ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி புதிய கூட்டை பாதுகாக்குமா! -ஐ.வி.மகாசேனன்-
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு போராடும் தேசிய இனமாக கூட்டுச்செயற்பாடு அவசியமான தேவையாக தொடர்ச்சியாக உரையாடப்பட்டு வருகின்றது. இந்த பின்னணியிலேயே 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமாயினும், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உதயமாயினும், 2018ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவை உதயமாயினும், 2024ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு உதயமாயினும் காணப்படுகிறது. எனினும் இக்கூட்டுகளும் ஒற்றுமைக்கான தேவைகளும் நிலையானதாக அமைந்திருக்கவில்லை. தேர்தல்களை மையப்படுத்தியும் குறுகிய நலன்களுக்குள் முறிவடைந்து செல்வதாகவே அமைந்துள்ளது. இந்த பின்னணியிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலவதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான பிளவுகளும், தமிழ் மக்கள் பேரவையின் தோல்வியும், தமிழ் மக்கள் பொது கட்டமைப்பின் செயலற்ற தன்மையும் அமைகின்றது. இவ்வாறான அனுபவங்களின் பின்னணியிலேயே உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னராக தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்த கூட்டும் அவதானிக்கப்படுகிறது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளிடையே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டின் இயல்பு மற்றும் நடைமுறையாக்கம் பற்றி தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூன்-2 (2025) அன்று தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே கூட்டுக்கானதொரு ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசிய பசுமை இயக்கம், தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி மற்றும் கந்தையா அருந்தவபாலன் ஆகியோரின் கூட்டிலான தமிழ்த் தேசிய பேரவையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றின் ஒன்றிணைவான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் பொதுக் கொள்கை இணக்கத்தில் உடன்பட்டுள்ளார்கள். குறிப்பாக, ‘தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ்த் தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மரபுவழித் தாயகத்தில், ஒரு பூரணமான சம்ஸ்டி ஆட்சி முறை, அரசியல்சாசன ரீதியாக ஏற்படுத்தப்படுவதே தமிழ்த் தேசத்தின் இறைமையை ஏற்பதாகவும் தியாகம் செறிந்ததுமான நீண்ட விடுதலைப் போராட்டத்தின் அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும் இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்’ என ஆரம்பித்து 9 விடயங்களை குறித்து ஒருங்கிணைந்து செல்வதற்கான கொள்கை இணக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டுள்ளனர்.
தமிழ்த்தேசிய அரசியலில் கூட்டிணைவுக்கான தேவை தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. 2010ஆம் ஆண்டில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே பிளவு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, கூட்டிணைவுக்கான முயற்சிகளும் பொதுத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மதகுருமார்கள், சிவில் சமுக செயற்பாட்டாளர்கள், கருத்தியலாளர்கள், வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் மற்றும் பிராந்திய அரசு என பல தரப்பினர் தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட்டிணைவு ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை காலத்துக்கு காலம் மேற்கொண்டுள்ளார்கள். இறுதியாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை மையப்படுத்தி வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களின் கூட்டிணைவின் ஈடுபாட்டுடன் தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாடு முன்னகர்த்தப்பட்டது. பகுதியளவில் சாத்தியப்படுத்தப்பட்டது. ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் பொது இணக்கத்தின் அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு சிவில் சமுக கூட்டிணைவினருடன் இணைந்து கையெழுத்திட்டு தமிழ்த்தேசிய் பொதுக்கட்டமைப்பாக ஒன்றிணைந்தார்கள். பொதுக் கட்டமைப்பின் செயற்பாட்டில் கொள்கைவழி இணக்கத்தை தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினரும் கூட வழங்கி இருந்தார்கள். கடந்த காலங்களில் நிறுவப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து முன்னேற்றகரமானதொரு கூட்டணி செயற்பாடாய் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு அமைந்திருந்தது. இது சிவில் சமுகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து தேர்தல் அரசியலை தமிழ்த்தேசிய கொள்கைசார் அரசியலாய் நகர்த்தியிருந்தார்கள். எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான பாராளுமன்ற தேர்தலில் மேலெழுந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினரினதும் ஒரு சில சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தேர்தல் நலன்கள் மற்றும் ஆர்வங்கள் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பை சிதைத்திருந்தது. இது கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய அரசியலில், அரசியல் கட்சிகளிடையே கூட்டிணைவை உருவாக்குவதில் முன்னிலையாய் செயற்பட்டிருந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கருத்தியிலாளர்களும் புறமொதுங்கும் நிலையை உருவாக்கியது. இந்த பின்னணியிலேயே 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் சிதறுண்டு போட்டியிட்டு, வாக்குகளை சிதறடித்த போதிலும் சிவில் சமுகங்கள் கூட்டணி உருவாக்கத்திற்கான எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை.
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளூடாக தமிழ் மக்கள் அரசியல் கட்சிகளை கூட்டாக செயற்பட தூண்டியிருந்தார்கள். தேர்தல் வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலக்குகளாக கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளை தேர்தல்களூடாக மாத்திரமே வளைக்க முடியும். கடந்த காலங்களில் 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி எனும் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி உருவாக்கத்திலிருந்து இதுவே தொடர்ச்சியான வரலாற்று இயல்பாக காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே 2024ஆம் ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், வடக்கில் தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற ஆசனம் வெகுவாக குறைவடைந்தது. குறிப்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழரசு கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங்களையே பெற்றிருந்தது. மறுதளத்தில் தென்னிலங்கை கட்சியான தேசிய மக்கள் சக்தி போனஸ் ஆசனம் உட்பட மூன்று ஆசனங்களை பெற்றிருந்தது. இது தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட வாக்கு சிதறலின் பிரதிபலிப்பாகவே அமைந்திருந்தது இந்த பின்னணியிலேயே தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டு பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டு செயற்பாட்டின் முன்முனைப்பாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் கட்சிகள் கூட்டாக செயற்பட முயற்சிகள் மேற்கொண்டு இருந்தார். தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் உரையாடல்களை முன்னெடுத்தார். தமிழரசு கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரின் விருப்பின்மையால் இம்முயற்சிகள் கைவிடப்பட்டது.
எனினும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டு செயற்பாட்டில் தன்னார்வமாக செயற்பட்டிருந்தார்கள். இம்முயற்சியின் தொடர்ச்சியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை மையப்படுத்தி தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி மற்றும் கந்தையா அருந்தவபாலன் போன்றவர்களை ஒன்றிணைத்து தமிழ் தேசிய பேரவை எனும் கூட்டாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை எதிர்கொண்டிருந்தார்கள். இது அரசியல் அவதானிகளிடையே வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதன் விளைவாகவே பொதுத்தேர்தலில் எதிர்கொண்ட சரிவிலிருந்து முன்னேற்றகரமான உயர்வை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்றிருந்தது. எனினும் தமிழர் தாயக பகுதிகளில் கணிசமான சபைகளில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய பலத்தை பெற்றிருக்கவில்லை. கூட்டணி செயற்பாட்டுக்கான நிபந்தனையை தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள். இதுதொடர்பில் ஆரம்ப கட்டங்களில் தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளான தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளிடையே நீண்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதேவேளை தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு சேர்வதில்லை என்ற கருத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்கள். அதேவேளை தமிழ்க் கட்சிகள் சிறு சிறு வழிமுறை சார் முரண்பாட்டினால் கூட்டாக இணைவதில் தொடர்ச்சியாக இடர்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்கள்ள். இந்த பின்னணியிலேயே ஜூன் முதல் வாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை வழி புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக இணைந்துள்ளார்கள்.
இக்கூட்டு முயற்சி அடிப்படையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை ஆகிய கட்சிகளின் தேர்தல் நலன் சார்ந்ததாகவே அமையும். ஏனெனில் தமிழ்த்தேசிய அரசியலில் தேர்தல் கட்சிகளே காணப்படுகின்றது. அவை தமது தமது தேர்தல் நன்களுக்குள்ளேயே சிந்திக்கக் கூடியதாகும். எனினும் இவ்வாறாயினும் கூட்டணி செயற்பாடுகளே தமிழ்த்தேசிய அரசியலில் அவசியமானதாகும். எண்ணிக்கையில் குறைவான தமிழ்த் தேசிய இனம் அரசியல் ரீதியாக தமக்குள் சிதறடிக்கப்பட்டிருக்கையில், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பலவீனமான நிலைக்கு நகர்த்தப்படக் கூடியதாக அமைகின்றது. கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்க்கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் போனஸ் ஆசனத்தை இழந்ததின் பின்னனியில் கட்சிகளின் சிதறலும் அதன் விளைவான வாக்கு சிதறலுமே காரணமாகும். தமிழ்க் கட்சிகளின் சிதறல் ஒருவகையில் எதிரிக்கு சேவை செய்வதாக அமைகிறது. எனவே, அடிப்படையில் தேர்தல் நலன்கள் அமைகின்ற போதிலும், கொள்கைவழி புரிந்துணர்வு அடிப்படையில் தமிழ்த்தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி கூட்டு செயற்பாடிற்கு இணங்கி உள்ளமை தமிழ்த்தேசிய அரசியலில் வரவேற்கத்தக்கதாகும்.
கடந்த காலங்களில் தூய்மைவாதம் என்ற பெயரில் பொது இணக்க முயற்சிகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மறுதலித்து வந்துள்ளது. குறிப்பாக ஏனைய தமிழ்க்கட்சிகள் எட்டப்பட்ட பொது இணக்கங்களை பின்பற்றக்கூடியவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைத்து வந்துள்ளார்கள். இது பல சந்தர்ப்பங்களில் உணரப்பட்டும் உள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தமிழ்க்கட்சிகள் கூட்டாக கையாள்வதற்கு முயற்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இதில் ‘2015-2019 தேசிய அரசாங்க காலப்பகுதியில் வரையப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு முன்முயற்சிகளை நிராகரிக்க வேண்டும்’ என்பதனையும் புரிந்துணர்வு உடன்பாட்டில் ஒன்றிணைக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கோரியிருந்தனர். எனினும், தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி அக்கோரிக்கையை நிராகரித்திருந்தனர். எனவே, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் 13 அம்சங்கள் கொண்ட பொது உடன்பாட்டிற்கு இணங்கினர். அவ்உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் தென்னிலங்கை வேட்பாளருக்கே தமிழ்க்கட்சிகள் ஆதரவளிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது. எனிலும், தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது இணக்கத்தை உதறித்தள்ளி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கூட்டு முயற்சியை பலவீனப்படுத்தினார்கள். அவ்வாறே 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உதறித்தள்ளி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினர் வடக்கு-கிழக்கு சிவில் சமுக கூட்டிணைவினரை ஏமாற்றி பலவீனப்படுத்தியிருந்தார்கள். இவ்வாறான பொது அனுபவங்களை சுட்டிக்காட்டி, ஏனைய தமிழ்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரிடம் 2024 பொதுத்தேர்தல் முடிவுக்கு பின்னர் கணிசமான மாற்றங்களை இனங்காணக் கூடியதாக உள்ளது. 2024 பொதுத்தேர்தல் முடிவுக்கு பின்னர் தூய்மை வாதங்களை களைந்து தமிழ்த்தேசிய நலனை கோடிட்டு, கட்சிகளுடன் இணங்கி செல்லக் கூடிய வழிமுறைகளில் இணங்கி செயற்படுகின்றமை ஆரோக்கியமானதாகும்.
எனினும் புதிய கூட்டு செயற்பாட்டில் ஒன்றிணைந்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றனரோ என்ற சந்தேகங்கள் பொதுவெளியில் காணப்படுகிறது. கூட்டினூடாக தமது அரசியல் நலன்களை பூர்த்தி செய்து செல்லும் குறுகிய எண்ணங்களுக்குள் பயணிக்கும் தரப்பாகவே ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினரின் வரலாறு காணப்படுகிறது. தற்போதும் தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னர் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டணி பங்காளர்களிடம் எவ்வித ஆலோசனையுமின்றி ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈபிடிபி) உள்ளூராட்சி மன்றங்களில் ஆதரவைக் கோரி பேச்சுவார்த்தைக்கான முன்முனைப்புக்களை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரிடையே சலனத்தை உருவாக்கியிருந்தது. இப்பின்னணியில் புளொட்-ஈபிடிபி பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. கூட்டணி செயற்பாட்டில் அனைத்து தரப்பும் சிறிதேனும் உளத்தூய்மையுடன் செயற்பட வேண்டும். மாறாக தத்தமது நலன்களை மாத்திரம் ஈடேற்றி கொள்ள கூட்டணியை பயன்படுத்த முற்படுவார்களாயின் அத்தகைய கூட்டணிகள் நிலையானதாக அமையப்போவதில்லை.
எனவே, தமிழ்த்தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினரிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னேற்றகரமானதாகும். இத்தகைய கூட்டுச் செயற்பாடுகளே தமிழ்த்தேசிய அரசியலுக்கும் அவசியமாகின்றது. எனினும் எவ்வித சிவில் சமுக கட்டமைப்புக்களின் ஈடுபாடுமின்றி வெறுமனவே அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் எட்டப்பட்டுள்ள கூட்டில், கட்சி நலனை கடந்து தமிழ்த்தேசிய சமூக நலனை எதிர்பார்க்கலாமோ என்பதில் சந்தேகங்களே காணப்படுகின்றது. மேலும் கடந்த காலங்களில் கூட்டு செயற்பாடுகளூடாக தமது தேர்தல் அரசியல் நலனை மாத்திரம் இலக்கு வைத்து செயற்பட்டுள்ள ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினால் புதிய கூட்டில் நிலைத்திருக்க முடியுமா என்பதும் சந்தேகங்களுடனேயே அரசியல் அவதானிகளால் விபரிக்கப்படுகிறது. இச்சந்தேகங்களை நிவர்த்தி செய்வதனூடாகவே தமிழ்த்தேசியப் பேரவை - ஐனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்பாட்டின் நிலைத்திருப்பு காணப்படுகிறது.
Comments
Post a Comment