ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விஜயமும் ஈழத்தமிழ் அரசியல் எதார்த்தமும்! -ஐ.வி.மகாசேனன்-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைக்கான விஜயம் கடந்த வாரம் ஈழத்தமிழர் அரசியல் பரப்பை நிரப்பியிருந்தது. குறிப்பாக செம்மணி-சிந்துபதி மனித புதைகுழிக்கான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம் பெரிதாக சிலாகிக்கப்பட்டிருந்தது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இதுவோர் பகுதியாகும். காசாவில் குத்துயிராய் பிணங்கள் குவிக்கப்படுகையில் அதனை தடுத்து நிறுத்த இயலாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் எலும்புக்கூடுகளை காட்டியவுடன் நீதியை பெற்றுத் தந்திடுவார்களென எண்ணுவது உயர்வான ஆசையாகும். எனினும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகையில் அவற்றை காட்சிப்படுத்துவதும் உரிமை சார்ந்த போராட்டத்தில் தவிர்க்க முடியாத அவசியமாகும். அதேவேளை ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை 1990களின் இறுதிக் காலப்பகுதியின் பதிவாகிய செம்மணியுடன் சுருக்கி விடவும் முடியாது. 2025 வரையில் தையிட்டி போன்றவற்றில் ஆக்கிரமிப்பு என்ற வடிவத்தில் அழிக்கப்படும் ஈழத்தமிழரின் இருப்பிட உரிமையையும் செம்மணிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்துக்கு நிகராக காட்சிப்படுத்த தவறியிருக்கிறமோ என்ற பார்வையும் ஈழத்தமிழர்களிடம் காணப்படுகின்றது. இக்கட்டுரை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைக்கான விஜயம் விளைவிக்கக்கூடிய அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23-25ஆம் திகதிகளில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவ்விஜயத்தில் இலங்கையின் அரசாங்க பிரநிதிகள், ஆளுங்கட்சியின் பிரதானிகள், எதிர்க் கட்சி தலைவர்கள், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமுக பிரதிநிதிகள் மற்றும் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் என பலதரப்பட்டவர்களோடு சந்தித்து உரையாடியுள்ளதுடன் மனுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாண விஜயத்தில் செம்மணி-சிந்துபதி மனிதப் புதைகுழி கண்டறியப்படுள்ள பிரதேசத்திற்கு நேரடியாக சென்றிருந்தார். மேலும் யாழ்ப்பாண முகப்பில் மக்கள் எழுச்சியில் நடைபெற்ற ‘அணையா விளக்கு’ போராட்ட களத்திற்கு சென்று, செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கான மலரஞ்சியிலும் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தனது சமுக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ள காணொளியில் ஆணையாளர், உண்மையை கண்டறிய சுயாதீன நிபுணர் குழுவின் தேவையையும் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இலங்கை அரசியல் வரலாற்றின் கடந்த கால அனுபவங்களில், உள்ளக பொறிமுறையில் சுயாதீன நிபுணர்கள் குழு மீது ஈழத்தமிழர்கள் நம்பிக்கையீனத்தையே கொண்டுள்ளார்கள். இந்த பின்னணியிலேயே சர்வதேச கண்காணிப்பையும் பொறிமுறையும் ஈழத்தமிழர்கள் வலியுறுத்துகின்றனர். எனினும் சர்வதேச பொறிமுறையின் தேவையை உறுதியாகக் கூறக்கூடிய திராணி ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமும் காணப்படவில்லை.

நாட்டின் உள்நாட்டுப் போர் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளிலிருந்தும் உருவாகும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கையில் ஒரு அலுவலகத்தை நிறுவியது. இது தீர்மானங்கள் 46/1 (2021) மற்றும் 51/1 (2022)மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டது. இந்த அலுவலகத்தின் பணி, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும் இதுவரை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கான அலுவலகர்களுக்கான பயண அனுமதியை வழங்க இலங்கை அரசாங்கங்கள் மறுத்து வருகிறது. எனினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் தீர்க்கமான எதிர்ப்பை வெளிப்படுத்த முடியவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் இலங்கை வருகையை ஒரு சில தமிழ் சிவில் சமுகத்தினர் எதிர்த்திருந்தனர். இந்நிலையில் ஆணையாளர் தனது வருகையை நியாயப்படுத்தி தமிழ் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடன் இணையவழி சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தார். இணையவழி சந்திப்பில், ‘இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டத்துடன் இணைந்து பயணிக்க தயாராக இல்லை. எனினும் இவ்அரசாங்கத்தை நிராகரித்து செல்ல முடியாது. நிராகரிப்பதனூடாக மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு வளையத்துக்குள் பேண முடியாது. அரசாங்கத்துடன் இணைந்து செல்வதனூடாகவே பொறுப்புக்கூற வைக்கலாம்’ என்றவாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை விளக்கமளாத்திருந்தது. இதுவொரு வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தனக்குள்ள வீச்செல்லைக்குள் நகரும் மென்போக்கையே உறுதி செய்கிறது.

இம்மென்போக்கான செய்தியையே இலங்கை விஜயத்திலும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலையில் ஜூப்லி மண்டபத்தில் மனித உரிமைகள் ஆணையாளருடன் பாதிக்கப்பட்ட மக்களின் சந்திப்பு ஒன்று ஜுன்-25அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் நடைமுறை வாழ்வில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி ஆக்கிரமிப்புகள், பயங்கவாத தடைச்சட்டத்தினூடான துன்புறுத்தல்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல், மனிதப் புதைகுழிகளின் அவலம் என ஈழத்தமிழர்கள் மீது இலங்கை சிங்கள-பௌத்த பேரினவாத அரசாங்கங்களினால் நிகழ்த்தப்படும் இனப்படுகொலைகள் பாதிக்கப்பட்ட மக்களினால் விபரிக்கப்பட்டது. இதேவேளை முதல் நாள் கொழும்பில் சிவில் சமுக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலிலும் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை அவலங்கள் அரசியல் சட்ட மொழியாடல்களில் விபரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருகோணமலை மக்கள் சந்திப்பில் பதிலளித்த மனித உரிமைகள் ஆணையாளர், ‘மக்கள் சுட்டிகாட்டிய மனித உரிமை அவலங்கள் இலங்கையில் இருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன். இதற்கான தீர்வை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இருந்தாலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தை இலங்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். நீதி பொறிமுறை சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது’ என்றவாறே தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை முழுமையாக நிராகரிக்கும் அரசாங்கத்துடன் இணைந்து செல்வதாகவே ஆணையாளரின் செய்திகள் அமையப் பெற்றுள்ளது. எனினும் ஈழத்தமிழர்களின் நீதிக்கான கோசத்திற்கான சர்வதேச அரங்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவை மாத்திரமே தற்போது வரை காணப்படுகின்றது. தனியன்களாக கனடா போன்ற அரசுகளின் ஆதரவையும், அமெரிக்கா-பிரித்தானியா-அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை நீதிக்கான போராட்டம் பெற்றுள்ளது. எனினும் திரட்டப்பட்ட சர்வதேச ஆதரவு தளத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே நகர்த்த முடியவில்லை. குறைந்தபட்சம் சர்வதேச ரீதியாக தனியன்களாக பல நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் ஆதரவுகளைக்கூட கூட்டுப்பலமாக கட்டமைக்கும் பொறிமுறையை ஈழத்தமிழர்கள் அடையாளம் காண முடியாதுள்ளனர். இந்நிலையில் மென்போக்கிலாவது ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பேணும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை களத்தை தக்க வைப்பது அவசியமாகிறது. சர்வதேச அரங்கில் பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களின் முன்னேற்றகரமான நகர்வுகள் சர்வதேச களத்தை தக்கவைத்துக் கொண்டதன் பயனாகவே அமைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பா தேசங்களின் விடுதலைகளில் சர்வதேச அமைப்புக்களின் செல்வாக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சர்வதேச அமைப்புக்களில் ஈழத்தமிழர்களின் உரிமைக் கோசத்தை தக்கவைப்பதுடன், அதனை வெற்றிகரமாக முன்னகர்த்தக்கூடிய வகையில் சர்வதேச அரசுகளை கையாள்வதிலும், அவர்களின் நலன்களுக்குள் ஈழத்தமிழர்களின் நலன்களை பொருத்துவதிலையே ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது. மாறாக சும்மா இருப்பதனூடாக எத்தகையதொரு தீர்வும் கனிந்து வரப்போவதில்லை. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி செயற்படும் செயற்பாட்டாளர்களின் பிரதான குறைபாடாக அமைவதே, ‘தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து போதிய அறிக்கைகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பவதில்லை. மாறாக தென்னிலங்கை சார்ந்து அறிக்கைகள் செறிவாக அனுப்பப்படுகிறது’ என்பதாகும். இவ் எதார்த்தத்தையே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழர் பிரச்சனை மெலிந்து ஈஸ்டர் குண்டுவெடிப்பும், பொருளாதார பிரச்சினைகளும் முதன்மைபெற்றதனூடாக அவதானிக்க முடிந்தது. தற்போது செம்மணி மனிதப் புதைகுழி ஈழத்தமிழர் அரசியலை மீள கொதிநிலைக்கு நகர்த்தியுள்ளது. இதனை வலுவாக பற்றி நகர்த்த வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களிடமே காணப்படுகிறது. குறிப்பாக மக்கள் செயல் என்ற அடையாளத்துடன் புதியதொரு இளம் செயற்பாட்டாளர்கள், ஆணையாளரின் இலங்கை விஜயத்தில் செம்மணி மனிதப் புதைகுழியை முதன்மைப்படுத்திய அணையா விளக்கு போராட்டத்தினூடாக முன்னிலை அரசியல் செயற்பாட்டாளர்களாகி உள்ளார்கள். புதியவர்கள் புதியதொரு அணுகுமுறையுடன் வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் ஈழத்தமிழர்களின் கடந்த காலத்தின் தொடர்ச்சியாய் குமிழ்முனை செயற்பாட்டாளர்களாய் மக்கள் செயல் அணியினரும் சென்றுவிடக்கூடாது. தமிழ் மக்கள் பேரவையும் எழுக தமிழ்களும், P2P பேரணி, தமிழ்ப் பொதுவேட்பாளர் என சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் கடந்த கால முயற்சிகளின் அனுபவங்களை அணையா விளக்கு போராட்டக்காரர்கள் அறிந்து கொள்வது அவசியமானதாகும். செம்மணி புதைகுழிக்கான சர்வதேச நீதி அணையா விளக்கை தொண்டைமனாற்று கடலில் விட்டதுடன் தீர்ந்துபோவதில்லை. தொடர்ச்சி தன்மையுடன் நகருவதே ஆரோக்கியமானதாகும்.

எனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கான விஜயம், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஐ.நாவின் மென்போக்கான ஆதரவையே தொடர்ச்சியாக உறுதி செதுள்ளது. குறிப்பாக சீன மாக்சிச மரபிலிருந்து கட்டமைக்கப்பட்ட ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினரை மேற்குடன் அரவணைத்து கொள்ள ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகள் மென்போக்கான நிலையை பின்பற்றுவது எதார்த்தமானதாகும். ஐ.நாவின் இவ்அணுகுமுறை தொடர்பான முன்அனுபவத்தை ஈழத்தமிழர்கள் கொண்டுள்ளார்கள். ஜூன் 26, 1945அன்று 50 அரசுகளின் பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்ட ஐ.நா அமைப்பின் சாசனம் ‘அடுத்த தலைமுறைகளை போரின் துன்பத்திலிருந்து காப்பாற்ற’ அமைக்கப்பட்டது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை தனது 80வது ஆண்டு விழாவினை சீர்குலைந்த நிலையில் கொண்டாடுகிறது. இன்று, ஐ.நா. 193 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆனால் உக்ரைன் மற்றும் காசா மற்றும் பிற இடங்களில் இரத்தக்களரி நடந்து கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்புக் குழுவில் உள்ள ஐந்து வீட்டோ அதிகாரங்கள் உட்பட எந்த நாடுகளாலும் ஐ.நா வெற்றி பெற்றதாக பாசாங்கு செய்ய முடியாதென ஐ.நா மற்றும் பலதரப்பு இராஜதந்திரி றிச்சர்ட் கோவன் சுட்டிகாட்டியுள்ளார். இது ஒரு வகையில் ‘சேப்பியன்ஸ்: மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ புத்தக ஆசிரியர் யுவல் நோவா ஹராரி குறிப்பிடும் கற்பனையான யதார்த்தத்தின் பகுதியாகும். ஐ.நாவின் மேன்மையும் உலக அமைதிக்கான நடவடிக்கைகள் உண்மை இல்லை. ஆனாலும் பொய்யென நிராகரிக்கவும் முடியாத யதார்த்தமாகும். இவ்கற்பனையான யதார்த்தத்தை உருவாக்கும் சக்திகளை அடையாளங் காண்பதும் அவற்றின் நலன்களோடு இணைகையிலேயே கற்பனையான யதார்த்தத்தின் நன்மைகளை அனுபவிக்கக்கூடியதாக அமையும். கற்பனையான யதார்த்தத்தின் முகப்பை களைந்து உள்ளார்ந்து ஈழத்தமிழர்கள் தமது இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-