பட்டலந்த அறிக்கை வரிசையில் செம்மணி மனிதப் புதைகுழி NPP அரசாங்கத்தின் கவனத்தைப் பெறுமா! -ஐ.வி.மகாசேனன்-
பல நாடுகளிலும் நிலத்தை தோண்டுகையில் கனிம வளங்களும், பெற்றோலியமும், குடிநீருமே கிடைக்கப் பெறுகிறது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் வீதி அபிவிருத்தி, மயான அபிவிருத்தி என அபிவிருத்தி திட்ட அத்திவாரப் பணிகளுக்கு நிலத்தை தோண்டுகையிலேயே தொகை தொகையான மனித எலும்புக் கூட்டு எச்சங்களே கிடைத்து வருகின்றது. சமுக வலைத்தளம் என்ற போர்வையில் இணையத்தால் உலகம் சுருங்கியுள்ள இன்றைய காலகட்டத்தில், காசாவிலும் உக்ரைனிலும் மக்கள் தொகையாக மரணித்து கிடக்கும் பிரேத காட்சிகள் உலக மக்களை உருக்கியுள்ளது. சாமாந்தரமான காலப்பகுதியில் ஈழத்தமிழர்களின் என்புக்கூடுகள் கூட்டாக அணைத்தவாறும், ஒன்றாக இணைந்தவாறும், சிறுவர்களினாதாகவும் காட்சிகளாகிறது. எனினும் உலக மக்களிடமோ குறைந்தபட்சம் இலங்கைக்குள்ளேயோ போதிய கவன ஈர்ப்பை பெறவில்லை என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றது. கூட்டு என்புத் தொகுதிகளின் கண்டுபிடிப்பும் அதனை மையப்படுத்தி எழும் செய்திகளும், ஈழத்தமிழர்கள் மீதான தென்னிலங்கை அரச பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலைக்கான ஆர்வத்தை தோலுருக்கிறது. எனினும் இதன் முக்கியத்துவம் ஈழத்தமிரசியலில் இனங்காணப்பட்டுள்ளமையை அரசியல் மற்றும் சிவில் தரப்பினரிடம் அறிய முடியவில்லை. இக்கட்டுரை செம்மணி மனிதப் புதைகுழிக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இலங்கை அரச இயந்திரத்தின் கரமான அரசாங்கத்திற்கு காணப்படுகின்றமையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் 1990களின் இறுதியில் அடையாளம் காணப்பட்டதொன்றாகும். 1996ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் யாழ்ப்பாண தீபகற்பம் கைப்பற்றப்பட்ட பின்னர் 600 பேர் காணமால் போயுள்ளதாக 1997-நவம்பரில் சர்வதேச மன்னிப்புச் சபை செய்தி வெளியிட்டிருந்தது. செம்மணி விவகாரம் 1996 செப்டெம்பரில் செல்வி கிருஷhந்தி குமாரசாமி என்ற படசாலை மாணவி இலங்கை இராணுவத்தால் கூட்டு வன்புணர்வுக்கு உட்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், கிருஷhந்தியை தேடிச் சென்ற அவரது உறவினர்களையும் படுகொலை செய்து புதைத்த சம்பவத்துடன் தொடர்புகின்றது. கிருஷhந்தி படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவத்தினர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்ஷ செம்மணியை மனிதப் புதைகுழியின் ஆதாரமாக 1998ஆம் ஆண்டு தனது ஒப்புதல் வாக்கு மூலத்தில் வெளிப்படுத்தியிருந்தார். சோமரத்ன ராஜபக்ஷவின் ஒப்புதல் வாக்குமூலத்தில், 'மேலதிகாரிகளால் இரவில் அனுப்பப்படும் உடல்கள் செம்மணியில் புதைக்கப்படுவதுண்டு முன்னூறு முதல் நானூறு வரையான புதைகுழிகளை என்னால் காண்பிக்க முடியும்' எனக்குறிப்பிட்டிருந்தார். சோமரத்ன ராஜபக்ஷவுடன் மற்றுமொரு குற்றவாளியான ஏ.எம். பெரேராவும் தனது வாக்கு மூலத்தில் மனிதப்புதைகுழி விவகாரத்தை ஒப்புக்கொண்டிருந்தார். ஒரே புதைகுழியில் மட்டும் 25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன என பல தகவல்களையும் தெரிவித்திருந்தார்கள். எனினும் அரசாங்கம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தை கிருஷhந்தி படுகொலை விவகாரமாக சுருக்குவதற்கான நகர்வுகளையே முன்னெடுத்திருந்தது. மனிதப்புதைகுழி நிரூபிக்கப்படுவது, இனப்படுகொலையின் கொலைக்கான எண்ணம் (Intention) இருப்பதை உறுதி செய்வதாக அமையக் கூடியதாகும். ஆதலாலேயே இலங்கை அரசாங்கமும் மனிதப் புதைகுழியை படுகொலையாக சுருக்க ஆர்வம் காட்டியது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவத்தினரின் ஒப்புதல் வாக்குமூல வெளிப்பாடுகளைத் தொடர்ந்து கணிசமாக அதிகரிக்கப்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இலங்கை அரசாங்கமும் புதைகுழிகளை ஆராய்வதற்கான முன்முயற்சிகளுக்கு இணங்கியது. இம்முயற்சி முற்றிலும் ஒரு விளம்பர நடவடிக்கை என்பதை நாளடைவில் ஏற்படுத்தப்பட்ட காலதாமதம் உறுதிப்படுத்தியது. அதேவேளை 1996-1998களில் செம்மணி சோதனைச் சாவடிக்கு நேரடிப் பொறுப்பில் இருந்த இராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் ஸ்ரீலால் வீரசூரிய மற்றும் அவருக்குக் கீழ் இருந்த பிரிகேடியர் ஜனக பெரேரா ஆகியோர் 1999ஆம் ஆண்டு இராணுவத் தளபதியாகவும் துணைத் தலைமைத் தளபதியாகவும் பதவி உயர்வு பெற்றிருந்தனர். வாக்குமூலம் வழங்கப்பட்டு பத்து மாதங்களுக்குப் பிறகே அகழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டது. மனிதப் புதைகுழியினை அகழ்வதற்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ் நீதவான் நீதிமன்ற விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். செம்மணி மனிதப் புதைகுழி 1999ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2000ஆம் ஆண்டு பங்குனி 27ஆம் திகதி வரையான ஒன்பது மாதங்கள் நடைபெற்றன. அக்காலப்பகுதியில் செம்மணியில் 25 புதைகுழிகள் தோண்டப்பட்டு 16 சடலங்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட 16 பேரினது சடலங்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டவை என செம்மணி புதைகுழியின் விசேட நீதிபதி திரு மா.இளஞ்செழின் மரண விசாரணை தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர்கள் அடையாளப்படுத்திய 10 புதைகுழிகளில் சடலங்கள் இருக்கவில்லை. இது பத்து மாத கால தாமத்தின் மீது பொதுமக்களிடையே சந்தேகங்களை உருவாக்கியது. 16 சடலங்களில் அடையாளம் காணப்பட்ட இரண்டு உடல்கள் 1996இல் காணாமல் போன ஆண்கள் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து ஏழு இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும் வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு சில மாதங்களிக் பின்னர் ஏழு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், முடக்கப்பட்ட அவர்களுடைய கடவுச்சீட்டும் மீள ஒப்படைக்கப்பட்டது. பின்னாட்களில் இராணுவ உயர் பதவிகளையும் பெற்றிருந்தார்கள்.
1999-2000ஆம் ஆண்டு செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் பேராசிரியர் சந்திரசிறி நேரியெல்லா தலைமையிலான தடயவியல் நிபுணர்கள் குழு, தங்கள் அறிக்கைகளை சட்டமா அதிபர் துறையிடம் சமர்ப்பித்திருந்தது. எனினும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற விடயங்களுக்குப் பொறுப்பான நிறுவனமான சட்டமா அதிபர் அலுவலகம், நடவடிக்கைகளில் நீண்ட தாமதத்திற்கு எந்த காரணத்தையும் தெரிவித்திருக்கவில்லை. 2006ஆம் ஆண்டு செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கில், 'புதைகுழிகள் தோண்டி எடுக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், சட்டமா அதிபர் துறையிலிருந்து எந்த அறிவுறுத்தலும் வராததால், வழக்கைத் தொடர முடியவில்லை' என்று மட்டுமே காவல்துறையினரால் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க முடிந்தது. இந்த நிலைமை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு குறித்த தீவிரமான கவலைகளையே எழுப்பியுள்ளது.
ஆட்சி மாற்றங்கள் ஒவ்வொன்றின் போதும் குறைந்தபட்ச விசாரணை முன்னேற்றங்களையாவது எதிர்பார்த்து செம்மணி விவகாரம் நகர்த்தப்பட்டு வந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 1996ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவ முகாமிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனெரல் துமிந்த கெப்பட்டி வெலான சார்பில் சட்ட மா அதிபர் அலுவலகம் ஆஜராகியிருந்தது. மேலும், நீதிமன்ற வாளகத்தில் வைத்தே மனுதாரர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமரவடிவேல் குருபரன் தனது விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னனியிலும் நாவற்குழி வழக்கு தொடர்புறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப்பின்னணியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இதயத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியிலும் செம்மணி விவகாரம் எவ்வித முன்னேற்றங்களையும் அடையமுடியவில்லை.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாற்றம் பற்றிய பிரச்சாரங்களுக்கு சவால் விடும் வகையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் மீள் உரையாடலை பெற்றுள்ளது. இது எதேர்ச்சையாக ஏற்பட்ட செயலாகவே அமைகின்றது. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி-சிந்துபதி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டதிலிருந்தே செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் மீள் உரையாடலுக்கு வந்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடைபெறும் அகழ்வுப் பணியில் தற்பொழுது வரை 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்அகழ்வில் எவ்வித ஆடை எச்சங்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சித்திரவதைப்படுத்தப்பட்டு ஆடைகள் களையப்பட்டு நிர்வானமாக புதைக்கப்பட்டிருப்பார்களென சந்தேகிக்கப்படுகின்றது. ஜூன்-8அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அந்த இடத்தை ஒரு வெகுஜன புதைகுழியாக முறையாகவும் அங்கீகரித்துள்ளது. எனினும், மனிதப் புதைகுழி உள்ள பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கும், சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் போதுமானளவு நிதி இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. எனினும் செம்மணி-சிந்துபதி மனிதப் புதைகுழி ஏற்படுத்தியுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச அழுத்தங்களின் தொடர்ச்சியாக அரசாங்கம் தவிர்த்து செல்ல முடியாத நிலையில் நகர்த்தி செல்கின்றது. எனினும் அதன் முக்கியத்துவம் சார்ந்த போதிய கவனக்குவிப்பு உருவாக்கப்படவில்லையே என்ற சந்தேகங்களும் காணப்படுகின்றது.
பட்டலந்த அறிக்கை விவகாரம் மீள் உரையாடலை பெற்ற போது முழு இலங்கையும் அதனை முதன்மைப்படுத்தியிருந்தது. அரசாங்கமும் பட்டலந்த அறிக்கையை இரு தசாப்தங்களுக்கு பின்னர் தூசுதட்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. அறிக்கையினை வாசிக்கையில் எழுத்தில் பொதிக்கப்பட்டுள்ள சித்திரவதைகளை கேட்டு சபாநாயகர் கண்ணீரும் வடித்திருந்தார். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளில் காட்சிகளாகவே என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிவருகின்றது. கூட்டு கூட்டாக பெற்றோர்-பிள்ளைகள், இணையர்கள் என என்புக்கூடுகள் வெளிவருவது ஆளும் அரசாங்கத்திற்கு கரிசணயை ஏற்படுத்தவில்லை. தென்னிலங்கை ஊடகங்களும் பெருமளவில் செம்மணி மனிதப்புதைகுழி செய்திகளை இருட்டடிப்பு செய்வதாகவும் தவிர்த்து செல்வதாகவுமே அமைகின்றது. இவை இலங்கை இரு தேசம் என்பதனையே மீள மீள உறுதி செய்கின்றது.
இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான கேள்வி என்னவென்றால், கடந்த காலத்தை மீண்டும் ஒருமுறை வெளிக்கொணர்ந்து செம்மணியை சாத்தியமாக்கிய அரசியலுக்கு இறுதி தீர்ப்பு வழங்குமா அல்லது மீண்டும் கடந்த அரசாங்கங்களைப் போல் இழுத்தடிப்பு செய்யுமா என்பதுதான். எனினும் கடந்த கால இனவாத செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூறுவதை தவிர்ப்பதனையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வழக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக தையிட்டி விவகாரத்தில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பௌத்த விகாரைகளுக்கு பதிலீடாக காணிகள் மற்றும் நஷ்டஈடுகள் வழங்குவது பற்றியே உரையாடப்படுகிறது. மாறாக ஆக்கிரமிப்பு இனவாதிகளுக்கு எதிராக எவ்வித நீதிப்பொறிமுறைகளையும் பரிந்துரைப்பதாக அமையவில்லை. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த கால இனவாதங்களை தவிர்த்து செல்வதை கொள்கையாக கொண்டு செயல்படுவதையே அடையாளப்படுத்துகிறது. இவ்வாறான அணுகுமுறையையே செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அரசாங்கம் பின்பற்றுகின்றமையையே செய்திகளும் அரசாங்கத்தின் செம்மணி விவகார தவிர்ப்பும் வெளிப்படுத்துகிறது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்து வரும் இனவழிப்பு பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. செம்மணி மனிதப் புதைகுழிகள் அரசியல் தீப்பொறியாக மாறுவது இலங்கை அரசின் இனப்படுகொலையை நிரூபிப்பதாக அமையக்கூடியதாகும்.
எனவே, தென்னிலங்கை இரு தசாப்தங்களுக்கு பின்னர் பட்டலந்த வதை முகாமுக்கு அளித்த முக்கியத்துவத்தைத் கூட செம்மணி மனிதப் புதைகுழி விவகாத்துக்கு வழங்கப் போவதில்லை என்பதுவே நிதர்சனமாகும். எனினும் இவ்நிதர்சனத்துக்கு பின்னால் ஈழத்தமிழ் அரசியல் இழுபட்டு செல்ல முடியாது. சர்வதேச அரங்கில் இனப்படுகொலையை நிரூபிப்பதில் மனிதப் புதைகுழிகள் ஆழமான செல்வாக்கை செலுத்தியுள்ளது. இம்முக்கியத்துவத்தை உணர்ந்து ஈழத்தமிழரசியல் செயற்பாட்டாளர்கள் நகர வேண்டிய தேவை உள்ளது. மனிதப் புதைகுழி வரலாறும் வெறுமனவே செம்மணியுடன் சுருக்கக் கூடியதல்ல. துரையப்பா விளையாட்டு அரங்கு , மிருசுவில், மன்னார், கொக்கு தொடுவாய், கிளிநொச்சி என 21 இற்கு மேற்பட்ட தளங்களில் இனங்காணப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தால் மனிதப் புதைகுழி பட்டியல் இன்னும் அதிகரிக்கலாம். தையிட்டி விகாரை விவகாரத்திலும் இச்சந்தேகம் பொதுப்பரப்பில் முன்வைக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஆங்கில பத்திரைகையின் கார்ட்டூன் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது போல் செம்மணி-சிந்துபதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் உண்மை (Truth), நீதி (Justice), பொறுப்புக்கூறல் (Accountability) மற்றும் நல்லிணக்கம் (Reconciliation) என்பவற்றை கேள்விக்குட்படுத்துவதாக அமைகிறது. இதனைப் பற்றி தமிழ் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை நகர்த்துவது ஈழத்தமிழரசியலின் அர்ப்பணிப்பிலும் சாதுரியத்திலும் தங்கியுள்ளது.
Comments
Post a Comment