திற்கான ஆதரவு என்பது நாகரீக மோதல் கோட்பாட்டின் மறுஆய்வையே விபரிக்கின்றது.
அடிப்படையில் நலன்களை மையப்படுத்தியே அரசுகளின் உறவுகள் தீர்மானிக்கப்படுகின்றது. நலன்களின் வடிவங்கள் மாறுகையில் அணிச்சேர்க்கைகளிலும் மாற்றங்களை அடையாளங் காணக்கூடியதாக உள்ளது. இந்தியா நீண்ட காலமாக இஸ்ரேல்-பாலஸ்தீன முரண்பாட்டில் பாலஸ்தீனியர்களிற்கான ஆதரவையே வழங்கி வந்துள்ளது. எனினும் சமகால காசா போரில் நடுநிலைமை அல்லது முக்கிய தருணங்களில் வெளிநடப்பு என்ற ரீதியில் இந்தியாவின் முடிவுகள் இஸ்ரேலுக்கு சாதகமான விளைவுகளையே வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக இஸ்ரேலின் ஆயத வர்த்தக ஒப்பந்தத்தின் நலனை இந்தியா பாதுகாக்கிறது. அதேவேளை ரஷ்சியா-உக்ரைன் போரில் இந்தியாவின் அணுகுமுறை ரஷ்சியாவுக்கு சாதகமானதாக அமைகின்றது. இது ரஷ்சியா-இந்திய பாராம்பிய பாதுகாப்பு நலனை சார்ந்ததாக அமைகின்றது. அதேவேளை பொருளாதார ரீதியான இணக்கமான உறவை இந்தியா தொடர்ச்சியாக அமெரிக்காவுடன் பேணி வருவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய முரணான உறவுப் போக்கையே சர்வதேச அரசுகள் பேணி வருகின்றது. இதில் அணி உருவாக்கங்களும் அதுசார்ந்து உலகப்போருக்கான நகர்வுகளும் அதிகம் சாத்தியமற்ற சூழ்நிலைகளையே வெளிப்படுத்துகின்றது.
எனினும் அரசுகளுக்கிடையில் உருவாகும் போர் நடவடிக்கைகள் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதவொன்றாகவே அமைகின்றது. உலகமயமாதல் ஒழுங்கில் அரசுகள் ஒன்றையொன்று சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளதனால், இவ்ஒழுங்கில் ஏற்படும் சிறு நெருக்கடிகளும் முழு உலகையும் பாதிக்கக்கூடியதாகும். குறிப்பாக பொருளாதார ரீதியான சுமைகளை உலக அரசுகள் தாங்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படுகின்றது. ரஷ்சியா-உக்ரைன் போரின் பொருளாதார சுமைகளின் வெளிப்பாட்டையே ஐரோப்பாவின் விலையேற்றங்களிலும் ஸ்திரமற்ற அரசாங்கங்களிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இத்தகையதொரு பொருளாதார நெருக்கடியை ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவாகவும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது பிராந்தியத்தை தாண்டி உலகப்பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக அமையக்கூடியதாகவே சர்வதேச அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைகின்றது.
ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலரை இஸ்ரேல் கொன்று அதன் சில அணுசக்தி தளங்களை சேதப்படுத்திய முதல் நாளுக்குப் பிறகு, இஸ்ரேல் ஈரானின் புதைபடிவ எரிபொருள் துறையைத் தாக்கியது. ஈரானிய அரசு ஊடகங்கள் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. இது உலக பொருளாதாரத்திற்கு ஆபத்தான செய்தியாகவே அமைகின்றது. தாக்குதல்கள் தொடங்கிய மறுநாளான ஜூன்-13அன்று உலகளாவிய அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7% உயர்ந்தது. ஜூன் -6 அன்று காலை மேலும் 0.5% உயர்ந்தது. மேற்காசியா நாடுகளின் போர்ப் பதட்டங்களின் போது இலங்கையில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் திரள்வது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்ச்சியாக பலராலும் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது. எனினும் இது எதார்த்தமானதாகும். ஈரான்-இஸ்ரேல் போர் தொடர்ச்சியும் ஈரானின் எண்ணெய் வளம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் எண்ணெய் விலையை அதிகரிக்கும் என்பதும் எதார்த்தமான வெளிப்பாடாகவே அமைகின்றது. சர்வதேச தடைகள் இருந்தபோதிலும், ஈரான் இன்று உலகின் ஒன்பதாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. OPEC+இல் உதிரி எண்ணெய் உற்பத்தி திறன் ஈரானின் உற்பத்திக்கு சமமாக உள்ளது. எனவே ஈரானிய உற்பத்தியில் ஒரு பெரிய இடையூறு ஏற்பட்டால் விநியோகம் மிகவும் ஆபத்தானதாகிவிடும்.
ஈரானின் நேரடி எண்ணெய் விநியோகத்தின் தடை ஏற்படுத்தும் நெருக்கடிக்கு சமாந்தரமாக, ஈரானின் எல்லையில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி தடைப்படுவதனூடக உலக எரிபொருள் விநியோக சங்கிலி பெரும் ஆபத்துக்குள் செல்லும் நிலை காணப்படுகின்றது. உலகின் பெரும்பாலான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பிற முக்கிய பொருட்கள் மேற்கு ஆசியாவில் உள்ள பரபரப்பான கடல் பாதைகள் வழியாக செல்கின்றன. இதில் ஹார்முஸ் ஜலசந்தியும் அடங்கும். ஈரானை வளைகுடா நாடுகளிலிருந்து பிரிக்கும் ஒரு குறுகிய நீர்வழிப்பாதையான இந்த நீரிணை, அரேபிய கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20% கடந்து செல்லும் உலகளாவிய தடைப் புள்ளியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 21 மில்லியன் பீப்பாய்களைக் கொண்டு செல்கிறது. மிகக் குறுகிய இடத்தில், 33 கி.மீ (21 மைல்) அகலம் கொண்டது. நீர்வழியில் உள்ள கப்பல் பாதைகள் இன்னும் குறுகலாக இருப்பதால், அவை தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல், தெஹ்ரான் கடல்சார் விநியோக பாதையை மூடுமா என்ற பல தசாப்த கால கேள்விக்கு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. இது எண்ணெய் விலை ஏற்றத்தையும் தூண்டியுள்ளது. இஸ்ரேலுடனான மோதல் தீவிரமடைவதால், ஜலசந்தியை மூடுவது குறித்து தெஹ்ரான் பரிசீலித்து வருவதாக, ஈரான் பழமைவாத சட்டமன்ற உறுப்பினர் எஸ்மாயில் கோசாரியை மேற்கோள் காட்டி, ஈரானிய செய்தி நிறுவனமான IRINN செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், 1980-1988 வரையிலான ஈரான்-ஈராக் போரின் போது, இரு நாடுகளும் வளைகுடாவில் வணிகக் கப்பல்களை குறிவைத்தபோது, ஹார்முஸ் ஒருபோதும் முழுமையாக மூடப்படவில்லை. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியைத் தடுக்கும் முயற்சிகள் தெஹ்ரானின் சொந்த ஏற்றுமதிகளை, குறிப்பாக சீனாவிற்கான ஏற்றுமதிகளை சீர்குலைத்து, மதிப்புமிக்க வருவாயைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சர்வதேச வர்த்தகத்துக்கு ஆறுதலான தரவாக அமைகின்றது.
எரிபொருள் விலையேற்றத்தை வெறுமனவே ஒரு பொருளின் விலையேற்றமாக கடந்து செல்ல முடியாது. எண்ணெய் விலைகள் உயரும்போது, உற்பத்திச் செலவும் அதிகரிக்கிறது. இதனால் உணவு, உடை மற்றும் இரசாயனங்கள் என அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை செலுத்தக்கூடியதாக அமைகின்றது. எதிர்காலத்தைப் பொறுத்தவரை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில் மத்திய வங்கிகள் குறைந்த கொள்கை நெகிழ்வுத்தன்மையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இலங்கையர்களுக்கு இது தொடர்பில் சமீபத்திய அனுபவமும் காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு வரலாறு காணாத இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடு எரிபொருட்களின் விலையேற்றத்திலிருந்தே பொதுமக்களுக்கு சுமையாகியது. எரிபொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டது. அரகலய எதிர்ப்புகளின் ஆரம்பமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இனங்காணக்கூடியதாகவும் அமைந்திருந்தது. இத்தகைய அனுபவச்சூழல் மீள உருவாகக்கூடிய நிலைமைகளையே ஈரான்-இஸ்ரேல் போர் அடையாளப்படுத்துகின்றது. இலங்கையின் எரிபொருள் இறக்குமதி மேற்கு ஆசியாவை சார்ந்து குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை சார்ந்தே காணப்படுகின்றது. அதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் இலங்கையின் எரிபொருள் தேவையிலும் பிரதிபலிக்கக்கூடியதாகும். ஏற்கனவே நெருக்கடியில் உள்ள அந்நிய செலாவணி இருப்புக்களை வடிகட்டும். உள்நாட்டு எரிபொருள் விலைகளை பலருக்கு கட்டுப்படியாகாததாக மாற்றும். போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தியை முடக்கும். விவசாயம் முதல் உற்பத்தி வரை அனைத்து துறைகளிலும் இதன் அலை விளைவு உணரப்படும். ஈரான்-இஸ்ரேல் பதட்டமான சூழலை தணிக்கக் கோரிய இலங்கையின் அக்கறையான அறிக்கையும் இவ்அச்சத்தினடிப்படையிலேயே அமைகின்றது.
எனவே, இஸ்ரேல்-ஈரான் போர் சார்ந்த அச்சம் மூன்றாம் உலகப் போருக்கானது என்பது மாயையான பிரச்சாரமாகவே அமைகின்றது. மாறாக இது உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுக்கக்கூடியதாக மாறியுள்ளது. இப்போரை இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான போராகவோ அல்லது மேற்காசிய பிராந்தியத்தின் கொதிநிலை போராகவோ கடந்து செல்ல இயலாத நிலைமையை அதன் புவிசார் அரசியல் காரணி உருவாக்கியுள்ளது. எனினும் இஸ்ரேல் மற்றும் ஈரான் தமது இருப்பிற்கான மையத்தில் போரை அணுகுவது உலகிற்கே ஆபத்தான எதிர்காலத்தை முன்னறிவிக்கின்றது. இதுவே இராஜதந்திரத்திற்கான தேவையையும் ஏற்படுத்துகின்றது. ஈரானியத் தலைவர்கள் சரணடைய மாட்டோம் என்று வலியுறுத்துகிறார்கள். இஸ்ரேலியர்கள் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்தும் நம்பிக்கையில் பரந்த இலக்குகளை நோக்கி நகர்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இப்போதைக்கு இருவரும் போராட அனுமதிப்பதில் திருப்தி அடைகிறார். இப்பின்னணியில் அற்புதமான செயல்பாட்டு வெற்றிகள் அரிதாகவே நீடித்த மூலோபாய முன்னேற்றங்களை அளித்த ஒரு பிராந்தியத்தில் இது ஒரு ஆபத்தான அணுகுமுறையாகும். இவ்ஆபத்தான அணுகுமுறைக்கான விளைவுகளை உலகமே எதிர்கொள்ள கடமைப்பட்டுள்ளது.
Comments
Post a Comment