இலங்கையின் நீதி அமைச்சர் கொலை செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளிடமிருந்து புகார்களை கோருகிறாரா! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியல் கலாச்சாரத்தில் வதை முகாம்களும் மனிதப் புதைகுழிகளும் இயல்பான ஒன்றாகவே அமைகிறது. பேரினவாத எண்ணங்களோடு சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு இராணுவ வதை முகாம்கள் பயன்படுத்தப்பட்டதற்கு சமாந்தரமாக தென் இலங்கையிலும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு இராணுவ வதை முகாங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைமை கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினருக்கு (ஜே.வி.பி) இராணுவ வதை முகாம் சார்ந்த அனுபவங்கள் காணப்படுகின்றது. 70 மற்றும் 80களில் பல ஜே.வி.பி சிங்கள இளைஞர்கள் இராணுவ வதை முகாம்களுக்குள் தங்கள் உயிரை இழந்துள்ளார்கள். அதற்கானதொரு ஆதாரமாகவே பட்டலந்த அறிக்கை காணப்படுகிறது. சர்வதேச ஊடக வெளிச்சத்தை தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் பட்டலந்த அறிக்கையும் அண்மையில் மீள்தூசு தட்டப்பட்டுள்ளது. இத்தகைய அனுபவங்களின் பின்னணியிலும் ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் வடக்கு-கிழக்கு மனிதப் புதைகுழிகளுக்கான நீதிக் கோரிக்கைகளை வதந்தியாக சித்தரிப்பது, உயர்வான இனவாத அரசியலின் தொடர்ச்சியையே உறுதிசெய்கிறது. இக்கட்டுரை இலங்கை நீதி அமைச்சர் வடக்கு-கிழக்கு மனிதப் புதைகுழி விவகாரத்தை வதந்தியாக தவிர்க்கும் அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் மேலும் பல புதைகுழிகள் உருவாகும் என்ற நீண்டகால கவலையை, வெறும் 'வதந்தி' என்று இலங்கை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார பாரளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜூன்-17அன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27.2இன் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தமிழர் தாயகத்தின் மனிதப்புதைகுழிகள் தொடர்பான வாய்மொழி விடைக்கான வினாக்களை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் முன்வைத்த போதே மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார். 'வடகிழக்கு முழுவதும் கூட்டுப் புதைகுழிகள் சிதறிக்கிடக்கின்றன. உண்மை எப்போது வெளிப்படும்? நீதிக்காகக் காத்திருக்கும் தாய்மார்கள் தங்கள் வாழ்நாளில் சேவை செய்யப்படுவார்களா?' என சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், '1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளிலிருந்து இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எண்பதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும், மண்டைதீவு, செம்பாட்டுத் தோட்டம் - புனித தோமையார் தேவாலய வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புடைய கொலைகள் பற்றியும் இலங்கை இராணுவத்தின் துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை விசாரணை செய்ய வெண்டும்' என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த நாணயக்கார, 'செம்மணிப் புதைகுழியின் கண்டுபிடிப்புகளை அங்கீகரித்தார். இதுவரை 19 தொகுப்பு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார். இந்த மாத தொடக்கத்தில் கூடுதல் நிதிக்கான கோரிக்கையைத் தொடர்ந்து, ஜூன் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பு காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருவதாக' தெரிவித்திருந்தார். மேலும், கடந்த ஆண்டு ஜூன்-29ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் நாணயக்கார தெரிவித்தார். எனினும் மண்டைதீவைப் பற்றி பேசும்போது, நாணயக்கார குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். 'எங்களுக்கு எந்த போலீஸ் புகாரும் இல்லை. நீதிமன்ற உத்தரவும் இல்லை. வெறும் வதந்தி. நீதிமன்ற உத்தரவின் பேரில் நாங்கள் பார்வையாளர்கள் மட்டுமே. ஆதாரங்கள் வந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டால், நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை, வதந்தியின் பேரில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது' என்றவாறு நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதி அமைச்சர், அரசாங்கத்தின் பொறுப்புகூறலற்ற இயல்பின் தொடர்ச்சியையே மனிதப் புதைகுழி விவகாரத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். மண்டைதீவு மனிதப்புதைகுழி விவகாரத்தை கேள்வியெழுப்பியிருந்த சிறிதரன் தனது கேள்வியில், பாதிக்கப்பட்டவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள புகார் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் தகவல்களை ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார். 'மண்டைதீவு, செம்பாட்டுத்தோட்டம் - புனித தோமையார் தேவாலயப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990 களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு-கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. ....3ஆம் வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த திருமதி. சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார்' என சிறிதரன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பில் சிறிதரன் காணாமல் போனோர் அலுவலகத்திடம் வழக்கை சமர்ப்பித்துள்ளார். அத்துடன் இலங்கைப் படையினர் தமிழ் பொதுமக்களைச் சுற்றி வளைத்து, தமிழீழத்திற்கான ஆதரவைக் கைவிடும்படி கட்டாயப்படுத்தி, அவர்களை அழைத்துச் சென்றதை வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (NESOHR) அறிக்கை ஆவணப்படுத்துகிறது. கடத்தல்களின் போது துணை இராணுவப் பிரமுகரும், முன்னாள் இலங்கை அமைச்சரவை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்ததைக் கண்டதாகவும் சாட்சிகள் கூறினர்.
ஏராளமான சாட்சியங்கள் இருந்தபோதிலும், நாணயக்கார தனது அமைச்சகம் 'செவிவழிச் செய்திகள்' மூலம் வழிநடத்தப்படாது எனத்தெரிவிப்பது மனிதப் புதைகுழி விவகாரத்தை புறமொதுக்கும் செயலாகவே அமைகின்றது. இது கடந்த கால அரசாங்க நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. கடந்த கால இனப்படுகொலை அரசாங்கங்களின் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிராகரித்து வருகின்றது. இந்நிலையிலேயே கொலைக்கான எண்ணத்தை (Intention) மெய்ப்பிக்கும் மனிதப்புதைகுழிகள் பிரதானப்படுவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தவிர்க்க முற்படுகின்றது. பொது நடைமுறையில், பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கையிலேயே போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறக்கூடியதாக அமையும். இலங்கையின் நீதி அமைச்சர் புகாரை தாண்டி, விசாரணைகளுக்கு முன்னரே பாதிக்கப்பட்ட மக்களிடமே போதிய ஆதாரங்களை கோருவது, புகாரினை நிராகரிப்பதற்கான முனைப்பையே தெளிவாக்குகின்றது. இது ஒருவகையில் இலங்கை இராணுவத்தை மாத்திரமின்றி, இலங்கையின் துணை ஆயுதக் குழுக்களாக செயற்பட்டவர்களையும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் முனைப்பாகவே தமிழ் மக்களால் விமர்சிக்கப்படுகின்றது.
கண்முன்னே ஈவிரக்கமற்ற முறையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் காட்சிக்கு செம்மணியில் வெளிவந்துள்ளது. செம்மணி விவகாரம் 1990களின் இறுதியிலிருந்து ஆதாரங்களுடன் கூடிய விவகாரமாக காணப்படுகின்ற போதிலும், புதிய அரசாங்கம் தன்னார்வமாக செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை முன்னெடுத்திருக்கவில்லை. பெப்ரவரியில், செம்மணி-சிந்துபதி இந்து மயான அபிவிருத்தி பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்ட போதே எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தலையீட்டில் நீதிமன்ற விசாரணைக்கு நகர்த்தப்பட்டு, மே மாதம் அகழ்வாராய்ச்சிப் பணி இடம்பெற்றிருந்தது. அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கும் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவா, சர்வதேச ஆங்கில ஊடகமான அல் ஜசீராவிடம் கூறுகையில், 'இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று பிறந்த குழந்தை அல்லது 10 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் அடங்கும்' எனத் தெரிவித்துள்ளார். இது குடும்பங்களாக கொலை செய்யப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்களையே உறுதி செய்கின்றது. இவ்வாறான நிலையில் நீதி அமைச்சர் யார் வந்து காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என விரும்புகின்றார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கொலை செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அழைக்கின்றாரோ என்ற விமர்சனமே தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. செம்மணி விவகாரத்தில் கொலைசெய்யப்ட்ட மனித எலும்புக்கூடுகளே தமக்கான நீதிக்கோரிக்கையை மீள எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் இராணுவ முகாம்கள் யாவும் வதைமுகாம்களாகவும் மனிதப் புதைகுழிகளின் ஆதாரமாகவுமே இருந்துள்ளது என்பதற்கான வெளிப்படையான ஆதாரமாகவே செம்மணி காணப்படுகின்றது. செம்மணி விவகாரத்தில் சோமதேவா அல் ஜசீராவிடம், 'புதைக்கப்பட்ட இடத்தின் 40 சதவீதத்திற்கும் குறைவானதே இதுவரை தோண்டப்பட்டதாகவும், உயரமான புகைப்படங்களை எடுக்க செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி கல்லறைக்குள் இரண்டாவது சாத்தியமான புதைகுழியை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும்' தெரிவித்திருந்தார். மேலும், 'நான் நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளேன். இது ஒரு பாரிய புதைகுழியாக அடையாளம் காணப்படலாம் என்றும் மேலும் விசாரணை தேவை என்றும் கூறுகிறேன்' என சோமதேவா குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்கள் மீதான பேரினவாதத்தின் ஒடுக்குமுறை தொடர்பான தென்னிலங்கை அரசாங்க அறிக்கைகள் யாவுமே, பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளை மூடி மறைக்க இயலாது அம்பலப்படுத்தியுள்ளது. ஆதலாலேயே அறிக்கைகள் யாவும் உரிய விசாரணைகளோ அல்லது தீர்வுகளோ இன்றி கிடப்பில் போடும் அவலங்கள் தொடருகின்றது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரமும் குழாய் நீர் பணிக்காக குழிகள் தோண்டப்படுகையிலேயே மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்க்கப்பட்ட போதிலும், மக்களிடம் அவநம்பிக்கைகளே தொடருகின்றது. கடந்த கால அனுபவங்களில் நீதிமன்றத்திற்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட விவகாரங்கள், அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் நீர்த்துப் போகச்செய்த வரலாறுகள் காணப்படுகின்றது. செம்மணி விவகாரமே அதற்கு பொருத்தமான முன்னுதாரணமாகும். 2000ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் 2006 வரையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உரிய அறிவுறுத்தல்கள் வராமையால் வழக்கை தொடர முடியாத சூழலையே நீதிமன்றத்திற்கு காவல்துறை தெரிவித்திருந்தது. இத்தகைய அனுபவ பின்னணியில் கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான நீதி அமைச்சரின் பதிலும் அதிகம் அவநம்பிக்கையையே உருவாக்குகிறது. அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற சமகால கருத்துப்பகிர்வில் வளவாளர் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் குமாரவடிவேல் குருபரன் அவர்கள் 'அரசாங்கத்தின் முடிவெடுக்கும் சுமை' (burden of decision making) தொடர்பில் விளக்கியிருந்தார். குறிப்பாக மக்களுக்கான அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் சுமைப் பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது. அதனை செய்ய விரும்பாத போது அரசாங்கம் தீர்வு சார்ந்து முடிவெடுக்கும் சுமையை நீதிமன்றம் போன்ற ஏனைய துறைகளுக்கு நகர்த்தி விடுகின்றது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் உள்ள விடயம் தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க முடியாதென விலகிச் செல்லக்கூடிய சூழல் உருவாக்கப்படுகின்றது. கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பிலான அறிக்கை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் தெரிவிப்பது, ஒருவகையில் முடிவெடுக்கும் சுமையை நகர்த்தி தவிர்த்து போகும் எண்ணங்களையே விளக்குகின்றது.
இலங்கையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பிற மனிதப் புதைகுழிகளின் அகழ்வாராய்ச்சிகள் அர்த்தமுள்ள பதில்களுக்கு வழிவகுக்கத் தவறியுள்ளன. குறிப்பாக நீதி அமைச்சரிடம் சிறிதரனின் கேள்வியில் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரமும் சுட்டிக்காட்டப்பட்டது. அகழ்வாராய்ச்சிகளில் மனித எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்ட போதிலும், மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மறைக்கும் நிலையிலேயே வதந்தி எனும் பிரச்சாரத்தை முன்னகர்த்தியுள்ளார்கள். மன்னாரின் வடமேற்குப் பகுதியில் மிகப்பெரிய அளவில் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்மனித புதைக்குழியும் குடிநீர்; திட்டத்திற்காக 2013இல் நீர்க்குழாய்கள் புதைப்பதற்காக குழிகள் தோண்டுகையில் மனி எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு தொடங்கி, சோமதேவா தலைமையில் இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மொத்தத்தில், 346 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட நீதி அமைச்சகம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஆகியவை இந்த அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிட்டன. இருப்பினும், மன்னார் அகழ்வாராய்ச்சியை அரசு கையாண்ட விதத்தை சோமதேவா விமர்சித்தார். அதாவது அவரது ஆரம்ப கோரிக்கைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், அவற்றை பகுப்பாய்வு செய்ய இன்னும் அவருக்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், மன்னார் அகழ்வாராய்ச்சியில் 14 மாதங்களாகப் பணியாற்றியதற்காக தனக்கு இன்னும் ஒரு பைசா கூட ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், தனது பயணச் செலவுகளை ஈடுகட்ட தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அல் ஜசீராவிடம் தெரிவித்தார். இத்தகைய நிலைமைகளில் புதைகுழி அகழ்வுகளை யாரும் பொறுப்பேற்க தயாரில்லை என்ற குற்றச்சாட்டை சோமதேவா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழர் தாயகப் பகுதிகளில் மனித புதைகுழிகளுக்கான கடந்த கால வரலாறுகளும் நிகழ்கால சாட்சியங்களும் செறிந்து காணப்படுகையில் இலங்கையின் நீதியமைச்சர் போதிய ஆதரங்களற்ற 'வதந்தியாக' சித்தரிப்பது, போர்க்கால அட்டூழியங்களை விசாரிக்க தற்போதைய அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பம் இல்லாமையையே உறுதி செய்கின்றது. சமகாலத்தில் அகழ்வாராய்ச்சிக்கு எடுக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் யாவும் மனித எலும்புக்கூடுகளே புகார்கள் அழித்துள்ளன. மன்னார் மனித புதைகுழி 2013ஆம் ஆண்டு குழாய் நீருக்கான குழிகள் தோண்டுகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 2023ஆம் ஆண்டு குழாய் நீருக்கான குழிகள் தோண்டுகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. செம்மணி-சிந்துபதி மனிதப் புதைகுழி 2025ஆம் ஆண்டு மயான அபிவிருத்திக்கான குழிகள் தோண்டுகையில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறான பின்னணியில் இறந்தும் மனித எலும்புக்கூடுகள் சாட்சியமாகையிலேயே இலங்கை அரசாங்கங்களும் தவிர்க்க முடியாத சர்வதேச அழுத்தத்தால் அகழ்வாராய்ச்சிகள் வரை நகர்த்துகின்றார்கள். எனவே மேலதிக மனிதப் புதைகுழிகளுக்கும் இலங்கை நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கொலை செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள் வந்து புகார் அளிப்பதை தான் எதிர்பார்க்கிறார்களோ என்ற விசனமே தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.
Comments
Post a Comment